Published:Updated:

இந்தியாவின் பேட்மேன்!

இந்தியாவின் பேட்மேன்!
பிரீமியம் ஸ்டோரி
News
இந்தியாவின் பேட்மேன்!

ஆர்.ஜெயலெட்சுமி

இந்தியாவின் பேட்மேன்!

யாரைப் பார்த்தாலும் பயோபிக் எடுக்கும் பாலிவுட், இந்த முறை தேர்ந்தெடுத்திருப்பது ரியல் ஹீரோவை. `பேட்மேன்' என்ற பெயரில் பால்கி இயக்கத்தில் அக்‌ஷய்குமார், அமிதாப் பச்சன், ராதிகா ஆப்தே நடிக்கும் படம், நம் கோவைத் தமிழன் முருகானந்தத்தின் வாழ்க்கை வரலாறு.

குறைந்த விலையில் ஏழைப்பெண்களும் பயன்பெற வசதியாக சானிட்டரி நாப்கின்கள் தயாரித்துப் புரட்சி செய்தவர், கோயம்புத்தூர் பாப்பு நாயக்கன் பட்டியைச் சேர்ந்த முருகானந்தம். வணிக முறையில் தயாரிக்கப்படும் நாப்கின்களின் விலையில் மூன்றில் ஒரு பங்கு விலையில் நாப்கின்களைத் தயாரிக்கக்கூடிய இயந்திரத்தைக் கண்டுபிடித்துக் காப்புரிமை பெற்றவர். அவரது `ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் அந்த இயந்திரங்கள், இன்று இந்தியாவில் 23 மாநிலங்களிலும், உலகளவில் ஏழு நாடுகளிலும் பெண்களின் மாதவிலக்குத் துயரங்களைக் குறைத்துவருகின்றன. அதோடு, வேலைவாய்ப்பின் மூலம் லட்சக்கணக்கான பெண்களின் சமூக மேம்பாட்டுக்கான வாழ்வாதாரத்தையும் அளித்துவருகிறது இந்த நிறுவனம்.

முருகானந்தத்தின் `பேட்மேன்' படம் பற்றி அவரிடமே பேசினோம். 

இந்தியாவின் பேட்மேன்!

``உங்கள் வாழ்க்கை, பாலிவுட்டில் படமாகிறது. எப்படி ஆரம்பித்தது இந்தப் பயணம்?''

``உயர்நிலைக் கல்வியைக்கூட முடிக்க இயலாத வறுமை, நெசவாளி, பட்டறைத் தொழிலாளி... இதுதான் என் கடந்தகாலம். குறைந்த விலையில் நாப்கின் தயாரிக்கும் என் முயற்சியும், அதற்கான என் தேடல்களும் ஆய்வுகளும் சமூகத்தால் புரிந்துகொள்ளப்படவில்லை. மனைவி சாந்தி, பெற்றோர் உள்பட ஒட்டுமொத்த உறவுகளாலும் ஒதுக்கப்படும் நிலைக்கு ஆளானேன். பெண்களுக்கு எந்த வகையான நாப்கின் தேவை என்பதை அறியும் முயற்சியில், திரவத்தை மடியில் கட்டிக்கொண்டு சுயமுயற்சி செய்தது முதல், பெண்கள் பயன்படுத்தி வீசும் நாப்கின்களைத் தேடி எடுத்து சோதனை செய்தது வரை `இவன் பைத்தியக்காரன்', `சித்தபிரமை பிடித்தவன்', `பெண் சபலம் பிடித்தவன்' எனப் பல வசவுகளை எனக்குப் பெற்றுத்தந்தன. அனைத்தையும் கடந்து, மலிவுவிலை நாப்கின் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்தேன்.

இந்தியாவின் பேட்மேன்!

என்னுடைய வாழ்க்கையைப் படமாக்க வேண்டும் என, கடந்த ஆறு ஆண்டுகளாகவே ஹாலிவுட்டில் கேமரூனில் இருந்து, இந்தி, மராத்தி, கன்னடம், தமிழில் இயக்குநர் வெற்றி மாறன் வரை பலர் என்னிடம் பேசிவந்தனர். அப்படித்தான் நடிகையும் எழுத்தாளருமான ட்விங்கிளும் என்னிடம் பேசினார். இந்தச் சூழலில் நான் லண்டன் சென்றபோது, ட்விங்கிளைச் சந்திக்க நேர்ந்தது. பெண் என்பதால், நாப்கின் உருவாக்க நான் பட்ட போராட் டங்களை அவரால் மற்றவர் களைவிட ஆழமாகப் புரிந்துகொள்ள முடிந்தது. தன்னுடைய `தி லெஜெண்ட் ஆஃப் லக்‌ஷ்மி பிரசாத்' புத்தகத்தில், என் வாழ்க்கையை அவர் ஒரு சிறுகதையாகப் பதிவுசெய்திருந்தார். தொடர்ந்து, அவருடைய `மிசஸ் ஃபன்னிபோன்ஸ் மூவீஸ்' நிறுவனம் மூலம் என் வாழ்க்கையை பாலிவுட்டில் படமாகத் தயாரிக்க முன்வந்திருக்கிறார்.''

``உங்கள் வாழ்வின் எந்தப் பகுதி படமாக்கப்பட இருக்கிறது?''

``என் மனைவியின் மாதவிடாய்ச் சிரமங்களைக் குறைக்க நினைத்துதான், நான் இந்த ஆய்வுக்கே வந்தேன். திருமணம் முதல் நான் சமூகத் தொழில்முனைவோராக மாறியது வரை, அந்த 14 ஆண்டுகால வாழ்க்கைதான் படமாக்கப்பட இருக்கிறது.''

இந்தியாவின் பேட்மேன்!

``அக்‌ஷய்குமார், முருகானந்தமாக நடிக்கவிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

``பொதுவாக ஆண்கள் `மாதவிலக்கு' என்ற வார்த்தையைக்கூட உச்சரிக்க மாட்டார்கள். அது அவர்களுக்குத் தொடர்பில்லாத விஷயம் என ஒதுங்கியிருப்பார்கள், ஒதுக்குவார்கள். அதேபோல, பெண்களின் நலன், பிரச்னைகள் பற்றிய படங்களில் நடிக்க பெரும்பாலும் ஹீரோக்கள் முன்வருவதில்லை. அப்படியான சூழலில், தன் இமேஜ் பற்றிக் கவலைப்படாமல் அக்‌ஷய் இந்தப் படத்தில் நடிக்க முன்வந்திருப்பது எனக்குப் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இதனால் மாதவிலக்குப் பற்றிய புரிதல் அனைத்துத் தரப்பு மக்களிடமும், குறிப்பாக ஆண்களிடமும் சென்று சேரும். இந்தப் படத்தின் மூலம் சமூகத்தில் நல்ல மாற்றம் ஏற்படும் என நம்புகிறேன்.''

``இயக்குநர் பால்கி, அக்‌ஷய்குமாரைச் சந்தித்தீர்களா... அவர்கள் என்ன சொன்னார்கள்?''


``ஆமாம். பால்கியும் ட்விங்கிளும் என் வீட்டுக்கு வந்து தங்கி என்னைப் பற்றியும் என் குடும்பச் சூழல் பற்றியும் புரிந்துகொண்டார்கள். இயக்குநர் பால்கி தமிழர் என்பதால், அவரிடம் உணர்வுபூர்வமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டது ஆத்மார்த்தமாக இருந்தது. அக்‌ஷய், ட்விங்கிள், பால்கி அனைவருமே படம் தொடர்பாக என்னிடம் பேச ஆரம்பித்தாலும், இப்போது எனக்கு நல்ல நண்பர்களாகி விட்டார்கள். என்னுடைய பாடிலாங்வேஜை அக்‌ஷய்க்குக் கற்றுத்தர, படப்பிடிப்பின்போதும் எனது பங்களிப்பு இருக்கும். இந்தி, தமிழ் என இரண்டு மொழிகளிலும் திரைப்படமாக்கப் படமாகிறது படம்.''