Published:Updated:

"ஆணவக்கொலைகளுக்கு எதிரான குரல் ஒலிச்சுக்கிட்டே இருக்கணும்''

"ஆணவக்கொலைகளுக்கு எதிரான குரல் ஒலிச்சுக்கிட்டே இருக்கணும்''
பிரீமியம் ஸ்டோரி
News
"ஆணவக்கொலைகளுக்கு எதிரான குரல் ஒலிச்சுக்கிட்டே இருக்கணும்''

மா.பாண்டியராஜன்

"ஆணவக்கொலைகளுக்கு எதிரான குரல் ஒலிச்சுக்கிட்டே இருக்கணும்''

`` `காதல்' படம் வந்து பன்னிரண்டு வருஷங்கள் ஆகிருச்சு. எது மாறணும்னு நினைச்சு அந்தப் படத்தை எடுத்தேனோ, அது கொஞ்சம்கூட மாறலை. முன்னாடிவிட இப்ப ஆணவக்கொலைகள் அதிகமா நடக்குது. அதை எல்லாம் தடுக்கணும்னா எப்போதும் இதைப் பற்றி நாம பேசிக்கிட்டே இருக்கணும். சாதி ஆணவக்கொலைகளுக்கு எதிரா நம் குரல் ஒலிச்சுக்கிட்டே இருக்கணும். படம் எடுத்தா மட்டும் போதாது. படம் எடுக்கிறவங்க அதுக்கு எதிரான போராட்டங்களிலும் கலந்துக்கணும்.

`ரா... ரா... ராஜசேகர்'னு என் அடுத்த படமும் சாதி ஆணவக்கொலைகள் பற்றித்தான் பேசுது'' - பொறுப்பாகப் பேசுகிறார் பாலாஜி சக்திவேல். `காதல்’, `கல்லூரி’, `வழக்கு எண் 18/9’... படங்கள் மூலம் தனக்கான அரசியலைத் தயங்காமல் பேசிய தனித்துவ இயக்குநர்.

`` `காதல்’ மாதிரியே இதுவும் உண்மைச் சம்பவம்தானா?''


``ஆமாம்... இதுமாதிரியான சம்பவங்கள் இனிமேல் நடக்கவே கூடாது என்ற அக்கறையில்தான், தொடர்ச்சியா உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து படங்கள் எடுக்கிறேன். என் படைப்பு, சமூகத்தில் சிறிய விழிப்புஉணர்வை உருவாக்கணும் என்ற எண்ணம்தான் காரணம்.

சமீபத்தில் ஆணவக்கொலைகளை  மையமாவெச்சு மராத்தியில் ‘சாய்ரத்’னு ஒரு படம் வந்தது. அந்தப் படத்துல ஆணவக்கொலைகள் இன்றும் எவ்வளவு கொடூரமா, அழுத்தமா நம் சமூகத்தில் பரவியிருக்குனு காட்டிருந்தாங்க. குறிப்பா, படத்தோட க்ளைமாக்ஸ் என்னை உலுக்கிருச்சு.

`ரா... ரா... ராஜசேகர்', ஆணவக்கொலைகள் பற்றி மட்டுமே பேசும் படம் அல்ல; இன்றைய சமூகம் எதிர்கொள்ளும் வேறு சில பிரச்னைகளையும் பேசும். இந்தப் படம் சொல்லும் செய்தி, கடைசித் தமிழனுக்கும் சரியாப் போய்ச் சேரும்னு நம்புறேன்.”

``மீண்டும் புதுமுகங்களோடு வர்றீங்களே?''


“என் கதைக்குப் புதுமுகங்கள்தான் பொருந்துவார்கள். அவங்களோடு படம் பண்றதுதான் எனக்கு ஈஸி. ஹீரோவா, இயக்குநர் லிங்குசாமியின் மருமகன் நடிச்சிருக்கார். ‘லூஸியா’ங்கிற கன்னடப் படத்துல நடிச்ச ஸ்ருதிதான் ஹீரோயின். எழுத்தாளர் வேல ராமமூர்த்தி முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கார். மற்ற எல்லோருமே புதுமுகங்கள்தான். ‘காதல்’, ‘வழக்கு எண் 18/9’ படங்களில் எப்படி ஒரு சின்னப் பையனின் கதாபாத்திரத்தை முக்கியமா வெச்சிருந்தேனோ, அதே மாதிரி இந்தப் படத்துலயும் ஒரு சின்னப் பையனின் கதாபாத்திரம் இருக்கு.”

"ஆணவக்கொலைகளுக்கு எதிரான குரல் ஒலிச்சுக்கிட்டே இருக்கணும்''

``உங்களோட ஒவ்வொரு படத்துக்கும் ஏன் இவ்வளவு இடைவெளி?''

“முன்னாடி அதிக இடைவெளி விட்டேன். இப்ப நிறையப் படங்கள் பண்ணணும்னு நினைக்கிறேன். படம் வந்தா, மக்கள் ரசிக்கணும். ‘இவர் எப்படா டைரக்ட் பண்றதை நிப்பாட்டுவாரு?’னு கேட்கிறதைவிட, ‘இவர் படம் எப்படா வரும்?’னு கேட்கிறது எனக்குப் பிடிச்சிருக்கு. நிச்சயம்... நல்ல படங்கள் மட்டுமே தருவேன்.”

``உங்களுடைய எல்லா படங்களின் க்ளைமாக்ஸுமே எதிர்மறையான முடிவுகளோடு இருக்கே?''

“அதை நெகட்டிவ்னு சொல்ல முடியாது. அந்தக் கதைக்கு அதுதான் சரியான முடிவு. ‘காதல்’ படத்தின் கதைக்கு, அந்த முடிவுதான் சரி. ‘ரா... ரா... ராஜசேகர்’ படத்தோட பெரிய ப்ளஸ்ஸா நான் நினைக்கிறது அதன் க்ளைமாக்ஸ். அது நெகட்டிவா பாசிட்டிவானு எனக்குத் தெரியாது. ஆனால், படத்தோட கதைக்கு அந்த முடிவு சரியா இருக்கும். நான் இயக்கும் ஒவ்வொரு படம் மூலமும் சமூகப் பிரச்னைகளைப் பேசணும். அதன் மூலம் மாற்றம் வரணும். அதுக்காகத்தான் நான் படம் இயக்குகிறேன்.”

``இளம் இயக்குநர்களைக் கவனிக்கிறீர்களா?''


“கார்த்திக் சுப்புராஜ், பா.இரஞ்சித், சுசீந்திரன், ராஜு முருகன்னு நிறைய இளம் இயக்குநர்களை ரொம்பவே பிடிக்கும். ‘கபாலி’, ‘இறைவி’, ‘ஜோக்கர்’, ‘மாவீரன் கிட்டு’ போன்ற படைப்புகள் தமிழ் சினிமாவுக்கு நிறையத் தேவை. இளம் இயக்குநர்கள் நகர வேண்டிய திசை அதுதான். படம் எடுக்கிற இளைஞர்களுக்கு என் வேண்டுகோள், நீங்க எடுக்கிற படங்களில் மக்களுடைய அன்றாடப் பிரச்னைகளைப் பேச முயற்சிசெய்யுங்க. அதற்கான தீர்வுகளை நோக்கி நகர்கிற மாதிரி ஏதாவது பண்ணுங்க.”

``அடுத்த படம்?''

“ஸ்க்ரிப்ட் தயார். முதல்முறையா இதில் ஆக்‌ஷன் சேர்த்திருக்கேன். இந்தக் கதையைக் கேட்டவர்கள் எல்லாம் `உங்க பட சாயல் இல்லையே'னு சொன்னாங்க. ஆனால், அதிலும் என் டச் நிச்சயம் இருக்கும். புதுமுகங்கள்தான் நடிக்கப் போறாங்க.”