``கொல்கத்தாவில் பாலியல் தொழில் செய்யும் பெண் ஒருவர், தன் கதையை ஆவணப்படமா எடுக்க நினைக்கிறார். இதுக்காக ஆவணப்பட இயக்குநர் ஒருவரிடம் சென்று `என் கதையை சினிமாவா எடுங்க'னு கேட்கிறார். அவள் அப்பாதான் அவளை இந்தத் தொழிலில் தள்ளிவிட்டவர். அந்தப் படமும் பாலியல் தொழிலாளியின் அனுபவமும்தான் `சினம்' ஆவணப்படம்'' - நிதானமாகப் பேசுகிறார் ஆனந்த்மூர்த்தி. புலிப் போராளி திலீபனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும், `மாவீரன் திலீபன்’ படத்தின் இயக்குநர் இவர்.

``சினிமா இயக்குநரான நீங்கள் ஏன் திடீர்னு ஆவணப்படம் பக்கம் வந்துட்டீங்க?''
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`` `மாவீரன் திலீபன்' படம் முழுக்க முடிச்சாச்சு. ஆனால், சில சிக்கல்களால் அது இன்னும் திரைக்கு வரலை. ஒரு சின்ன இடைவெளி கிடைச்சதால், ஓர் ஆவணப்படம் செய்தேன். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஒவ்வொரு நாளும் சொல்ல முடியாத அளவுக்கு அதிகமாகிக்கிட்டே போகுது. நம் வீட்டில் உள்ள பெண்ணுக்கும் இப்படி ஏதாவது நடந்திருமோனு மனசு பதறுது. இதுதான் இந்தக் கதையைப் படமா எடுக்கக் காரணம். முழுவதும் ஒருவர் மட்டுமே பேசும் மோனோலாக் குறும்படம் இது.
படத்தில் ஆவணப்பட இயக்குநர் பெயர் துர்கா. பாலியல் தொழிலாளி பெயர் சக்தி. படம் எடுக்கும் முன்பு துர்கா, `நம்ம ரெண்டு பேருக்குமே கடவுளுடைய பேரை வெச்சிருக்காங்க. ஆனா, ஒரு மனுஷியாகூட யாரும் மதிக்க மாட்டேங்கிறாங்க'னு சக்தியிடம் சொல்வாங்க. இப்படிப் பல காட்சிகள், வசனங்கள் படத்தில் இருக்கு.''

``தன்ஷிகாவை எப்படி உங்கள் படத்துக்குள் கொண்டுவந்தீங்க?''
``நல்லா தமிழ் பேசி நடிக்கிற நடிகை, இங்க வேற யாரு இருக்காங்க... சொல்லுங்க? நான் ஸ்கிரிப்ட் எழுதி முடிச்சதும் தன்ஷிகாகிட்ட கொண்டுபோய்க் கொடுத்தேன். படிச்சுப் பார்த்தவங்க `நிச்சயமா நடிக்கிறேன்'னு வந்துட்டாங்க. ஆவணப்பட இயக்குநராக பிதிதா பாக் என்கிற பெங்காலி பொண்ணு நடிச்சிருக்காங்க. அவங்க இப்ப பாலிவுட் ஹீரோயின். நவாஸுதின் சித்திக்கூட அடுத்து நடிக்கப்போறாங்க. அவங்க ரெண்டு பேருமே இந்தப் படத்துக்கு சம்பளம் வாங்கலை. படத்துக்கு இசை ஜி.வி.பிரகாஷ்... என ஒரு பக்கா டீம் முழு ஈடுபாட்டோடு இந்தப் படத்தை எடுத்திருக்கோம்.''

``இதை ஒரு முழு நீள சினிமாவாக எடுத்திருக்கலாமே?''
``அப்படி சினிமாவாக எடுத்தால், அது சென்சார்போர்டைத் தாண்டி வெளியே வராது. சமூக அக்கறை நிறைந்த இந்தப் படம் யாருக்கெல்லாம் போய்ச் சேரணும்னு நினைக்கிறேனோ, அவங்களுக்குப் போய்ச் சேராது. படத்தை சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பலாம்னு இருக்கோம். இந்தப் படத்தைப் பார்க்கும் ஒவ்வோர் ஆணும் அவங்களைச் சார்ந்துள்ள பெண்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய மாட்டாங்க. அந்த அளவுக்கு இந்தப் படம் ஆண்களின் மனதைத் தைக்கும். பெண்களுக்கு மேலும் மரியாதையைக் கொடுக்கவைக்கும்.''