
பா.ஜான்ஸன்
`நான் ஐயா... ஐயானு கூப்பிட்டுட்டே இருக்கேன். நீங்க பார்க்கவே மாட்றீங்க' - அறைக் கதவின் சிறிய இடைவெளி வழியே பேசும் மகன் தீரனிடம் ``அப்பாவுக்குச் சின்ன வேலை இருக்குப்பா'' எனக் கொஞ்சிக் கெஞ்சி அனுப்பிவிட்டு ``எங்க வீட்ல அப்பாவை `ஐயா'னுதான் சொல்வோம், அதான் இப்படி. இனி நாம பேசலாம் பிரதர்'' - நிமிர்ந்து உட்காருகிறார் நடிகர் சிபிராஜ்.
நடிகர் சத்யராஜின் மகன் என்பதைத் தாண்டி, சினிமாவில் தனக்கெனத் தனி அடையாளம் கிடைக்கக் கடுமையாக உழைப்பது, சிபிராஜின் ஒவ்வொரு வார்த்தையிலும் தெரிகிறது.
``வெற்றி-தோல்விக்குத் தயாரா இருந்தாத்தான், சினிமா மாதிரியான ஒரு தொழிலுக்கு வரவே முடியும். வெற்றியோ, தோல்வியோ, கடைசியா பண்ணின `நாய்கள் ஜாக்கிரதை', `ஜாக்சன் துரை' படங்களை, வாங்கினவங்க... வித்தவங்க ரெண்டு பேருக்குமே நல்ல லாபம். அடுத்த படம் `கட்டப்பாவ காணோம்' ரிலீஸுக்கு ரெடி.''

`` `கட்டப்பாவ காணோம்' டைட்டில், `பாகுபலி' எஃபெக்ட்டா?''
``இது வேற. நிறைய வீடுகள்ல `அரோவனா'ங்கிற வாஸ்து மீனைப் பார்க்கலாம். அது இருந்தா அதிர்ஷ்டம்னு எல்லோருக்கும் இருக்கும் நம்பிக்கையை வெச்சுத்தான் இந்தக் கதை பண்ணியிருக்கோம். அந்த மீன்தான் இதுல ஹீரோ. அது காணாமப்போகுதுங்கிறதை வெச்சுத்தான் படம். போன படத்தில் `சுப்ரமணி'ங்கிற பேரை நாய்க்கு வெச்சதால், `மூன்றாம்பிறை'யோடு கனெக்ட் பண்ணிக் கிட்டாங்க. அதனால, மீனுக்கு அப்படி ஒரு பேர் வேணுமேனு யோசிச்சோம். இன்னைக்கு வரை `கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்னாரு?'ங்கிற டாக் இருக்கு. அதான் அதையே ஃபிக்ஸ் பண்ணிட்டோம்.''
``முன்னாடி நாய், இப்போ மீன். வித்தியாசமான கதை உங்களைத் தேடி வருதா... இல்லை நீங்க தேடிப்போறீங்களா?''
``ரெண்டுமே நடக்குது. எனக்கு வர்ற கதைகள்ல பெஸ்ட்டா பார்த்துதான் தேர்ந்தெடுக்கிறேன். `நாய்கள் ஜாக்கிரதை' ஹிட்டுங்கிறதால, அந்த சென்டிமென்ட்ல இந்தக் கதையும் வந்திருக்கலாம். மீன் மட்டும்தான் இதில் புதுசுனு இல்லை. மொத்தமா இந்த கான்செப்ட்டே புதுசு. பக்கா நகரத்துப் பையனா, ஐ.டி-யில் வேலைசெய்யும் கதாபாத்திரம். எனக்கு இது புது லுக் கொடுக்கும்னு தோணுச்சு; இறங்கிட்டேன்.''

`` `நாணயம்’, `போக்கிரி ராஜா' படங்கள்ல நெகட்டிவ் ரோல் ட்ரை பண்ணீங்க. இப்போ அப்படிப்பட்ட கேரக்டர்களைத் தவிர்க்கிற மாதிரி தெரியுதே?''
``அந்தப் பட இயக்குநர் சக்தியும், அதில் நடிச்ச பிரசன்னாவும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். நல்லா தெரிஞ்ச ரெண்டு பேர்ல ஒருத்தர் பாசிட்டிவ் ரோல், ஒருத்தர் நெகட்டிவ் ரோல் பண்ணும்போது வசதியா இருக்கும். எனக்கும் பிரசன்னாவுக்கும் சமமான ரோல் இருந்ததாலதான் அந்தப் படம் பண்ணேன். அதுக்குப் பிறகு பண்ண `போக்கிரி ராஜா'வுலயும் அது இருந்துச்சு. ஆனா, இனி வில்லன் ரோல் பண்ணும் எண்ணம் இல்லை. ஹீரோ மட்டும்தான்!''
``சில நேரங்கள்ல அப்பாவின் மேனரிசமோ, வசனங்களோ படத்துக்கு வேணும்னு கேட்கும்போது உங்க ரியாக்ஷன் எப்படி இருக்கும்?''
``நெகட்டிவ் ரோல் பண்ணும்போது அந்த விஷயங்களை கதையே கேட்கும். ஆடியன்ஸும் அதை எதிர்பார்ப்பாங்கனு இயக்குநர்களும் சொல்வாங்க. அப்படித் தேவைப்படும் இடத்தில் நாம அதை மறுக்க முடியாது. ஆனா, `லீ', `நாய்கள் ஜாக்கிரதை' படங்களில் அவருடைய ஸ்டைல் இருக்காது. `கட்டப்பாவ காணோம்'லகூட அந்த விஷயங்கள் எதுவுமே இருக்காது. ஆனா, உருவ ஒற்றுமை, வாய்ஸ் எல்லாம் ஒண்ணுபோலவே இருக்குன்னு சொல்றாங்க. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?''

``அப்பா நடிச்ச படங்களில் எந்தப் படத்தையாவது ரீமேக் பண்ணி நடிக்கணும்னு தோணியிருக்கா?''
``சில படங்கள் தோணும். அப்புறம், அது மூலமா நாமளே ஒரு கம்பேரிசனை உருவாக்கிடுவோம்னு அலாரம் அடிச்சதும் அப்படியே காணாமப் போயிடும். ஆனா, பண்ணணும்னு ரொம்ப ஆசைப்பட்டது `பூவிழி வாசலிலே'. அந்தப் படத்தை எல்லாரும் மறந்ததுக்கு அப்புறம் ஃப்ரெஷ்ஷா பண்ணினாத்தான் சரியா இருக்கும்.''
``சரி, நீங்களாவது சொல்லுங்க... கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்னார்?''
``அப்பா அந்தப் படத்தில் நடிக்கும்போதே ஒரு அக்ரிமென்ட்ல கையெழுத்து வாங்கினாங்க. அதில் முதல் ரூலே இதை யார்கிட்டயும் சொல்லக் கூடாதுங்கிறதுதான். ஆனா, இந்தக் கேள்வியை நீங்க என் பையன் தீரன்கிட்ட கேட்டிருந்தீங்கன்னா, உங்களுக்கு சரியான பதில் கிடைச்சிருக்கலாம். ஏன்னா, என்னைவிட அவர்தான் அப்பாவுக்கு செம க்ளோஸ்.
மனைவி பேர் ரேவதி. எங்களுடையது லவ் மேரேஜ். காலேஜ் டைம்ல இருந்தே பழக்கம், ஏழு வருஷ லவ். ரொம்ப அழகான, எளிமையான வாழ்க்கை.''