Published:Updated:

வீட்ல அன்பு மட்டுமே!

ம.கா.செந்தில்குமார், படங்கள்: ப.சரவணகுமார்

பிரீமியம் ஸ்டோரி

‘‘எங்க அசோசியேஷன்ல நூற்றுக்கணக்கான ஃபைட்டர்கள் இருக்காங்க. ‘இந்த ஃபைட்டர் மாஸ்டராகத் தகுதி உள்ளவர். இவரை எங்க கம்பெனி தயாரிக்கும் படத்துக்கு மாஸ்டர் ஆக்குறோம்’னு ஒரு தயாரிப்பு கம்பெனி அக்ரிமென்ட் பண்ணிக் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கணும். அப்படிக் கொடுத்தாதான், எங்க சங்கத்துல ‘ஆக்‌ஷன் டைரக்டர்’னு மெம்பர்ஷிப் கார்ட் கொடுப்பாங்க. அப்படித்  தன் கம்பெனியில் அக்ரிமென்ட் பண்ணி என்னை முதன்முதலில் மாஸ்டராக்கியவர் டைரக்டர் ஷங்கர் சார். ஆமாம், ஷங்கர் சார்தான் என் காட் ஃபாதர்’’ - சோபாவில் அமர்ந்தபடி ரிலாக்ஸாகப் பேசுகிறார், தமிழ் சினிமாவின் முன்னணி ஸ்டன்ட் மாஸ்டர் செல்வம் என்கிற சில்வா.

இயக்குநர் ஷங்கரால் ஸ்டன்ட் டைரக்டராக அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தாலும், இவரின் முதல் படம் எஸ்.எஸ்.ராஜமவுலியின் ‘எமதொங்கா’. இன்று 200 படங்களை நெருங்கிவிட்ட சில்வாவிடம் சண்டை பயிலாத ஹீரோக்களே தென் இந்தியாவில் இல்லை.

வீட்ல அன்பு மட்டுமே!

‘‘ ‘2.0’. முதல்முறையா ரஜினி படம் பண்றீங்க...’’

‘‘நான் பீட்டர் ஹெயின் மாஸ்டரின் அசிஸ்டென்ட். அவர்கிட்ட சேர்றதுக்கு முன்னவரை எனக்கு சினிமாவுல ஒண்ணுமே தெரியாது. நிறைய படங்கள்ல அவர்கிட்ட அசிஸ்டென்டா வொர்க் பண்ணிட்டேன். ‘மாஸ்டராகலாம்’னு நினைச்சு வெளியில முயற்சி பண்ணிட்டு இருந்த நேரம். அப்ப எங்க மாஸ்டர் ஒருபக்கம் ரஜினி சாரின் ‘சிவாஜி’, இன்னொரு பக்கம் கமல் சாரின் ‘வேட்டையாடு விளையாடு’, விஜய், அஜித் சார் படங்கள், தெலுங்கில் மகேஷ்பாபு படம்னு பயங்கரப் பரபரப்பா இருந்தார். ‘நாம மாஸ்டரான பிறகு, ரஜினி சார், கமல் சாருடன் வொர்க் பண்ண சான்ஸ் கிடைக்குமான்னு தெரியலை. அதனால, அவங்களோட இந்த இரண்டு படங்கள்ல மட்டும் நாம வொர்க் பண்ணிட்டு வந்துடலாம்’னு நினைச்சு நானே மாஸ்டர்கிட்ட  போய்க் கேட்டு இந்தப் படங்கள்ல வொர்க் பண்ணினேன். ‘சிவாஜி’ பண்ணும்போது ரஜினிசார்கூட நெருங்கிப் பழக வாய்ப்புக் கிடைச்சுது. அதுதான் நான் அசிஸ்டென்டா வொர்க் பண்ணின கடைசிப் படம். பிறகு நான் மாஸ்டராயிட்டேன்.’’

‘‘இப்போ ரஜினி கூடவே வொர்க் பண்ற அந்த அனுபவம்?’’

‘‘ரஜினி சார் என்னைப் பார்த்ததும், ‘ஓ நீங்க ‘சிவாஜி’யில அசிஸ்டென்டா பண்ணுனீங்கள்ல’னு கரெக்டா ஞாபகம் வெச்சுக் கேட்டார். ‘மாஸ்டர் இந்த ஷாட் ஓகேவா? டைரக்டர் சாருக்கு ஓகேவான்னு கேட்டுச் சொல்லுங்களேன்’னு எப்பவும் ஆர்வமா நிற்பார். என் அசிஸ்டென்ட்ஸ்ல பலர் 25 வயசே உள்ள சின்னப்பசங்க. அவங்கள்ட்டபோய், ‘நீங்க இன்னொரு முறை பண்ணிக்காட்டுங்க. நான் உங்களைப் பார்த்துப் பண்ணிடுறேன்’ம்பார். ‘நீங்க பண்றதும் நல்லாதான் சார் இருக்கு’னு சொன்னா, ‘இல்லல்ல... நீங்க பண்றது அதைவிட நல்லா இருக்கு’னு சொல்லி ட்ரை பண்ணுவார். பாசிட்டிவான பேச்சு, தொழில்மேல உள்ள பக்தினு அவர் இருக்கிற இடமே அப்படி ஒரு வைப்ரேஷன்ல இருக்கும்.’’

‘‘உங்க காட்ஃபாதர் இயக்குநர் ஷங்கர் என்ன சொல்றார்?’’

‘‘ ‘எப்படி இவரால் இப்படி யோசிக்க முடியுது’ன்னு ஷங்கர் சார்கிட்ட பிரமிச்ச விஷயங்கள் நிறைய உண்டு.  ‘சார் நாம ஸ்டோரி போர்ட் போடணும். சீன் பேப்பர் கொடுங்க’ன்னு ஒருமுறை கேட்டேன். ‘அதைப்பார்த்தா, உங்களுக்குப் புரியாது செல்வம். சமயத்தில் எழுதின எனக்கே புரிய மாட்டேங்குது’ன்னார். ஆனாலும் வாங்கிப் பார்த்தேன். மிரண்டுட்டேன். ஒரு சீனுக்கு 480 ஷாட்ஸ் நோட் பண்ணியிருந்தார். நார்த் ஈஸ்ட்ல இந்த ஆங்கிள்; சவுத் வெஸ்ட்ல இந்த ஆங்கிள்; கேரக்டர் ‘ஏ’ இப்படி வரணும்; ‘பி’ அப்படி வரணும்; இது டாப் ஆங்கிள்னு நிறைய... இது எல்லாமே தனி ஆளா ஒரு ரூமுக்குள்ள உட்கார்ந்து யோசிச்சு எழுதின விஷயங்கள். ‘சார் போன ஜென்மத்துல நீங்க ராமானுஜரா பிறந்து இருப்பீங்கனு நினைக்கிறேன்’னேன். சிரிச்சுட்டார்.

 ‘அந்நியன்’ பண்ணும்போது நான் பீட்டர் ஹெயின் மாஸ்டரோட அசிஸ்டென்ட். ஃபைட் சீக்வென்ஸ்ல ரோப் கட்டாகி மேல இருந்து 10 ஃபைட்டர்கள் கீழ விழுந்துட்டாங்க. நாங்க ஓடிப்போய் தூக்கிட்டு இருக்கோம். இவர் சின்னக்குழந்தை மாதிரி கேவிக்கேவி அழுதுகிட்டு ஓடிவந்தார். இந்தியாவின் மிகப்பெரிய இயக்குநர், ஆக்‌ஷன் சீக்வென்ஸை எப்படி எடுக்கணும்னு மத்தவங்களுக்கு முன்னுதாரணமா இருக்கிறவர், பெர்சனலா இவ்வளவு சாஃப்டான மனிதரா இருக்காரேனு ஆச்சர்யமா இருந்துச்சு. அதுதான் ஷங்கர் சார்.’’

வீட்ல அன்பு மட்டுமே!

‘‘இப்ப நடிக்கவும் செய்றீங்க. நடிகர் சில்வாவுக்கு என்ன ரெஸ்பான்ஸ்?’’

‘‘சாதாரண செல்வத்துக்கு இருந்த ரெஸ்பான்ஸை முதல்ல சொல்றேன். முழி, முடினு இருக்கிற என்னைப் பார்த்தாலே முதல்ல போலீஸ் பிடிச்சிடும். அதுவும் எப்படி, ‘டேய் இங்க வா. என்ன பண்ற, சினிமாவா? சினிமாவுல என்ன பண்ற’னு ஆயிரத்தெட்டுக் கேள்விகள். பிறகு மாஸ்டர் ஆனபிறகும், தனியா போகும்போது, அதே ‘டேய்’ விசாரிப்புகள்தான். ‘ஃபைட் மாஸ்டர்’னு சொன்னதும், ‘ஓ ஃபைட் மாஸ்டரா? எந்தப் படத்துல சார் இருக்கீங்க’னு கேட்பாங்க. ‘மாஸ்டர்’னு சொன்னபிறகு, ‘சார்’ சேர்க்க ஆரம்பிச்சாங்க. ஆனா இப்ப ஆன் ஸ்கீரின்ல வந்தபிறகு, ‘எப்படி சார் இருக்கீங்க. இப்ப என்ன படம் போயிட்டு இருக்கு’னு ஏதோ ஃப்ரெண்ட் மாதிரி விசாரிக்கிறாங்க. ஒருகாலத்துல என்னைப் பார்த்தாலே பசங்க மிரளுவாங்க. இன்னைக்கு செல்ஃபி எடுத்துக்கிறாங்க. அந்த ‘வாடா போடா’, இந்த ‘வாங்க சார் போங்க சார்’ங்கிற இரண்டு எக்ஸ்ட்ரீமையும் அனுபவிச்சுப் பார்த்தவங்களால மட்டும்தான், இந்த சந்தோஷத்தை உணர முடியும்.’’

‘‘உங்க ஃபேமிலி...’’

‘‘ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் க்ருஷன், ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொண்ணு அமிர்த ஷர்ஷினினு சின்னக் குடும்பம். மனைவி மங்கையர்க்கரசி ஹவுஸ் ஒய்ஃப். வீட்ல எந்த ஆக்‌ஷனும் இல்லாம இருக்கிறதால, நான் ஜாலியா ஊர்ஊரா சுற்றி ஃபைட் பண்ணிட்டு இருக்கேன். அவங்க அன்போட இருக்கிறதால, நான் வம்பு பண்ணிட்டு இருக்கேன்னும் சொல்லலாம். ஆமாம், இவங்களாலதான் என் வாழ்க்கை அழகாயிருக்கு.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு