Published:Updated:

'ராமர், கஸ்தூரி, ஜெயக்குமார் மற்றும் நம் உறவினர்கள் பங்கேற்கும் பிக் பாஸ்!' - ஒரு கலாய் கலாட்டா

'ராமர், கஸ்தூரி, ஜெயக்குமார் மற்றும் நம் உறவினர்கள் பங்கேற்கும் பிக் பாஸ்!' - ஒரு கலாய் கலாட்டா
News
'ராமர், கஸ்தூரி, ஜெயக்குமார் மற்றும் நம் உறவினர்கள் பங்கேற்கும் பிக் பாஸ்!' - ஒரு கலாய் கலாட்டா

'ராமர், கஸ்தூரி, ஜெயக்குமார் மற்றும் நம் உறவினர்கள் பங்கேற்கும் பிக் பாஸ்!' - ஒரு கலாய் கலாட்டா

15 போட்டியாளர்கள்.. 100 நாள்கள்... ஆண்டவர் பஞ்சாயத்து எனப் பரபரக்கவிருக்கும் பிக் பாஸ் சீஸன் 2  நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கும் பிரபலங்கள் யார் யார் என்பதுதான் இப்போதைக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மில்லியன் டாலர் கேள்வி. கடந்த சீஸனில் பிரபலமில்லாத சிலர் களமிறங்கி மக்கள் மனதைத் தொட்டனர். இந்த சீஸனில் பங்கேற்க பிரபலங்கள் மத்தியில் கடும் போட்டியாம். அதிகாரபூர்வமாக பங்கேற்கவிருப்பவர்கள் விவரம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு, இவர்கள் எல்லாம் கலந்துகொண்டால் செம என்டர்டெயின்மென்ட்டாக இருக்குமே எனும் நம் ஆசைதான் இந்தப் பட்டியல். பிக்பாஸ் பார்த்துச் செய்யட்டும்..!

``போராடினால் ஆவது சுடுகாடல்ல. பிக் பாஸ் வெறும் வீடல்ல. 
உளறினால் கெட்டுடும் பேரு. நீ யாரானாலும் இங்கே நான்தான் ஸ்டாரு.
விடிஞ்சா பாட்டு. அத்துமீறினா குறும்படத்தைப் போட்டுக் காட்டு.
வாரம்பூராம் யார் வித்தை காட்டினாலும் வீக் என்ட்ல நாந்தாம்லே" எனத் திகுதிகு ட்வீட் போட்டு செட்டுக்கு வருகிறார் ஆண்டவர். ஆண்டவர் அறிமுகப்படுத்தும் அதகள ஆறு பேர் பட்டியல் இதுதான். 

ஜெயக்குமார் :

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சமகால தமிழகத்தின் எல்லாப் பிரச்னைகள் குறித்தும் உடனடி கருத்துகள் கூறும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை 'உங்கள் சேவை பிக் பாஸுக்குத் தேவை' எனக் கூறி பிக் பாஸ் வீட்டுக்குள் அழைத்து வந்துள்ளனர். தன் துறை மட்டுமல்லாது கேலக்ஸி முழுக்க எந்த விவகாரம் என்றாலும் அசால்ட் பதில் சொல்லிவந்த ஜெயக்குமாருக்கு, பிக் பாஸ் வீட்டுக்குள் நாட்டு நடப்பு தெரியாமல் அவ்வப்போது வியர்த்துக் கொட்டும். சாதரணமாக பிரஸ்மீட்டிலேயே, தன் முகம் தெரிய வேண்டுமென மைக்குகளை கீழ தள்ளிக்கொண்டு இருப்பார் ஜெயக்குமார். பிக்பாஸில் அவருக்காகவே ஸ்பெஷலாக இரு கேமராக்கள் வைக்க இருக்கிறார்கள்.  பிரஸ்மீட் பார்க்காமல் கை கால் எல்லாம் கிடுகிடுவென நடுக்கம் எடுக்கும். 'கட்டிப்பிடி வைத்தியத்தால் காவிரியை மீட்கமுடியாது' எனச் சொல்லி வெளியிலிருந்தே கமலை விமர்சித்த ஜெயக்குமாருக்கும், கமலுக்கும் வாரவாரம் நடக்கும் முட்டல் மோதலைத் தீர்த்து வைக்கவே பிக் பாஸ் எக்ஸ்ட்ரா டூட்டி பார்க்கவேண்டி வரும்.

கஸ்தூரி :

'அமைதிப்படை தாயம்மா'தான் இப்போது ட்விட்டரின் ரணகள மாயம்மா. அரசியல், சினிமா என எதையாவது இழுத்துப்போட்டு வம்படியாக வறுத்து ட்வீட் தட்டினால்தான் அம்மையாருக்கு அன்றைய நாள் கழியும். கமலைப் போலவே ட்விட்டர் பிரபலம் என்பதால், இவரும் சினிமாவிலிருந்து சின்னத்திரைக்கு பிக் பாஸ் மூலம் அதகள என்ட்ரி கொடுத்திருக்கிறார். நெட்டிசன்களின் கமென்ட்களுக்கெல்லாம் அல்டிமேட் ரிப்ளை கொடுத்துப் பயமுறுத்தும் கஸ்தூரியிடம் மற்ற போட்டியாளர்கள் அனைவருமே பவ்யம் காட்டுவார்கள். தனது கருத்தை விமர்சனம் செய்பவரை பங்கமாக கலாய்த்து நறுக் சுறுக் கவிதைகளும் சொல்வார் என்பதால், இங்கு யாரும் இவருக்கு அல்வா கொடுக்க முடியாது. 

எஸ்.வி.சேகர் :

கவர்னருக்கு ஆதரவாகப் பேசுகிறேன் பேர்வழி என எக்குத்தப்பாகப் பேசி சில பல புகார்களில் தேடப்பட்டு வரும் எஸ்.வி.சேகர், திடீரென பிக் பாஸ் வீட்டுக்குள் சர்ப்பிரைஸ் என்ட்ரி கொடுக்கிறார். மத்திய அமைச்சரோடு விழாவில் கலந்துகொள்வது, போலீஸ் பாதுகாப்போடு வெளியில் செல்வது என வெற்றிகரமாக 50 நாள்களைத் தாண்டி தலைமறைவாக இருந்துவரும் சேகர், தமிழ்நாடு போலீஸுக்குத் தெரியாமல் இன்னும் 100 நாள்கள் தலைமறைவாக இருக்க சிறந்த வழி பிக் பாஸ் வீடுதான் எனும் ஐடியாவோடு இங்கே வந்திருக்கிறார். பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தபடி பா.ஜ.க-வின் முழுநேரக் கொள்கை பரப்புச் செயலாளராகவும் செயல்படுவார். கமலோடு பல படங்களில் சேர்ந்து நடித்தவர் என்பதால், கொசுவத்தி சுற்றி இருவரும் ஃபிளாஷ்பேக் பகிர்வார்கள். 

மிர்ச்சி சிவா :

'காலா' ரிலீஸ் ஃபீவரை மீறி தமிழ் சினிமா ரசிகர்களை குதூகலமாக்கிய சம்பவம் 'தமிழ்ப்படம் 2' டீஸர். ஃபர்ஸ்ட் லுக் வெளியானது முதலே எதிர்பார்ப்பை எகிறவைத்திருந்த இப்படத்தின் டீஸரில் அஜித், விஜய், சூர்யா, விஷால் என சகலரையும் கலாய்த்ததில் செம டிரெண்ட் ஆனது. தர்மயுத்தம் ஓபிஎஸ் ஸ்டைலில் தியானம் செய்த சிவா, பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து சனி, ஞாயிறுகளில் கமல் சொல்லிவிட்டுப் போனதையெல்லாம்,  'ஐலேசா ஐலேசா... ஆண்டவரே அய்யா கமலஹாசா' என வார நாள்கள் முழுக்க ஸ்பூஃப் செய்து கைதட்டல் வாங்குவார். 'பயப்படாத பொண்ணுக்கு உருப்படாத பையன்தான் செட் ஆவான்.. நீ பயப்படமாட்ட.. நான் உருப்படமாட்டேன்...' எனக் கஸ்தூரியிடம் ரைமிங்கில் பேசி செட்டையே செம கொண்டாட்டமாக்குவார்.

ராமர் :

'என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா'வை உலகம் முழுக்க டிரெண்டாக்கிய கையோடு 'ஆத்தாடீ என்ன உடம்பீ... அங்கங்க பச்ச நரம்பீ' எனப் பாடி தமிழ் ரசிகர்களை அசரடித்த விஜய் டிவி ராமர், இந்த பிக் பாஸ் சீஸனில் தனது ஃபேவரைட் பாடலைப் பாடிக்கொண்டே உள்ளே நுழைவார். அவ்வப்போது 'உட்டாலங் கிரி கிரி மாமா... நீ எட்டாத எட்டு வைக்கலாமா', 'குத்து விளக்கீ.. குத்து விளக்கீ...' ஆகிய பாடல்களை அவரது ஸ்டைலில் பாடக்கேட்டு உற்சாகமாவார், கஸ்தூரி. ஆண்டவர் வரும்நாளில் ’அவ்வை சண்முகி’ கெட்டப் போட்டு அப்ளாஸ் அள்ளுவார் ராமர். பிக் பாஸும் ராமர் ரசிகராக மாறி காலையிலேயே 'சலக்கு சலக்கு சரிகைச் சேல சலக்கு சலக்கு...' பாடலை ஓடவிட்டு ராமரை சிம்பு ஸ்பெஷல் முட்டி மூவ்மென்ட் போடவிடுவார்.

நாஞ்சில் சம்பத் :

அரசியல் வாழ்விலிருந்து திடீரென வி.ஆர்.எஸ் வாங்கி வெளியேறிய நாசாவுக்கு சினிமா, இலக்கியம் என எல்லாத் துறைகளிலும் ஏகப்பட்ட கிராக்கி. அரசியல் பயணத்தை அப்ரூட்டாகக் கட் செய்தவருக்கு அடுத்தும் அடித்தது பொலிட்டிகல் போனஸ். ஆர்ஜே பாலாஜி நடிக்கும் 'எல்கேஜி' படத்தில் அவருக்கு அப்பாவாகவும் ஆசானாகவும் நடிக்கும் நாஞ்சில் சம்பத்துக்கு, சின்னத்திரை பக்கமும் இன்னொரு கண். ஆண்டவர் நடத்தும் பிக் பாஸில் நுழைந்து அனல் கக்கும் பேச்சிலேயே மற்ற போட்டியாளர்களின் போட்டியைக் கலங்கவைக்கிறார். 'ஏடே பிக் பாஸ்.. இன்னிக்கு மத்தியானத்துக்கு அஞ்சாறு பருப்பு வடை குடுத்து அனுப்புடே...' எனக் கேமரா முன்பு கேட்டு குழந்தையாகவே மாறுவார் இந்த இன்னோவா அண்ணாச்சி. 

இந்த லிஸ்ட்ல ஒருத்தர் வந்தாலும் ஆட்டம் களைகட்டும்ல!