பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

மாவீரன் கிட்டு - சினிமா விமர்சனம்

மாவீரன் கிட்டு - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
மாவீரன் கிட்டு - சினிமா விமர்சனம்

மாவீரன் கிட்டு - சினிமா விமர்சனம்

மாவீரன் கிட்டு - சினிமா விமர்சனம்

ல்வியின் வழியே தங்களுடைய வாழ்வுரிமைகளை மீட்க முற்படும் தாழ்த்தப்பட்ட சாதி மக்கள். அடக்கு முறைகளின் வழியே முட்டுக்கட்டை போடும் ஆதிக்கச் சாதி அதிகாரம். இந்தச் சாதி அடக்கு முறைக்கு எதிரான உரிமைப்​போரில் உயிராயுதம் ஏந்தும் ஓர் இளைஞனே `மாவீரன் கிட்டு'.

மாவீரன் கிட்டு - சினிமா விமர்சனம்

பொதுவழியில் தாழ்த்தப்பட்ட சாதியினரின் பிணத்தைக்கூடக் கொண்டு செல்ல அனுமதி மறுக்கிறார்கள் ஆதிக்கச் சாதியினர். அந்தப் பாதையில் தன் மக்களை என்றைக்காவது தலை நிமிர்ந்து நடக்கவைப்பதையே லட்சியமாக ஏற்கிறார் தாழ்த்தப்பட்ட சமூகத்தவரான பார்த்திபன். அதே ஊரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதி இளைஞன் விஷ்ணு விஷால், ப்ளஸ் டூ-வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்று, கல்லூரிக்குள் நுழைகிறான். அவனை எப்படியாவது கலெக்டர் ஆக்கி, தன் மக்களுக்கு ஒரு முன்மாதிரியை உருவாக்க முனைகிறார் பார்த்திபன். சுயமரியாதையை நோக்கி நகரும் தலித்களின் முயற்சிகள், ஆதிக்கச் சாதி அரசியல்வாதிகளை நிறையவே தொந்தரவுசெய்கிறது. அதிகாரத்தின் உதவியோடு அடக்குமுறைகளைக் கட்டவிழ்க்க, பார்த்திபன் புது வியூகம் அமைக்கிறார். அவருடைய போராட்டம் வென்றதா? சாதாரண கிருஷ்ணகுமார், எப்படி `மாவீரன் கிட்டு'வாகிறான் என்பது மீதிக்கதை.

கதை நடப்பது 1987-ல்தான். இருந்தும் ஆதிக்கச் சாதிகளுக்கு ஆதரவான காவல் துறை நடவடிக்கைகள், ஆணவக்கொலைகள், மாணவர் களிடமும் தொடரும் தீண்டாமைப் பாகுபாடுகள் என, காட்சிகள் ஒவ்வொன்றும் செய்தித்தாள்களில் நாம் அன்றாடம் கடப்பவையே. `கற்பி... ஒன்று​சேர்... போராடு!' என்கிற அம்பேத்கரின் சொற்கள்தான் படத்தின் ஆணிவேர்.  அதையே படத்தின் பிரதான பாத்திரமான சின்ராசுவும் முன்னெடுக்கிறார்.

தலித் மக்கள் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று வர உதவும் பேருந்துக்குத் தடை வாங்குவது, தாமாகவே போராடி ஒரு பேருந்தை வாங்கினாலும் அதையும் கலவரங்களின் வழியே எரிப்பது, போராடும் தலித் தலைவர்கள் மேல் குற்றப் பின்னணிகளையும் ஊழல் குற்றச்சாட்டுகளையும் உருவாக்கிப் போராட்டங்களைச் சிதைப்பது, கல்வியில் சிறந்துவிளங்கும் மாணவர்களுக்குத் தொடர் அழுத்தம் கொடுத்து, அவர்களுடைய கல்வி, வேலைவாய்ப்புகளை முற்றிலுமாகச் சிதைப்பது என, படம் நெடுக ஆதிக்கச் சாதி நடவடிக்கைகளை ஆணித்தரமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.

கிட்டுவின் கல்வியைச் சிதைக்கும் காட்சிகள், கற்பதற்கான உரிமை மறுக்கப்பட்டுப் போராடி செத்துப்போன ரோஹித் வெமூலாவை நினைவூட்டுபவை. பொதுவாக, சாதிப் பிரச்னைகளை அலசும் திரைப்படங்களில் இருக்கும் ரத்தமும் வன்முறையும் இந்தப் படத்தில் ஒப்பீட்டளவில் குறைவுதான். ஆனால், அதெல்லாம் இந்தக் கதைக்குத் தேவைப்படவே இல்லை.

மாவீரன் கிட்டு - சினிமா விமர்சனம்



``அதிகாரத்துல இருக்கிறவங்களைத் தப்பு சொல்லல. அதிகாரமே தப்புன்னுதான் சொல்றோம்'', ``அடி அடின்னு அடிக்கிறாங்க. திருப்பி அடிச்சா  திமிருங்கிறாங்க'',  ``விட்டுக்கொடுக்கச் சொல்றீங்க. விட்டுட்டேதான் இருக்கோம்... யாரும் கொடுக்க மாட்டேங்கிறாங்களே!'' என, படம் முழுக்க பார்த்திபன் பேசும் யுகபாரதியின் வசனங்கள் எல்லாமே கதைக்குத் தேவையான வலிமையைத் தருகின்றன. கதைக்கான நிலத்தையும் களத்தையும் கச்சிதமாகப் படம்பிடித்திருக்கிறது
ஏ.ஆர்.சூர்யாவின் கேமரா. 80-களின் சூழலை மீள்உருவாக்கம் செய்திருக்கிறார் கலை இயக்குநர் பி.சேகர்.

ஈழத்தியாகி திலீபனின் சாயலில் கிராமத்துக் கிட்டுவாக, கச்சிதமாக இருக்கிறார் விஷ்ணு விஷால். ஆனால், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞனின் கோபமும் ஆற்றாமையும் வலியும் அவருடைய நடிப்பில் ஆழமாக வெளிப்படவில்லை. சின்ராசு கதாபாத்திரத்தை, பார்த்திபன் பக்குவ​மான மனிதராக நிறைவாக செய்திருக்கிறார். ஆனால், அவரிடமும் கோபமும் ஆவேசமும் குறைவுதான். ஸ்ரீதிவ்யா நிறைவாக நடித்திருக்கிறார். சூரி, படத்தில் இன்னுமொரு கதாபாத்திரமாக வந்து போகிறார். பத்து நிமிடங்களே வந்தாலும் ஆணவக்கொலை செய்யும் அந்தப் பெரியவர் பாண்டியனின்  நடிப்பு அபாரம். காவல் அதிகாரி ஹரீஷ் உத்தமனும், ஊர்த் தலைவர் நாகிநீடுவும் சாதி வெறியின் பதற்றத்தையும் பயத்தையும் மிகச்சரியாக உருவாக்கி வெளிப்படுத்தியுள்ளனர்.

கதையின் இன்னொரு நாயகனான சின்ராசுவின் கதாபாத்திரம் ஏன் அவ்வளவு மேலோட்டமாக இருக்கிறது? அவருடைய கதாபாத்திரம் மட்டும் அல்ல, படத்தில் பல கதாபாத்திரங்களும் அப்படித்தான் அழுத்தமே இல்லாமல் வந்து போகின்றன. அதனாலேயே பல முக்கியமான காட்சிகளும்கூட உரிய பாதிப்பை உருவாக்கத் தவறுகின்றன. இடைவேளையில் இருந்தே க்ளைமாக்ஸை நோக்கியே திரைக்கதை பயணிக்கிறது. கூடவே தேவை இல்லாத காதல் பாடல்கள், படத்தின் அழுத்தத்தைக் குறைக்கின்றன. லாஜிக் மீறல்களும் அதிகம். இசை இமான் என்பது, ஆங்காங்கே கேட்கிறது.

தலித் மக்களின் வாழ்வும் போராட் டங்களும் தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக இப்போதுதான் பதிவாகத் தொடங்கியுள்ளன. சாதீய சினிமாக்களுக்கு மத்தியில் சாதி ஒழிப்பு சினிமா முக்கியமான தேவையாக இருக்கிறது. அதிலும் பிரதானமான பாத்திரம் தலித் அடையாளத்தோடு இடம்பெறுவது எல்லாம், மிகவும் அரிதாக நிகழும் சம்பவம்.
 
படமாக்கலில் சில குறைகள் இருந்தாலும் படத்தின் நோக்கமும் பேசும் அவசிய அரசியலும் முக்கியமானவை. அதற்காகவே `மாவீரன் கிட்டு' மக்களிடம் சென்று சேரவேண்டிய படம்.

- விகடன் விமர்சனக் குழு