காட்சி ஊடகத்தின் உள்ளே இருக்கும் சில நல்லவர்களுக்கும் கெட்டவர் களுக்குமான அதிரடி ஆட்டமே `கவண்'.
நாயகன், நாயகி, காமெடியன் என எல்லோருமே ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். ஊடகத்தை நல்ல விஷயங்களுக்காகப் பயன்படுத்த நினைக்கும் இந்த டீமுக்கு, முட்டுக்கட்டை போடுகிறார்கள், டி.ஆர்.பி மட்டுமே முக்கியம் என நினைக்கும் நிறுவன உரிமையாளரும் அவருடைய சகாக்களும். நேரலை நிகழ்ச்சி ஒன்றில் கெட்ட அரசியல்வாதியின் முகமூடியை அவிழ்க்க முற்படுகிறார் விஜய் சேதுபதி. இந்தப் பிரச்னையில் வேலையைவிட்டு விரட்டியடிக்கப்படுகிறது விஜய் சேதுபதி டீம். வெளியேற்றப்பட்டவர்கள் எப்படி வென்றார்கள் என்பதே மீதிக் கதை.

மீடியா வேலை, மாடர்ன் களை என விஜய் சேதுபதிக்கு எல்லாமே புதிது. ஆக்ஷன் காட்சிகளில் ஆங்காங்கே காட்டும் லந்தும், காதல் காட்சிகளில் எட்டிப்பார்க்கும் முரட்டுத்தனமும் வி.சே ஸ்பெஷல். சொந்தக்குரலில் மடோனா. அதைத் தாண்டிச் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒன்றும் இல்லை. வழக்கமான அடுக்குமொழி என்றாலும், வித்தியாசமான டி.ராஜேந்தர். ஒரே ஒரு காட்சி என்றாலும் `நீங்க என்னை காமெடியான நினைக்கிற வரைதான் எனக்கு மார்க்கெட்' எனச் சொல்லும் பவர்ஸ்டார் ஆச்சர்யம். விக்ராந்த்தும் பண்டியராஜனும் இயக்குநர் சொன்னதைச் செய்திருக்கிறார்கள்.
போஸ்வெங்கட்தான் கெட்ட அரசியல்வாதி. ஆனால், அவரின் பேச்சிலும் உடல்மொழியிலும் வில்லத்தனம் கொஞ்சம்கூட இல்லை. ஊடக அதிபர் ஆகாஷ்தீப்பின் வில்லத் தனங்கள் `கிச்சுக்கிச்சு' மூட்டுகின்றன.
கபிலன் வைரமுத்துவின் `மெய்நிகரி' நாவலிலிருந்து கொஞ்சம் எடுத்துக் கொண்டு வழக்கமான கூட்டணியான சுபாவுடன் சேர்ந்து கதை-திரைக்கதை எழுதியிருக்கிறார் இயக்குநர் கே.வி.ஆனந்த். ஆனால் ஊடக பலம், அநியாய அரசியல் வாதி, தீயதைச் செய்யும் ஒரு நிறுவனம்... எனக் காட்சிக்குக் காட்சி முந்தைய படங்களின் ரெஃபரன்ஸையே நம்பி படம் எடுத்தால் எப்படி சார்? இன்னும் எவ்வளவு காலம்தான் சென்னைத் தமிழ் பேசும் அடாவடி அரசியல்வாதி, காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் சேட்டு... என அதே ஸ்டீரியோ டைப் கதாபாத் திரங்கள் வரும்.
ஒரு மிகப்பெரிய ஊடகம் எந்த முன்னேற்பாடும் இல்லாமலா நேரலைக்குத் தயாராகும்? நான்கு பேர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதிதாகச் சேர்ந்து வலுவான ஊடகத்தை உருவாக்கிவிட முடியுமா? உண்மைகள் பல இருந்தாலும், ஊடகங்கள் போலியாக இருக்கின்றன என சொல்லவந்த இயக்குநர், அதற்கு இரண்டு மடங்கு போலிகளைச் சேர்த்து படம் எடுப்பதா?
ஹிப்ஹாப் ஆதியின் இசையில் `ஆக்ஸிஜன் தந்தாயே' பாடல் ரசிக்க வைக்கிறது. அபிநந்தன் ராமானுஜத்தின் நேர்த்தியான ஒளிப்பதிவும், அழகியல் சொட்டும் கிரணின் கலையுமே படத்தின் மிகப்பெரிய பலங்கள்.
சொல்லவந்த விஷயத்தை இன்னும் முழுமையாக, யதார்த்தங்கள் சேர்த்துச் சொல்லியிருந்தால் `கவண்' குறி தப்பியிருக்காது!
- விகடன் விமர்சனக் குழு