Published:Updated:

"பேரன்பு விலகாது”

"பேரன்பு விலகாது”
பிரீமியம் ஸ்டோரி
"பேரன்பு விலகாது”

கார்க்கிபவா, படம்: கே.ராஜசேகரன்

"பேரன்பு விலகாது”

கார்க்கிபவா, படம்: கே.ராஜசேகரன்

Published:Updated:
"பேரன்பு விலகாது”
பிரீமியம் ஸ்டோரி
"பேரன்பு விலகாது”

பாலுமகேந்திரா, பாலசந்தர், மணிரத்னம் போன்ற மாபெரும் படைப்பாளிகளின் ஆதர்ச நடிகர். சமூகப் பொறுப்புள்ள மனிதர். நடிப்புக்காக மூன்று முறை தேசிய விருது பெற்ற இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர். மலையாளிகளுக்கு ப்ரியமான மம்மூக்கா. தமிழர்களுக்கு என்றுமே அழகன், நட்புக்கு பெயர் சொல்லும் தேவா. சிம்பிளாக... மம்மூட்டி. சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தமிழுக்கு வருகிறார்... பேரன்போடு!

"பேரன்பு விலகாது”

ராம் இயக்கும் `பேரன்பு' படத்துக்கு டப்பிங் பேச சென்னை வந்திருந்தவரைச் சந்தித்தோம்.

``எப்போதும் இளமையாகவே இருக்கீங்களே?’’

``என்ன பதில் சொல்றது... (முகம் முழுக்கப் புன்னகை).’’

``பேரன்பு?''


``அன்பைப் பற்றிய கதை; கஷ்டத்தோட கதை. ஒரு மனிதன், பேரன்புகொண்ட மனிதனாக மாறுவதுதான் படம். தன் மேல, தனக்கு நெருக்கமானவங்க மேல மட்டும் இல்லை... இந்த உலகத்தின் மேல் பேரன்பு கொண்டவனாக ஒருவன் மாறுகிறான். ஒரு வரியில் சொல்லணும்னா, இந்த உலகத்துலயும் நம்ம வாழ்க்கையிலயும் பேரன்புக்கு மேல என்ன இருக்கு? அதுதான் படம்.

இயக்குநர் ராமின் `கற்றது தமிழ்', `தங்க மீன்கள்' படங்களையும் பார்த்திருக்கேன். ரொம்பப் பிடிச்சிருந்தது. அவர் படங்களின் கலர், ஒளிப்பதிவு, கதை... எல்லாம் முழுமையா என்னை ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணுச்சு. `பேரன்பு' கதை கேட்டதும் ரொம்பப் பிடிச்சது. 

நிச்சயம் இது வித்தியாசமான படமா இருக்கும். படம் பார்க்கிற வரைக்கும் அந்த மேஜிக் புரியாது; பார்த்துட்டா விலகாது. இதைத் தாண்டி படத்தைப் பற்றி பேச எனக்கு அனுமதி கிடையாது. ஏன்னா, படத்துல நிறைய ஆச்சர்யங்கள் இருக்கு.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``ராமுக்கு தமிழ் சினிமாவில் `ரொம்ப சீரியஸ் இயக்குநர்' என்ற இமேஜ் உண்டே...''

``எனக்கு அப்படித் தோணலை. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம்தான் முடிச்சிருக்கோம். அதுக்குள்ள பத்து படங்கள் ஒண்ணா வேலை செய்ததுபோல அவ்வளவு நெருக்கமாகிட்டோம். ஒரு நண்பனா, சகோதரனா என்னை நல்லா பார்த்துக்கிட்டார். எனக்குன்னு சின்னச் சின்னக் கெட்ட பழக்கம் இருக்கு. அதை எல்லாம் பொறுத்துக்கிட்டு நல்லா சமாளிச்சார்.

"பேரன்பு விலகாது”

முதல் நாள் ஷூட்டிங். கொடைக்கானலில் இருந்து 30 கிலோமீட்டர் தள்ளிப் போனோம். அங்கே போனதும் பாதியில் திரும்பி வந்துட்டேன். என்னால அங்கே நிற்கக்கூட முடியலை. அப்புறம் அங்கேதான் 32 நாளும் ஷூட் பண்ணோம். யூனிட் அங்கேயே தங்கிட்டாங்க. நான் கொடைக்கானலில் தங்கினேன். தினமும் ஸ்பாட்டுக்குப் போகவே மூணு மணி நேரம் ஆகும். காலையில் கிளம்பிப் போகணும். முன்னாடிலாம் யோசிக்காமப் போவேன். இப்ப அப்படிப் பண்றது இல்லை. `பேரன்பு'க்காக மறுபடியும் பண்ணியிருக்கேன். சிலர் சொன்னா, தட்டவே முடியாது இல்லையா, அப்படித்தான் ராமும். இந்தப் படத்துல அதிக கேரக்டர்கள் கிடையாது. அதனால் ஸ்பாட்ல ராம் சத்தமே போட மாட்டார்.''

``தமிழ் சினிமா எப்படி இருக்கு?''

``எல்லா வகையிலும் ரொம்ப அட்வான்ஸா இருக்கு. அதே சமயம் டெக்னாலஜி போற வேகத்துக்கு கதைகள் அட்வான்ஸா போகலை. சமீபமாகத்தான் சமகால விஷயங்களைப் பேசுற படங்கள் நிறைய வருது.

`விசாரணை' படம் பார்த்தேன். ரொம்ப வித்தியாசமான, அதே நேரத்துல சென்சிபிளான படம். ஆஸ்கர் வரைக்கும் போயிருக்குல? கிடைச்சா மகிழ்ச்சி. அப்புறம் `ஜோக்கர்', `குற்றம் கடிதல்'. இன்னும் நிறையப் படங்கள் பிடிச்சிருந்தது. இந்த மாதிரி முயற்சிகளை மக்களும் வரவேற்கிறாங்க. அதுதான் ரொம்ப முக்கியம்.''

``சமகாலப் பிரச்னைகளை மலையாள சினிமாவில் அதிகமாக, எளிமையாகக் கையாள்கிறார்களே?''

``இக்கரைக்கு அக்கரைப் பச்சை. அங்கே இருக்கிறவங்களுக்கு தமிழ் சினிமா எளிமையாவும் நல்லாவும் இருக்கிறதா தோணும். இங்கே இருக்கிறவங்களுக்கு மலையாள சினிமா அப்படி இருக்கிறதா தோணும். ரெண்டு சினிமாக்களுமே எளிமையாவும் நல்லாவும் இருக்கிறதுதான் உண்மை.''

``இலக்கியத்துக்கும் மலையாள சினிமாவுக்குமான இடைவெளி எப்போதும் குறைவாக இருக்கிறதே...’’


``உண்மைதான். மலையாள சினிமாவில் எம்.டி.வாசுதேவன் நாயர் போன்ற எழுத்தாளர்களின் பங்களிப்பு எப்போதும் இருக்கிறது. அந்தப் பங்களிப்புகளுக்குக் கிடைச்ச வெற்றிகளால்தான் இப்ப வரைக்கும் அந்தத் தொடர்பு தொடருது. எப்பவும் மலையாள சினிமாவில் ஒரு படத்துக்கு ரைட்டர், டைரக்டர்னு ரெண்டு பேர் இருப்பாங்க.

"பேரன்பு விலகாது”

நியூ ஜென் டீமில்கூட அது தொடர்வது நல்ல விஷயம்தானே. தமிழ் சினிமாவில் அந்த வழக்கம் இல்லையில்லையா?’’

``நடிப்புக்கு இடையே இயற்கை விவசாயத்துக்காகவும் குரல்கொடுக்கிறீர்களே?''


``நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அதனால எனக்கு விவசாயம் ரொம்பப் பிடிக்கும். விவசாயத்துல இயந்திரங்களைப் பயன்படுத்துறதுல தப்பே இல்லை. ஆனா, அதிகமா ரசாயனங்கள் சேர்க்கிறாங்க. அது யாருக்குமே பயன் தராது. நான் ஸீரோ ஃபார்மிங் ஆதரவாளன். நானும் அதைத்தான் பின்பற்றுகிறேன். என்னோட `நடிகன்' இமேஜ், ஸீரோ ஃபார்மிங் பற்றி மக்களிடம் விழிப்புஉணர்வை ஏற்படுத்துறதுல எனக்கு சந்தோஷம். கெமிக்கல்ஸை மட்டும் வெச்சு உணவு தயாரிக்க முடியாதே. விவசாயத்தை யாராலும் அழிக்க முடியாது. அதைச் சரியா பண்ணணும். அவ்ளோதான்.''

``இந்தக் கால இளைஞர்களிடம் இருக்கும் சோஷியல் மீடியா தாக்கத்தை எப்படிப் பார்க்குறீங்க?''

``அதென்னங்க இளைஞர்கள்? நாம எல்லோருமே சோஷியல் மீடியாவில்தானே இருக்கோம்! எதுலயும் பாசிட்டிவ் நெகட்டிவ் ரெண்டுமே இருக்கும். எந்தக் காலத்துப் பசங்களும் இந்தக் காலத்துப் பசங்கதான். இதுக்கு முந்தைய தலைமுறை, அதுக்கு முன்ன இருந்தவங்க மாதிரி இல்லையே. இனிமே வரப்போற பசங்க, இப்ப இருக்கிற பசங்க மாதிரி நிச்சயம் இருக்க மாட்டாங்க. என் படத்தைப் பற்றி நிறைய மீம்ஸ் வந்துது. நானே அதை எல்லாம் என் ஃபேஸ்புக்ல ஷேர் செஞ்சிருக்கேன். கலாய்க்கிறதுகூட என்னைப் பொறுத்தவரைக்கும் இன்னொரு கலைதான். அதை ரசிக்கப் பழகிக்கணும்.''

"பேரன்பு விலகாது”

``உங்க `தளபதி'யைச் சந்திச்சீங்களா?''

(புன்னகைக்கிறார்) ``அவரைச் சந்திச்சு ரொம்ப நாள் ஆச்சு.  `கபாலி' படம் பார்த்தேன். நல்லா இருந்தது. அந்தப் படத்தில் ரஜினி நடிக்கிறதுக்குப் பல நல்ல சீன்கள் இருந்தன. அவரும் ரொம்ப நல்லா நடிச்சிருந்தார்.''

``நீங்கள் இன்னும் நடிக்க விரும்பும் கேரக்டர் எது?''

``அப்படி எல்லாம் எதையும் நான் ப்ளான் பண்ணவே மாட்டேன். அது பாட்டுக்குப் போகும். நாம மனுஷங்கதானே. ஒரு நாள் இட்லி பிடிக்கும், அடுத்த நாள் வேற சாப்பாடு பிடிக்கும். அப்படியே என்ஜாய் பண்ணிட்டுப் போயிட்டே இருக்கணும். ஒருவேளை நான் டைரக்ட் பண்ணினா பார்க்கலாம். ஆனா, இப்போதைக்கு அப்படி ஒரு யோசனை இல்லை.''

``37 ஆண்டு சினிமா பயணம். திருப்தியாக உணர்கிறீர்களா?''


``திருப்தி ஆகிட்டேன்னு நினைச்சா நடிக்கிறதை நிறுத்திடுவேன். அதனால, திருப்தி இல்லைனுதான் சொல்லணும். ஆனா, கொஞ்சம்கூட திருப்தி இல்லாம இவ்ளோ காலம் இங்கே இருந்திருக்க முடியாதே. கொஞ்சம் திருப்தியும் இருக்கு.
 
சாப்பிடுற மாதிரிதான். வயிறு நிறைஞ்சுட்டா, அப்புறம் சாப்பிட மாட்டோம். ஆனா, பசிக்கும்போது திரும்பச் சாப்பிடணும். அப்படித்தான் எனக்கு நடிப்பும்!''