
டி.எம்.கிருஷ்ணா

பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் உடல் அருகே நின்று அவரைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, பல சிந்தனைகள் என் உள்ளத்தில் நிறைந்திருந்தன. என் முன்னே மீளாத் துயில் கொண்டிருந்த மனிதர் அவரது இளம்வயதிலேயே இசையின் தாளம், ராகம் மற்றும் எழுத்து வடிவங்களின் எல்லைகளை விரிவாக்கினார்; அகலப் படுத்தினார். இறுதியில் அவற்றைக் கரைந்தோடச் செய்தார். இருந்தும், தன் இறுதி மூச்சு வரை, அப்போதுதான் காதல்வயப்பட்ட ஓர் இளம் பாடகன்போலவே பாடிக்கொண்டிருந்தார். அவர் பாடும்போது, அது ஒரு விளையாட்டுபோல தோன்றும்; அது ஒரு களிமிகு நடனம். அதன் நாயகன் சந்தேகமின்றி அவர்தான்.
பாலமுரளிகிருஷ்ணாவின் சங்கீத குரு பாருப்பள்ளி ராமக்ருஷ்ணய்யா பண்டுலு அவர்கள் என்றபோதிலும், அவர் பெரும்பாலும் சுயமாகக் கற்றுக்கொண்டவராகவே இருந்தார். தன்னைச் சுற்றியுள்ள எதில் இருந்தும் சங்கீதத் தன்மையையும் நுட்பங்களையும் ஈர்த்துக்கொள்கிற, ஒரு பெரும் வித்தைகொண்டவராக அவர் இருந்தார். பிரமிக்கத்தக்க விதமாக, இந்த வித்தையை அவர் தனது மாபெரும் இசையறிவின் வழியாக வெளிப்படுத்தியபோது முற்றிலும் ஒரு புதிய கோணம், ஒரு புத்தம்புதிய சாத்தியத்தின் வியக்கத்தக்கச் சிந்தனை நமக்குக் கிடைத்தது.
பாலமுரளிகிருஷ்ணா, எப்போதும் கேட்டிராத ஒரு குரலை கர்னாடக இசை மேடைக்குக் கொண்டுவந்தார். கர்னாடக இசையை துல்லியமான ஓர் இசை மொழியாக, ஒரு தனித்தன்மை வாய்ந்த சங்கீத வடிவமாக அடையாளப்படுத்த முடியும். பாடகர் யாராக இருந்தாலும், கர்னாடக சங்கீதம் இந்த அலைவரிசைக்குள்ளேதான் நிகழ்ந்துவந்திருக்கிறது. ஆனால், பாலமுரளிகிருஷ்ணா யாரும் நினைக்காததை அதில் செய்தார்.
20-ம் நூற்றாண்டின் மேதைகள் கர்னாடக சங்கீதத்தின் சக்கரவர்த்திகளாகத் திகழ்ந்தபோது, இந்த இளைஞர் சங்கீதத்தின் இந்தக் குரல் அடையாளத்தைக் கேள்விக்கு உள்ளாக்கினார். மூன்று தாளக்கட்டுகளில் சஞ்சரித்த அவரது குரல் தாவியது, வெடித்துக் கிளம்பியது, தணிந்து இறங்கியது, குழைந்தது, நீண்டு சரிந்தோடியது, ஓங்காரித்து ஆரோகணத்தில் சஞ்சரித்தது. ரசிகர்களுக்கு புரட்சிகரமான ஓர் இசை அனுபவத்தை அளித்தது. அவர் ராகங்களுடன் கண்ணாமூச்சியும் ரசிகர்களைச் சீண்டியும் விளையாடினார். ராகங்களை வெளிப்படுத்தும்போது, வார்த்தைகளின் பொருளை வெளிக்கொண்டுவர மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டார். தாளங்களில் அவரது கணித ஆராய்ச்சிகள் நம்மைப் பிரமிக்கவைப்பவை. எனினும் ஆதாரக் கட்டமைப்பு குறித்து ஒருபோதும் பெரிதாக வலியுறுத்தியது இல்லை.
பாலமுரளியின் மந்திரக் குரல் கர்னாடக இசை சார்பற்ற இல்லங்களிலும் கர்னாடக இசையை ஒலிக்கச் செய்தது. எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு அடுத்ததாக இந்தியா முழுவதும் அறியப்பட்ட கர்னாடக இசைக் கலைஞர் இவர் மட்டுமே.
வியப்பு அளிக்கும்விதமான பாலமுரளிகிருஷ்ணாவின் பாடல் பாணியை, பாரம்பர்ய கர்னாடக இசை வல்லுநர்கள் நிராகரித்தனர். அவரது இசை, `செமி கிளாசிக்கல்' எனப்படும் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் அல்லது டி.கே.பட்டம்மாள் ஆகியோர் வகையாகக் கருதப்பட்டது. அவரது இசை அறிவையும் குரல்வளத்தையும் அங்கீகரித்தபோதும், கர்னாடக சங்கீத ரசிகர்களோ, பெரும்மேதைகளோ அவரைத் தங்களில் ஒருவராகக் கருதவில்லை. பலர் அவரது இசையை... குரல்வித்தை என்றும், வாய்ஜாலம் என்றும் நிராகரிக்க முயன்றனர். ஆனால், எதுவும் நடக்கவில்லை. அவர்களால் அவரை உதாசீனப்படுத்தவோ, நிராகரிக்கவோ, அப்புறப்படுத்தவோ முடியவில்லை. அவரது சங்கீத மேதைமையும், ஓர் இசைக்கலைஞராக, சிந்தனையாளராக, கல்வியாளராக அவரது பரந்துபட்ட அறிவும், அனைவராலும் நன்கு அறியப்பட்டிருந்தது. அவரைக் கேள்விக்குள்ளாக்க யாரும் துணியவில்லை. யார் வெல்வார்கள் என அவர்களுக்குத் தெரியும்.

பாலமுரளியின் ஒவ்வொரு படைப்பும் பங்களிப்பும், கர்னாடக இசைப் பாரம்பர்யத்தால் கவனமுடன் சிருஷ்டிக்கப்பட்ட அமைப்பு களையும் வடிவங்களையும் விவாதிக்க அழைத் தது. ஒரு காலகட்டத்துக்குப் பிறகு, அவரது கச்சேரிகள் முழுக்க முழுக்க அவரால் உருவாக்கப்பட்ட இசையை மட்டுமே கொண்டிருந்தன. அவர் பாடிய, உருவாக்கிய எல்லாவற்றிலும் பாலமுரளி முத்திரை இருந்தது. அவர் தன்னை சங்கீதத்துக்குப் பின்னால் ஒருபோதும் ஒளித்துக்கொண்டது இல்லை. அவர் கச்சேரிகளில், நீங்கள் பாலமுரளி இசையைத்தான் கேட்பீர்கள். கர்னாடக இசையை அல்ல. இதற்காக அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஆனால், அவை ஒருபோதும் அவரைப் பாதித்தது இல்லை. வியப்பூட்டும் இந்த மேதை, தன்முனைப்புமிக்கவர். ஆனால், ஒருபோதும் கீழ்த்தரமான விவாதங்களில் ஈடுபாடுகொண்டது இல்லை.
`நமது சங்கீதம், அனைத்து சங்கீத வடிவங்களைக் காட்டிலும் மேலானது’ என்பதும், `நாம் மற்றவற்றை இனிமை என நம்புவோம். ஆனால், நம்மைப் பொறுத்தமட்டில் கர்னாடக சங்கீதமே ‘சாலச்சிறந்தது’ ’ என்பதும் பாரம்பர்ய இசை வட்டாரங்களில் நிலவும் பொதுவான நம்பிக்கை. பாலமுரளி, ஒருபோதும் இந்த மாற்றான்தாய் மனப்பாங்கை வெளிக்காட்டியது இல்லை. அவர் எல்லா பாணி சங்கீதங்களையும் சமமாகக் கருதினார். ஒவ்வோர் இசை வடிவத்திலும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டார். தன்னை முழுமையாக ஒப்புவித்துக்கொண்டார். அவரைப் பொறுத்தவரை இசையில் கீழானது-மேலானது; பாரம்பர்யம் - நாட்டார் இசை என்ற வகைப்பாடுகள் எதுவும் இல்லை. இசை... அவ்வளவே!
அவர், தன் வாழ்வை முழுமையாக அனுபவித்து வாழ்ந்தார். வாழ்க்கை அவருக்கு அளித்த பரிசுகளை மறைத்து வாழவும், பதுக்கிச் சுகிக்கவும் தேவையின்றி அனுபவித்தார். இவ்வாறு வாழ்தலின் நிமித்தம், பாரம்பர்ய கர்னாடக இசை வட்டாரத்துக்கு - அவர்களில் பலர் ரகசியமாக வாழ்வை சொகுசாக்கிக் கொண்டபோதிலும் - வாழ்க்கையைக் குற்றஉணர்வின்றி அனுபவிக்க ஒரு துடுக்கான உதாரணமாகத் தன்னைக் காட்டிக்கொண்டார். அவர் தன்னையும், தன் இசையையும் வெளிப்படுத்தியவிதம்... புனிதமாக இருந்ததை ரசிக்கும் பொருளாக மாற்றியது. அவரது மிகச்சிறந்த பக்திப் பாடல்கள்கூட சிருங்கார ரசத்தில் அமைந்திருக்கும்.
பாலமுரளி ஒரு தீவிரமான இசை ஆராய்ச்சியாளர் என்பது, ஓர் இசை மாணவனாக எனக்குத் தெரியும். ஆனால், அவர் ஒருபோதும் அதை வெளிக்காட்டியது இல்லை. அவர் கற்றவற்றை தனது இசை மூலமே வெளிப்படுத்தினார். நான் அவரது இசை மூலம் பாதிக்கப்பட்டிருக்கிறேனா என்றால், `இல்லை' என்றே கூறவேண்டியிருக்கும். அவரது இசைகுறித்த அணுகுமுறையுடன் நிச்சயம் நான் இசைந்துபோக மாட்டேன். ஒருவேளை நான் பாரம்பர்ய கர்னாடக இசைக்கலைஞனாக இருப்பது காரணமாக இருக்கலாம். என் தனிப்பட்ட விருப்பங்களைத் தாண்டி, மிக அலாதியான, வெகு சிறப்பான மனிதர் அவர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவரது கலைத்திறன் எந்தப் பகுப்பாய்வுக்கும் உட்படாதது. அவர் மேல் நம்பிக்கை இல்லாதோருக்கு, எந்தப் பதிலும் இல்லை; நம்புபவர்களுக்கோ, பதில் தெள்ளத்தெளிவான ஒன்று!
(நன்றி: THEWIRE.IN)