Published:Updated:

லென்ஸ் - சினிமா விமர்சனம்

லென்ஸ் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
லென்ஸ் - சினிமா விமர்சனம்

லென்ஸ் - சினிமா விமர்சனம்

லென்ஸ் - சினிமா விமர்சனம்

லென்ஸ் - சினிமா விமர்சனம்

Published:Updated:
லென்ஸ் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
லென்ஸ் - சினிமா விமர்சனம்

னி மனிதனின் வக்கிரம் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி எப்படிப் பலரின் வாழ்க்கையைக் கலைத்துப்போடுகிறது என்பதைப் பேசும் சினிமா ‘லென்ஸ்’.

மனைவி ஓர் அறையில் காத்திருக்க, இன்னோர் அறையில் `அலுவலக வேலை’ எனப் பொய் சொல்லிவிட்டு, தனது ஆன்லைன் தோழியுடன் ஒருவன் சாட் செய்துகொண்டிருக்கிறான். இருவரும் ஆடைகளைக் களைகிறார்கள். நாம் சரியான படத்துக்குத்தான் வந்திருக்கிறோமோ என்ற முணுமுணுப்பு அரங்கம் முழுவதும் எழுகிறது. ஆனால், இதைவிட மோசமான இரண்டு பேரின் அந்தரங்கக் காட்சிகள் நமது மொபைலில் இருந்தால், எந்தக் கூச்சமும் இல்லாமல் பார்ப்போம். அது எவ்வளவு பெரிய நேர்மையற்ற செயல் என்பதைப் பொட்டில் அறைவதுபோல் அழுத்தமாகச் சொல்கிறது `லென்ஸ்’.

லென்ஸ் - சினிமா விமர்சனம்

இணையத்தில் பெண்களுடன் நட்பாகி, அவர்களுடன் வீடியோ சாட் செய்வதுதான் அரவிந்தின் (ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்) பொழுதுபோக்கு. அப்படி ஒருநாள் `நிக்கி’ என்ற ஐ.டி., வீடியோ சாட்டுக்கு அழைக்கிறது. ஆனால், எதிர்முனையில் வருவது ஆண் (ஆனந்த் சாமி) எனத் தெரிந்து துண்டித்துவிடுகிறான் அரவிந்த். வேறொரு பெண்ணுடன் அரவிந்த் செய்த சாட்டின் க்ளிப் ஒன்று அவன் மொபைலுக்கு வருகிறது. பயந்துபோய், மீண்டும் வீடியோ காலுக்குச் சென்றால், அந்த `நிக்கி’ ஜெயபிரகாஷை மிரட்ட ஆரம்பிக்கிறான். நிக்கி யார், ஏன் ஜெயபிரகாஷை மிரட்டுகிறான், ஜெயபிரகாஷ் இன்னொரு பெண்ணுடன் செய்த சாட் வீடியோ நிக்கிக்கு எப்படிக் கிடைத்தது என்பதே படம். ஒவ்வொரு காரணம் தெரியும்போதும் நமக்குத் தூக்கிவாரிப் போடுகிறது.

முதல் படத்திலேயே சமகால வாழ்வின் ஆகப்பெரிய சாத்தானை அடையாளம்காட்ட முயன்றிருக்கும் இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனை, மனம் திறந்து பாராட்டலாம். ஏஞ்சல் கதாபாத்திரப் படைப்பு ஒன்று போதும். தன்னை யாரோ படம்பிடிக்கிறார் என்ற பயத்தில் கால்கூடத் தெரியாமல் சாக்ஸ் அணிந்து குமுறும்போதும், உடை களையாமலே ஷவரில் குளிக்கும்போதும்  நம் மனசாட்சி முன் விஸ்வரூபமெடுத்து நிற்கின்றன நெருப்புக் கேள்விகள். பேசும் திறனற்ற ஏஞ்சல், கடைசி நேரத்தில் எழுதிக்காட்டும் ஒவ்வொரு பேப்பரும் இந்தச் சமூகம் முகம் பார்த்துக்கொள்ளும் கண்ணாடி.

ஃப்ரேமுக்கு ஃப்ரேம் நம் நிஜ வாழ்க்கையில் யாரோ ஒருவரை அல்லது ஏதோ ஒரு சம்பவத்தை நினைவுப்படுத்தும் யதார்த்த கதைக்களம்தான் `லென்ஸி’ன் ஆகப்பெரிய பலம். இதுதான் விஷயம் எனத் தெரிந்த பிறகும், சுவாரஸ்யம் குறையாமல் போகும் திரைக்கதை நேர்த்தி. ``எங்க பெர்சனலை ரிக்கார்ட் பண்ணி பிளாக்மெயில் பண்றியே...” எனக் கொதிக்கும் ஜெயபிரகாஷின் வார்த்தைகள், பின்னர் அவருக்கே பூமராங் ஆக வரும் திரைக்கதை உத்தி… புத்திசாலித்தனம்.

லென்ஸ் - சினிமா விமர்சனம்

``உயிரோடு இருந்தப்ப அவ பேசலை. ஆனா, இப்ப அவ அலர்ற சத்தம் என் காதுல கேட்குது” போல பல வசனங்கள் தோட்டாக்களாகத் தெறிக்கின்றன.  ``பக்கத்துல யாராவது இருக்காங்களா? மத்தவங்க முன்னாடிதான் மனுஷன் அதிகமா நடிப்பான்” - முதல் பத்தியில் அரங்கில் எழுந்த முணுமுணுப்புக்குக்கூட வசனங்களில் பதில் வைத்திருக்கிறார் இயக்குநர்.

பெரும்பாலும் ஒரே அறைக்குள் இரண்டு பேரின் வீடியோ சாட்தான். அதை அத்தனை கோணங்களில் சலிப்புத்தட்டாமல் படம்பிடித்திருக்கும் எஸ்.ஆர். கதிரின் கேமராவுக்கு ஆயிரம் லைக்ஸ். உறுத்தாமல் ஒலிக்கிறது ஜி.வி.பிரகாஷ் குமாரின் பின்னணி இசை. இப்படியொரு முயற்சிக்கு ஆதரவளித்த தயாரிப்பாளர் வெற்றி மாறனுக்கும் பாராட்டுகள்.

லென்ஸ் - சினிமா விமர்சனம்

இருந்தபோதும் ஒருகட்டத்தில் `குறும்படம் பார்த்துக்கொண்டிருக்கிறோமோ!’ என்ற உணர்வு எழுகிறது. ஆனந்த் சாமி அளவுக்கு மற்ற நடிகர்களின் நடிப்பு நம்மைக் கவரவில்லை. சில இடங்களில் ஒட்டாத உதட்டசைவு டப்பிங் படம் பார்க்கும் உணர்வைத் தருகிறது.

பிளம்பரை வெறிகொண்டு கொலைசெய்யும் ஆனந்த் சாமி, ஜெயபிரகாஷை ஏன் அப்படிக் கொல்லவில்லை? ஒருவேளை அரவிந்த் வாயாலே நடந்ததையெல்லாம் ரிக்கார்ட் செய்து அப்லோடு செய்ய நினைத்தாலும், முடிவில் அவனைக் கொலை செய்யாமல் ஏன் தற்கொலை செய்ய வேண்டும்? ஆனந்த் சாமிக்கு உதவி செய்யும் அந்தப் பெண் யார்? கொலை செய்யும் அளவுக்குப் போன பிறகும் அதே வீட்டில் இருக்க எப்படிச் சம்மதித்தார்? ஜெயபிரகாஷின் மனைவியைக் கடத்துவதற்குப் பதில் ஜெயபிரகாஷையே கடத்தி, அவர் வாயிலிருந்து உண்மைகளை வரவழைத்திருக்கலாமே?

இப்படி ‘லென்ஸ்’ படத்தில் நமக்கு ஆயிரம் கேள்விகள் எழலாம். ஆனால், `லென்ஸ்' கேட்கும் எந்தக் கேள்விக்கும் நம்மிடம் பதில் இல்லை என்பதே இந்தப் படத்தின் அழுத்தமான வெற்றி.

- விகடன் விமர்சனக் குழு