Published:Updated:

"உங்களுக்கெல்லாம் புலிகள்தான்றா சரி” - ஈழத்திலிருந்து ஒரு குரல்!

"உங்களுக்கெல்லாம் புலிகள்தான்றா சரி” - ஈழத்திலிருந்து ஒரு குரல்!
பிரீமியம் ஸ்டோரி
"உங்களுக்கெல்லாம் புலிகள்தான்றா சரி” - ஈழத்திலிருந்து ஒரு குரல்!

ம.கா.செந்தில்குமார்

"உங்களுக்கெல்லாம் புலிகள்தான்றா சரி” - ஈழத்திலிருந்து ஒரு குரல்!

ம.கா.செந்தில்குமார்

Published:Updated:
"உங்களுக்கெல்லாம் புலிகள்தான்றா சரி” - ஈழத்திலிருந்து ஒரு குரல்!
பிரீமியம் ஸ்டோரி
"உங்களுக்கெல்லாம் புலிகள்தான்றா சரி” - ஈழத்திலிருந்து ஒரு குரல்!
"உங்களுக்கெல்லாம் புலிகள்தான்றா சரி” - ஈழத்திலிருந்து ஒரு குரல்!

`‘இல்லை சகோதரா... 2009-க்கு முன்பு உள்ள எந்த ஆவணங்களும் கைவசம் இல்லை. வன்னியில் இருந்து தப்பும்போது உடுத்திய உடையுடன்தான் ஓடி வந்தோம். அப்பாவோடு எடுத்த குடும்பப் படமும் போரில் தவறிவிட்டது. மற்றவர்களோடு எடுத்து நாளை அனுப்பட்டுமா?”

“குடும்பப் புகைப்படம் அனுப்புங்கள்” என்ற என் ஃபேஸ்புக் மெசெஞ்சர் தகவலுக்கு மதி.சுதாவின் பதில் இது.

மதி.சுதா, ஈழத்தைச் சேர்ந்த குறும்பட இயக்குநர். இந்த ஐந்து ஆண்டுகளில்  14 குறும்படங்களையும் 5 ஆவணப்படங்களையும் இயக்கி வெளியிட்டுள்ளார். இவற்றில் பல படங்கள் சர்வதேச விருதுகளைப் பெற்றவை. இப்போது ‘உம்மாண்டி’ என்கிற மூழு நீள திரைப்படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். 

மதி.சுதாவுக்கு சுந்தரராஜன், சுதேந்திரராஜா என இரு சகோதரர்கள். சுதேசினி என்கிற சகோதரி. இவர்களில் சுரேந்திரராஜா வேறு யாரும் அல்ல. ராஜீவ்காந்தி கொலைவழக்கில் ஆயுள்தண்டனை பெற்று சிறையில் உள்ள சாந்தன்.

‘‘இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமிழகம் வந்து அண்ணனைச் சந்தித்தேன். ‘என்னிடம் இப்போது இருப்பது எவருக்குமே பிரயோசனமற்ற ஓர் உயிர். நான் கடவுளிடம் கேட்பது என்னைச் சுமந்த அம்மாவை, ஒரு சில நாளாவது நான் சுமக்கோணும்’ என்றார். அண்ணன் பேசப்பேச என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடிய வில்லை. பிரியும்போது அழுதபடி இரண்டு மூன்று பாதம் வைத்திருப்பேன். மீண்டும் கூப்பிட்டுக் கட்டிப்பிடித்து அழுதவர் தன்னை மன்னித்துக்கொள்ளும்படி கெஞ்சினார். ‘நான் இருந்திருந்தால் குடும்பச் சுமையில் ஒரு பகுதியையாவது பொறுத்திருப்பேன். நீங்கள் நல்லா படிச்சிருக்கலாம். உங்களிடம் மட்டும் அம்மாவின் சுமையைக் கொடுத்து உங்கட வாழ்க்கையையும் நாசமாக்கிவிட்டேன்’ என்று குமுறி அழுதார். மன்னிக்கவும்... இதற்கு மேல் என்னால் அவை பற்றி பேச முடியவில்லை.’’

‘‘உங்களைப் பற்றி...’’

‘‘மகேஸ்வரி தில்லையம்பலம் சுதாகரன்... சுருக்கமாக மதி.சுதா. பிறந்தது யாழ்ப்பாணம் வளர்ந்தது வன்னியில். போரின் பிடியில் இளமைக்காலம். கல்வியை இழந்து நிற்கும் பல ஆயிரம் இளைஞர்களில் நானும் ஒருவன். இடப்பெயர்வுகளால் ஏழு பாடசாலைகளில் எட்டு தரம் கல்வி கற்றிருக்கிறேன். இறுதிப் போர்க்காலத்தில் போர் மருத்துவராகக் கடமைபுரிந்துவிட்டு, முகாமின் பின்னான காலப் பகுதியில் கல்வியைத் தொடர பொருளாதார வசதி இன்மையால் கூலித் தொழிலாளியாகக் காலத்தைக் கழித்திருக்கிறேன். மைத்துனர் ஒருவரின் உதவியாலும் ஊக்கத்தாலும் கணக்கியல் கற்று இப்போது கணக்குத் துறையில் வேலை செய்துகொண்டு சாதிக்க வேண்டும் என்ற ஆவலில் திரைத் துறையைத் தேர்ந்தெடுத்துள்ளேன்.’’

"உங்களுக்கெல்லாம் புலிகள்தான்றா சரி” - ஈழத்திலிருந்து ஒரு குரல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘குறும்படம் பக்கம் உங்கள் ஆர்வம் எப்போது திரும்பியது?’’

‘‘அத்தனை குண்டு மழைக்குள் இருந்தும் ஓர் அங்க இழப்புகூட இல்லாமல், ஒரே ஒரு சிறு காயத்துடன் கடவுள் தப்பவைத்திருக்கிறார் என்றால், அதற்கு ஏதோ காரணம் இருந்திருக்க வேண்டும். ஈழத் தமிழனைப் பார்த்தீர்கள் என்றால் தெரியும். ஆண்டாண்டு காலமாக இரண்டு ஆயுதங்களை கையில் வைத்திருந்து போராடினான். ஒன்று பேனா; மற்றையது துவக்கு. இதில் இரண்டாவது ஆயுதம் பிடுங்கப்பட்டுவிட்டது. இனி அதைத் தூக்கவும் நாம் தயார் இல்லை. எங்களுக்கு என்று ஒரு தனிப் பண்பாடு, கலாசாரம், மொழி வழக்கு என விழுமியங்கள் பல உள்ளன. அதைக் காக்கவும், உலகின் எல்லைகளுக்குக் கொண்டுசெல்லவும் எனக்கு ஓர் ஆயுதம் தேவைப்பட்டது. அந்த வெற்றிடத்தை கேமரா போக்கியது. கேமரா என்றதும் பெரிதாக யோசிக்க வேண்டாம்.

என் ஆரம்பகாலக் குறும்படங்கள் அனைத்தும் மொபைல்போனில் செய்தவைதான்.

‘‘தமிழகத்தில் குறும்படம் என்பது சினிமாவுக்கான விசிட்டிங் கார்டு. குறும்பட இயக்குநர்கள் அடுத்து சினிமா இயக்குவார்கள். உங்களின் இலக்கு சினிமாவா?’’

``நிச்சயமாக... நாம் தோற்கடிக்கப்பட்ட இனம்தான். ஆனால், தோற்றுப்போனவர்கள் இல்லை. அதன் பிரதிநிதியாக இருக்கும் நான் சாதிக்க வழி தேடித் திரிந்தபோது, கடவுளாகக் காட்டிய பாதைதான் சினிமா. உலக சினிமா பட்டியலில் சிங்கள சினிமாவுக்குக்கூட தனி இடம் உண்டு. ஆனால், ஈழத் தமிழ் சினிமாவுக்கு என்று அரிதாக சில படங்கள்தான் செல்வது உண்டு. ஈழத்துக்கு என்று ஓர் அடையாள சினிமாவைத் தேடுவதுதான் என் லட்சியமே.''

‘‘சிங்கள சினிமா துறை எந்த அடிப்படையில் இயங்குகிறது?’’

‘‘இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரவின்படி 2016-ல் 19 சிங்களப் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதேபோல வருடத்துக்குச் சராசரி 15 முதல் 20 திரைப்படங்கள் எடுக்கப் படுவதுடன் சர்வதேச விருது விழாக்களிலும் விருதுபெற்று இலங்கைக்கு உரிய ஓர் அரசியல் பிரசார ஆயுதமாக அமைகிறது. அத்துடன் அவர்களுக்கு கடன் அடிப்படையில் பணம் வழங்கப்படுவதுடன், படம் நட்டமடைந்தால் மானியமும் வழங்கப்படுகிறது. ஆனால், தமிழ் இயக்குநர்கள் வெளிநாட்டில் இருப்பவர்கள் செய்யும் சிறு தொகை உதவிகளைக் கொண்டுதான் படம் உருவாக்க முடிகிறது. இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தினூடாக தமிழப் படங்களையும் வெளியிட முடியும். ஆனால், விற்கும் நுழைவுச்சீட்டில் 60 சதவிகிதம் அவர்களுக்கும் 40 சதவிகிதம் தயாரிப்பாளருக்கும் கிடைக்கும். தென்னிந்தியப் படங்களை அனுமதி இன்றி எடுத்துகூட தம் ஆசைக்குப் படமாக்கிக் கொள்வார்கள். அப்படி அண்மையில் ‘பொல்லாதவன்’ படத்தைப் பார்க்கக் கிடைத்தது. அதேபோல ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்தை அப்படியே விடுதலைப்புலிகளைத் தீவிரவாதிகளாகக் காட்டி, ஒரு ஹோலிவுட் நடிகரை நடிக்கவைத்து எடுத்திருந்தார்கள்.’’

‘‘எந்தத் தமிழ் நடிகரின் படத்துக்கு அங்கு ரசிகர்கள் அதிகம்?’’

‘‘சினிமாவைப் பொறுத்தவரை ஈழம் என்பது ஒரு குட்டித் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் சினிமாவை எப்படி ரசிப்பார்களோ கொண்டாடுவார்களோ அதுபோலத்தான் ஈழத்திலும். அதிலும் நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகரின் படங்களுக்கு மட்டும்தான் மதிப்பு. இந்தச் சூழலால்தான் இங்கிருந்து ஒரு சினிமா தலை எடுக்க முடியாமல் உள்ளது. சூப்பர் ஸ்டார், இளைய தளபதி படங்கள் வருகிறது என்றால், அந்த மாதம் உங்களுக்கு தியேட்டரே கிடைக்காது. ’’

‘‘உள்ளுர் சினிமாவுக்கு ரசிகர்களோ, தயாரிப்பாளர்களோ கிடைக்காத ஒரு சூழல்.. அப்படி ஓர் இடத்திலிருந்து `உம்மாண்டி’ என்ற முழுநீள சினிமாவுக்குள் எப்படி நுழைந்தீர்கள்?’’


‘`தயாரிப்பாளரே இல்லாத நிலையில் வங்கியில் லோன் ஒன்றை எடுத்ததுடன் நண்பர்களிடமும் கடனாகப் பணம் பெற்றே இந்தப் படத்தை முடித்திருக்கிறேன். கதை, திரைக்கதையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட இந்தப் படத்துக்கு ஒன்பது லட்சம் செலவானது. ஆனால், 3,000 பேர் படம் பார்த்தாலும் போட்ட காசு எடுப்பேன் என்ற ஒரு தன்னம்பிக்கையில்தான் எடுத்தேன். அது மட்டும் அல்ல... எம் மக்கள் ஈழப் படம் என்றால் நம்பி தியேட்டருக்கு வர மாட்டார்கள் என்பதால், தியேட்டரில் படம் பார்த்துத் திருப்திப்படாதவர்கள், வாசலில் வந்து பணத்தைக் கேட்டால் திருப்பித்தருவதாக வாக்களித்தே படத்தை வெளியிடுகிறேன்.’’

"உங்களுக்கெல்லாம் புலிகள்தான்றா சரி” - ஈழத்திலிருந்து ஒரு குரல்!

‘‘ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறையில் உள்ளவர்களில் உங்கள் சகோதரர் சாந்தனும் ஒருவர். அவருடனான உங்கள் நினைவுகள்...’’

‘‘அண்ணா, வீட்டைவிட்டுப் போகும்போது எனக்கு ஆறு வயது. அண்ணா, வீட்டில் இருந்து கிளம்பும்போது எனக்கு சற்குணம் கடையில் இரண்டு பலூன்கள் வாங்கித் தந்தார். ஒன்று பச்சை, மற்றையது வெள்ளை. அதில் ஒன்று ஊதும்போதே ஓட்டை இருந்தது தெரிந்தது. அடுத்தது அன்றே உடைந்துபோய்விட்டது. அந்தக் கடைக்காரரிடம் போய் ஓட்டை பலூனை மாற்றித் தரும்படி கேட்டேன். அவரோ வாங்கிய ஆளைக் கூட்டிக்கொண்டு வரச் சொல்லிவிட்டார். எத்தனையோ மாதங்கள் அந்தப் பலூனைக் கவனமாக வைத்திருந்தேன். பிறகு அது உருகிவிட்டது.’’

‘‘முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி நால்வரையும் விடுதலை செய்வதாக மூன்று ஆண்டுகளுக்கு முன் அறிவித்த ஜெயலலிதா இறந்துவிட்டார். இந்தத் தருணத்தில் நீங்கள் மத்திய, மாநில அரசுகளிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?’’

``இருபத்தைந்து வருட காலம் என்பது அண்ணாவுக்கு மட்டுமான தண்டனை அல்ல. எங்கள் வீட்டில் எந்த ஒரு சந்தோஷ நிகழ்வுமே நடந்தது இல்லை. அவராலும் இன்னும் அதிக காலம் இந்த மனஅழுத்தத்துடன் உயிர் வாழ முடியாது. அம்மாவும் இறுதிக்காலத்தை நெருங்கிவிட்டார்.  இந்தச்  சில வருடங்களையாவது அம்மாவோடு அவரை இருக்கவிடலாம். அதுவும் முடியாதா, ஏதாவது ஓர் இலங்கைச் சிறைக்கு மாற்றித்தந்தால்கூட, அடிக்கடி பார்த்து ஆறுதல் கொள்வார்.’’

‘‘போருக்குப் பிறகான ஈழம் எப்படி இருக்கிறது? மக்களுக்கான மறுவாழ்வு திட்டங்கள் நடக்கின்றனவா?’’


‘‘இலங்கையில் தமிழர் என்பது ஒரு சிறுபான்மை இனம்தான். முன்னர்போல இப்போது ராணுவச் சோதனைச்சாவடிகள் எதுவும் இல்லை. அதனால் திட்டமிட்ட நேரத்துக்கு ஓர் இடத்துக்குப் போய்ச் சேரக்கூடியதாக உள்ளது. ஆனால், இன்னும் பல இடங்கள் மக்களுக்குத் திருப்பி அளிக்கப்படவில்லை. அவற்றைப் பெறுவதற்கான மக்கள் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

மறுவாழ்வுத் திட்டங்கள் என்பது ஒரு பகுதியாகவே இடம்பெறுகிறது. உதாரணத்துக்கு, என் குடும்பம் வன்னிப் போரில் இருந்து மீண்டு வந்து ஏழு வருடங்கள் கடந்துவிட்டது. ஆனால், சிதைவடைந்திருந்த வீட்டுக்கான திருத்தப்பணிக்குத் தருவதாகச் சொல்லியிருந்த பணம் எதுவும் தரப்படவில்லை. அண்மையில்கூட ஒரு பொலீஸ் அதிகாரி ‘உங்களுக்கெல்லாம் அவங்கள் (புலிகள்) தான்றா சரி’ என்று சொன்னதாக நண்பர்கள் சொன்னார்கள். காரணம், புலிகளின் கட்டுப்பாட்டை பலர் விமர்சித்தார்கள். ஆனால், இப்போது தேவையை உணர்கிறார்கள். 2002-2006 வரையான சமாதான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் முழு வாள்வெட்டுக் குழுக்களையும், மண்கடத்தல் குழுக்களையும் புலிகள் அழித்தார்கள் என்றே சொல்ல வேண்டும். ஆனால், இன்று பழையபடி எல்லாம் தலை எடுத்துவிட்டன. கேரளாக்காரர் அங்கிருந்து இங்கு வந்து கஞ்சாவை இறக்கிக் கொடுத்துவிட்டுச் செல்லும் அளவுக்கு கைமீறிப் போயுள்ளது.’’

‘‘கைதுசெய்யப்பட்ட போராளிகள், அவர்களின் குடும்பங்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்?’’

‘‘ `புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூக வாழ்க்கைக்குள் திருப்பிவிடப் பட்டுள்ளார்கள்’ எனப் பேச்சு அளவில் கூறப்பட்டாலும், அவர்கள் மேலான விசாரணைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. வழக்கு, விசாரணை அச்சுறுத்தலால் சாதாரண மக்கள்கூட அவர்களை அணுகுவது இல்லை. அதனால், பலர் உளவியல்ரீதியாகப் பாதிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப் படுகிறார்கள். இதை அடிப்படையாக வைத்துதான் எனது ‘தழும்பு’ குறும்படத்தை எடுத்திருந்தேன். அவர்கள் ஆயுதம் ஏந்தியவர்கள் என்ற ஒரு பார்வை பார்க்கப்பட்டாலும், ஏன் அவர்கள் ஆயுதம் தூக்கவைக்கப்பட்டார்கள் என்று அரசாங்கமோ, அல்லது யாருக்காக ஆயுதம் தூக்கினார்கள் என மக்களோ சிந்திக்கத் தவறுகிறார்கள். அவர்களது நிழலில்தான் இன்று தமிழன் என்ற அடையாளமே ஒதுங்கியிருக்கிறது. ஏனென்றால், புலி எதிர்ப்பாளர் களுக்குக்கூட பேசுபொருளாக அவர்கள் கொடுத்த உயிர்கள்தான் கைவசம் இருக்கின்றன.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism