Published:Updated:

தீபா‘வலி’கள் - நகைச்சுவை

அசோக்குமார் - ஓவியங்கள்: நடனம்

பிரீமியம் ஸ்டோரி

தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் குடும்ப ஹெச்.ஓ.டி-களுக்குத்தான் எத்தனை விதமான வலிகள்!

பிள்ளையார் சுழி போட்ட முதல் வலி, 'சீடை’ வடிவில் வந்தது. நன்றாகப் பதம் பார்த்து உருட்டிப் பிடித்துச் சீடைகளை நெய்யில் விட்டதுமே...

தீபா‘வலி’கள் - நகைச்சுவை

சீடைகள் வெடிக்க-

எண்ணெய் சுவரில் தெறிக்க-

செய்வதறியாமல் விழிக்க-

'உடனோ வா’ அலறும் அழைப்பு மணி?

திறந்தால் - ஜே 7 கான்ஸ்டபிள். ''ஐயா! இங்கே ஏதோ வெடி விபத்துன்னு கன்ட்ரோல் ரூமில் இருந்து புகார்.''

போட்டுக் கொடுத்தவள்: ரமாபிரபா சி/ஷீ மாடி வீடு

அவருக்குச் சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுத்து, பூர்ணகும்ப மரியாதையோடு தட்டு முழுக்கச் சீடைகளை வைத்து நீட்ட -

இந்நிகழ்ச்சிக்குப் பின், அவர் கிரைமில் இருந்து டிராஃபிக்குக்கு மாறி, ஹெல்மெட் இல்லாமல் போனாலும் முகத்தைத் திருப்பிக்கொள்கிறார்.

பலவித பலகாரங்களைச் செய்து சுவைக்கும்போது வரும் பாதிப்புகளைவிட, அதைத் தயாரிப்பதற்கு முன் காட்டப்படும் 'பந்தாக்கள்’ இனிப்பான வலிகள்!

என்னதான் சமையலில் மகாதேவியாக இருந்தாலும், பண்டிகைக் காலங்களில் சமையலறைக்குள் நுழைந்ததுமே 'செல்ஃப்’ எடுக்காமல், ஏர்லாக் ஆகி, ஸ்டார்ட்டிங் டிரபிள் வருவது குடும்பத் தலைவிகளுக்கு சகஜம்.

தீபா‘வலி’கள் - நகைச்சுவை

பரிகாரம் கண்டுபிடித்தாள் மனைவி. ''முன்னோட்டமாகக் குறைந்த விலையில் பலகாரங்களைத் தயாரித்து ருசி பார்த்துக் குறைகளைத் திருத்தி, களத்தில் இறங்கப்போகிறேன், நாதா''

கம்பீரமான முன்னுரையோடு மலிவுவிலை மளிகை லிஸ்ட் நீட்டப்பட்டது.

''இதென்ன மெட்ரோ ரயிலா, டிரையல் பார்க்க? எப்படியும் கடைசியில் விபரீத விளைவுகளைச் சந்திக்கப்போவது நான்தான், சகி!''

இந்த 'பிட்டு’க்குதான் அன்போடு திட்டுவதென்று பொருள்.

''சோதனை முயற்சிக்கு முட்டுக்கட்டை போடாதே, சேவகா!'' - மரியாதை குறைய ஆரம்பிச்சாச்சு.

''வழக்கம்போல் அதிக விலையில் தரமான பொருள் கொண்டு செய்தபோதே போன வருஷம் கடைசி நேரத்தில், 'உப்பு லேசா கூடுதலா போச்சு. ஆனந்தபவனில் இருந்தோ அய்யங்கார்ஸிலிருந்தோ பிடிச்சிடுங்க’ன்னு நீ தலை வணங்கினது இன்னமும் என் நினைவில் உள்ளது தேவி!''

''எதிர்மறை எண்ணங்களுக்குப் போடுங்க கத்திரி. மளிகை லிஸ்ட் பாருங்க. சர்க்கரை, அரிசி, நெய், மு.பருப்பு, பா.பருப்பு சேர்க்கவே இல்லை. போனால் போகிறதென்று உங்கள் பர்ஸ் மீது கரிசனப்பட்டு காசை மிச்சப்படுத்தினால், உங்களை மாதிரி நயவஞ்சகர்கள் கேலியாகத்தான் பேசுவார்கள்!''

''மு.பருப்பில்லாமல் பட்சணங்களா! எப்படி?!''

''அம்மா அரிசி, அம்மா சர்க்கரை, அம்மா எண்ணெய் வாங்கி வெச்சுட்டேன்!''

''அம்மாடி! சரிதான்... வழக்கமாய் ரேஷன் பொருட்களை பெருக்கிக் கோலமிடும் மாரியாத்தாவுக்குக் கொடுப்பே. இப்ப நீயே வாங்கிட்டியா? விஷப் பரீட்சை வேண்டாம் தேவி! குடும்ப ஆரோக்யத்தைச் சீர்குலைக்கப் போகிறாய் நாதி!''

''இந்த மாதிரி பரீட்சையினால் உருவாகும் எல்லாவற்றையும் அப்படியே தானமாகத் தர உத்தேசித்துள்ளேன்.''

''யாருக்கு? ஹவுஸ் கீப்பிங் மாரியாத்தாவுக்கா?'' (வேலைக்காரி என்றால், அன்பார்லிமென்ட்டரி வார்த்தைகளால் திட்டுவாள் சுயமரியாதை உள்ள மாரியாத்தா.)

''எல்லா மலிவு விலைப் பட்சணங்களையும் பாகம் பிரித்து, என் மீது பிரியம் கொண்ட திண்டுக்கல் மாமி சுசீலாவுக்கும், மதுரையில் இருக்கும் உங்கள் 'பாசமலர்’ பிரேமாவதிக்கும், மிச்சத்தைப் போட்டுக் கொடுத்த ரமாபிரபாவுக்கும் கொடுத்து, பக்க விளைவுகள் ஏதாவது வருதான்னு பார்ப்பேன்.''

''அப்படின்னா என் மாமியார், மச்சான்ஸ் மற்றும் அழகான மணமாகாத மைத்துனிக்கு?''

''அடையார்லேயே பெரிய பவனில் இருந்து இறக்குமதி செய்து, எடுத்துக்கொண்டு போய் வழங்கி, ஆசீர்வாதம் மற்றும் இனாம் பெறும் பொறுப்பு உங்களுக்கு இல்லையா?''

இனாமில் கொக்கி வைத்தாள். மேற்கொண்டு விவாதம்செய்து, கிடைக்கக்கூடிய சிலபல பொருளாதார நிதியுதவிகளுக்குத் தடை ஏற்படுத்துமளவுக்கு மாவீரனா நான்?

என்னவொரு இன்ப வலி!

அடுத்து - ஊர் செல்ல முன்பதிவு படலம்!

திருப்பதிக்கு நடந்தே போய் மொட்டை போட்டு வந்தாலும், தெற்கு ரயில்வே இணையதளம் மட்டும் சட்டென்று திறந்துவிடாது. சர்வர் சுற்றிக்கொண்டேயிருந்தது.

''இதுக்குத்தான் அதிவேகக் கணினி வாங்கணும்னு சொன்னேன்!'' முன்னே மனைவி. இப்போ மகன்.

''ஃபிளிப் கார்ட்டில் வாங்கின பாதரட்சாலுவில் அடிபடாதே! அலசோ அலசென்று அலசி வாங்கின நவீன மாடல் மடிக் கணினி இது.''

''ஆறு மாசமா அலசி வாங்கினீங்க. மறுநாளே அவுட் டேட்டாகிவிட்டது. புதுப் புது டேட்டாக்களோடு ஏழே இன்ச்சில் வேகமாக கையடக்க கணினிகள் வந்தாச்சு!''

நல்லவேளை! காழியூர் ஜோசியர் சொன்னபடி, மிதுன ராசிநாதன் புதனின் வலுவால் சர்வர் தரிசனம் கிடைத்துவிட்டது. கிடுகிடுவென்று வண்டி பார்த்து, கிளம்பும் நேரம் பார்த்து, லோ பெர்த் போட்டு... அப்பாடா?

இப்ப டெபிட் கார்டு படலம். 'பொறுங்கள்’, 'பொறுங்கள்’ என்று வங்கி சர்வர் காலம் கடத்திப் பொறுமை சோதிக்க... சில நிமிட விறுவிறுக்குப் பின் பணப் பரிமாற்றம் நடந்துவிட்டது.

இப்ப, மிதுனத்தில் உள்ள ஜென்ம குரு வேலை காட்ட ஆரம்பித்துவிட்டார். பணம் பட்டுவாடா ஆக நேரம் ஆனதால், தெற்கு ரயில்வே இணையதளம் காலாவதியாகிவிட்டது.

பணம் போச்சு!

டிக்கெட் கிடைக்கலை!

வங்கி-

''என் வங்கிச் சேவையில் இது மாதிரியான சிக்கலைச் சந்தித்ததே இல்லை!''

''எந்தச் சிக்கல் வந்தாலும், அது என் ரூபத்தில் வர வேண்டும் என்று விதி! இதில் நீங்கள் கவனிக்கவேண்டிய கொடுமை என்ன தெரியுமா? ஆத்திரத்தில் முதல் ஏ.ஸி டிக்கெட் போடச் சொன்னேன்.''

''கவலைப்படாதீர்கள். இதுபோன்ற பிரச்னைகளைத் தீர்ப்பதற்காகவே ஒரு வாரம் வங்கி மூலம் பயிற்சி தரப்போகிறார்கள். இந்த வகுப்பில் பயின்றுவந்து உங்களுக்கு சரியான தீர்வு தருகிறேன்'' என்றது வங்கி.

உடனே, பயண முகவர். டிராவல் ஏஜென்ட்! முதன்முதலில் உருவான கணினி, கீ போர்டில் குத்துப்பாட்டு மெட்டு போல் தட்டினான். வந்து விழுந்து டிக்கெட்!

''தெய்வமே! இதற்குச் சேவைக் கட்டணம்..?''

''வழக்கமான நாட்களில் நூறு! பண்டிகைக் காலங்களில் சிறப்புச் சலுகையாக ஐந்நூறு! கூட்டிக் கழித்துத் தள்ளுபடி போக எழுநூறு!'' (யாரிடமாவது உளறிடப் போறீங்க! உங்களுக்கு மட்டும் இந்தச் சலுகை.)

என்ன கணக்கோ!

வங்கிக் கொடுத்த வார கெடு முடிந்து, மாதமாக இழுக்க... இதற்குள் அரசு புண்ணியத்தில் எரிபொருள் விலை பைசா பைசாவாக மாதத்துக்கு முப்பத்து நான்கு முறை ஏறிவிட - அசலில் பாதி பணம் போச்!

ஆஹா! என்னவொரு இதமான வலி!

'வாலா’ வலிகள்!

பட்டாசு வெடிப்பவர்களுக்கு வாலா என்றால் புரியும். ஆயிரத்தில் ஆரம்பித்து பத்தாயிரம் வாலா வரை போகும். திரியைப் பற்றவைத்தால் போதும்... பத்து நிமிடங்களுக்குக் குறையாமல் வெடித்துத் தள்ளும். விஷயத்துக்கு வருவோம். வழக்கம்போல மின் அஞ்சல் பார்க்கக் கணினியைத் திறந்தேன்.

மகனிடம் இருந்து செய்தி: 'பட்டாசு வாங்கணும்!’

என் பதில்: 'பட்ஜெட்?’

'வாலா வாங்க பத்து. ஃபேன்ஸி வாங்க பத்து’

'இருபதாயிரமா?! காசைக் கரியாக்க அளவில்லையா?’

'எல்லா அப்பன்களும் இதே வசனத்தைத் தலைமுறை தலைமுறையாக எப்படித்தான் மனப்பாடம் பண்ணிச் சொல்றீங்களோ?!’

'சரி, மாத்திச் சொல்றேன். காசைக் கரும்புகையாக்க விடமாட்டேன்.’

'உன் டெபிட் கார்ட் எண்ணும், பின் எண்ணும் எனக்கு அத்துப்படி!’

கொஞ்சம் பிடிவாதம் தளர்ந்து, 'வெடிக்கு ஆயிரம். ஃபேன்ஸிக்கு ஆயிரம்.’

'கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.’

'இதிலே ரெண்டு, அதிலே ரெண்டு. டீலா, நோ டீலா?

'ஏடிஎம். கார்டை எடுத்தாதான் நீ வழிக்கு வருவே!’

'இருப்பா. இதுக்கு நாலு, அதுக்கு நாலு!’

'பரீசிலிக்கப்படும்.’

முடிவு பத்தாயிரத்தில் நின்றது! எல்லாம் மேலதிகாரியிடம் லீவ் வாங்குவது மாதிரிதான்; இருபது நாட்கள் கேட்டால், பத்து கிடைப்பதுபோல.

இத்தனைச் செலவு செய்தும் வெடிக்கும்போது, திருப்தி இருக்காது. ஆயிரம் வாலா வெடித்தால், அதில் ஐந்நூறுதான் வெடிக்கும். இதே வெடியை ரமா மாமி வெடிக்கும்போது எப்படியோ தெரியாது, ஆயிரத்து எட்டு வரை போகும். ஃபேன்ஸி வெடிகளும் காலை வாரிவிடுவது உண்டு. 120 ஷாட் வெடித்துவிட்டு, எண்ணிக்கொண்டே வந்தால், எண்பதுக்கு மேல் புஸ்... புஸ் என்று புகை மட்டும் வரும்.

ஒருமுறை, கடைக்காரரிடம் கேட்டதற்கு, ''வெடிப்பதற்கு முன் கொண்டு வந்திருந்தா, மாற்றிக் கொடுத்திருப்பேனே?'' என்றார்.

இத்தனைச் செலவழித்தும் மகனுக்குப் பத்தாது. ''தாத்தா, பாட்டியிடம் இருந்து பண்டிகை வசூல் முடிஞ்சதும், அப்படியே தர்றேன். இப்ப இன்னும் ஒரு ஐந்தாயிரம் வெட்டு!'' என்பான்.

டி.வி-யில் சாலமன் பாப்பையா, ''காசு என்னய்யா காசு! பெத்த புள்ளே சந்தோசப்படறதுதான்யா வாழ்க்கை''! என்று ஆறிப்போன புண்ணில் கீறித் தையல் போடும் அளவுக்கு அலம்பல் செய்வார்.

இருப்பினும், இத்தனை வலிகளையும் இன்பமாகவே கருதுகிறேன். ஏன் தெரியுமா?

நான் 'வலி’மையானவன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு