
கடவுள் இருக்கான் குமாரு - சினிமா விமர்சனம்

கலாய்ப்பும் கலாய்ப்புகள் சார்ந்த பயணமும்தான் `கடவுள் இருக்கான் குமாரு'.
இரண்டு நாட்களில் திருமணம். மாப்பிள்ளை ஜி.வி.பிரகாஷ், நண்பன் ஆர்ஜே பாலாஜியோடு பேச்சுலர் பார்ட்டிக்காக பாண்டிச்சேரி போகிறார். திரும்பும் வழியில் `கலெக்ஷன்' போலீஸ் பிரகாஷ்ராஜிடம் சிக்கிக்கொள்ள, மூன்று மணி நேரத்தில் முடியவேண்டிய பயணம், முழுநாளும் நீண்டுகொண்டே போகிறது. மாப்பிள்ளையும் தோழனும் சென்னை திரும்பினார்களா என்பதுதான் மீதி படம்.
கொஞ்சமாகக் கதை, பாப்புலர் விஷயங்களைக் கேலி பண்ணும் காட்சிகள், நக்கல் ஒன்லைனர்கள் என இன்னொரு ராஜேஷ் படம். `சொல்வதெல்லாம் உண்மை' தொடங்கி ஜியோ சிம், ஏர்போர்ட் கூரை, பீப் சாங் வரை டிரெண்டிங்கான விஷயம் ஒன்றுகூட இயக்குநரிடம் இருந்து தப்பவில்லை. ஆனால், அவற்றில் பாதிதான் ரசிக்கலாம்... மீதி மறக்கலாம் ரகம்!
ராஜேஷ் படங்களில் நகைச்சுவை பிரதானமாக இருந்தாலும், அது யதார்த்தமான விஷயங்களை ஒட்டியதாகவே இருக்கும். இதில் எல்லாமே திணிக்கப்பட்டதாக, நம்பகத்தன்மை அற்றதாக இருக்கின்றன. என்ன ஆச்சு இயக்குநரே?

தனக்கென ஓர் அளவு வைத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அந்த மீட்டரில் பொருந்தும் கதாபாத்திரங் களாகப் பார்த்து டிக் அடிக்கிறார். குமாரு, அதில் பச்சக் என செட் ஆகிக் கொள்கிறான். ஆரம்பக் காட்சியில் சந்தானத்தின் குளோனிங் போல வரும் ஆர்ஜே பாலாஜி, அடுத்தடுத்து தனது பாணிக்கு மாறிவிடுவதால் தப்புகிறார். இரண்டு நாயகிகள். இருவரும் ஜி.வி-யின் முந்தைய பட நாயகிகள் என்ற தகவலே போதுமானது. லஞ்சம் வாங்க வந்து லந்து கொடுத்துச் செல்கிறது பிரகாஷ்ராஜ் - ரோபோ சங்கர் - சிங்கம் புலி கூட்டணி.
படம் முழுக்க, யாராவது யாரிடமாவது போனில் ஸ்பீக்கர் போட்டுப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். போனில் பேசாதபோது நாயகனும் நண்பனும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். படம் முடிந்த பிறகும் அந்தக் குரல்கள் நம்மை விரட்டுகின்றன.
முதல் பாதி முழுக்க கதாபாத்திர அறிமுகங்கள், நீண்ட ஃப்ளாஷ்பேக் என ஒப்பேற்றிவிடுகிறார்கள். அதன் பிறகு, நெடுஞ்சாலையில் பஞ்சர் ஆன லாரி தறிக்கெட்டு ஓடுவதைப்போல தாறுமாறாகப் பறக்கிறது திரைக்கதை.
பாடல்களில் `லொக்காலிட்டி பாய்ஸ்...' மட்டும் ஓ.கே. ஒளிப்பதிவாளர் சக்தி சரவணனின் தொழில் சுத்தம். அலப்பறைகள் இன்றி இதமாகப் படமாக்கியிருக்கிறார்.
கலாய்ப்புகள் இருந்த அளவுக்கு கலகலப்பையும் கூட்டியிருக்கலாமே குமாரு!
- விகடன் விமர்சனக் குழு