Published:Updated:

முஸ்தஃபா...முஸ்தஃபா... கோவிந்தா...கோவிந்தா...

முஸ்தஃபா...முஸ்தஃபா... கோவிந்தா...கோவிந்தா...
பிரீமியம் ஸ்டோரி
News
முஸ்தஃபா...முஸ்தஃபா... கோவிந்தா...கோவிந்தா...

நித்திஷ், ஓவியங்கள்: கண்ணா

மிழ் சினிமாவில் கொண்டாட்டமாக காட்டப்படும் இடங்கள் இரண்டே இரண்டுதான். முதலாவது கல்யாண வீடு. ஆனால் நஸ்ரியாவும் நிவின் பாலிக்களும் ‘மாங்கல்யம் தந்துனானே’ என ஆடும் ஒரு கல்யாண வீட்டைக் கூட விவரம் தெரிந்த இத்தனை ஆண்டுகளில் கண்டதில்லை. இரண்டாவது - கல்லூரி. ராகிங்கில் ஆரம்பித்து சாட்டிங்.. ஃபைட்டிங் எனக் கொண்டாடி ஃபேர்வெல்லில் ‘முஸ்தஃபா... முஸ்தஃபா...’ என மியூசிக் போட்ட ரஹ்மானே வேலையை ராஜினாமா செய்யும் வகையில் இசைக் கொலை செய்வது வரை... தமிழ் சினிமாவில் கல்லூரிக்காலம் திவ்யம். சமீபத்தில் கல்லூரி பற்றிய விளம்பரங்கள் கூட...

‘ஒன்ஸ்மோர் போலாமா டாடி?’ தீம் பார்க் ரேஞ்சுக்கு பில்டப் ஏற்றுகிறது. ஆனா. படிச்சு வந்தவங்களுக்குதானே பாஸ் தெரியும் காலேஜ் எப்படின்னு!

முதலாம் ஆண்டு:

எக்ஸ்பெக்டேஷன்

காலேஜில் முதல் நாள் காலடி எடுத்து வைத்த உடனேயே கடைசி நாள் கறுப்புக் கோட்டோடு போஸ் தருவது கண் முன்னால் வந்து போகும். தயங்கித் தயங்கி நடந்து போகும்போது ஒரு கும்பல் அழைத்து, ‘தம்பி நாங்க இப்போ உன்னை ரேகிங் பண்ணப்போறோம். பொசிஷன்ல நில்லு’ என ரெடிமேட் டயலாக் விடுவார்கள். அதுவும் தனியாக இல்லை.. கூடவே இன்னொரு பெண்ணையும் கோர்த்து விடுவார்கள். அங்கு ஆரம்பிக்கும் ‘லாலாலாலா’ ஆறு ஆண்டுகள் கழித்து, கெட்டிமேளம் கெட்டிமேளத்தில் முடியும்.

முஸ்தஃபா...முஸ்தஃபா... கோவிந்தா...கோவிந்தா...

விளம்பரத்தில் காட்டியபடியே பில்டிங்குகள் எல்லாம் புது 2,000 ரூபாய் நோட்டு ‘பளபள’ என்பது போல மின்னும். ‘வா என் மேல சோத்தைப் போட்டு தின்னு’ என புது ரோடு கூட டெம்ப்ட் பண்ணும். ‘வாங்க பாஸ், வாழ்க்கைங்கிறது...’ என தோள் மேல் கை போட்டு சொல்லிக் கொடுக்கும் சமுத்திரக்கனி வாத்தியார் முதல் நாளே அறிமுகமாவார். ஹாஸ்டல் பொங்கலுக்கு வெள்ளையடித்த புது வீடு போல வாசமாய் இருக்கும். ‘இன்னும் போடு, இன்னும் கொஞ்சம் உள்ள தள்ளு’ என வயிறு அறுசுவை ஹாஸ்டல் சாப்பாட்டிற்காக சப்புக் கொட்டி காத்திருக்கும்.

முஸ்தஃபா...முஸ்தஃபா... கோவிந்தா...கோவிந்தா...

ரியாலிட்டி:

உள்ளே வரும்போதே, ‘வேற காலேஜே கிடைக்கலையாப்பா?’ என செக்யூரிட்டி செக்போஸ்ட் போடுவார். ‘ஓப்பனிங்கே சரியில்லையே’ என உள்ளே போய் விசாரித்தால்தான் தெரியும், அவர் போன வருடம் கேம்பஸில் பிளேஸானவர் என்று. கேம்பஸ் பிளேஸ்மென்ட்னா கேம்பஸிலேயே வேலையா? என நெஞ்சுக்குழி உள்ளிறங்கும். நீங்களே நடு காலேஜில் நின்று, ‘ராகிங் பண்ணு ராகிங் பண்ணு’ எனக் கேட்டாலும் பண்ண ஆளிருக்காது.

முஸ்தஃபா...முஸ்தஃபா... கோவிந்தா...கோவிந்தா...

‘ஹே... அங்கே என்ன கயிறு கட்டையா தொங்குது?’ எனக் கேட்டால்... ‘அதான் தம்பி உங்க க்ளாஸு. உங்ககிட்ட வாங்குன டொனேஷன்ல கட்டுனதுதான். கூரை போடணும், பெயின்ட் அடிக்கணும், கரன்ட் கனெக்‌ஷன் கொடுக்கணும், மத்தபடி ரெடி.. நீங்க போய் உட்காரலாம்’ என மேஸ்திரி குரல் கொடுப்பார். ‘ஒழுங்கா படிக்கலன்னா ஃபெயிலு ஃபெயிலு ஃபெயிலு’ என கண்களை உருட்டும் வாத்தியார்கள்தான் வரிசையாய் வந்து போவார்கள். ஹாஸ்டலைப் பற்றி கேட்கவே வேண்டியதில்லை. ‘பேய்ப்படங்களுக்கு வாடகைக்கு விடப்படும்’ என போர்டே மாட்டி வைக்கலாம். மெஸ்?? அட அந்த வயித்தெரிச்சலை ஏங்க கிளப்பிகிட்டு...!

இரண்டாம் ஆண்டு

எக்ஸ்பெக்டேஷன்:

‘முதல் வருஷமும் நாலாவது வருஷமும் மட்டும்தான் படிக்க வேண்டியது இருக்கும்’ என சொன்ன முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. படிக்க வேண்டிய வேலையே இருக்காது. கேண்டீன், கிரவுண்ட், ஹாஸ்ட்டல் என ஜாலியாய் சுற்றித் திரியவேண்டியதுதான். ஹாஸ்ட்டல் மாறி இருப்போம் என்பதால் மாஸ்டரும் மாறி இருப்பார். ‘கோபாலா கோபாலா’ பாண்டியராஜன் போல சகலருக்கும் பிடித்த மாதிரி சமைப்பதில் கெட்டிக்கார குக்காக இருப்பார் அந்த மாஸ்டர்.

முஸ்தஃபா...முஸ்தஃபா... கோவிந்தா...கோவிந்தா...

ரியாலிட்டி:

‘தம்பி முதல் வருஷம்.. விளையாட்டுத்தனமா இருந்தீங்க, சரி சின்னப் பசங்கனு விட்டோம். இனி எல்லாம் சீரியஸா படிக்கணும்’ என முதல் நாளே பயமுறுத்துவார்கள். முதல் வருடமே முக்கி முனங்கி பாஸானவர்களுக்கு தனியாய் ஸ்பெஷல் க்ளாஸ் வேறு வைப்பார்கள். அப்புறம் எங்கே கேண்டீன், க்ரவுண்ட் பக்கம் எல்லாம் போவது? ‘பேஸ்கட் பால் க்ரவுண்டாம்மா? அது ஏதோ பக்கத்து காலேஜ் பக்கம் இருக்காம்’ என மனதை தேற்றிக்கொள்ள வேண்டியதுதான்.

முஸ்தஃபா...முஸ்தஃபா... கோவிந்தா...கோவிந்தா...

மூன்று, நான்காம் ஆண்டுகள்:

எக்ஸ்பெக்டேஷன்:

‘ஃபைனல் இயர்ன்னா கெத்து’ என `சில்லுனு ஒரு காதல்’ சூர்யா தொடங்கி `பிரேமம்’ நிவின் பாலி வரை சொல்லி இருப்பதால் சாதாரணமாகவே குதிங்காலில் கட்டி வந்த தோரணையில்தான் நடப்போம். எல்லா பஞ்சாயத்துக்கும் கேங்காக ஆஜராகி, ‘சூனாபானாகிட்டயேவா?’ என கலைத்து விடுவோம். மறுபக்கம் அதே கோலிவுட் சினிமா தாக்கத்தில் ‘இதுவரைக்கும் யாருமே பண்ணாத புராஜெக்ட் ஒண்ணு பண்ணணும்’ எனக் கூடிப் பேசி எக்ஸ்டர்னல் மூக்கு மேல் குடையே வைக்குமளவிற்கு புராஜெக்ட் செய்து அசத்துவோம்.

‘கடைசி நாள்... இனி இங்கே இதே மாதிரி ஒண்ணு கூடவே போறதில்ல’ என்ற நினைப்பு எல்லாரையும் அழுத்தும். பெஞ்சில் பெயர் எழுதி வைப்பது, மரத்திற்கு பச்சை குத்துவது என குறியீடுகளை தேடித் தேடி உருவாக்குவோம். ஸ்டேஜ் ஏறி, ‘மனசே மனசே மனசில் பாரம்’ என கோரஸாய் மைக்கை நனைத்துவிட்டு இறங்குவோம்.

முஸ்தஃபா...முஸ்தஃபா... கோவிந்தா...கோவிந்தா...

ரியாலிட்டி:

‘ஃபைனல் இயர்ன்னா என்ன கொம்பா முளைச்சிருக்கு?’ என இப்போதும் அசால்ட்டாக டீல் செய்வார்கள் வாத்தியார்கள். நாம் கெத்து என குதிங்கால் தூக்கி நடந்தால்.. ‘வெயில் காலம்ல அங்கே கட்டி வரத்தான் செய்யும், மருந்து சாப்பிடு’ என ‘போடா கோமாளி’ ரேஞ்சுக்கே நடத்துவார்கள். புராஜெக்ட்ல அசத்திடணும் என்ற நினைப்பு மட்டுமே இருக்கும். கடைசிவரை ஐடியா தோன்றாமல் ஏதாவது சென்டருக்குப் போய் ‘புத்தம்புதுசா ஒரு புராஜெக்ட் பார்சல்’ என வாங்கி வந்து டேபிளில் வைத்தால் எக்ஸ்டர்னல், ‘டேய் இது பத்து வருஷம் முன்னால நான் பண்ண புராஜெக்ட்டுடா’ என அலற விடுவார்.

‘கடைசி நாள்ல.. ப்ச்’ என யாராவது உச்சு கொட்டினால் மண்டையிலேயே தட்டி, ‘என்னா ஃபீலீங்கு, எங்க போனாலும் பத்து மணிக்கு மேல ஆன்லைன்லதானே இருக்கப் போற?’ என்பார்கள். இதற்குள் க்ளாஸுக்கென வாட்ஸ் அப் க்ரூப் ஒன்றும் உதயமாகியிருக்கும். ‘கடைசியா ஒருதடவை ஹாஸ்டல் தூணை கட்டிபிடிச்சுட்டு வந்துடுறேன்’ எனப் போனால்.. ‘டேய் இங்கே வா, உன் பில்லுல இன்னும் கொஞ்சம் செட்டில் ஆகலையே’ என வார்டன் கை நீட்டுவார். எஸ்கேப்ப்ப்ப்ப்....