Published:Updated:

இப்பல்லாம் யாரு அட்வைஸ் பண்றாங்கோ!

இப்பல்லாம் யாரு அட்வைஸ் பண்றாங்கோ!
பிரீமியம் ஸ்டோரி
இப்பல்லாம் யாரு அட்வைஸ் பண்றாங்கோ!

நித்திஷ், ஓவியங்கள்: கோ.ராமமூர்த்தி

இப்பல்லாம் யாரு அட்வைஸ் பண்றாங்கோ!

நித்திஷ், ஓவியங்கள்: கோ.ராமமூர்த்தி

Published:Updated:
இப்பல்லாம் யாரு அட்வைஸ் பண்றாங்கோ!
பிரீமியம் ஸ்டோரி
இப்பல்லாம் யாரு அட்வைஸ் பண்றாங்கோ!

‘இப்பல்லாம் யாரு சார் அட்வைஸ் பண்ணா கேக்குறாங்க?’ - இந்தத் தலைமுறை இளைஞர்கள்மேல் சீனியர் சிட்டிசன்கள் தொடர்ந்து வாசிக்கும் புகார் பத்திரம் இது. கேட்கலைன்னா விட்டுருவாங்களா என்ன? அட்வைஸ் பண்ணும் முறைதான் மாறியிருக்கிறதே தவிர, அட்வைஸ் பண்ணும் ஆட்கள் மாறவில்லை. அப்படி நூதனமாக டார்ச்சர் செய்யும் ஜென்டில்மேன்கள் பற்றிய கடுப்புக் குறிப்புகள் இதோ!

இப்பல்லாம் யாரு அட்வைஸ் பண்றாங்கோ!

* முந்தைய தலைமுறையில் திண்ணையில் உட்கார்ந்து மாதம் மும்மாரி அட்வைஸ் பொழிந்த ஆட்கள் எல்லாம் இப்போது ட்ரெண்டுக் கேற்றாற்போல சோஷியல் மீடியாக்களில் வலம் வருகிறார்கள். ஃபேஸ்புக் குரூப் போட்டோவைப் பார்த்து, ‘உனக்குப் பக்கத்துல நிக்கிற பொண்ணு யாரு? இவ்ளோ பக்கத்துலதான் நிக்கணுமா? வீட்ல சொன்னாதான் சரிப்படுவே’ எனப் புலன்விசாரணை ப்ளஸ் போட்டுக்கொடுத்தல் வேலையைச் செம்மையாகச் செய்கிறார்கள். நீங்க சொல்ற தூரத்துல நின்னு போட்டோ எடுக்கணும்னா, சந்திராயன் மூலமா சாட்டிலைட் போட்டோதான் சார் எடுக்கணும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்பல்லாம் யாரு அட்வைஸ் பண்றாங்கோ!

வாட்ஸ்அப்பிலோ வேறு வித தலைவலி. ‘குடும்பம் ஒரு கதம்பம்’, `Joint Family’ என விசுவின் பழைய டைட்டில்களுக்கெல்லாம் உயிர் கொடுத்து, உயிர் எடுப்பார்கள். அதில், கிரஹாம்பெல் முதன்முதலில் ‘ஹலோ’ சொன்ன காலத்து ஃபார்வேர்ட்களையெல்லாம் அனுப்பி இம்சிப்பார்கள். எனக்குத் தெரிந்தவர் ஒருவர் இன்னமும், ‘சென்னை வெள்ளத்துல முதலைப் பண்ணைல இருந்து தப்பிச்ச ஒரு முதலை அடையாறு, பெசன்ட் நகர்னு நைட் டைம்ல சுத்துதாம்’ என ஃபார்வேர்ட் மெசேஜ் அனுப்பிக் கொண்டிருக்கிறார். அந்த முதலையோட வாரிசுக்கே இந்நேரம் பேறுகாலம் முடிஞ்சு, பேரன் பேத்தி பிறந்திருக்கும். தாத்தா, ப்ளீஸ்..!

இப்பல்லாம் யாரு அட்வைஸ் பண்றாங்கோ!

வீட்டு விசேஷங்களில் தலையில் துண்டு போட்டுத் தப்பிக்கப் பார்த்தாலும், கப்பெனப் பிடித்துவிடுவார்கள். ‘சென்னையிலா வேலை பாக்குற?’ (இல்ல... செவ்வாய் கிரகத்துல), ‘சம்பளம் எவ்வளவு?’, ‘வீட்டுக்கு அனுப்புறியா?’ எனக் குறுக்குக் கேள்விகள் கேட்டுத் துளைப்பார்கள். நீங்கள் எந்தத் துறையில் வேலை பார்ப்பவராக இருந்தாலும், குறை சொல்ல அவர்களிடம் ஏதாவது ஒன்று சிக்கும். ‘சாஃப்ட்வேரா? அதுல இனிமே வேலையே கிடையாதாமே? எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பறாங்களாமே?’, ‘மீடியாவா? எவன்கிட்டயாவது அடி வாங்கியே தீரணும்னு நேர்த்திக் கடனா உனக்கு?’, `பேங்க் எக்ஸாமா? லட்சம் பேர் முட்டி மோதுற இடம். சொல்றதைச் சொல்லிட்டேன்... அப்புறம் உன் பாடு!’ என இஷ்டத்துக்குப் பேசி, டரியலாக்குவார்கள். நீங்க குத்தம் சொல்லாத ஒரே வேலை, கடல்ல இறங்கிக் கப்பலைத் தள்ளுறது மட்டும்தான்!

இப்பல்லாம் யாரு அட்வைஸ் பண்றாங்கோ!

வேலை பார்க்கும் ஊரில் இருக்கும் வெல்`விஷ'ர்கள் எல்லாம் வேற லெவல். ‘இவ்ளோ சம்பாதிக்குற, பஸ்லதான் போகணுமா? ஒரு வண்டி வாங்கிக்கோயேன்’, ‘இப்படியே டூ வீலர்ல எத்தனை நாளைக்குதான் போவே? சட்டுபுட்டுனு ஒரு கார் வாங்குற வழியைப் பாரு. இப்பதான் அவனவனும் வீடு தேடி வந்து வாகனக் கடன் தரானே?’, `சென்னையில சொந்தமா வீடு இல்லைன்னா ஒரு பொண்ணு சீந்த மாட்டா உன்னை. அப்புறம் காலாகாலத்தில் கல்யாணம் எப்படி ஆகும்?’ என டெம்ப்ட் ஆக்கி ஆக்கியே, செலவு வைப்பார்கள். பின்னாளில் தவணை கட்ட முடியாமல் தவளை மாதிரி நாக்கு தொங்கும் வேளையில், ‘இந்தச் சின்னப் பசங்களே இப்படித்தான். கொஞ்சம்கூடப் பொறுப்பே கிடையாது. வாழ்க்கை முழுக்க ஈ.எம்.ஐ-லேயே ஓட்டுறாங்க. ஹூம்... எங்க காலத்துல எல்லாம்...’ என இழுப்பார்கள். நான்பாட்டுக்கு செவனேன்னுதானுங்களே இருந்தேன்!

இப்பல்லாம் யாரு அட்வைஸ் பண்றாங்கோ!

பேச்சுலருக்குப் பெரிய தண்டனையே ஹோட்டல் சாப்பாடுதான். அந்தக் கொடுமை போதாதென்று, இவர்களும் அறிவுரை என்ற பெயரில் வெறியேற்றுவார்கள். ‘பரோட்டா சாப்பிட்டா கேன்சர் வரும்’, ‘ஜங்க் ஃபுட் சாப்பிட்டா ஹார்ட்ல கொழுப்பு படியும்’, `டீ, காபி குடிச்சா பித்தம் வரும்’ என ஒவ்வொரு மெனுவுக்கும் ஒவ்வொரு வியாதி வைத்திருப்பார்கள். எல்லாவற்றையும் சொல்லிவிட்டுக் கடைசியாக, ‘என்ன பண்ணலாம்னு இருக்கே?’ எனக் கேட்பார்கள். ‘மிச்சம் இருக்கிறது புல்லுதான். அதைத்தான் கட்டுக்கட்டா திங்கணும்’ என நாம் சொன்னால், `ஐயய்யோ... அது அறவே கூடாது. பூச்சிமருந்து அடிக்கிறாங்க’ என்பார்கள். அடப் போங்கய்யா!

இப்பல்லாம் யாரு அட்வைஸ் பண்றாங்கோ!

நண்பர்களோடு  டூர்தான் ஒவ்வொரு யூத்துக்கும் கனவு. ஆனால், அதில் வேட்டு வைப்பதற் கென்றே சிலர் இருக்கிறார்கள். ‘அந்த ஊருக்கா போறீங்க? நானும் வர்றேன். ஒண்ணும் யோசனையே பண்ணாதீங்கப்பா... நான் பாக்கத்தான் வயசான ஆளு; மனசளவுல யூத்து’ என டி-ஷர்ட்டும் ட்ராக்குமாக ஒரு தூரத்துச் சொந்தம் வந்து நிற்பார். இந்த காஸ்ட்யூமில் அவரைப் பார்த்ததற்கே கேங்கில் ஒருவனுக்குக் கண் கெட்டுப் போயிருக்கும். அவன் இடத்தைத் துண்டு போட்டுப் பிடித்துக் கொள்வார் அந்தப் பெரியவர். அப்புறமென்ன, ‘அங்கே போகாதே, இங்கே வராதே, அப்பாகிட்ட சொல்லிடுவேன்’ என யூத் டூர், ஸ்கூல் எஸ்கர்ஷன் ஆகிவிடும்.

டூரில்தான் மினரல்ஸ் மண்ணைப் போட்டு மூடிவிட்டார்கள் என ஆன்சைட் கிளம்பினால்... விடாது கருப்பு! ‘வெளிநாட்டுக்குப் போறதெல்லாம் சரி, அங்கேர்ந்து நீபாட்டுக்கு எவளையாவது தள்ளிக்கிட்டு வந்துடாத’ என்பார்கள். (நான் வேலை பார்க்கத்தான் போறேன்னா, மேனேஜர்தான் நம்ப மாட்றார்னா, நீங்களுமாய்யா?). ஆன்சைட் முடியப்போகும் வேளையில், ஒருநாள் நள்ளிரவில் போன் செய்து அலறவிடுவார்கள். பதறிப் பயந்து எடுத்தால், ‘அந்தக் கோடாலி மார்க் தைலம் மறந்துடாத’ என்பார்கள். பழகின பாவத்துக்கு வாங்கி வந்து நீட்டினால், ‘அவ்வளவுதானா? போய்ட்டு வந்ததுக்கு ட்ரீட் எங்க?’ எனக் கேட்பார்கள். உங்களுக்கெல்லாம் ட்ரீட் இல்ல; தீதான் வைக்கணும்.

‘ம்ம்ம்ம்.... அப்புறம்?’ - இதைச் சொல்லிவிட்டு `அவ்வை சண்முகி' டெல்லி கணேஷ் ஸ்டைலில் சிரித்தால், ‘எப்ப கல்யாணம்?’ என்பதைக் குறியீடாகக் கேட்கிறார்களாமாம். (அதென்ன கபாலி படமா... குறியீடு எல்லாம் வைக்கிறதுக்கு? கல்யாணம் சாமி!). ‘என்ன அவசரம்?’ என்றால், ‘இப்பல்லாம் பொண்ணு கிடைக்கிறதே கஷ்டம். தலையில வேற போன தடவைக்கு இப்போ முடி கம்மியாயிருக்கு; தொப்பை வேற முன்னால தள்ளுது. காலையில எழுந்து ஓடணும்னா கேட்டாத்தானே?’ எனக் கொளுத்திப் போடுவார்கள். ‘பண்ணிக்கலாம்னு இருக்கேன்’ எனச் சொன்னால், ‘பேஷ்... எல்லாத்துக்கும் ரெடியாதான் இருக்கபோல; பொண்ணு பாத்து வெச்சிருக்கியா? ம்ஹூம்... இது சரிப்படாது’ என்பார்கள். நீங்களே சொல்லுங்கய்யா... இப்ப நான் என்னதான் சொல்லணும்?

இதுவரை நடந்ததுகூட சோஷியல் மேட்டர்; ஒரு ரகத்தில் சேர்த்துவிடலாம். இனி சொல்லப்போவது எல்லாம் மிருகினஜம்போ ரகம். தமிழகத்தில் என்ன அரசியல் நகர்வு நிகழ்ந்தாலும் நமக்கு உடனே போன் செய்து, ‘என்ன நடக்குது அங்கே?’ என்பார்கள். ‘தெரியாது’ என உண்மையைச் சொன்னால், `என்னடா நீ... அப்புறம் நீ எதுக்கு சென்னையில இருக்க? நம்ம பயலுக்கு நாலு விஷயம் தெரிஞ்சிருக்கும்னு போன் பண்ணா, நீ இன்னமும் அப்படியே அசமஞ்சமாத்தான் இருக்கே’ எனக் கலாய்த்துவிட்டு, கட் செய்வார்கள். சென்னையில் இருந்தா முற்றும் அறிஞ்ச முனியா? என்னங்க சார், உங்க லாஜிக்?

ஏய்ய்ய்... நியாயமாரே..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism