
அந்தோணிதாசனின் குரல் கடல் தாண்டியும் கணீரென ஒலித்திருக்கிறது. சான்ஃபிரான்சிஸ்கோ, நார்த் கரோலினா தொடங்கி நியூயார்க் என, அமெரிக்காவின் ஐந்து நகரங்களில் நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகளை நடத்திவிட்டு வந்திருக்கிறார் இந்த `ஃபோக் மார்லி!'
``வெளிநாடுகளில் சினிமா நடிகர்கள், மிமிக்ரி கலைஞர்கள், மேடைப் பேச்சாளர்கள் என்றால் மக்கள் கூட்டம் கூடிடும். `நாட்டுப்புறப் பாடல்கள்'னு சொல்லி கூட்டம் கூட்டுறது ரொம்பக் கஷ்டம். ஆனாலும், இந்தக் கஷ்டத்தைத் தாண்டி பெரிய கூட்டத்தை வரவைக்க, அங்கு உள்ள தமிழ்ச் சங்கங்கள் நிறையவே கஷ்டப்பட்டாங்க. நிகழ்ச்சிக்கு செம ரெஸ்பான்ஸ். நிகழ்ச்சியைப் பார்க்க வராதவங்க ரொம்பவே வருத்தப் பட்டாங்க. அந்த அளவுக்கு நிகழ்ச்சி வெற்றி அடைஞ்சிருக்கு.’’
``அமெரிக்காவில் ஜாஸ், பாப், ராப் இசையைக் கேட்பவர்கள்தான் அதிகம். நாட்டுப்புற இசைக்கு எப்படி வரவேற்பு இருந்தது?''
``எல்லாம் ஒரே வகையான இசைதானே. இங்க இருந்துபோன நம் மக்கள் நிறையப் பேர் அங்க வசிக்கிறாங்க. நம் கலாசாரம், பாரம்பர்யம், இசை எதையுமே அவங்க மறக்கலை. மனதால் தமிழ்நாட்டில்தான் வாழ்றாங்க. நாங்க அங்கே போனப்ப, ` `வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்துல நீங்க பாடின பாடலைப் பாடுங்க...', ` `சொக்கவெச்சப் பச்சக்கிளி சுத்தவுட்டுப் பார்த்ததென்ன...' பாடுங்க’னு ஏகப்பட்ட ரிக்வெஸ்ட். நம் நாட்டுப்புற இசைக்கும் அமெரிக்காவில் பெரிய வரவேற்பு இருக்கு.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``அமெரிக்காவில்தான் நிகழ்ச்சி நடத்துவீங்களா... தமிழ்நாட்டுல நடத்துற திட்டம் இல்லையா?’’
``பெருசா பண்ணணும்னு கனவு இருக்கு. ஒவ்வொரு கிராமமாகப் போய் திறமையான வங்களைத் தேடிப்பிடிச்சு, அவங்களுக்குப் பயிற்சி கொடுக்கணும். நாட்டுப்புறப் பாடல்களுக் காகவே ஒரு பள்ளி நடத்தணும்னு பல கனவுகள் இருக்கு. அதுக்கு முன்னாடி, நான் இன்னும் பிரபல முகமா மாறணும். அதுக்கு சினிமா தேவைப்படுது. `சினிமாவில் இந்தப் பாட்டு பாடியிருக்கேன்’னு சொன்னா, சுலபமா மக்கள் அடையாளம் கண்டுக்கிறாங்க.’’
``சினிமாவால் அறியப்பட்டால்தான் மக்களிடம் நாட்டுப்புறக் கலையை எடுத்துச்செல்ல முடியுமா?’’
``நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு சினிமாவில் நிறைய வாய்ப்புகள் வருது. ஆனா, அவங்க நிலைச்சுநிக்கிறது கொஞ்சம் சிரமமாத்தான் இருக்கு. சினிமாவில் போராட்டத்தைச் சந்திக்கிற உறுதியான மனசு வேணும். என்னைப் பொறுத்தவரை, சினிமா எனக்கு அதிர்ஷ்டம்; கலை என் இஷ்டம். வெளிநாட்டில், நான் ஒரு நாட்டுப்புறக் கலைஞனா அறிமுகம் ஆவதைவிட, `சினிமாவில் பாட்டு பாடியிருக்கேன்’னு சொன்னா, சுலபமா அடையாளம் கண்டுபிடிச்சுடுறாங்க. சினிமா எனக்கு ஒரு நல்ல அடையாளம் தந்திருக்கு.’’


``சினிமாவிலும் நாட்டுப்புறக் கலையிலும் உங்கள் அடுத்த இலக்கு?’’
``சினிமாவில் கதாசிரியராக வரணும்னு ஆசை இருக்கு. அதுக்கு முன்னாடி, அடுத்த தலைமுறைக்கு நாட்டுப்புறப் பாடல்களை எடுத்துட்டுப் போற முயற்சியில் இருக்கேன்.இங்கு கலைஞர்கள் அழிவார்களே தவிர, கலை எப்போதுமே அழியாது. யார் மூலமாவது கலை வாழ்ந்துட்டேதான் இருக்கும். அதுதான் இயற்கை. ஹைபீட்டுல நாட்டுப்புறப் பாடலைப் பாட ஆரம்பித்தால், அமெரிக்கர்களே ஆடுறாங்கன்னா நம் ஆட்கள் ஆட மாட்டாங்களா? மனுஷன் இருக்கற வரை நாட்டுறப்புறக் கலை இருக்கும்.’’