Published:Updated:

த்ரில்லர் கில்லர்!

த்ரில்லர் கில்லர்!
பிரீமியம் ஸ்டோரி
த்ரில்லர் கில்லர்!

ம.கா.செந்தில்குமார்

த்ரில்லர் கில்லர்!

ம.கா.செந்தில்குமார்

Published:Updated:
த்ரில்லர் கில்லர்!
பிரீமியம் ஸ்டோரி
த்ரில்லர் கில்லர்!

‘‘அனுராக் காஷ்யப் சாரை முதன்முதல்ல சந்திக்கும்போது மிகப்பெரிய பயம். ‘பெரிய டைரக்டர். வெவ்வேறு களங்கள்ல, தளங்கள்ல படம் பண்றவர். அவர் நம்மை எப்படி ஜட்ஜ் பண்ணுவார்? ‘இதெல்லாம் ஒரு கதையா’னு யோசிச்சிடுவாரோ?’னு நிறைய தயக்கங்கள். ஆனால் ஸ்கிரிப்டைக் கேட்கும்போதே அவர்கொடுத்த ரியாக்‌ஷன்ஸ், ‘இது ஷ்யூரா ஒர்க்-அவுட் ஆகும். கண்டிப்பா நான் பண்றேன்’னு சொன்னதும் எனக்கு இன்ப அதிர்ச்சி. அதேபோல செட்லயும், ‘நம்மகூட ஒரு பெரிய டைரக்டர் இருக்கார். அவர் நம்மைப் பார்த்துக்கிட்டே இருக்கார்’ என்கிற பயம். ‘வாங்க சார் மானிட்டர் பாருங்க’னு கூப்பிடுவேன். ‘நீதான் டைரக்டர். நீ என்ன சொல்றியோ அதை நான் பண்றேன். நீ மானிட்டர் பார்த்துட்டியா? உனக்கு ஓகேவா? இல்லைனா சொல்லு, எத்தனை டேக் வேணும்னாலும் பண்றேன்’னு சொல்லிக் கடைசிவரை மானிட்டர் பார்க்கவே இல்லை.’’ ஆச்சர்யம் விலகாமல் பேசுகிறார் இயக்குநர் அஜய் ஞானமுத்து. இந்தியாவே கொண்டாடும் இயக்குநர் அனுராக் காஷ்யப்பை வில்லனாக்கி, நயன்தாராவை சி.பி.ஐ. அதிகாரியாக்கி ‘இமைக்கா நொடிகள்’ இயக்கிக்கொண்டு இருக்கிறார். ‘டிமான்ட்டி காலனி’ மூலம் பேய் பயம் காட்டியவர், ‘இமைக்கா நொடிகள்’ மூலம் த்ரில் கூட்டுகிறார்.

‘‘இது பெரிய இமேஜ் இருக்கிற ஒரு ஹீரோயின் பண்ணினால்தான் சரியா இருக்கும்ங்கிற மாதிரியான ஸ்கிரிப்ட். அப்படித்தான் நயன்தாரா மேம் இந்தப் படத்துக்குள்ள வந்தாங்க. அதேபோல கௌதம்மேனன் சாரை மனசுல வெச்சுதான் வில்லன் கேரக்டரையே எழுதினேன். ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போக, எங்க டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் சார் மூலமா அனுராக் காஷ்யப் சாரைப் பிடிச்சோம். அடுத்து ஆரம்பத்தில் இருந்தே இந்த ஸ்கிரிப்டில் இருந்த அதர்வா பிரதர். இந்த மூவருக்குமான வலைப்பின்னல்தான் ‘இமைக்கா நொடிகள்’.’’

த்ரில்லர் கில்லர்!

‘‘போட்டோஸ், டீசர்... இது த்ரில்லர் வகை கதைனு உணர்த்துது. கதை, களம் எப்படி இருக்கும்?’’

‘‘அதர்வா-ராஷி கண்ணா சென்னையில் வசிக்கும் ஜோடி. நயன்தாரா பெங்களூருவில் உள்ள சி.பி.ஐ. அதிகாரி. இதற்கிடையில் ‘கொல்லப்போறேன்’னு ஆன் ஏர்ல சொல்லி சவால்விட்டுத் தொடர்ந்து கொலைகள் செய்யும் ஒரு சீரியல் கில்லர். அவன் யார், எதனால் அப்படி பண்றான்? இந்தத் துரத்தலும் தேடலும்தான் கதை.’’

‘‘இது, ஹீரோயினை மையப்படுத்திய கதையா? இதில் அதர்வாவுக்கு எந்த அளவுக்கு ஸ்கோப் இருக்கும்?’’

‘‘அதர்வா, நயன்தாரா மேம் இருவருக்குமே சமமான கேரக்டர். இருவருக்குமே அவர்களுக்கான ஸ்கோரிங் ஏரியாக்கள் உண்டு. இவர்களைத்தவிர வேறு சாய்ஸ் யோசிக்க முடியாத வகையில் இவங்க கேரக்டர்கள் இருக்கும். அப்படி அதர்வா ப்ரதருக்கு இதில் டாக்டர் கேரக்டர். அவரின் இயல்பான குணம்தான் இதில் அவருக்கான கேரக்டர்.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

த்ரில்லர் கில்லர்!

‘‘நயன்தாராவுக்கு ஆக்‌ஷன் எபிசோட் உண்டா?’’

‘‘ஒரு ஹீரோயின் இந்த அளவுக்கு ஆழமா கதை கேட்பாங்களா என்பதே எனக்கு ஆச்சர்யம். சின்னச்சின்ன டீடெய்லிங்கோட திருப்தியாகிறவரை சந்தேகங்கள் கேட்டாங்க. ‘இந்தப் படத்தை இப்படி பிரசன்ட் பண்ணலாம் அஜய்’னு அவங்க அனுபவத்துல இருந்து சில யோசனைகளைச் சொன்னப்ப, ‘இந்த ப்ராஜெக்ட்டுக்குள்ள நான் வந்துட்டேன்’ என்ற உணர்வை எனக்குக் கொடுத்தாங்க. ஸ்கிரிப்ட் பண்ணும்போதே ஹீரோயினை ஆக்‌ஷன் இல்லாம தன்னுடைய இன்டெலிஜென்ஸால கேரி பண்ற சி.பி.ஐ. ஆபீஸரா எழுதியிருந்தேன். அது அவங் களுக்கும் பிடிச்சிருந்துச்சு. அவங்களோட இன்றைய உயரத்துக்குத் தன் வேலைக்கு அவங்க கொடுக்கிற முக்கியத்துவம், மரியாதைதான் காரணம். டைமிங் ஃபாலோ பண்றது, கேரக்டருக்கு உயிர் கொடுக்கும் அந்த ஆர்வம்... நயன்தாரா மேம்கூட ஒர்க் பண்ணும்போது நமக்கான வேலையை அவங்க எளிதாக்கிடுறாங்க.’’

த்ரில்லர் கில்லர்!

‘‘வில்லன் கேரக்டருக்கு அனுராக் காஷ்யப் எப்படித் தயாராகி வந்தார்?’’

‘‘இந்தப் படத்தில் கமிட் ஆன அடுத்தநாளே, ‘இந்த லுக் எப்படிய்யா இருக்கு’னு நிறைய போட்டோஸ் அனுப்ப ஆரம்பிச்சிட்டார். அவர்கிட்ட இதை நான் எதிர்பார்க்கலை. அவர் தன் படங்கள்லயும் பிஸியா இருக்கிறவர். ஒருபக்கம் அவரோட படம் ஷூட் போயிட்டு இருக்கும். நான் கூப்பிட்டால் தன் படத்தை பிரேக் பண்ணிட்டு இங்க நடிக்க வந்துடுவார். ஆக்‌ஷன் சீக்வென்ஸ் இருக்கும்போது, `நான் உன் படத்தை அசால்ட்டா எடுத்துக்கலை. தயாராகிட்டுதான் இருக்கேன்' என்பதை உணர்த்துற மாதிரி ஜிம்ல இருந்து போட்டோஸ் அனுப்புவார். ‘என் பட ஷூட் போறதுக்கு முன்னாடி ஒர்க்-அவுட் பண்ணிட்டு இருக்கேன். ஈவினிங் ஷூட் முடிச்ச பிறகும் ஜிம் வந்துடுவேன்’ என்பார். இப்படி நமக்குப் பயங்கர பாசிட்டிவான ஃபீலிங் கொடுத்துட்டே இருப்பார்.’’

த்ரில்லர் கில்லர்!

‘`படத்தில் விஜய் சேதுபதியும் இருக்கிறார். கெஸ்ட் ரோலா?’’

‘‘நட்புக்காக இல்லை. அதைவிட கொஞ்சம் பெரிய கேரக்டர். அது என்ன கேரக்டர் என்பது சஸ்பென்ஸ். ‘இந்த கேரக்டர் பண்ணினா அது தன் எதிர்காலத்துக்கு நல்லதா, அது தன்னை எப்படி ப்ரமோட் பண்ணும்’னு எந்தத் திட்டமிடலும் இல்லாமல் தனக்கு ஒரு விஷயம்  பிடிச்சிருந்தா,  அதைப் பண்ணணும்னு நினைக்கிறவர்.  ‘இப்படி ஒரு ரோல் சார். நீங்க பண்ணணும்’னு கேட்டதுமே  ஒப்புக்கிட்டார். படம் பார்த்தபிறகு, ‘இந்த கேரக்டரை இவரால் மட்டும்தான் பண்ண முடியும்’னு உங்களுக்கே தோணும். அப்படி ஒரு கேரக்டர்.’’

த்ரில்லர் கில்லர்!

‘‘உங்கள் குரு ஏ.ஆர்.முருகதாஸ் என்ன சொல்றார்?’’

‘‘2010-ல் அவர்கிட்ட சேர்ந்தேன். ஒரு படம் டைரக்ட் பண்ணியிருக்கேன். இப்ப ஒரு படம் பண்ணிட்டு இருக்கேன். இப்பவரை என் வாழ்க்கையில் சிறந்த தருணங்கள்னா அது அவர்கிட்ட உதவி இயக்குநரா வேலை செய்ததுதான். காலையில ஏழு மணிக்குத் தொடங்கும் எங்க வேலை நைட் 11 மணிக்கு முடியும். எங்களுக்குத் தூங்குற டைம் மட்டும்தான் வீட்ல. மற்ற எல்லா நேரங்களும் அவருடன்தான். வேலை இல்லைனாலும், ‘இப்படி ஒரு படம் பார்த்தேன்யா’னு சினிமாவைப் பற்றித்தான் பேசிட்டு இருப்பார். ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவில்கூட ‘இவங்க உதவி இயக்குநர்கள் கிடையாது. என் தம்பிகள்'னு சொன்னார். உண்மையிலேயே அப்படித்தான் நடத்துவார். எங்க எல்லாருக்கும் ஏதோ ஒருவகையில் படம் சீக்கிரம் கிடைக்குதுன்னா, அவரிடம் கத்துக்கிட்ட வேலை, அவரின் பரிந்துரைனு அவரின் உதவிகள்தான் அதுக்கு காரணம். இன்னைக்குக்கூட எங்க சாரை நான் சந்திக்கப்போறேன்னா அந்த அசிஸ்டென்ட் ஃபீலிங் பயங்கரமா இருக்கும். ஆமாம் இன்னும்கூட அந்த ஐஸ் பிரேக் ஆகவே இல்லை. அந்த ஐஸ் எப்பவும் பிரேக் ஆகவே கூடாதுனு ஆசைப்படுறேன்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism