Published:Updated:

சூப்பர் அப்பா!

சூப்பர் அப்பா!
பிரீமியம் ஸ்டோரி
News
சூப்பர் அப்பா!

பு.விவேக் ஆனந்த்

சூப்பர் அப்பா!

ஜினியின் மகளாக இருப்பது எவ்வளவு சந்தோஷம், எவ்வளவு பெருமை, எவ்வளவு சவால், எவ்வளவு சங்கடம்! தன் 34 வருட வாழ்க்கையை, புத்தகமாக எழுதியிருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ். `STANDING ON AN APPLE BOX' புத்தகம் முழுக்க ரஜினி ரெஃபரன்ஸ்!

சூப்பர் அப்பா!


ரஜினியின் நண்பர் ஒருவர், தன் நண்பர்களை அழைத்துக்கொண்டு ஒருநாள் ரஜினியின் வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது சிறுமிகளாக இருந்த ஐஸ்வர்யாவும் சௌந்தர்யாவும் வழக்கம்போல விருந்தினர்களுக்கு `ஹலோ' சொல்லிவிட்டு உட்கார, வந்திருந்த விருந்தினர்களில் ஒரு பெண் மட்டும் சிறுமிகளை அழைத்து ``எங்களுக்காக பாட்டு பாடேன்மா'' எனக் கேட்க, `பொதுவா கெஸ்ட் வந்தா இதெல்லாம் பழக்கமில்லையே' எனக் குழம்பினாலும் பாடுகிறார்கள். ``சரி, நீங்க ஏன் அப்பா மாதிரி டான்ஸ் ஆடக் கூடாது?'' என மீண்டும் அந்தப் பெண் கேட்க, இருவரும் சினிமாவில் பார்த்த சில ஸ்டெப்ஸை ஆடுகிறார்கள். அந்தப் பெண் கைதட்டி உற்சாகப்படுத்துகிறார். மேலும், இருவரையும் அடுத்த அரை மணி நேரத்துக்குப் பேசச் சொல்வது, நடக்கச் சொல்வது என பின்னிப்பெடலெடுக்கிறார். ஒரு கட்டத்துக்கு மேல் ரஜினிக்கு அந்தப் பெண்ணின் நோக்கம் புரிந்துவிட்டது. அந்த நேரத்தில் போலியோ விழிப்புஉணர்வு விளம்பரத்தில் நடித்திருந்தார் ரஜினி. ரேடியோ, டி.வி என, ரஜினி நடித்த விளம்பரம்தான் எங்கும் ஓடிக்கொண்டிருந்தது. `ரஜினியின் பிள்ளைகளுக்கு, போலியோ போன்ற ஏதாவது பிரச்னை இருக்கும். அதனால்தான் அப்படியொரு விளம்பரத்தில் நடித்திருக்கிறார்’ என்று கிசுகிசு பரவ, ரஜினியின் மகள்கள் எப்படி இருக்கிறார்கள் எனத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில்தான் அப்படியொரு ஸ்மார்ட்டான விசாரிப்புகளை வீட்டுக்கே வந்து செய்திருக்கிறார் அந்தப் பெண் என்பது புரிந்திருக்கிறது.

ரஜினிக்கு மகள் என்பது, சில்வர் ஸ்பூன் அந்தஸ்துதான். ஆனால், அதன் காரணமாக ஏற்பட்ட சின்னச்சின்ன அழுத்தங்கள், தவிர்க்க முடியாத நெருக்கடிகள், அதைத் தடுக்க பெற்றோர் மேற்கொண்ட நடவடிக்கைகள், அப்பா ரஜினி, அம்மா லதா, தங்கை சௌந்தர்யா, கணவர் தனுஷ், நெருங்கிய நண்பர்கள், குரு செல்வராகவன், பிள்ளைகள் லிங்கா, யாத்ரா என அத்தனை பேருடனான உறவுகளையும், அவர்களிடம் இருந்து கற்றதையும் பெற்றதையும் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக எழுதியிருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ்.

சூப்பர் அப்பா!

ஐஸ்வர்யாவுக்கு சிறு வயதில் இருந்தே வழக்குரைஞர் ஆக வேண்டும் என்பதுதான் விருப்பம். ஆனால், ஆரம்பத்திலேயே `நோ' சொல்லிவிட்டார் அம்மா லதா. பல கட்ட சமாதானங்களுக்குப் பிறகு, இந்தியாவின் முக்கியமான சட்டப் பள்ளியில் நுழைவுத்தேர்வை எழுதி முடித்து, தேர்ச்சியும் பெற்றிருக்கிறார் ஐஸ்வர்யா. ஆனால், ரெசிடென்ஷியல் கல்லூரியில் படிக்கவைக்க உடன்பாடு இல்லை. பாதுகாப்பாக வளர்ப்பதுதான் முக்கியம் என அந்தக் கனவுக்குத் தடை விதித்திருக்கிறார் லதா. `சட்டம் இல்லையென்றால், காலேஜே வேணாம் சாமி!' என வீட்டிலேயே இருந்துவிட்டார் ரஜினி மகள். நாட்கள் உருண்டோட, திருமணம், யாத்ரா என பிஸியான ஹோம் மேக்கராக மாறிவிட்டார். ஆனால், வழக்குரைஞர் ஆசை மட்டும் அப்படியே இருந்தது.

தனுஷிடம் ஆசையைச் சொன்னவுடன், `தாராளமா படி' எனத் தட்டிக்கொடுத்திருக்கிறார். குடும்ப நண்பர் ஒருவர் மூலமாகப் பேசி சென்னைக்கு அருகில் உள்ள ஒரு கல்லூரியில் ஸீட் கிடைத்துவிட்டது. ஆனால், `தேர்வு எழுதுவதற்கு மட்டும் கல்லூரிக்கு வந்தே ஆக வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளை கல்லூரி செய்து தரும்’ எனச் சொல்லியிருக்கிறார்கள். ப்ளே ஸ்கூல் செல்லும் யாத்ராவைக் கவனித்துக்கொண்டே வீட்டில் ட்யூஷன் வைத்து சட்டமும் பயின்றிருக்கிறார் ஐஸ்வர்யா.

``செமஸ்டர் தேர்வு வந்தது. அம்மா முதல் ஆளாக மெசேஜ் பண்ணியிருந்தாங்க. அப்பாவும் தனுஷும் போன் பண்ணி விஷ் பண்ணாங்க. `எல்லா ஏற்பாடுகளும் செஞ்சாச்சு'னு கல்லூரி டீன் சொல்லி கூட்டிட்டுப் போனார். அறையைச் சுற்றி கிட்டத்தட்ட நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கூடி, என்னையே பார்த்துட்டு இருந்தாங்க. எனக்கும் உள்ளுக்குள் உதறல் எடுத்தது. எனக்கு வழங்கப்பட்ட இந்தச் சலுகையைப் பற்றி என்ன நினைப்பாங்கனு கவலையா இருந்தது. எப்படியோ தைரியம் வந்து பரீட்சையை முடிச்சேன். வெளியே வந்தா, மீடியா குவிஞ்சுட்டாங்க. வரிசையா கேள்விகள். `மாணவர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்திட்டமோ!'னு வருத்தமா இருந்தது. என் வழக்குரைஞர் கனவுக்கு அன்றைக்கே முழுக்கு போட்டுட்டேன்'' - ஐஸ்வர்யா தன் கனவு நிறைவேறாமல்போன அந்த வலியைப் புத்தகத்தில் பதிவுசெய்திருக்கிறார்.

ஐஸ்வர்யாவுக்கு, இருட்டு என்றால் பயம். ஆனால் ரஜினிக்கு, இருட்டு ரொம்பப் பிடிக்கும். 90-களின் ஆரம்பத்தில், ரஜினி தினமும் ஷூட்டிங் முடித்து வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு மெல்லிய வெளிச்சம் இருக்கும் தனி அறைக்குச் சென்றுவிடுவாராம். அந்த அறைக்குள் நான்கு கண்ணாடிகள் இருக்கும். எதற்கு அங்கே அப்பா செல்கிறார்? அங்கே ஏன் அதிக நேரம் செலவிடுகிறார்? போரடிக்காதா? பயமாக இருக்காதா? அப்பாவிடம் கேட்க அடுக்கடுக்கான கேள்விகள் ஐஸ்வர்யாவுக்கு.

சூப்பர் அப்பா!

ஒருநாள் இதை அப்பாவிடம் கேட்டிருக்கிறார். மெள்ளச் சிரித்த ரஜினி, ``என்னோட வாழ்க்கையில் கனவுகள் எல்லாம் மிகப்பெரிய அளவில் நனவானது. நான் கஷ்டப்பட்டேன். முழு ஈடுபாட்டோடு கடுமையா உழைச்சேன். தேவையானதை அடைஞ்சேன். பேர், புகழ் எல்லாம் குவிஞ்சது. ஆனா, ஏணியில் விறுவிறுனு ஏறின நான், ஒருநாள் `என்னடா இப்படித் தனியா இருக்கோமே!'னு உணர்ந்தேன். என்னைச் சுற்றி இருந்தவங்கள்ல வெகுசிலர்தான் உண்மையாவே என் மேல அக்கறை வெச்சிருக்கவங்க. பலருக்குப் பொறாமைதான் இருக்குங்கிறது புரிஞ்சது. அது மனித இயல்புனும் உணர்ந்தேன். எல்லார்கிட்டயும் ஃப்ரீயா பேச முடியாது. அதனாலதான் அந்த ரூம்ல தினமும் தியானம் செய்றேன். எனக்கு நானே பேசிக்கிறேன். அந்த நாலு கண்ணாடிகளும், எனக்குள் இருக்கும் எல்லா குணங்களையும் வெளிக்காட்டும். நான் எது சரி, எது தப்புனு யோசிச்சு முடிவுபண்ணுவேன்'' என நீண்ட விளக்கம் கொடுத்திருக்கிறார் ரஜினி.

`காதல் கொண்டேன்’ திரைப்படம் பார்த்துவிட்டுத்தான் முதல்முறையாக தனுஷிடம் வாழ்த்துகள் சொல்லிப் பேசியிருக்கிறார் ஐஸ்வர்யா. அதன் பிறகு அடிக்கடி போனில் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். தனுஷ் போனில் கொஞ்சிக் கொஞ்சிப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த அண்ணன் செல்வராகவன், `யாருடா அது?' என அதட்டியிருக்கிறார். `கேர்ள் ஃபிரெண்ட்' என்ற பதில் தனுஷிடம் வந்ததும் அதிர்ச்சியடைந்து, `யார் அந்தப் பொண்ணு?' என தனுஷ் நண்பர்கள் உள்பட பல இடங்களிலும் விசாரித்திருக்கிறார். கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஒருநாள் தனுஷுடன் காரில் சென்றுகொண்டிருக்கும்போது, தனுஷுக்கு போன் வந்திருக்கிறது. `நான் பேசுறேன்' எனச் சொல்லி, வாங்கி பேசியிருக்கிறார் செல்வராகவன். `ஹாய்... ஹாய்..!' விசாரிப்புகளுக்குப் பிறகு `பெயர் என்ன?' எனக் கேட்டிருக்கிறார். `ஐஸ்வர்யா' என பதில் வர, `ம்ம்ம்... ஜஸ்ட் ஐஸ்வர்யாவா, நாட் ஐஸ்வர்யா ராய் அல்லது ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?' என யதார்த்தமாகக் கேட்டிருக்கிறார் செல்வா. `ஆக்ச்சுவலி ஐஸ்வர்யா ரஜினிகாந்த்' என பதில் வர, திகிலடித்துப்போய் சில நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்திருக்கிறார் செல்வராகவன். அப்படித்தான் செல்வராகவனுக்கும் ஐஸ்வர்யாவுடன் அறிமுகம். பின்னர், அது சினிமாவில் குரு - சிஷ்யை உறவாக வளர்ந்தது.

தங்கை செளந்தர்யா மீது அளவில்லா ப்ரியம். தனக்கும் தங்கைக்கும் படிப்பு, சினிமா, கேரக்டர் என எல்லாமே கான்ட்ராஸ்ட் எனக் குறிப்பிட்டிருக்கிறார் ஐஸ்வர்யா. முதன்முதலில் டிஸ்கொதே சென்றது, ஹனிமூன் பயணத் திட்டம் சொதப்பியது, சிறுவயதில் வளர்ந்த பெங்களூரு நாட்கள், நெருங்கிய நண்பர்கள், அம்மாவின் வளர்ப்புமுறைகள், எதிர்காலத் திட்டங்கள், சினிமா... எனப் பலப்பல விஷயங்கள் பற்றி புத்தகத்தில் பகிர்ந்திருக்கிறார் ஐஸ்வர்யா.

அப்பா, அட்வைஸ் கொடுக்க மாட்டார்; வாழ்ந்துகாட்டுவார். அவர் வாழ்க்கையில் இருந்துதான் பல விஷயங்களைக் கற்றுக்கொள்வேன் எனப் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கும் ஐஸ்வர்யா, ரஜினி குறித்து நிறைய உதாரணங்கள் சொல்லியிருக்கிறார்.

``பொதுவாக, பல உணவு வகைகள் பரிமாறப்பட்டாலும், ஏதாவது ஒன்றிரண்டு உணவு வகைகள் மட்டும்தான் அப்பா சாப்பிடுவார். ஏன் இப்படிச் செய்கிறார்னு எனக்குப் புரியலை. ஒருநாள் கேட்டேன் `நமக்கு முன்னாடி நிறைய சாய்ஸ் இருந்தா, நாம குழப்பமா இருப்போம். எந்தவொரு உணவையும் முழுசா ரசிச்சுச் சாப்பிடவே முடியாது. அது உடலுக்கும் நல்லதல்ல; மனசுக்கும் திருப்தி கிடைக்காது'னு சொன்னார் அப்பா. அப்போ நான் சில விஷயங்களைப் புரிஞ்சுக்கிட்டேன். நமக்கு முன்னாடி எத்தனையோ சாய்ஸ் இருக்கலாம். ஆனால், அதில் எது நீண்டகாலம் நமக்கு நிம்மதியைத் தரும், எதைத் தேர்ந்தெடுக்கணும்னு கவனமாக இருக்கணும். அப்படித் தேர்ந்தெடுத்ததில் முழுக்கவனம் செலுத்தணும். அது உணவோ, குடும்பமோ, காதலோ, வேலையோ எல்லாத்துக்கும் பொருந்தும்'' எனக் குறிப்பிட்டிருக்கிறார் ஐஸ்வர்யா.

சூப்பர்!