Published:Updated:

“மதவாதக் கட்சிகள் இங்கு வரவே முடியாது!”

“மதவாதக் கட்சிகள் இங்கு வரவே முடியாது!”
பிரீமியம் ஸ்டோரி
News
“மதவாதக் கட்சிகள் இங்கு வரவே முடியாது!”

ம.கா.செந்தில்குமார் - படங்கள்: கே.ராஜசேகரன்

``சில பகுதிகள் பூகோள ரீதியாகவே செல்வச்செழிப்பா இருக்கு. ஓர் உதாரணம்... ஸ்விட்சர்லாந்து. சோமாலியா நாட்டுல ஒருத்தன் பட்டினியால இறக்கிறான்னா... அதுக்கு ஒரே காரணம், அவன் அங்க பிறந்துட்டான்... அவ்வளவுதான். இதையெல்லாம் சிந்திக்கும்போது எனக்கு ஒரு யோசனை தோணுது. உலகம் தோன்றியபோது தனித்தனி நாடுகள் என்பது இல்லை. ஒவ்வொரு நாடும் ஒரு சூழ்நிலையில் உருவானதுதான். 500-க்கும் மேற்பட்ட குறுநில மன்னர்கள் ஆண்ட பல நாடுகள் ஒண்ணுசேர்ந்துதான் இந்தியா உருவாச்சு. இன்னோர் உதாரணம்... யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா. அந்தமாதிரி யுனைடட் ஸ்டேட்ஸ் ஆஃப் தி வேர்ல்டு. உலகம் முழுவதும் ஒரே நாடு. அதாவது, இன்னைக்கு இருக்கிற தொழில்நுட்பங்கள் மூலமா ஏன் எல்லாரும் ஒரே நாடா இருக்கக் கூடாது? ஏன்னா இன்றைய தேதிக்கு உலகத்துல ஒவ்வொரு நாடும் பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்குவது ராணுவத்துக்குத்தான். ஆனா, உலகமே ஒரே நாடா ஆச்சுன்னா, ராணுவம்கிற ஒண்ணே இல்லாமப்போயிடும். அப்ப அந்த நிதியை ஏழைகளுக்கு மடைமாற்றிவிட்டோம்னா, ஒரு சமநிலை சமூகம் உருவாகும்ல?’’ - இதுதான் சத்யராஜ். ஒரு ஞாயிறு காலையில் ‘கட்டப்பா’வைச் சந்தித்தேன்.

“மதவாதக் கட்சிகள் இங்கு வரவே முடியாது!”

‘‘ ‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களிலும் நடிச்ச அந்த ஒட்டுமொத்த அனுபவம், பயணம் எப்படி இருந்தது?’’

‘‘சினிமாவில் ஒரு சரித்திரப் படமாவது நடிச்சுடணும் என்பது என் ஆசை. காரணம் நான் எம்.ஜி.ஆர் ரசிகன். அதுக்காகத்தான் நான் நடிக்கவந்த புதுசுலேயே கம்புச் சண்டை, கத்திச் சண்டை பழகினேன். அந்த ஆசை ‘பாகுபலி’ படம் மூலமா ரொம்பத் தாமதமாத்தான் நிறைவேறுச்சு. ஸ்பெஷல் கெட்டப், முதல் பாகமே என் கேரக்டரின் மேல முடியுதுனு ராஜமெளலி சார் கதை சொன்னப்பவே, ‘கட்டப்பா’ என் மனசுக்கு நெருக்கமான வனாகிட்டான். முதல் பாகம் ரிலீஸுக்குப் பிறகு, வந்த மீம்ஸ்களில் ‘கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்?’ங்கிற மீம்ஸ்தான் அதிகம். தமிழ்நாட்டுக்குத்தான் நான் சத்யராஜ். ‘பாகுபலி’ ரிலீஸுக்குப் பிறகு, இந்தியா முழுக்க நான் ‘கட்டப்பா’. சமீபத்துல கோவா போனப்பக்கூட, வடஇந்தியாவைச் சேர்ந்தவங்க வரிசையில் நின்னு, என்கூட போட்டோ எடுத்துக்கிட்டாங்க. இப்படி ஒரு கேரக்டர் எனக்குக் கிடைச்சதை மிகப்பெரிய விஷயமா நினைக்கிறேன்.’’

‘‘ ‘பாகுபலி 2’-ல் என்ன எதிர்பார்க்கலாம்?’’

‘‘பிரமாண்டத்தைத் தாண்டி அந்தக் கதை, களம், காட்சிகளுக்கு ராஜமெளலி ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பார். அதேபோல உணர்வுபூர்வமான, ஆழமான காட்சிகளில் பிரமாண்டம்கிற எந்த வித்தையையும் வெச்சுக்க மாட்டார். ஆனா, இந்த முறை ஸ்டன்ட் கலைஞர்களை ஹாலிவுட்ல இருந்து இறக்கிட்டார். நான் பிரபாஸ்கிட்ட, ‘இந்தச் சண்டையோட வடிவமைப்பு ஹாலிவுட்காரன் கொடுத்த ஐடியாவா, ராஜமெளலியோட ஐடியாவா?’னு கேட்டேன். ‘எல்லாமே ராஜமெளலியோட ஐடியாதான் சார். எக்ஸிக்யூட் பண்றது மட்டும்தான் அவங்க’னு சொன்னார். பொதுவா சண்டைக்காட்சி, நடனக் காட்சிகள் வந்தா டைரக்டர்கள் கேமராவைத் தூக்கி ஃபைட் மாஸ்டர், டான்ஸ் மாஸ்டர் கையில் கொடுத்துடுவாங்க. கிட்டத்தட்ட அந்த போர்ஷனை அவங்கதான் டைரக்ட் பண்ணுவாங்க. ஆனா, இங்க ஒவ்வொரு மூவ்மென்ட்டும் ராஜமெளலி முடிவுபண்ணினதுதான்.

இதேபோல நடிகர்களுக்குக் கஷ்டமே கொடுக்காமப் பார்த்துக்கிறது ராஜமெளலி ஸ்பெஷல். சில டைரக்டர்கள், ஒரு சீனை ஒட்டுமொத்தமா மாஸ்டர் ஷாட் எடுத்துட்டு, க்ளோசப்ஸ் மட்டும் தனியா எடுப்பாங்க. ஆனா, ராஜமௌலி அப்படி இல்லை. நான் எழுந்துபோய் கத்தியை எடுக்கிறேன்னா, எந்திரிக்கிறதோடு கட் சொல்வார். ‘சார் கத்தியை எடுக்கிறது எப்போ?’னு கேட்டா, ‘அதைத் தனியா எடுத்துக்கலாம் சார்’னு சொல்வார். அப்படி இல்லைன்னா, இந்த மாதிரி படங்கள்  எடுப்பது ரொம்பச் சிரமம். நடிப்பு விஷயத்திலும் எந்தச் சின்னக் குழப்பமும் இல்லாம ரொம்பத் தெளிவா இருப்பார்.

எவ்வளவு பெரிய வசனம் கொடுத்தாலும் நான் ஒரே டேக்ல பேசிடுவேன். ஒரு முறை, ‘நல்லா இருக்கு சார். ஆனா ரெண்டு இடங்கள்ல கண்ணைச் சிமிட்டிட்டீங்க’னு சொன்னார். ‘கண்ணைச் சிமிட்டுறது ஒரு பிரச்னையா? வழக்கமா நாம பேசும்போது கண்ணைச் சிமிட்டினபடிதானே பேசுவோம்’னு நினைச்சேன். ‘சரி சார் அப்படியே பண்ணிடலாம்’னு சொல்லி கண்ணைச் சிமிட்டாம நடிச்சு முடிச்சேன். பிறகு பார்க்கும்போதுதான், அந்த உணர்ச்சிகளின் ஆழம் ரொம்ப அற்புதமா இருந்தது. பிறகு, படம் முழுக்க  முடிஞ்ச அளவுக்கு  அதையே மெயின்டெய்ன் பண்ணி நடிச்சேன்.

ஹாலிவுட் நடிப்புப் பயிற்சியில் கண்ணைச் சிமிட்டாம ரொம்ப நேரம் வசனம் பேசுறதுக்குத் தனிப் பயிற்சியே இருக்குனு பிறகுதான் எனக்குத் தெரியவந்தது. அடுத்த ஷெட்யூல் போகும்போது ராஜமௌலி சார்கிட்ட இதைச் சொன்னேன். ‘பரவாயில்லையே சார். நம்மை அறியாமலேயே அதை ஃபாலோ பண்ணிட்டிருக்கோம்’னு சொன்னார். அதேபோல ஷூட்டிங் ஸ்பாட்ல எங்களுக்கு எந்த அழுத்தமும் இருக்காது. மொத்த பிரஷரையும் அவர் சுமப்பார். அவரால்தான் ‘பாகுபலி’ சாத்தியமாகி யிருக்கு.’’

“மதவாதக் கட்சிகள் இங்கு வரவே முடியாது!”

‘‘ ‘நண்பன்’, ‘தலைவா’ படங்களைத் தொடர்ந்து மறுபடியும் விஜய்யுடன் சேர்ந்து நடிக்கப்போறீங்க போல...’’

‘‘எனக்கு இப்ப ஒரு சின்ன சலிப்பு. ஹீரோயினுக்கு அப்பாவா  வந்து, அவங்க காதலுக்குக் குறுக்க நின்னு, கடைசியில ‘சரி’னு சொல்ற வழக்கமான அப்பாவா வர்றதுல... ஆமாம் மிகப் பெரிய சலிப்பு. ரொம்பத் தேர்ந்தெடுத்துத்தான் நடிக்கிறேன். அப்படித் தேர்ந்தெடுத்த ஒண்ணுதான் அட்லி டைரக் ஷன்ல விஜய்கூட மறுபடியும் சேர்ந்து நடிக்கிற படம்.

சமீபமா நம்ம சினிமாவுல நல்ல மாற்றம் தெரியுது. என்னை ஹீரோவாவெச்சு எடுக்க நாலு டைரக்டர்கள் கதை சொல்லியிருக்காங்க. அதாவது என் வயசுக்கு ஏற்ற கதாபாத்திரங்கள். அதில் மணிரத்னம் சாரின் அசிஸ்டன்ட் சர்ஜுன் டைரக்ட் பண்ற படமும் ஒண்ணு. அதில் கதைதான் கதாநாயகன். நான் ஆசைப்பட்டா, ‘நான்தான் கதாநாயகன்’னு சொல்லிக்கலாம். நான், வரலட்சுமி, கிஷோர் நடிக்கிறோம். பிரமாதமான கதை. அதேபோல என் பையன் சிபி, ‘சத்யா’னு ஒரு படம் பண்றான். அடுத்து ‘தெகிடி’ பட டைரக்டர், வேறு ஒரு டைரக்டர் பண்ற படம்னு வேற இரண்டு படங்கள்ல நடிக்கிறான். அந்தப் படங்களின் கதைகளைக் கேட்டதும் ‘அடேங்கப்பா இப்ப வர்ற இளம் இயக்குநர்கள் இப்படியெல்லாமா யோசிக்கிறாங்க?’னு ஆச்சர்யமாவும் மகிழ்ச்சியாவும் இருக்கு. ’’

‘‘நிறைய படங்கள் நடிச்சிட்டீங்க. ‘ஆனாலும் இப்படி ஒரு படம் பண்ணணும்’னு நீங்க ஆசைப்படுற சினிமா?’’

‘‘ ‘சிலருக்கு மட்டும்தான் எல்லாவிதமான வேடங்களும் பொருந்தும். அப்படியான முகம் உங்களுக்கு’னு சொல்வாங்க. அந்தவகையில் தந்தை பெரியாரா நடிச்சேன். நல்ல பேர் வந்தது. அதுமாதிரி பெருந்தலைவர் காமராஜர் வரலாற்றைப் படமா எடுத்தா அதுல நடிக்கணும்னு ஆசை. ஏற்கெனவே எடுத்துட்டாங்க. இருந்தாலும் நடிக்கணும். அடுத்து தலைவர் எம்ஜி.ஆர் வேடம். அது எனக்குப் பொருந்தும்னு ஏற்கெனவே நிரூபிச்சிருக்கேன். இதுல எல்லாம் நடிச்சிட்டா, ‘அட என்னடா இவனுக்கு, பெரியார் வேடமும் பொருந்துது; காமராஜர் வேடமும் கரெக்டா இருக்கு. எம்.ஜி.ஆர் வேடமும் செட்டாகுது’னு நல்ல பேர் கிடைக்கும். ‘பாசமலர்’, ‘வசந்த மாளிகை’ மாதிரியான படங்கள் நடிச்சிருந்தாலும் ‘கட்டபொம்மனும் அவரே, கப்பலோட்டிய தமிழனும் அவரே'ங்கிறதுதானே நடிகர் திலகம் சிவாஜி சாருக்கான பெருமை. அந்தமாதிரி காமராஜர், எம்.ஜி.ஆர் வேடங்கள் எனக்குப் பொருந்தி வரும்கிறது என் ஆசை. அது நடக்குமான்னு தெரியலை. பார்ப்போம்.’’

“மதவாதக் கட்சிகள் இங்கு வரவே முடியாது!”

‘‘ஜல்லிக்கட்டுப் போராட்டம், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு... என சமீப நாட்களா இளைஞர்கள், மாணவர்கள் தன்னெழுச்சியாகத் திரளும் இந்தப் போராட்டங்களை எப்படிப் பார்க்கிறீங்க?’’

‘‘மாணவர்கள், இளைஞர்கள்னு சொல்லும்போது பெண்களையும் சேர்த்தேதான் சொல்றேன். இது நம்ப முடியாத மகத்தான எழுச்சி. ஆனா, மெரினா, நெடுவாசல்னு... காலம்பூரா இப்படி தனித்தனியே போராடிட்டு இருக்க முடியாது. இவங்க ஓர் அமைப்பா அணி திரளணும். இவங்களுக்கு ஒரு தலைமை வந்தே ஆகணும். ‘தோழர்களே வாருங்கள்’னு அழைத்த ரஷ்யப் புரட்சிக்கே ஒரு லெனின் தேவைப்பட்டார். ஒரு நீண்ட நடைப்பயணம்னு ஆரம்பித்த சீனப் புரட்சிக்கு ஒரு மாவோ தேவைப்பட்டார். அதேபோல இந்தச் சூழல்ல நம் இளைஞர்களில் இருந்து, ஒரு தலைமை வந்தா நல்லாயிருக்கும்னு ஆசைப்படுறேன். இந்த வழக்கமான அரசியல் கட்சிகள், அதன் தலைவர்கள் மேல சராசரி மக்கள் பெரிய வெறுப்புல இருக்காங்க. வேற வழியே இல்லாமல்தான் யாரோ ஒருவரைத் தேர்ந்தெடுத்துட்டிருக்காங்க. இப்ப தேர்தலே, பிடிக்காதவங்களுக்கு எதிராக ஓட்டு போடுறதுனு ஆகிப்போச்சு. ஒரு புதிய தலைமை வந்தாதான், பிடிச்சவங்களுக்கு வாக்களிக்கிற மாதிரி தேர்தல் நடக்கும். இளைஞர்களோட இந்த எழுச்சியைப் பார்க்கையில், அது சாத்தியம்னு நினைக்கிறேன்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் செயல்பாடுகளில் நல்லது கெட்டதுனு அவர் மீது எனக்கு நிறைய விமர்சனங்கள் இருக்கு. இருந்தாலும்கூட அப்படி ஒருவர் டெல்லியில் வர முடியும்போது தமிழ்நாட்டிலும் ஒருவர் வர முடியும்தானே? இளைஞர்கள் சமூகப் பிரச்னைகளில் ஆர்வம் இல்லாம இருக்காங்களே என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனா, தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுத்து, அரசியல்வாதிகளுக்கு நம் இளைஞர்கள் தர்ற பதிலைப் பார்த்த பிறகு, அது தவறுனு புரியுது.

முன்னமாதிரி ஊர்வலம் போய், கூட்டம் போட்டுத்தான் தலைமை உருவாகணும்னு இல்லை. சமூகவலைதளங்கள் மூலமா இளைஞர்கள் இணைந்துள்ள இந்தச் சூழலில் அவங்களுக்கான தலைமையை அவங்களே தேர்வுசெய்வது ஒண்ணும் கடினம் இல்லை. அது விரைவில் நடக்கும்... நடக்கணும்.’’

“மதவாதக் கட்சிகள் இங்கு வரவே முடியாது!”

‘‘ ‘பெரியார்... பெரியார்னு பேசிட்டிருந்தா போதாது சத்யராஜ். ஒரு டப்ஸ்மாஷாவாது போட வேணாமா...’னு உங்களைப் பற்றி கமல் சொல்லியிருந்தாரே?’’

‘‘அவருக்கு எப்பவுமே என் மேல ஓர் அக்கறை இருக்கும். ‘நீங்க நடிப்புல, புதுப்புது கதாபாத்திரங்கள்ல இன்னும் முனைப்பா இறங்கணும்’னு சொல்லிட்டே இருப்பார். கிட்டத்தட்ட இருவரும் ஒரேஅலைவரிசைச் சிந்தனையாளர்கள்தான். நான் ட்விட்டர், ஃபேஸ்புக்ல இல்லை. அந்தப் பதிவில், ‘என்னதான் விமர்சனம் இருந்தாலும் எடப்பாடியா, பன்னீர்செல்வமானு வரும்போது பன்னீர் பெட்டர்’ங்கிற அர்த்தத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனா, அ.தி.மு.க-வில் நடப்பதை நான் ஓர் உள்கட்சிப் பிரச்னையாகத்தான் பார்க்கிறேன். தலைவர் எம்.ஜி.ஆர் இறந்தப்ப ஜானகி அம்மா அணிக்கும் ஜெயலலிதா அம்மா அணிக்கும் இடையே நடந்த சர்ச்சை மாதிரிதான் இதுவும். ஆனா இவரா, அவரா என்பதைத் தாண்டி புதிதாக ஒருவர் வர வேண்டும். ஓர் இளம் தலைமை வர வேண்டும் என்பதுதான்
என் ஆசை.’’

``திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்து 50 ஆண்டுகள் ஓடிவிட்டது. இந்தச் சூழலில் ஜெயலலிதா மரணம், வயோதிகத்தால் ஓய்வில் இருக்கும் கருணாநிதி... இருவரும் இல்லாத திராவிடக் கட்சிகளின் களத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

‘‘ஸ்டாலின் ஸ்கூலில் படிக்கிற காலத்துல இருந்து அரசியலில் இருக்கிற அனுபவசாலி. தனிப்பட்ட முறையில் அவரின் உழைப்பு எனக்குத் தெரியும். அவர் களத்தில் இறங்கி வேலைசெய்பவர். ஒவ்வொரு தொண்டனையும் சந்திப்பவர். நிச்சயம் அவர் தலைமையில் தி.மு.க வலுவா இருக்கும். தவிர இப்ப அ.தி.மு.க ஆட்சிதானே நடந்துட்டிருக்கு. ஆனா, திராவிடக் கட்சிகளைத் தாண்டி ஒரு மதவாதக் கட்சி இங்கு வந்துட முடியாது. வேணும்னா பின்னாடி இருந்து வேலை செய்யலாமே தவிர, முன்னாடி வரவே முடியாது.’’

‘‘பாடகி சுசித்ரா வெளியிட்டதா சொல்லப்படுற பிரபலங்களின் அந்தரங்கப் படங்கள், வீடியோக்கள்... `சினிமாவில் பெண்களை ஆண்கள் பயன்படுத்திக் கொள்ளவதைக் காட்டுது’னு சொல்றாங்களே?’’


‘‘பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் எந்த ரூபத்தில் நடந்தாலும் அவற்றை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நடிகை பாவனா எங்க துறையைச் சேர்ந்தவங்கதான். ஆனால், நீங்க அவங்களுக்குக் கொடுக்கிற முக்கியத்துவத்தை நந்தினிக்கும் கொடுக்கணும். தலித் பெண் நந்தினிக்கு நடந்த கொடூரம் மிகப்பெரியது. கிராமப்புற தலித் பெண்கள் மீது தொடர்கிற பாலியல் கொடுமைகள் மிகக் கொடூரமானவை. அதையும் இதற்கு சமமாக முன்னிலைப்படுத்தணும். பெண்களை நான் பிரிச்சுப்பார்க்க விரும்பலை. இருந்தாலும் மீடியா வெளிச்சம் நந்தினிகள் மீதும் விழணும். இது நான் ஊடகங்களுக்கு வைக்கிற ஒரே வேண்டுகோள்.’’