Published:Updated:

ரங்கூன் - சினிமா விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு

ரங்கூன் - சினிமா விமர்சனம்

பிரீமியம் ஸ்டோரி

டத்தல் சாம்ராஜ்யத்தில் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம் ‘ரங்கூன்.’

80-களின் இறுதியில் பர்மாவில் இருந்து சென்னைக்கு வருகிறது கௌதம் கார்த்திக் குடும்பம்.  கொஞ்சநாள்களிலேயே அப்பாவை இழக்கும் கௌதம், தன் நண்பன் லல்லுவின் மூலம் கடத்தல் வியாபாரி சித்திக்கிடம் வேலைக்குச் சேர்கிறார். முதலாளியின் நம்பிக்கையைப் பெற்று உயர்கிறார். கூடவே காதலிலும் விழுகிறார். கடத்தல் தொழிலில் இருந்து விலகவும் நினைக்கிறார். இதுவே கடைசி என ஆறுகோடி ரூபாய் சரக்கை, தான் பிறந்த ஊரான ரங்கூனில் மாற்றக்கிளம்புகிறார். அங்கே அடுத்தடுத்து நிகழும் திருப்பங்கள், துயரங்கள், துரோகங்களே படம்.

ரங்கூன் - சினிமா விமர்சனம்

சௌகார்பேட்டை, எண்ணூர் என வடசென்னையின் வாழ்க்கையை அழுத்தமாகப் பதிவுசெய்ய முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. ஆனால், இந்தத் துரோகம் கலந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைக்கு ஏன் பர்மா பின்னணி? அந்த மக்களின் வாழ்வியலும்கூட முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லையே?

முதலாளியைத் தாக்கவரும் கும்பலை தாவி அடிக்கும் பாய்ச்சல் வேகம், `நீதான்டா என் மச்சான்’ என்று நட்பில் கரையும் நெகிழ்ச்சி, துரோகங்களில் உடைந்துவரும் அழுகை என கெளதம் கார்த்திக் நடிப்பில் நல்ல முன்னேற்றம். ஆனால், அவருக்கு எதற்குக் கதைக்கும் ஒட்டாத, முகத்திலும் ஒட்டாத கறுப்பு-மஞ்சள் மேக்அப்? கண்கள் விரித்து, கன்னம் குழியச் சிரித்து, காதலனின் தோள் சாயும் வழக்கமான ஹீரோயின் பாத்திரம் தான் சனா மக்பூலுக்கு. 

உயிர் கொடுக்கும் உயிர் நண்பனாக லல்லு. சென்னை பாஷையில் இயல்பாகப்பேசி பலமுகம் காட்டி அசத்தும் டேனியல். கௌதமை விடவும் இருவருடைய பாத்திரப் படைப்பும் நடிப்பும் படத்தைத் தாங்கிப்பிடித்திருக்கிறது. ‘சியா’ குணசீலனாக, கூல் வில்லனாக சித்திக் மிகச்சிறப்பு.

ரங்கூன் - சினிமா விமர்சனம்``பணம் நிஜமல்ல வெங்கட்... நிஜம் மாதிரி”, ``பெரிய முடிவெடுக்க ஒரு சின்ன நேரம் போதும்” என்று கூர்மையான வசனங்கள் சுவாரஸ்யம். பறவைப் பார்வையில் பசுமை பர்மாவைக் காட்சிப்படுத்தியது, சண்டைக்காட்சிகளில் யதார்த்தம் ஏற்றியதும் என அன்ஷ் தருண் குமார் ஒளிப்பதிவு பலம். விஷால் சந்திரசேகரின் இசையில் ஜீவனில்லை.

ஹீரோவை சாதாரண இளைஞனாகக் காட்டிக்கொண்டே வந்து, ஒரு குழந்தைக் கடத்தலுக்கு சர்வ சாதாரணமாகத் தயாராவது... ஹீரோ மீதான அபிமானத்தை இயக்குநரே தீர்த்துக்கட்டிய இடம். நகைக்கடை முதலாளிகள் சங்கக் கூட்டத்தில்,  ஐந்தாறு பேர் உட்கார்ந்து கொண்டா தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள்? ஒரே பாட்டில் பணக்காரன் ஆவதைப்போல, தங்குதடைகளே இன்றி, கௌதமிடம் கடத்தல் தங்கம் வந்து குவிவது எல்லாம் தமிழ் சினிமாவில் மட்டுமே சாத்தியம்.

‘குறுக்குவழிகள் முன்னேற்றம் தராது’ என்பதை  இயல்பாகச் சொன்ன விதத்தில் ரங்கூனை ரசிக்கலாம்.

- விகடன் விமர்சனக் குழு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு