Published:Updated:

சீமான், அன்புமணி, தமிழிசை... பிக் பாஸ் வீட்டின் அதிரடி அஜெண்டா!

சீமான், அன்புமணி, தமிழிசை... பிக் பாஸ் வீட்டின் அதிரடி அஜெண்டா!
சீமான், அன்புமணி, தமிழிசை... பிக் பாஸ் வீட்டின் அதிரடி அஜெண்டா!

எந்த நேரம் வேண்டுமானாலும் தேர்தல் வரவிருக்கும் நிலையில், மக்களிடம் அரசியல்வாதிகளுக்கு நேரடியாக உரையாடும் வாய்ப்புக் கிடைப்பதால் அடித்துப் பிடித்து செட்டுக்குப் பறப்பார்கள்.. சீமான் முதல் எடப்பாடி பழனிசாமி வரை பிக்பாஸ் செட்டுக்குள் இறக்கப்பட்டால் எப்படி இருக்கும்..? 

கடந்த பிக்பாஸ் சீசனில் போட்டியாளர்கள் வெளியேற வெளியேற புதிய போட்டியாளர்களைக் கயிறு வழியாக வீட்டுக்குள் இறக்கி ஷாக் சர்ப்ரைஸ் கொடுத்தார் பிக் பாஸ். இந்த முறை, தமிழ் பிக்பாஸை அகில உலக அளவில் ஃபேமஸ் ஆக்கும் நோக்கத்தில் வாரம் ஓர் அரசியல்வாதியை வீட்டுக்குள் இறக்கி பல்ஸ் பார்ப்பார். எந்த நேரம் வேண்டுமானாலும் தேர்தல் வரவிருக்கும் நிலையில், மக்களிடம் அரசியல்வாதிகளுக்கு நேரடியாக உரையாடும் வாய்ப்புக் கிடைப்பதால் அடித்துப் பிடித்து செட்டுக்குப் பறப்பார்கள்.. சீமான் முதல் எடப்பாடி பழனிசாமி வரை பிக்பாஸ் செட்டுக்குள் இறக்கப்பட்டால் எப்படி இருக்கும்..? (பி.கு - இந்த சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. பிக் பாஸைப் போலவே இதையும் என்டர்டெயின்மென்ட்டாக டீல் செய்க! சொல்லி வைப்போம்)

சீமான்:

பாரந்தூக்கும் கருவியில் (கிரேன்) தொங்கும் கயிற்றைப் பிடித்து சரசரவென இறங்குகிறார் செந்தமிழன் அண்ணன் சீமான். அண்ணனுக்காகவே, நைலான் கயிற்றை விடுத்து தென்னமட்டையில் செய்யப்பட்ட கொச்சைக் கயிறு கட்டப்பட்டிருக்கிறது. தமிழ் தவிர பிறமொழிகள் பேசுவதைக் கேட்டால் அண்ணன் கண்டமேனிக்கி காண்டாவார் என்பதால் அன்றைக்கு மட்டும் யாஷிகா, ஐஷ்வர்யா ஆகியோருக்கு வாய்ப்பூட்டுப் போட்டுவிடுவார் பெரிய முதலாளி. 'தங்கச்சிகளா இங்கன வாங்க.. முள்ளு குத்துனா ஆத்தான்னு கத்துவியளா.. மம்மீனு கத்துவியளா' எனக் கேட்டு பரிசோதனை என்ற பெயரில்  கரைச்சலைக் கொடுப்பார். அப்படியே, பெரிய முதலாளி வீட்டில் நாட்டுக்கோழிக்குஞ்சுகள், வெள்ளாடு வளர்க்கும் இடுபணி (Task) கொடுக்கப் பரிந்துரை செய்துவிட்டு, ஏகே எழுவத்தி நாலு துப்பாக்கியில் தான் பயிற்சி எடுத்த கதையைப் பெருமையாகச் சொல்லிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறுவார்.  

தமிழிசை:

அடுத்த வார ஆட்டத்திற்கு வருகிறார் தமிழக பா.ஜ.க-வின் அல்டிமேட் ஆல்ரவுண்டர் அக்கா தமிழிசை. லோக்கல் பாலிடிக்ஸ் முதல் இன்டர்நேஷனல் பாலிடிக்ஸ் வரை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்யும் அக்காவின் கால்ஷீட்டை அடித்துப் பிடித்து பெற்றிருக்கிறார் பிக்பாஸ். காஷ்மீர் பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகினாலும், மைலாப்பூரில் எஸ்.வி.சேகரைக் காணவில்லை என்றாலும் அக்காவிடம் இருந்து வரும் விளக்கத்திற்கு மீம் மார்க்கெட்டில் வேல்யூ ஜாஸ்தி என்பதால் பிக்பாஸ் செட்டிலும் பலத்த வரவேற்பு.
பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற தமிழிசை, "பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஓட்டு போட 1800 266 2020 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்க மக்களே..." எனச் சொல்ல, பின்னால் நிற்கும் 'பெரிய ஜோக்' பொன்னம்பலம் கமுக்கமாகக் கிட்டே நெருங்கி, "அக்கா இது நம்ம கட்சியில உறுப்பினரா சேர மிஸ்டுகால் கொடுக்குற நம்பரு" என நினைவூட்டுவார். உடனே சுதாரிக்கும் தமிழிசை, "நான் நம் பாரதப் பிரதமர் மோடியைத் தான் பிக்பாஸ் எனச் சொன்னேன். ஹஹாஹா" என பங்கமாக வழிவார். 

தினகரன்:

அடுத்ததாக பிக்பாஸ் வீட்டுக்கு வருபவர் விஜய் சேதுபதிக்கு முன்பே 'மக்கள் செல்வர்' பட்டம் வாங்கிய வாராது வந்த மாமணி தினகரன். பவர் ஸ்டார் பிக்பாஸ் வீட்டுக்கு வருவதாகக் கூறப்பட்ட நிலையில், அ.தி.மு.க-வின் ஒரிஜினல் பவர் ஸ்டார் தினகரனே பிக்பாஸுக்கு வரவழைக்கப்பட்டுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயித்தாலும், கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற முடியாமல் அ.ம.மு.க-வைத் தொடங்கிய தினகரன் கட்சியை பலப்படுத்தும் நோக்கில் பிக்பாஸ் செட்டில் கொடியேற்றி சின்னம்மாவை மீட்போம் என உறுதிமொழி எடுப்பார். "துரோகிகளிடம் மட்டும் கவனமாக இருங்க ரத்தத்தின் ரத்தங்களே..." என உள்ளுக்குள் குமுறிக்கொண்டே ஊருக்கு அட்வைஸ் செய்வார். 

அன்புமணி: 

கடந்த சீசனில் 'மக்கள் செல்வி' ஓவியாவுக்கு விழுந்த ஓட்டுகளைப் பார்த்தே மூர்ச்சையாகி விழுந்த சின்ன அய்யா, இந்த முறை பிக்பாஸ் வண்டியில் வான்ட்டடாக வந்து ஏறுவார். "மாற்றம் முன்னேற்றம் அன்புமணி.. 16 போட்டியாளர்கள்.. 60 கேமராக்கள்.. 100 நாட்கள்.. அப்படியே பொருந்துதே.. இப்போவாச்சும் ஓட்டு போட்டு முதல்வர் ஆக்குங்கப்பா" என தர லோக்கலாக இறங்கி பிரச்சாரம் செய்வார். என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தால் முதல் நாள் முதல் கையெழுத்து தினமும் ஆளுக்கு மூன்று முட்டைகள் என அறிவித்து பிக்பாஸ் இல்லத்தின் முட்டைப் பிரச்னைக்கு உடனடித் தீர்வு கொண்டுவர முயற்சிப்பார். முக்கியமாக, வீட்டை விட்டு வெளியேறும்போது, பிக்பாஸ் வீட்டின் ஸ்மோக்கிங் ரூமுக்கு திண்டுக்கல் பூட்டை மாட்டிவிட்டுப் போவார். 

ஸ்டாலின்:

தி.மு.க-வின் 'செயல் தலைவர்' ஸ்டாலினின் அதிரடிச் செயல்பாடுகளில் அசந்துபோன பிக்பாஸ் அவரையும் அள்ளிப்போட்டு வண்டியை எடுப்பார். போட்டி சட்டமன்றம் நடத்திய அனுபவம் மிக்க ஸ்டாலினிடம் பிக்பாஸ் வீட்டில் நடந்தேறும் சிக்கல்களைத் தீர்த்து வைக்கச் சொல்ல, அவரோ, "தண்ணிய தின்னவன் உப்பு குடிச்சே ஆகணும்" என அரிய பழமொழியை உதிர்த்து அப்ரூட்டாக ஆட்டோவில் ஏறுவார். கிடைச்சது கன்டென்ட் என நெட்டிசன்கள் ஸ்டாலின் பழமொழிகள் ஹேஸ்டேக்கை மறுபடியும் இழுத்துத் தெருவில் விடுவார்கள். இந்த பிக்பாஸு பஞ்சாயத்துல ஒரு கொல விழுகணும்னே இந்த மாதிரி இடத்துல கோர்த்து வுடுறான்யா என உ.பி-க்கள் புலம்புவதுதான் மிச்சம். 

எடப்பாடி பழனிசாமி:

மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலத்திற்கும் சென்னைக்கும் பசுமை வழிச்சாலை அமைக்கப் போராடிக் கொண்டிருக்கும் கேப்பில் தனது திருமுகத்தை ஒருமுகமாகத் திருப்பி பிக்பாஸ் வீட்டுக்கு விசிட் அடிக்கிறார். 'தியாகத்தலைவி' ஜெயலலிதா  சம்மர் வெக்கேஷனில் கொடநாட்டில் இருந்துகொண்டே அலுவல்களைக் கவனித்ததைப் போல அம்மா வழியில் ஆட்சி நடத்தும் ஈ.பி.எஸ்ஸும் ஃபைல்களை பிக்பாஸ் வீட்டுக்கு பார்சல் கட்டி எடுத்துப் போவார். அங்கு போய்ப் போட்டியாளர்களிடமும், திருக்குறளை எழுதியது அவ்வையாரா சேக்கிழாரா என்பது போலக் கேள்விகள் கேட்டு அனைவரையும் டரியல் ஆக்குவார். 'பிக்பாஸ்' ஏதாவது டாஸ்க் கொடுத்தால், பயந்து பம்மிக் கச்சிதமாக முடித்துக் கொடுத்துவிட்டுத்தான் வெளியேறுவார். பழக்கதோஷம் பாஸு!

அடுத்த கட்டுரைக்கு