
சிவலிங்கா - சினிமா விமர்சனம்
மனைவியின் உடலுக்குள் புகுந்து மிரட்டும் ஆவியை விரட்டும் ராகவா லாரன்ஸின் இன்ன்ன்னொரு பேய்ப் படம்.
ரயில் பயணத்தில் மர்மமான முறையில் இறந்துபோகிறார் சக்தி வாசுதேவன். அவருடைய கொலையைத் துப்பறிய வருகிறார் புது மாப்பிள்ளை ராகவா லாரன்ஸ். இவரின் மனைவி ரித்திகா சிங்கின் உடலில் புகுந்துகொள்ளும் சக்தியின் ஆவி, `உண்மையான கொலைகாரனைக் கண்டு பிடித்தால்தான் போவேன்' என அடம்பிடிக்கிறது. கேஸை முடிக்க ராகவாவுக்கு ஒரு புறா உதவிக்கு வர, ஆவியின் ஆசையைத் தீர்த்து கொலை காரனைக் கண்டுபிடித்து மனைவியைக் காப்பாற்றுவதே `சிவலிங்கா'.

சென்ற படத்தில் `மக்கள் சூப்பர் ஸ்டாராக' இருந்த லாரன்ஸ், இந்தப் படத்தில் சற்றே முன்னேறி `சின்ன கபாலி'யாக மாறியுள்ளார். பேய்க்கு அஞ்சுவது, மனைவியைக் கொஞ்சுவது, கால்களை வளைத்து வளைத்து ஆடுவது, நூற்றுக்கணக்கான வில்லன்களை இடது கையாலேயே விரட்டுவது... என லாரன்ஸுக்குப் பழக்கப்பட்ட கிரவுண்டில் அதே ஷார்ட் பிட்ச் பந்துகள்தான் என்பதால், எல்லா திசையிலும் திருப்பி அடிக்கிறார். ஆனால், இது மட்டுமே போதுமா?

அபாரமாக நடிக்கும் ரித்திகா சிங்குக்கு ஒருசில காட்சிகள் தவிர்த்து, சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்பு இல்லை. பேயாக பீடியெல்லாம் பிடித்துக் கொஞ்ச நேரம் மூர்க்கம் காட்டினாலும், ஜோதிகா ரெஃபரென்ஸில்தான் அவருடைய காட்சிகள் நகர்கின்றன. பேயாகவும் பாயாகவும் நடித்திருக்கும் சக்தி வாசுதேவனின் உடல்வாகுக்கும் நடிப்புக்கும் ஏற்ற கதாபாத்திரம். நிறைவாகச் செய்திருக்கிறார். படத்தைத் தன்னுடைய அக்மார்க் காமெடிகளால் காப்பாற்றுவது வடிவேல்தான். டைனிங் டேபிளில் பேயோடு பிரியாணி சாப்பிடும் ஒரே ஒரு சீன் போதும் மொத்த படத்துக்கும். வைகைப்புயல், பழைய ஃபார்முக்கு வந்துவிட்டார்.
ஏற்கெனவே பார்த்துச் சிரித்த அதே `காஞ்சனா' ஃபார்முலா, தேவையில்லாத ஹீரோயிசம். திடீர் திடீர் எனத் தொடங்கும் பாடல்கள், விடாமல் விரட்டும் லாஜிக் தவறுகள் எனப் பொறுமையைச் சோதிக்கிறது திரைக்கதை. இவை எல்லாம் சரி செய்திருந்தால், இன்னொரு `சந்திரமுகி'யாக வந்திருக்குமே பி.வாசு!
ஹாரர் படங்களுக்கே உரிய பின்னணி இசையிலும் `ரங்குரக்கர...'வில் மட்டும் இசையமைப்பாளர் தமன் எட்டிப்பார்க்கிறார். பேயோடு பாயும் சர்வேஸ் முரளியின் ஒளிப்பதிவு பல இடங்களில் திகிலூட்டுகிறது.
ஹீரோயிசத்தைக் குறைத்து, பிசாசிசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால், `சிவலிங்கா' பயமுறுத்தியிருக்கும்.
- விகடன் விமர்சனக் குழு