Published:Updated:

‘கொடூரன் இல்லைன்னா குழந்தை!’

‘கொடூரன் இல்லைன்னா குழந்தை!’
பிரீமியம் ஸ்டோரி
‘கொடூரன் இல்லைன்னா குழந்தை!’

பா.ஜான்ஸன்

‘கொடூரன் இல்லைன்னா குழந்தை!’

பா.ஜான்ஸன்

Published:Updated:
‘கொடூரன் இல்லைன்னா குழந்தை!’
பிரீமியம் ஸ்டோரி
‘கொடூரன் இல்லைன்னா குழந்தை!’
‘கொடூரன் இல்லைன்னா குழந்தை!’

`` `நியாயம் - அநியாயம் இரண்டுக்கும் இடையே சிறு வித்தியாசமே உள்ளது. அதற்குப் பேர்தான் தர்மம்!'னு கிருஷ்ண பரமாத்மா சொன்ன வார்த்தைகளுக்கு நான் டப்பிங் பேசிட்டு வந்திருக்கேன். இதுதான் படம் போடுறதுக்கு முன்னால வர்ற கார்டு; படமும்கூட. `எ ஃபிலிம் வித் மிஸ்டேக்ஸ்'னு நான் சொல்றதுக்கு அர்த்தமும் இதுதான்'' எனச் சிரிக்கிறார் இயக்குநர் இராதா கிருஷ்ணன் பார்த்திபன். `கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தின்  டப்பிங் இடைவேளையில்  பார்த்திபனுடன் ஒரு தேநீர் சந்திப்பு!

``படத்தின் வெளியீடு என்பதே சிரமமாக இருக்கும் நேரத்தில், `டிசம்பர் 23 ரிலீஸ்'னு அறிவிச்சுட்டு வேலைசெய்றீங்களே?''

``ஒரு ஜோசியக்காரரைப் பார்த்து சரியா நேரம் குறிச்சு, குழந்தையை வெளியே எடுத்தோம்னா, அது இப்படி எல்லாம் ஆகும்னு ஒரு மெனு சொல்வாங்க. அதுக்காக சில பேர் முயற்சியும் பண்ணுவாங்க. ஆனா, தாய் வலி தாங்காம இயற்கையாவே குழந்தை வெளியே வரும் நேரம்னு ஒண்ணு இருக்கும். அதுதான் இந்த டிசம்பர் 23. கிட்டத்தட்ட இரண்டரை வருஷமா ராத்திரியும் பகலுமா கஷ்டப்பட்டு வேலை செஞ்சு முடிச்சிருக்கிறப்போ, அது எப்போ வெளியாகும்கிறதை நான்தான் முடிவுசெய்யணும்.''

`` ` `கதை, திரைக்கதை, வசனம் இயக்கம்' படத்தில் கதை இல்லை'னு சொன்னீங்க. இந்தப் படத்தில் என்ன இல்லை... என்ன இருக்கு?''

``என்ன இருக்குங்கிறது கோடிட்ட இடம்... அது படம் பார்க்கும்போதுதான் நிரப்பப்படும். உலகத்தில் சொல்லப்படாத கதைனு ஒண்ணு இல்லவே இல்லை. ஆனா, இந்தக் கதை நான் கேள்விப்பட்ட ஓர் உண்மைச் சம்பவம். ஒன்றரை லைன்ல சொல்லக்கூடிய ரொம்பச் சின்ன விஷயம். இதை சினிமாவாக்க, நான் என்ன எல்லாம் சேர்த்திருக்கேனோ, அது எல்லாம் சுவாரஸ்யமா இருக்கும். இந்தக் கதை முடியும்போது பார்த்தா, `இதுக்கு எப்படி இத்தனை ரூட் வந்தது?'னு தோணும். ஏன்னா, இதுல எது கதையோ, அதை விட்டுட்டு வேற எதில் இருந்தோ நகரும். அப்புறம் வழக்கமா பேய் பயம்கிறது இங்கே எல்லாருக்கும் பிடிச்சிருக்கு. அதனால, இதில் கொஞ்சம் பேயும் இருக்கும்.''

‘கொடூரன் இல்லைன்னா குழந்தை!’

``படத்துக்கு பத்து தயாரிப்பாளர், கிரவுடு ஃபண்டிங்னு தயாரிப்பிலும் புது முயற்சியில் இறங்கிட்டீங்களே?''

``எல்லாருக்கும் இதைப் பற்றி தெரிய மாட்டேங்குது. `பார்த்திபனுக்கு என்ன கஷ்டம்? நம்மகிட்ட பத்து லட்சம் ரூபாய் கேட்கிறாரு!'னு நினைக்கிறாங்க. படம் எடுக்கிறதுக்கு நிறையத் தயாரிப்பாளர்கள் தயாரா இருக்காங்க. ஆனா, இந்த முறை பற்றி நான் கேள்விப்பட்டேன். ஹாலிவுட்ல பண்ணியிருக்காங்க, கன்னடத்தில் பண்ணியிருக்காங்க. ஐம்பது பேரு நமக்கு ஃபண்ட் பண்றதுக்கு எப்போதும் தயாரா இருப்பாங்க. இன்னைக்கு அது பத்து லட்சமா இருக்கும். நாளைக்கு அது ஐம்பது லட்சமா மாறும். சிறிய முதலீடு, பெரிய லாபம். இல்லைன்னா சிறிய நஷ்டம் அவ்வளவுதான். ஆனா, பத்து லட்சம் கொடுத்துட்டு தயாரிப்பாளர்ங்கிற பெயர் கிடைப்பது பெரிய விஷயம். நிச்சயமா இதை எல்லாரும் தொடரணும்கிறது என் ஆசை. தொடர்வாங்கனு நம்பறேன்.''

``சாந்தனு எப்படி இந்தப் படத்துக்குள் வந்தார்?''

``சிரமத்தில் இருக்கிறவனுக்குத்தான், அடுத்தவன் சிரமம் புரியும். அந்த மாதிரி, அவனும் தத்தளிக்கிறான்; நானும் தத்தளிக்கிறேன். கொஞ்சம் பாதுகாப்பாத் தத்தளிக்கிறவன், இன்னொருத்தனுக்கு உதவ முடியும். அந்த மாதிரி நான் யார் யாருக்கு எல்லாம் என்ன எல்லாம் பண்ணலாம்னு அடிக்கடி யோசிப்பேன். பாரதிராஜா பையனில் ஆரம்பிச்சு எல்லாரையும். `நிராகரிக்கப்பட்டவர்கள்’னு ஒரு ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணி வெச்சிருந்தேன். திறமை இருந்தும், ஏதோ ஒரு காரணத்தால் அடையவேண்டிய இடத்துக்குப் போகாத, நான் உள்பட பலரையும் சேர்த்து ஒரு படம். நான் யாருக்கு எல்லாம் கடமைப்பட்டிருக்கேனோ, அவங்களை எல்லாம் இதில் கொண்டுவரணும்னு யோசிச்சேன். அதுல முக்கியமான ஆள் பாக்யராஜ் சாருடைய பையன் சாந்தனு. ஒவ்வொரு ஃப்ரேம்லயும் அவ்ளோ அழகா நடிச்சிருக்கார். அவருக்கு நான் ப்ளஸ்ஸா இருக்கணும்னு நினைச்சேன். ஆனா, இப்போ அவரு இந்தப் படத்துக்குப் பெரிய ப்ளஸ்ஸா மாறியிருக்கார்.''

‘கொடூரன் இல்லைன்னா குழந்தை!’

``இயக்கம் போலவே நடிகராகவும் ஒரு பயணம் எப்படி இருக்கு?''

``எனக்குப் பெரிய சந்தோஷமே, நான் மிகவும் மதிக்கிற நல்ல இயக்குநர்கள் என்னை இயக்குணும்னு நினைக்கிறதுதான். `உங்களை ரெண்டு விதமா பிரிக்கலாம். கொடூரன் இல்லைன்னா குழந்தை'னு செல்வராகவன் ஒருமுறை சொன்னதை, நான் எப்பவுமே மறக்க மாட்டேன். இப்போ நடிச்சிருக்கும் `மாவீரன் கிட்டு'ல என்னுடைய ரோலை சுசீந்திரன் மூணு வருஷங்களுக்கு முன்னாடியே என்கிட்ட சொல்லிட்டார். அது ஷூட்டிங் போறதுக்குள்ள பல ஹீரோக்கள் மாறிட்டாங்க. ஆனா, என்னோட ரோலை மட்டும் அப்படியே வெச்சு, இதை நீங்கதான் சார் பண்ணணும்னு சொல்லிட்டே இருந்தார். இதை பார்த்திபன் நடிச்சாதான் நல்லாயிருக்கும்னு எனக்கான கதாபாத்திரத்தை இயக்குநர் உருவாக்குவது எல்லோருக்கும் நடக்காது. இப்படியான நல்ல மனிதர்களுக்கு நியாயம் செய்யும்படியா தீவிரமா உழைக்கணும்; உழைக்கிறேன்.''

`` `பார்த்திபன்'னாலே `வித்தியாசம்'னு ஒரு பிராண்ட் இமேஜ் இருக்கே. இயல்பாவே நீங்க இப்படித்தானா?''

``ஏதாவது ஒரு விஷயம், சிமென்ட் தயாரிக்கும் ரோட்டரி க்ளின் மாதிரி எந்நேரமும் தலைக்குள்ள  ஓடிக்கிட்டே இருக்கும். இந்த `ரோட்டரி க்ளின்'கிற வார்த்தை ஸ்கூல்ல படிச்சது. அப்போ `இந்த வார்த்தையைப் படிச்சு என்ன பண்ணப் போறேன்'னு யோசிச்சேன். ஆனா, இப்போ உதாரணம் சொல்ல யூஸ் ஆகுது. அதனால இயல்பா, கட்டாயமானு தெரியலை. இது மாதிரி பல விஷயங்கள் வித்தியாசமா மனசுல ஓடுது. சிலது எங்கேயாவது பயன்படுது; சிலது அப்படியே காணாமல்போயிடுது.''

‘கொடூரன் இல்லைன்னா குழந்தை!’

``இயக்கம் மூலம் உங்க பசங்களை இம்ப்ரெஸ் பண்ணணும்னு தொடர்ந்து முயற்சி பண்றதா சொல்வீங்க, இம்ப்ரெஸ் பண்ணிட்டீங்களா?''

``கீர்த்தனாவையும் ராக்கியையும் இந்தப் படத்தைப் பார்க்கவைக்கிறதுக்காக டைம் கேட்டுட்டே இருப்பேன். தொடர்ந்து பத்து நாட்கள் கேட்டிருக்கேன். பத்து நாட்களும் `நாளைக்கு வர்றேன்'னு சொல்வாங்க. ஆனா, கடைசியில் பார்த்துட்டாங்க. அவங்க ஏன் பார்க்கணும்னு நினைச்சேன்னா, என் பசங்க என்பதைவிட, இந்த இளம் தலைமுறையைச் சேர்ந்தவங்க. அதைவிட முக்கியம் என்னை அதிகம் கிழிச்சுத் தொங்கவிடும் முக்கியமான ஆட்கள்.

படம் பார்த்துட்டு கீர்த்தனா சொன்ன கமென்ட்... ` பிரில்லியன்ட்'. ஏன்னா, அவங்களுக்கு முன்னாடியே கதை தெரியும். `கதை தெரிஞ்சு பார்த்த என்னையே நீங்க ஹோல்டு  பண்ணிட்டிங்க'னு பாராட்டினாங்க.
பையன் ராக்கிகிட்ட எதிர்பாராத ஒரு சினிமா அறிவு இருக்கு. `நிராகரிக்கப்பட்டவர்கள்' கதையை அவர்கிட்ட சொன்னேன். `அதுல ஒரு கதாபாத்திரத்தில் `கருப்பண்ணசாமி' சாயல் இருக்கே'னார். எனக்குப் பயங்கர ஷாக். அவருகிட்ட `கருப்பண்ணசாமி' கதையை அவர் ரொம்பச் சின்னப் பையனா இருக்கும்போது சொன்னேன். அதை இப்போ வரை ஞாபகம்வெச்சு சொல்லும் அறிவு, ஆச்சர்யத்தைக் கொடுத்தது.

கீர்த்தனா எனக்குத் திரும்பத் திரும்பச் சொல்லும் ரெண்டு விஷயங்கள்ல ஒண்ணு, `நீங்க மேக்கிங்ல இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்துக்கணும்' என்பதுதான். ஆனா, அது பட்ஜெட் சம்பந்தப்பட்டதாச்சே! `வழக்கமா சிந்திக்கும் எழுதும் விஷயத்தைத் தாண்டின ஓர் எழுத்தும் சிந்தனையும் உங்ககிட்ட இருக்கு'னு கீர்த்தனா அடிக்கடி சொல்வாங்க. அதுதான் சந்தோஷம்!''