வயதான பிறகும் வாழ்க்கை இருக்கிறது என உணர்ந்து, தனக்கான வாழ்க்கையைத் தேடிச் செல்லும் பவர்ஃபுல் பாண்டி இந்த `ப.பாண்டி'.
ஓய்வுபெற்ற சினிமா ஸ்டன்ட் மாஸ்டர் ராஜ்கிரண். ஒரே மகன் பிரசன்னாவின் வீட்டில் வாழ்கிறார். ராஜ்கிரணின் சின்னச் சின்ன நடவடிக்கைகள், பிரசன்னாவுக்குத் தலைவலியாக முடிகின்றன. இதனால் வீட்டைவிட்டு வெளியேறுகிறார் ராஜ்கிரண். வெளியே போனவர் என்ன செய்தார் என்பது, சுவாரஸ்யமும் உணர்வுகளின் கலவையும் கலந்த நெகிழ்ச்சிக் கதை.

அதிகம் பேசப்படாத, ஆனால் பேசவேண்டிய முதியவர்களின் கதையை முதல் படத்திலேயே எடுத்த இயக்குநர் தனுஷின் முயற்சி முக்கியமானது. அதை கமர்ஷியலுக்கும் கலைப்படைப்புக்கும் இடைப்பட்ட கோட்டில் சொன்னது ஆச்சர்யம். ராஜ்கிரண், வயசுக்கு என்ன செய்வாரோ அதையே கதைக்கேற்ற ஹீரோயிசமாக மாற்றிய புத்திசாலித்தனத்தில் அறிமுக இயக்குநர் தனுஷ் கவனம் ஈர்க்கிறார்.
மொத்தப் படத்தையும் தலைக்கு மேலே தாங்கிப்பிடிக்கிறார் ராஜ்கிரண். பேரக் குழந்தைகளுடன் கொஞ்சுவது, பக்கத்து வீட்டுப் பையனிடம் ஜாலி அரட்டை, ஜிம் மாஸ்டராக எல்லோரையும் டரியலாக்குவது, ``என்னை எல்லாரும் லெஜண்டா நினைக்கிறாங்கப்பா'' என மகனிடம் நெகிழ்வது... என்று ராஜ்கிரணைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
மகனாக, ஐடி நிறுவன அதிகாரியாக, நகரத்துக் குடும்பஸ்தனாக மிகை இல்லாத நடிப்பில் ஸ்கோர் செய்கிறார் பிரசன்னா. மடோனா, சாயாசிங், டிடி, அந்த அழகான பேரப் பிள்ளைகள் எனக் கச்சித கேஸ்ட்டிங். இதில் டிஸ்டிங்ஷன் வாங்குகிறார் ரேவதி. அத்தனை வருடக் காதலைச் சுமந்து திரிபவரின் எல்லா ரியாக்ஷன்களும் கொள்ளை அழகு. மகளே காதலுக்கு ஓகே சொன்னதும் போடும் மெல்லிய ஆட்டம்… `மௌனராகம்' மெமரீஸ்!
“வயசானா என்னம்மா… துணை துணைதான்”, ``அவங்களுக்கு நாம தேவையா, அவங்க நமக்குத் தேவையா?'' என வசனங்களின் சுவாரஸ்யம் கதைக்குத் துணை நிற்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாடல்களிலும் பின்னணியிலும் முத்திரை பதித்திருக்கிறார் ஷான் ரோல்டன்.
`ஏ சூரக்காத்துல...' துள்ளலுடன் அள்ளுகிறது. வேல்ராஜின் ஒளிப்பதிவு பக்கா.
ரியலிஸ்ட்டிக் சினிமாவில் செயற்கைத் தனமான பல காட்சிகளும் கலந்திருப்பதுதான் படத்தின் மைனஸ். அந்த ஃப்ளாஷ்பேக் காட்சிகளை நாம் எத்தனை தமிழ் சினிமாக்களில் பார்த்துச் சலித்திருப்போம். மகனைப் பார்க்க அலுவலகம் வரும் அப்பாவை `ஐடி கார்டு இருந்தால்தான் உள்ளே விடுவோம்' என மறுப்பது, அவர் `பாண்டி... பவர் பாண்டி' எனச் சொன்னதும் உள்ளேவிடுவது எல்லாம் `பாட்ஷா' காலத்துப் பழசு!
சின்னச் சின்ன குறைகளை விட்டுவிட்டால், `ப.பாண்டி' பக்கா பாண்டி.
- விகடன் விமர்சனக் குழு