Published:Updated:

“கமல்ஹாசனின் அன்புக்கு நன்றி!”

“கமல்ஹாசனின் அன்புக்கு நன்றி!”
பிரீமியம் ஸ்டோரி
News
“கமல்ஹாசனின் அன்புக்கு நன்றி!”

பா.ஜான்ஸன் - படம்: அ.சரண் குமார்

“கமல்ஹாசனின் அன்புக்கு நன்றி!”

``வணிகரீதியிலான படங்கள் என்னால் நிறைய பண்ண முடியும். அதெல்லாம் புத்தியில் இருந்து வரும் கதைகள். ஆனால் `காஞ்சீவரம்', `சில சமயங்களில்' போன்ற படங்கள் எல்லாம் என் மனசில் இருந்து வர்றது. அதனால்தான் இந்தப் படத்தை எல்லார்கிட்டயும் கொண்டுபோகணும்னு ஆசைப்படுறேன்'' - மிக அமைதியாக, பொறுமையாக, அழகாகப் பேசுகிறார் இயக்குநர் ப்ரியதர்ஷன்.

“ ‘சில சமயங்களில்’ கதை, முதலில் அமீர்கான் செய்யவேண்டியது. `நாம பண்ணலாம்'னு ஆர்வமானார் அமீர். ஆனா, திரைக்கதையா எழுதுறதுக்கு அப்போ நேரம் இல்லை. பிறகு சந்திக்கும்போது, `அன்னிக்கு ஒரு கதை சொன்னீங்களே... எப்ப எடுக்கப்போறீங்க?'னு கேட்டார். ஸ்க்ரிப்ட் ரெடியானதும் பார்த்தா, அமீர் பிஸியாகிட்டார். என் முன்னாள் உதவி இயக்குநர் விஜய்கிட்ட ஸ்க்ரிப்ட் கொடுத்துப் படிக்கச் சொன்னேன். படிச்சுப் பார்த்தவர், `நானே தயாரிக்கிறேன்'னு வந்து நின்னார்.

90 நிமிடப் படமும் ஒரே இடத்தில் நடக்கும் கதை. எட்டு கதாபாத்திரங்களுடைய உரையாடல்கள்தான் படம். ஒரே இடம் என்பதால் எந்த ஃப்ரேமும் ரிப்பீட் ஆகக் கூடாதுனு ஒரு சவாலா எடுத்துட்டு, இந்தப் படம் பண்ணினேன்.

இது எய்ட்ஸ் பற்றிய விழிப்புஉணர்வுப் படம். இதை ஒரு டாக்குமென்ட்ரியா எடுத்திருக்கலாம். ஆனா, யாரும் பார்க்க மாட்டாங்க. அதையே அழகான கதையா மாற்றி ஒரு த்ரில்லரா கொடுத்தா, இந்த விஷயம் பலரையும் போய்ச் சேரும்னு முயற்சி பண்ணியிருக்கேன்.''

“மசாலாப் படங்கள், கலைப் படங்கள்னு இரண்டு பாதைகளிலும் பயணிக்கிறீங்களே எப்படி?”

“கலைப்படங்கள்னு சொல்றதைவிட யதார்த்தப்படங்கள்னு சொல்லலாம். ரியலிஸ்ட்டிக் சினிமாவில் நான் அந்த இடத்தில் இருந்தா என்ன பண்ணுவேனோ, அதைத்தான் ஹீரோவும் பண்ணுவான். அதுவே கமர்ஷியல்னா... என்னால என்ன எல்லாம் பண்ண முடியாதோ, அதை என் ஹீரோ பண்ணுவான். இவ்வளவுதான் இரண்டுக்குமான வித்தியாசம். இரண்டையுமே முழு ஈடுபாட்டோடு பண்றேன்.”

“யதார்த்தப் படம்னா நிச்சயமா பிரகாஷ் ராஜ் இடம் பிடிச்சிடுறாரே?”

“இன்னும் ஒரு படம் அவரோடு பண்ணணும். `காஞ்சீவரம்'ல நடிச்ச ஸ்ரேயா ரெட்டியும் இதில் இருக்காங்க. எனக்கும் இப்படிப்பட்ட ஆட்களுக்கும் ஒரு ட்ரையாலஜி பந்தம் இருக்குனு சொல்லலாம். ஒரே டைப் படங்களில் இந்த ஆட்களோடு மூன்று முறை வேலை செய்வேன். அது ஒரு வழக்கமாவே மாறிடுச்சு.”

“வெற்றி, தோல்வினு எதைப் பற்றியும் கவலைப்படாமல் இயங்குறீங்களே எப்படி?”

“எந்தப் படம் பண்ணாலும் முதலில் நான் ஒரு பார்வையாளனாத்தான் படம் பார்ப்பேன். சினிமா மீது எனக்கு இருக்கும் ஆர்வமும் காதலும்தான் காரணம். அதனால்தான் என்னால் சினிமாவில் 36 வருஷங்களா நிற்க முடியுது. எப்பவும் கத்துக்கத் தயாரா இருந்தா, எதுவுமே சாத்தியம்தான். கமர்ஷியலோ, ஆர்ட்டோ நான் சந்திக்கும் ஒரே பிரச்னை திரைக்கதைதான். அதை முழுமையாக்குவதுதான் கஷ்டம். நல்ல ஒரு திரைக்கதையை எவ்வளவு மோசமா எடுத்தாலும் ஓடும். ஆனா, மோசமான ஒரு திரைக்கதையை எவ்வளவு நல்லா எடுத்தாலும் ஓடாது. இதுதான் அடிப்படை.”

“கமல்ஹாசனின் அன்புக்கு நன்றி!”

“எழுத்தாளரான நீங்கள், இப்போது ஏன் கதைகள் எழுதுவது இல்லை?”

“எல்லோருமே தங்களுடைய குறைந்தபட்ச அனுபவங்களைத்தான் கதையா பண்ணுவாங்க. ஐந்து படங்களுக்குப் பிறகு கதையே இல்லாமப்போயிடும். அந்த விஷயம்தான் மற்றவர்களின் அனுபவங்களையும் கதைகளையும் தேடவைக்கும். நமக்குத் தேவை இன்னொரு விதமான பார்வை. சிலர் சொல்லும் கதைகள் அப்படியே அசரவைக்கும். `பார்வை இழந்தவன், ஒரு கொலைக்கான சாட்சியா இருக்கான்'னு ஒரு ஒன்லைன். `அட!’னு சொல்லவைக்குதுல்ல? `உடனே பண்ணுவோம்'னு மோகன்லால் சொன்ன பிறகு, முழு ஸ்க்ரிப்ட் எழுதினேன். அப்படி உருவானதுதான் ‘ஒப்பம்'.''

“ `ஒப்பம்' வரைக்கும் தொடர்ந்து மோகன்லால்கூட பயணிக்கிறீங்களே... உங்கள் இருவருக்குமான நட்பு எப்படிப்பட்டது?''

“நாங்க ரெண்டு பேருமே ஒண்ணா வளர்ந்தவங்க. அவருக்கு என் மேல ஒரு நம்பிக்கை இருக்கு. அந்த நம்பிக்கை போகவிடாம வேலை செய்றது என் கடமை. அவரைவெச்சு ஒரு ஃப்ளாப் கொடுத்தாலும் அடுத்த படம் சேர்ந்து பண்ணலாம்னுதான் சொல்வார். `இந்த முறை இன்னும் கவனமாப் பண்ணுவான்'னு என்னை அவர் நம்புவதுதான் எங்களுக்கான புரிதல். நான் அவரைவெச்சு இயக்கும் படத்தின் கதையைக்கூடக் கேட்க மாட்டார். `சரி... சரி, எல்லாம் முடிச்சுட்டு டப்பிங் பண்ணும்போது சொல்லு'னு நடிக்க ஆரம்பிச்சுடுவார். அவர் நடிச்ச படத்தை ரீமேக் பண்ணும்போது, அவர் ரோலில் நடிக்கிறவங்க, மோகன்லாலின்
50 சதவிகிதத்தைக் கொண்டுவந்தா போதும்னு நினைப்பேன்.”

“தமிழ் சினிமாக்கள் பார்க்கிறீங்களா?”

“தொடர்ந்து பார்க்கிறேன். `விசாரணை' பார்த்தேன். சமுத்திரக்கனியின் ரோல் ரொம்பப் பிடிச்சது. அப்பதான் `ஒப்பம்' படத்துக்கான எழுத்து வேலைகள்ல இருந்தேன். `இதோ இருக்கான் என் வில்லன்'னு கூட்டிட்டு வந்துட்டேன். அவர் நடிச்ச பிறகு, `இதை வேற யார் பண்ணியிருந்தாலும் வொர்க்அவுட் ஆகியிருக்காது'னு தோணுச்சு. சமீபத்தில் `கிடாரி' பார்த்துட்டு மிரண்டுபோயிட்டேன். குறிப்பா, வேல.ராமமூர்த்தி ரோல். அச்சன்குஞ்சு, பாலன் கே.நாயர் மாதிரியான மிரட்டல் தோற்றத்தில் இருக்கிறார். அதே மாதிரி நடிக்கிறார். என் படத்தில் அவரை நிச்சயம் பயன்படுத்துவேன்.”

“நீங்க, பாசில், பரதன்னு கேரள இயக்குநர்கள் நிறையப் பேர் தமிழில் படம் பண்ணியிருக்கீங்க. இப்போது அந்த நிலை மாறிடுச்சே?”

“எங்களுக்கு முன்னாடி சேதுமாதவன், கிருஷ்ணன்னு பல இயக்குநர்கள் தமிழில் படம் இயக்கியிருக்காங்க. நாங்க எல்லாரும் சென்னையில் வாழ்ந்திருக்கோம். இந்த ஜனங்களை எங்களால் புரிஞ்சுக்க முடியும். ஆனா, இப்போ இருக்கும் இயக்குநர்களுக்கு இந்தக் கலாசாரம் தெரியாது. இதை எல்லாம் புரிஞ்சுக்கிட்ட, அல்போன்ஸ் புத்திரன் மாதிரி யாராவது ஒருத்தர்தான் வந்து தமிழில் படம் எடுக்கிறாங்க. வயலாரும் கண்ணதாசனும் மீட் பண்ணிட்டே இருப்பாங்க. வயலார் தமிழ்ல பாட்டு எழுதினா, ஏதாவது தப்பு இருக்கானு கண்ணதாசன்கிட்ட கேட்டுப்பார். அந்த நெருக்கம் இப்போ குறைந்து, கலாசாரமே மாறிடுச்சு. அதுதான் இந்த வெற்றிடத்துக்குக் காரணம்னு நினைக்கிறேன்.”

“நீங்களும் லிசியும் 30 வருடங்களுக்கும் மேல் இணைந்து வாழ்ந்தவங்க. இப்போதைய பிரிவு உங்களைப் பாதிக்கிறதா?”

 “ `ஒப்பம்' படம் ஹிட்டானதும் கமல் சார் போன் பண்ணார். `ஒரு க்ரியேட்டருக்குப் பிரச்னை இருக்கும்போது, நல்லா வேலை செய்ய முடியாது. ஆனா, பிரச்னையைத் தாண்டி இந்தப் படம் இவ்ளோ பெரிய வெற்றியை அடைஞ்சிருக்கு'னு பாராட்டினார். அவரின் அன்புக்கு நன்றி. நான் இப்பவும் அவங்களை மதிக்கிறேன். என் குழந்தைங்களுக்கு அம்மா அவங்க. நான் அந்த மரியாதையை அவங்களுக்குக் கொடுக்கலைன்னா, என் குழந்தைகளின் மரியாதை போயிடும். பிரிவுதான். ஆனா, வாழ்க்கையில் சில விஷயங்களை யாராலும் தடுக்க முடியாது.”