Published:Updated:

"மக்கள் சரியாக இருந்தால், தலைவர்கள் சரியாக இருப்பார்கள்!”

"மக்கள் சரியாக இருந்தால், தலைவர்கள் சரியாக இருப்பார்கள்!”
பிரீமியம் ஸ்டோரி
"மக்கள் சரியாக இருந்தால், தலைவர்கள் சரியாக இருப்பார்கள்!”

ம.கா.செந்தில்குமார், படங்கள்: கே.ராஜசேகரன்

"மக்கள் சரியாக இருந்தால், தலைவர்கள் சரியாக இருப்பார்கள்!”

ம.கா.செந்தில்குமார், படங்கள்: கே.ராஜசேகரன்

Published:Updated:
"மக்கள் சரியாக இருந்தால், தலைவர்கள் சரியாக இருப்பார்கள்!”
பிரீமியம் ஸ்டோரி
"மக்கள் சரியாக இருந்தால், தலைவர்கள் சரியாக இருப்பார்கள்!”

“`முன்னாபாய்’ என்ற இந்திப் படம் பார்த்திருப்பீர்கள். அதுவும் அதன் ரீமேக்கான ‘வசூல்ராஜா’வும் வெவ்வேறு படங்கள். இதுவும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்பது என் ஆசை.  ரீமேக்  செய்வது என்பது எனக்கு ராமாயணம் எழுதுவது மாதிரி. ராமாயணத்தை எழுதினால்கூட அதில் கம்பனாக இருக்க வேண்டும் என்பதுதான் ஆசை’’  - ``சல்மான்கான் தொகுத்து வழங்கிய `பிக் பாஸ்' ரியாலிட்டி ஷோவில் இருந்து தமிழில் கமலின் `பிக் பாஸ்' எப்படி வேறுபட்டிருக்கும்?” என்ற கேள்விக்கான உலக நாயகனின் பதில் இது.

"மக்கள் சரியாக இருந்தால், தலைவர்கள் சரியாக இருப்பார்கள்!”

ஜூன் 18-ம் தேதி முதல் விஜய் டிவி-யில் `பிக் பாஸ்' நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியே பிரமாண்டம் என்றால், அதைத் தொகுத்து வழங்குவது கமல்ஹாசன் என்பது இன்னும் பிரமாண்டம். 

‘‘விஜய் டிவி-யில் ‘கமல்-50’ நிகழ்ச்சியில் நான் கெஸ்ட்டா, ஹோஸ்ட்டா எனப் பிரித்துப்பார்க்க முடியாத ஒரு வேஷம். ஆனால், இந்த ‘பிக் பாஸ்' புத்தம் புதுசு எனச் சொல்லக் காரணம்,  நானே இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது. விஜய் டிவி-யில் வெவ்வேறு நிகழ்ச்சிகளுக்காக என்னிடம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தனர். ‘இப்பவாவது ஆரம்பிக்கலைனா, அப்புறம் எப்போ ஆரம்பிக்கிறது?’ என்பதுதான் இதை நான் செய்யக் காரணம். தொலைக்காட்சி, நீண்ட நாள்களாக நாம் பார்த்துப் பழகிய துறை. அதற்கு சரியான தருணம் இன்னும் வரவில்லை என்பதுதான் என் எண்ணம். ஆனால், இன்னமும் நல்ல தருணங்கள் வரும். இதைவிட சிறந்த மொமன்ட்ஸ் டி.வி-யில் இருப்பதாக நான் நம்புகிறேன்.’’

‘‘சினிமா, டி.வி இரண்டும் எதிர்காலத்தில் நிச்சயம் ஒரே தளத்தில் இயங்கும். அப்போது அந்த இயக்கம் எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்?”

‘‘நான் புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்து ‘இதுதான்  பல்ப்’ என  அறிமுகப்படுத்தும் எடிசன் அல்ல. ‘எய்ட்ஸ்’   இங்கு வந்தால்தான்,  ஒப்புக்கொள்வீர்களா? ‘அங்கே இருக்கு’ எனச் சொல்லும்போதே, ஒப்புக்கொள்ள வேண்டாமா? அது இங்கு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டாமா? அதுபோல ‘டிவி-யில் இப்படியான வர்த்தகங்கள் உள்ளன’ என்பதைப் பிற நாடுகளைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டாமா? இதன் முக்கியத்துவத்தை இவர்கள் புரிவதற்காக ஒரே ஒரு விஷயம் சொன்னேன். டி.டீ.ஹெச் பற்றி அன்று சொன்னதைச் சொல்கிறேன். கடுமையாகக் கோபப்பட்டார்கள். ஆனால், இன்று அதுதான் நெட்ஃபிளிக்ஸாக வந்துவிட்டது. அதையெல்லாம் தடுக்கவே முடியாது.”

``தொழில்நுட்பமாக இருக்கலாம், சினிமா முயற்சிகளாக இருக்கலாம்... இப்போது பேசப்படுபவை, இன்றைய படங்களை, பத்து ஆண்டுகளுக்கு முன்னரே செய்துவிட்டோம் என எண்ணியது உண்டா?”

“வர்த்தகம் என்பது சின்ன சுனாமி போன்றது. ‘சுனாமி வரும்’ என முதலில் சொன்னதால், அதைக் கொண்டுவந்தது நான் என ஆகிவிடாது. ஹேஸ்யம் பேசலாம், ஒரு சேதி சுவிசேஷம் சொல்லலாம். ஆனால், அதற்கு நான்தான் காரணம் எனச் சொல்லிக்கொள்ள முடியாது. எனக்குப் பிடித்த விஷயங்களை உடனுக்குடன் சொல்கிறேன், செய்கிறேன். அவ்வளவுதான். எங்கள் அம்மா எனக்குச் சமைத்துப்போடும்போது, அவருக்கு என்ன தோன்றுகிறதோ... அதை எனக்குச் சமைத்துப்போடுவார். சமயங்களில் நானே கேட்பது உண்டு. ஆனால், நான் கேட்காத அன்றும் ‘இவனுக்கு இது பிடிக்கும்’ என்று என் சுவைக்கு ஏற்ப சமைத்துப்போடுவார். அது ரொம்ப ஜோராக இருக்கும். ஏனெனில், அது அவர்களே உணர்ந்து செய்தது. அதைத்தான் நான் செய்ய முயல்கிறேன். ஒரு ரசிகனாக எனக்குப் பிடித்தது, ‘என்னய்யா இப்படியெல்லாம் சினிமா எடுக்குறாங்க. இப்படில்ல எடுக்கணும்’ என எனக்குத் தோன்றிய சினிமாவைத்தான் நான் எடுக்க முயல்கிறேன். ஆனால், அவை வென்றனவா... இல்லையா என்பது வேறு விஷயம்.”

‘‘அப்படி வந்த முக்கியமான சினிமா என ‘ஹேராம்’ படத்தைச் சொல்லலாமா? ஏனெனில், அது இப்போது வந்திருக்க வேண்டிய படம் எனத் தோன்றுகிறது?”

“அவ்வளவு  முன்னோடியாக எந்த மனிதனாலும் இருக்க முடியாது. அது அப்போது வரணும். வந்திருக்கிறது. அப்படியென்றால், ‘பாகுபலி’ 30 வருடங்களுக்கு முன் வரவேண்டிய சினிமா எனச் சொல்லலாமா? அதில் வந்த எல்லா கதைகளையும் ‘அம்புலிமாமா’வில் பார்த்திருக்கிறோம்; மகாபாரதத்தில் பார்த்திருக்கிறோம். இப்படி எல்லாவற்றிலிருந்தும்தான் எடுத்திருக்கிறார்கள். அப்படியென்றால், அது 100 வருடங்களுக்கு முன்பு வரவேண்டிய சினிமா எனச் சொல்வீர்களா? சொல்ல முடியாது. என்னை `அட்வான்ஸ்டு' எனச் சொல்லும் நீங்கள், ‘அந்த நாள்’ படத்தை என்ன சொல்வீர்கள்? 50 வருடங்கள் கழித்து வரவேண்டிய படம் என்பீர்களா? இன்றைய சினிமா இல்லையா அது?  அப்படிச் சிலர் செய்வார்கள். ஆனால், அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால், சிலரை நம் மக்கள் ஒரே தூக்காகத் தூக்கிவிடுவார்கள். ‘16 வயதினிலே’ படத்தை அப்படித் தூக்குத் தூக்கு எனத் தூக்கியதை நான் எதிர்பார்க்கவே இல்லை. ‘வித்தியாசமாப் பண்ணணும்’ என நினைத்துப் பண்ணினோம். ஆனால், தூக்கி மேலே வைத்துவிட்டார்கள். அதனால், பாரதிராஜாவுக்கு மட்டும் அல்ல... எத்தனையோ பேருக்கு வாழ்க்கையே மாறியது!”

"மக்கள் சரியாக இருந்தால், தலைவர்கள் சரியாக இருப்பார்கள்!”

‘‘இவ்வளவு பேருடைய வாழ்க்கையை மாற்றிய சினிமாவை, யாருமே மாற்ற முன்வரவில்லையே. முறையான திட்டமிடல் இன்றி, முறைப்படுத்தப்படாத  தொழிலாகத்தானே சினிமா இருக்கிறது?”

‘‘அதை நீங்கள் மெதுவாக, பதற்றப்பட்டுச் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. இது விமர்சனம்கூட அல்ல. அது எங்களின் ஓலக்குரல். அது மாறித்தான் ஆகவேண்டும். அதற்கான முயற்சிகளை இளைஞர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். திட்டம் போட்டே ஆக வேண்டும். நம் நகர அமைப்பு திட்டமில்லாமல் இருந்ததால்தான், வெள்ளத்தின்போது பெரும்பாடு பட்டோம். திட்டமே இல்லாமல் மனை கிடைத்துவிட்டது என ஆள் ஆளுக்கு வீடு கட்டிக்கொண்டோம் என்றால், இன்ஜினீயரிங் பற்றிய ஐடியாவே இல்லாமல், அடித்தளம் எப்படி இருக்க வேண்டும் என்ற யோசனையே இல்லாமல் செய்ததால் வரக்கூடிய பல விஷயங்களை நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். அதுதானே ஒரு இண்டஸ்ட்ரிக்கும் நடக்கும்.

முக்கியமாக ஒரு விஷயம். சினிமா தவிர  பத்திரிகை, ஆட்டோமொபைல் உள்பட எல்லா இண்டஸ்ட்ரிகளிலும் தேவையான கல்வியைக் கற்றுக்கொடுக்கும் அமைப்பை உருவாக்கிவைத்துள்ளனர். உதாரணம், டாடா ஒருபக்கம் இரும்பு ஆலைகள் நடத்திக்கொண்டு இருந்தாலும், இன்னொரு பக்கம் அதில் வேலைசெய்வதற்கான ஆட்களைத் தயார்செய்யும் தொழில்கல்வி நிறுவனங்களையும் தொடங்கியுள்ளார்கள். ஆனால், இதைச் செய்யாத ஒரே இண்டஸ்ட்ரி, சினிமா மட்டும்தான். அதை இப்போதுதான் சிலர் ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆனால், இங்கு உள்ள தியேட்டர்களின் எண்ணிக்கையையும் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்களின் எண்ணிக்கைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், சினிமாவின் அவலம் உங்களுக்கே புரியும். ஆயிரம் படங்கள் தயாரிக்கப்பட்டால், அதற்கு எத்தனை தொழில்நுட்பக் கலைஞர்கள் தேவை? அவர்களைத் திறமையாளர்களாக மாற்றுவதற்கு என்ன மாதிரியான பயிற்சிகள் இங்கே கொடுக்கப்படுகின்றன? கட்டைவிரலை வாங்கிக்கொண்டு கற்றுக்கொடுக்கும் துரோணாச்சாரியார் வேலைகள்தான் இன்னமும் இங்கே நடந்துகொண்டிருக்கின்றன. முறையான தொழிற்கல்வி கொடுத்தே ஆகவேண்டும். சமணர்கள் இனிமேல் வந்து செய்வார்கள் எனக் காத்துக்கொண்டிருக்க முடியாது. நாமே செய்தாக வேண்டும்.’’

‘‘ ஆனால், இது அரசோடு சேர்ந்து பெரிதாகச் செய்யவேண்டிய வேலை என நினைக்கிறீர்களா?”

“இப்போது நடந்துகொண்டிருப்பவை தவறு என நான் சொல்லவில்லை. 400 கல்விக்கூடங்கள் இருக்கவேண்டிய இடங்களில் வெறும் நான்கு கல்விக்கூடங்கள் இருப்பது போதாது என்றுதான் சொல்கிறேன். அரசோடு சேர்ந்து செய்யவேண்டுமா எனக் கேட்டீர்கள். ஆமாம், அவர்கள் பெரிதாகச் செய்துவிடுவார்கள். ஓர் ஆற்றைச் சாக்கடையாக்க வேண்டும் என்றால், அரசியலிடம் விட்டால், அதை எளிதாக நடத்திவிடுவார்கள். அதற்கு அடையாறே ஓர் உதாரணம். என் வயதில் அங்கு மீன் பிடிப்பதை நான் பார்த்திருக்கிறேன். படகில் போவதையும், அதை இறங்கி தள்ளிச்செல்வதையும் பார்த்திருக்கிறேன். ஆனால், இன்று மூளை உள்ளவன் எவனாவது அந்தத் தண்ணீரில் இறங்குவானா? மூளை உள்ள நாம், நம் நகருக்கு நடுவே ரத்தநாளம் போல் ஓடும் ஆற்றைச் சாக்கடையாக்கிவிட்டு நாற்பது ஆண்டுகளாக அமைதியாக அமர்ந்துள்ளோம். எவருமே கேட்கவில்லையே? திடீரெனத் தோன்றும்போது, ஒரு ஜல்லிக்கட்டு விளையாடிவிடுகிறோம். வருடாவருடம் செய்யவேண்டிய வேலை அல்லவா அது? சமூக உணர்வு நமக்குக் கிடையாது. கிரிக்கெட் போட்டி மாதிரி, தோன்றும்போது எப்போதாவது செய்வோம்.”

‘‘இளைஞர்களுடன் பேசும்போது அவர்களிடம் உங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வீர்களா?”

‘‘நான் அவர்களிடம் சொல்வதை உங்களிடமும் சொல்கிறேன். இதில் ஒன்றும் ரகசியம் கிடையாது. ரகசியமாகத் திட்டம்போட, இது ஒண்ணும் அரசியல் கிடையாது. இது இண்டஸ்ட்ரி சார்ந்த விஷயம்.  என் முதல் கேள்வி, அரசாங்கம் எதற்கு இந்த மிருகத்தை மட்டும் சங்கிலி போட்டுப் பிடித்திருக்கிறது? இதிலிருந்து முதலமைச்சர்கள் வந்துவிடுவார்கள் என்பதாலா? இதைவிட மூடத்தனமான நம்பிக்கை வேறு என்ன இருக்க முடியும்? தலைவனை, எப்போதும் ஒரே துறையிலிருந்தா தேர்ந்தெடுப்பது? சினிமாக்காரர்கள் எல்லாம் முதலமைச்சர் பதவிக்குத் தகுதியானவர்கள் என எப்படி நம்பலாம்?”

‘‘நீங்கள் சென்சார் போர்டைச் சொல்கிறீர்களா?”

‘‘இது இண்டஸ்ட்ரி. ‘இதை ஒரு இண்டஸ்ட்ரி மாதிரி நடத்துங்கள்’ எனச் சொல்கிறேன். அரசியலோடு போய் ஒட்டிக்கொண்டு அப்பா-அம்மா விளையாட்டு விளையாடக் கூடாது. இது முறையான தொழில். இதை மிகச்சரியாகச் செய்தால் வியாபாரம் நடக்கும். அதற்கான முன்னுதாரணங்களைப் பக்கத்து மாநிலங்கள் காட்டுகின்றன. அது ஏன் இங்கே நடக்காது என நினைக்கிறீர்கள்? ஒரு தெலுங்குப் படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்ய முடியும் என்றால், ஒரு தமிழ்ப்படம் ஏன் பண்ண முடியாது? அவ்வளவு தூரம் ஏன் போவானேன், ஆங்கிலமும் நம் மொழிதான். ஓர் ஆங்கிலப் படத்தை ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்க முடியும் என்றால், 100 கோடி பேர் உள்ள இந்த நாட்டில் ஆயிரம் கோடி வசூல் செய்ய எவ்வளவு நேரம் ஆகும். ஒருவருக்கு 10 ரூபாய்தானே? 120 ரூபாய் டிக்கெட் போட்டும் நாம் ஏன் அதைச் செய்ய முடியவில்லை? 120 ரூபாய் டிக்கெட்டில் 30 கோடி பேர் படம் பார்த்தால் என்ன கணக்கு? அவ்வளவு வேண்டாம், எட்டு கோடித் தமிழர்களில் நான்கு கோடி பேர் 120 ரூபாய் டிக்கெட்டில் படம் பார்த்தால் என்ன கணக்கு? அப்படி இருக்கையில் ஆயிரம் கோடியைப் பார்த்து ஏன் வியக்கிறீர்கள்? `தமிழ்நாட்டில் ஏழு கோடியில் 14 சதவிகிதத்தினர் படம் பார்க்கின்றனர்' என்கிறது புள்ளிவிவரம். என்ன குப்பைப்படம் எடுத்தாலும் இந்த 14 சதவிகிதத்தினர் பார்த்துக்கொண்டே இருப்பவர்கள். இது உலகத்தில் வேறு எங்கும் இல்லாத மேஜிக்கல் நம்பர். அப்படி இருக்கும்போது, அதை ஏன் நம்மால் செய்ய முடியவில்லை?”

“இதற்கு அரசாங்கத்தை மட்டுமே குறை சொல்வது எந்த வகையில் நியாயமாக இருக்கும்?’’

‘‘நான் அப்படிச் சொல்லவில்லை. நாம் போய் கேட்கவில்லை.  சினிமா  என்பது  மக்களுக்கு அத்தியாவசியமான கல்வி போன்ற ஒன்றா? இல்லையே. அப்படியென்றால் ‘இதன் விலை இதுதான்’ என நிர்ணயம் பண்ணவேண்டிய கடமை அரசுக்குக் கிடையாது எனச் சொல்கிறேன். பென்ஸ் கார், ஹூண்டாய் காரின் விலையை நிர்ணயம் செய்யவேண்டிய கடமை அரசுக்கு எப்படி இல்லையோ, அதேபோல் சினிமா டிக்கெட் விலையை நிர்ணயிக்க வேண்டிய அவசியமும் அரசுக்கு இல்லை. ‘டிக்கெட் வாங்கினா வாங்கட்டும், வாங்கலைன்னா நீங்க தோத்துப் போங்க’னு எங்களை விட்டு விடுவதுதானே!’’

"மக்கள் சரியாக இருந்தால், தலைவர்கள் சரியாக இருப்பார்கள்!”

“‘ தமிழகத்துக்கு மறுதேர்தல் நடத்தியே ஆகவேண்டும்’ என்கிறீர்கள். அதில் இப்போதும் உறுதியாக இருக்கிறீர்களா?”

‘‘நான் உறுதியாக இருப்பதால் என்ன ஆகிவிடப் போகிறது? ‘கூவத்தைச் சுத்தம் பண்ணணும்’ என்பதில்கூடத்தான் 45 வருஷங்களாக உறுதியாக இருக்கிறேன். அதில் நான் என்ன செய்ய வேண்டும் எனச் சொல்லுங்கள், செய்கிறேன். ஆனால், அதையும் செய்ய விட மாட்டார்கள்; அவர்களும் செய்ய மாட்டார்கள். நான் எந்த ஓர் அரசையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. காங்கிரஸையும் சேர்த்தேதான் சொல்கிறேன். ஏன் அப்போது ஓடவில்லையா கூவம்?  கூவம் அப்போது  குளிக்கப் பயன்படுத்தும் வகையில் இருந்ததா? அப்பவே கெட ஆரம்பித்துவிட்டதே!''

“ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தது  தொடங்கி முதலமைமைச்சர் உள்பட அனைத்து அமைச்சர்கள் மீதும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள். என்ன செய்வதென்று புரியாமல் மக்கள் தயங்கித் தேங்கி நிற்கிறார்கள். இந்தச் சூழலில் என்ன செய்யலாம்?”

“ஊழல், மக்களிடமிருந்து ஆரம்பிப்பதால்தான் அவர்கள் தயங்கி நிற்கிறார்கள். வெட்கமாக இல்லை உங்களுக்கு? ஏதோ ஒரு பெயரைச் சொல்லி, ஓர் அரசியல்வாதியைச் சுட்டிக்காட்டி ‘இவர்தான் காரணம், அவர்தான் காரணம்’ எனச் சொல்வது ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நான் என்ன செய்தேன்? என்னளவில் நான் சரியாக இருந்தால் போதுமா? ஓட்டுப் போட நான் காசு வாங்கவில்லை. அதனால் ஊர் திருந்திவிடுமா? ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில்  இருந்தவர்களில் எத்தனை பேர் ஓட்டுப் போடும்போது காசு வாங்காதவர்கள்? ஓட்டுப் போட காசு வாங்குபவர்களுக்கு இப்படித்தான் தலைவன் வருவான். இவர்கள், அழுது ஓலமிடுவதற்கான அருகதையை இழந்தவர்கள்.  ‘என்னாங்க பண்றது. குடுக்குறாங்க. இல்லைன்னா எங்கே இருந்து எங்களுக்குக் காசு வரும்?’ என்று கேட்கிறார்கள்.  `வேலை செய்தால் வரும்' என்பேன். கிடைக்கக்கூடிய வேலை வாய்ப்புகளை உதறித்தள்ளும் ஓர் இளைய சமுதாயம் வளர்ந்துகொண்டிருக்கிறதோ என எனக்குப் பயமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் இணையத்தில் இத்தனை பேர் பரபரப்பாக இருக்கிறார்கள் என்றால், வேறு வேலை செய்யாமல் இதையே செய்துகொண்டிருக் கிறார்களோ என்ற அச்சமும் எனக்கு உண்டு. நான் தவறாகச் சொல்லவில்லை. இதையும் செய்யுங்கள், வேலையும் செய்யுங்கள் என்கிறேன். மக்கள் சரியாக இருந்தால், தலைவர்கள் சரியாக இருப்பார்கள். ஊழல் என்பது என்னிடமிருந்து ஆரம்பிக்கிறது என்பதை நான் முடிவுபண்ணி விட்டேன் என்றால், இனிமேலாவது தினமும் குளிப்பேன் அல்லவா? அது எப்படி சிங்கப்பூர் போன்ற  தீவுகளில் முடிகிறது; இதே தமிழன்தானே அங்கேயும் இருக்கிறான். ‘அங்கே லீக்வான்யூ இருந்தார்’ எனச் சொன்னால், உலகின் பல்வேறு நாடுகளை உதாரணமாகக் காட்டுவேன். அவ்வளவு தூரம் ஏன் போவானேன்... பக்கத்தில் கேரளா இதைவிடச் சிறப்பாக இருக்கிறதே, அது எப்படி?”

“அகண்ட பாரதம், இந்து தேசம், இந்தி... இதுபோன்ற மத்திய அரசின் நடவடிக்கைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“அதில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது என்பதை, நான் சிறுவனாக இந்தி மீது தார் அடிக்கும்போதே சொல்லிவிட்டேன். ஆனால், அப்போது எனக்குத் தெரியாது நான் `ஏக் துஜே கேலியே'வில் நடிக்கப்போகிறேன் என்று. அப்போதும் நான் பாடிக்கொண்டிருந்த என் தேசிய கீதம் பெங்காலியில்தான் இருந்தது. அதை நான் மறுக்கவில்லை. இந்தி மேல் எனக்கு வெறுப்பு  இல்லை. ஆனால்,  திணிக்காதீர்கள்.  அதை ஏற்க மாட்டார்கள். ஏனெனில், என் மொழியும் பழைமையான மொழி. ‘பரவாயில்லை நாங்க தியாகம் பண்றோம்’ என்று ஒரு மலையாளி சொல்லிவிட்டார் என்றால், நான் விட்டுக் கொடுப்பேன். எங்கேயாவது ஒரு மலையாளி, ‘எங்களுக்கு மலையாளம் வேண்டாம், இந்தி போதும்’ என்று சொல்லட்டும். அவ்வளவு ஏன் மலையாளத்தை நானே விட்டுக்கொடுக்க மாட்டேன். எவ்வளவு அழகான மொழி. அந்த வேற்றுமையில் ஒற்றுமைதானே நம் அழகு. அதை நாம் இழக்கவே கூடாது.”