Published:Updated:

சரவணன் இருக்க பயமேன் - சினிமா விமர்சனம்

சரவணன் இருக்க பயமேன் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சரவணன் இருக்க பயமேன் - சினிமா விமர்சனம்

சரவணன் இருக்க பயமேன் - சினிமா விமர்சனம்

‘காமெடி இருக்க பயமேன்?’ என நம்பி எடுக்கப்பட்ட இன்னொரு நகைச்சுவைத் திரைப்படம்.

தேசியக் கட்சி ஒன்று உடைய, அதன் மாநிலத் தலைவர் ஆக முயல்கிறார் சூரி. சந்தர்ப்பச் சூழ்நிலையோ உதயநிதி ஸ்டாலினைத் தலைவர் ஆக்கிவிடுகிறது. அவரது கட்சி அலுவலகம் அமைந்துள்ள இடம் அவரது சண்டைக்கார பால்ய தோழி ரெஜினாவின் வீடு. சித்தப்பா சூரி உதவியுடன் கட்சி ஆபீஸைக் காலி பண்ண நினைக்கும் ரெஜினா மீதே காதல்கொள்கிறார் உதயநிதி. இதற்கிடையில் உள்ளூர் அரசியல் பிரமுகரான மன்சூர் அலிகானும் உதயநிதி மீது பகைமை கொள்கிறார். இடையில் சுற்றவிட்டு சுண்ணாம்பு அடிக்கும் ஏகப்பட்ட காமெடிக் குழப்பங்கள். (அமானுஷ்ய ஆவி கதை வேறு) எல்லாவற்றையும் மீறி உதயநிதி ரெஜினாவைக் கரம்பிடித்துவிடுவார் என்பது உங்களுக்கே தெரியும். ஆனால், எப்படிப் பிடித்தார் என்பதுதான் கதை.

சரவணன் இருக்க பயமேன் - சினிமா விமர்சனம்

காமெடி சினிமாக்களிலிருந்து விலகி, ‘கெத்து’, ‘மனிதன்’ என வேறு மாதிரியான படங்களில் நடித்துக்கொண்டிருந்த உதயநிதி, மீண்டும் ‘காமெடியே சரணம்’ என இயக்குநர் எழிலுடன் கைகோத்திருக்கிறார். ஆனால், வெகுசில இடங்களில் மட்டுமே வெடிச்சிரிப்பு. ரைமிங் பன்ச்கள், டைமிங் ட்விஸ்டுகள், கிளாமர் ஹீரோயின், டிராமா திரைக்கதை என எல்லாமே ரிப்பீட்டு... ரிப்பீட்டு!

உதயநிதி புதிதாகச் செய்வதற்கு எதுவும் இல்லை. இதுவரை நடித்த படங்களில் என்ன செய்தாரோ, அதையே கொஞ்சமே கொஞ்சம் பெட்டராகச் செய்திருக்கிறார். கமர்ஷியல் படம் ஒன்றில் முதல்முறையாக ரெஜினா. கவர்ச்சி காட்டுவது, டூயட் பாடுவது, உதயநிதிக்கு எதிராக சதிவேலைகளில் இறங்குவது என்ற பெயரில் கெக்கேபிக்கே நடவடிக்கைகளில் இறங்குவது... அவ்வளவே ரெஜினா!

ஃப்ளாஷ்பேக்கில் உதயநிதியின் தோழியாக சிருஷ்டி டாங்கே. கொஞ்சம் கூட வித்தியாசம் காட்டாத, ஆவரேஜ் ஃப்ளாஷ்பேக்.  துபாய் ரிட்டர்ன் சூரியின் உடைகளும் உடல்மொழியும் `ஆங்... இது அது இல்ல’ என வடிவேலுவை நினைவுபடுத்துகிறது.

‘உதயநிதி, கட்சித் தலைவரா?!’ என்ற அரசியல் அலப்பறையோடு ஆரம்பிக்கிறது படம். ஆனால், அதன் பிறகு திசை தெரியாமல் அலைவதுதான் சோகம். எல்லாப் பிரச்னைகளையும் தீர்ப்பது ‘ஃபாத்திமா’தான். படத்துக்கு நியாயப்படி `ஃபாத்திமா இருக்க பயமேன்’ என்றுதான் பெயர் வைத்திருக்க வேண்டும்.

ரோபோ சங்கர், ரவிமரியா, மனோபாலா, யோகிபாபு என ‘நகைச்சுவை நடிகர்கள் சங்கம்’ ஆரம்பிக்கும்

சரவணன் இருக்க பயமேன் - சினிமா விமர்சனம்

அளவுக்கு ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் இருந்தும் படத்தில் காமெடியும் இல்லாமல்,  கதையும் இல்லாமல் கடுப்பேற்றுகிறான் சரவணன்.

லாலா கடை சாந்திக்கு மட்டும் அரங்கம் கொஞ்சம் அசைகிறது. மற்ற பாடல்கள் எல்லாம் டெம்ப்ளேட் இமான்.

ஸ்கிரிப்ட் இருக்க பயமேன் என்பதே உண்மை என்பதை கோடம்பாக்கம் உணர வேண்டும்.

- விகடன் விமர்சனக் குழு