Published:Updated:

எம்மான்னா நடிப்பு!

எம்மான்னா நடிப்பு!
பிரீமியம் ஸ்டோரி
News
எம்மான்னா நடிப்பு!

கே.ஜி.மணிகண்டன்

பெற்றோர் நம் அருகே உட்கார்ந்து `எதிர்காலத்தில் நீ என்னவாகப் போகிறாய்?' எனக் கேட்டால், திருதிருவென முழிப்போம். டாக்டர், இன்ஜினீயர் என, சூழலுக்குத் தகுந்தாற்போல் எதையாவது சொல்லிச் சமாளிப்போம். சிறு வயதிலேயே தான் நடிகை ஆகப்போவதை `புராஜெக்ட் ஹாலிவுட்' என எழுதிக் காட்டியவர் எம்மா ஸ்டோன். இப்போது `லா லா லேண்டு' படத்துக்காக, சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது பெற்றிருக்கிறார் இந்த 28 வயது லவ் லேடி.

`எம்மா நடிக்கிறாரா?' என எல்லோருமே கேட்பதுதான் எம்மாவின் பலம். அவ்வளவு இயல்பாக இருக்கும் அவரது நடிப்பு. கண்கள் காதல் பேசும். சின்னச்சின்ன அசைவுகளில்கூட அவ்வளவு நுணுக்கங்களைக் காட்டுவார் எம்மா.

எம்மான்னா நடிப்பு!

எம்மாவுக்கு, பெற்றோர் ஜெஃப் - கிரிஸ்டா வைத்த பெயர் எமிலி. எல்லா குழந்தைகளுமே பிறக்கும்போது அழும். ஆனால், அதிகமாக அழுதார் எம்மா ஸ்டோன். நாளுக்கு மூன்று மணி நேரம் அழுகை வரும் `பேபி காலிக்' பாதிப்பு எம்மாவுக்கு இருந்தது. மகளை மகிழ்ச்சியாக்க, வெளியாட்களுடன் பழக்கப்படுத்த நான்கு வயதிலேயே நாடகங்களில் நடிக்க  உற்சாகப்படுத்தினார் எம்மாவின் அம்மா. ஆனால், விநோதமான நோய்களின் பாதிப்பு எம்மாவுக்குத் தொடர்ந்தது. திடீரென ஏற்படும் பயம், படபடப்பு, உணர்வின்மை என `பேனிக் அட்டாக்' எம்மாவைத் தாக்கியது. பள்ளிக்குச் செல்வதை வெறுத்தார். பெற்றோரும் மகளைப் `படி... படி...' எனக் கட்டாயப்படுத்தாமல் `பிடித்ததைச் செய்' என எம்மாவுக்கு சுதந்திரம் கொடுத்தனர். மீண்டும் நாடகங்களில் செலுத்திய கவனம், பேனிக் அட்டாக்குக்கு விடுதலை கொடுத்தது. சிறுசிறு கதாபாத்திரங்களிலிருந்து நாடகத்தின் முழுமையான கதாபாத்திரத்தில் நடிக்கும் அளவுக்கு அசத்திய​போது, எம்மா ஸ்டோனுக்கு வயது 11.

எம்மா பிறந்து வளர்ந்தது, அமெரிக்காவில் உள்ள ஸ்காட்ஸ்டேல் எனப்படும் சுற்றுலா நகரத்தில். கிட்டத்தட்ட கோவா போன்ற ஓர் ஊர். ஆனால், அங்கு இருந்தால் ஹாலிவுட்டுக்குள் நுழைய முடியாது என, மகளின் ஆசைக்காக ஹாலிவுட்டின் இதயமான லாஸ் ஏஞ்சலஸ் நகருக்குக் குடிபெயர்ந்தது எம்மாவின் குடும்பம். `எமிலி ஸ்டோன்' என்ற பெயரில் வேறொரு நடிகை இருப்பதால், தனது பெயரை `எம்மா ஸ்டோன்' என மாற்றிக்கொண்டார்.

வாய்ப்புக்காகப் பல கதவுகளைத் தட்டினார். சினிமாவில் நடிக்கும்போது முகபாவனைகள் நன்றாக வரவேண்டும் என, சைகை மொழியைக் கற்றுக்கொண்டார். சீரியல், ரியாலிட்டி ஷோ, மேடை நாடகங்கள் என, கிடைக்கும் அத்தனை வாய்ப்புகளையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். 2007-ம் ஆண்டில் தனது ஹாலிவுட் கனவை எட்டிப்பிடித்தார் எம்மா.

முதல் படமான `சூப்பர் பேட்' படத்தில் நடிக்கும்போது எம்மா ஸ்டோனின் வயது 18. முதல் படத்திலேயே புதுமுக நடிகைக்கான விருது எம்மாவுக்குக் கிடைத்தது.  2009-ம் ஆண்டில் வெளியான `ஸோம்பிலேண்டு', எம்மா மீது பரவலான கவனத்தைப் பதியவைத்தது. 2010-ம் ஆண்டில் வெளியான `ஈஸி ஏ' என்கிற படம் ஹீரோயின் அந்தஸ்தைக் கொடுத்தது. பிறகென்ன... ஹாலிவுட்டின் கவனம், எம்மா ஸ்டோன் மீது தீவிரமாகத் திரும்பியது.

`அமேஸிங் ஸ்பைடர்மேன்', `அமேஸிங் ஸ்பைடர்மேன்-2' படங்களில் நடித்து ஹாலிவுட்டின் டாப் வரிசை ஹீரோயினாக உயர்ந்தார் எம்மா. சிறு பட்ஜெட் படமோ, பெரிய பட்ஜெட் படமோ பாகுபாடு இல்லாமல் நடிப்பார்.  இப்போது   எம்மாவின் ஒரு படத்துக்கான சம்பளம் 75 கோடி ரூபாயைத் தாண்டுகிறது.

நடிகையாக மட்டும் அல்ல, தனக்கு என்னவெல்லாம் தெரியுமோ அத்தனையையும் செய்துகொண்டிருக்கிறார் எம்மா. `தி க்ரூட்ஸ்' அனிமேஷன் படத்துக்குக் குரல் கொடுக்கிறார். மியூஸிக் ஆல்பத்தில் நடிக்கிறார். இன்னமும் டிவி சீரியலில், மேடை நாடகங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஓய்வு நேரத்தில் வெப் டிசைனிங் கற்றுக்கொண்டு, தனது இணைய​தளத்தைத் தானே அப்டேட் செய்கிறார்.

சமூக வலைதளத்தில், ஒரு பிரபலத்துக்கு எத்தனை பக்கங்கள் இருக்கும்? எம்மா ஸ்டோனுக்கு 350-க்கும் அதிகமான ஃபேஸ்புக் பக்கங்கள் இருக்கின்றன. எம்மா ஸ்டோனின் பச்சைக் கண்களுக்கும், ஹஸ்கி வாய்ஸுக்கும் ரசிகர்கள் ஏராளம். `சிறந்த இளம் நடிகைகளில் ஒருவர்', `பாகுபாடு இல்லாமல் நடிக்கும் நடிகை', `சிறந்த 100 மனிதர்களில் ஒருவர்', `ஹாலிவுட்டில் அதிகச் சம்பளம் பெறும் நடிகை' என்ற பலவிதமான ஊடக விமர்சனங்களைவிட எம்மா அதிகம் ரசிப்பது, `இந்தத் தலைமுறையின் சிறந்த நடிகை' என்ற அடையாளத்தைத்தான்.

ஆம், இந்தத் தலைமுறையின் சிறந்த நடிகையாக முதல் இடத்தில் இருக்கிறார் எம்மா!