
ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கலந்த ஐடியாவால் அப்பாவிகளை ஏமாற்றிப் பணம் பறிக்கும் ஒரு குழுவினரின் கதை.
உயர்தர ஹோட்டலின் முதலாளி கலையரசன், பார்வையற்றவர். இவரின் ஏழு வருடத் தோழி ஜனனி. ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர் ஷிவதா மீது, கலையரசனுக்குக் காதல். பணப் பிரச்னை ஒன்றில் ஷிவதாவின் குடும்பம் சிக்க, உதவுவதாக வாக்குத் தருகிறார் கலையரசன். எதிர்பாராத விபத்தில் சிக்கும் கலையரசனுக்கு, பார்வை கிடைக்கிறது. ஆனால், ஷிவதா காணாமல்போகிறார். இந்தச் சூழலில் ஜனனியுடன் கலையரசனுக்குத் திருமணம் நிச்சயமாகிறது. அப்போது கலையரசன் வாழ்வில் ஷிவதாவின் அப்பா மூலம் புயல் வீசுகிறது. அதில் கலையரசன் தப்பினாரா, ஷிவதா யார்... என வரிசையாக முடிச்சுகளைப் போட்டு ஒவ்வொன்றாக அவிழ்க்கிறது படம்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஸ்க்ரிப்ட்தான் முக்கியம் என, அதற்குக் கூடுதல் கவனம் செலுத்திய அறிமுக இயக்குநர் ரோஹின் வெங்கடேசனுக்கும், எழுத்தாளர் முகிலுக்கும் வாழ்த்துகள். பிரமாண்ட மேக்கிங், மிரளவைக்கும் காஸ்ட்டிங் என எதுவுமே இல்லாமல் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் ரோஹின்.
கலையரசனுக்கு இது புது மாதிரியான ரோல். சொன்ன மீட்டரில் நடித்திருக்கிறார். சத்தத்தை வைத்து கார் வரும் திசை, வாசனையை வைத்து வந்தவர் யார் என யூகிப்பது எல்லாம் ஓ.கே. ஆனால், எதிரில் இருப்பவர் பேசும்போதுகூட அவர் இருக்கும் திசை அறியாமல் எதிர்ப்பக்கம் பார்த்து பதில் தருவது ஏன்?

இயல்பாக, ஈஸியாக ஸ்கோர் செய்கிறார் ஜனனி. `அதே கண்களி'ன் ரெட்டினா, ஷிவதாதான். சேல்ஸ்கேர்ள் கெட்டப்பில் தேவதையின் வாசனை. நடிக்கத்தெரிந்த நடிகைகள் லிஸ்ட்டில் நங்கூரம் போட்டு இடம்பிடிக்கிறார் ஷிவதா. திடீரென அறிமுகம் ஆகும் பாலசரவணன்தான் என்டர்டெயின்மென்ட் ஏரியாவின் குத்தகைதாரர். ரியாக்ஷன், மாடுலேஷன் என எல்லாவகை காமெடியிலும் காக்டெயில் அடிக்கிறார்.
ஷிவதா, ரோஹின் வெங்கடேசனுக்கு அடுத்து கெத்துகாட்டியிருப்பவர் இசையமைப்பாளர் ஜிப்ரான். வீடு திரும்பும் வரை எதிரொலிக்கிறது அந்த விசில் பி.ஜி.எம்.
`அதே கண்களி'ல் ஆனந்தக் கண்ணீரே அதிகம்!
- விகடன் விமர்சனக் குழு