Published:Updated:

“அரும்பாடுபட்டு பார்ட் 2 எடுக்கப்போறோம்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“அரும்பாடுபட்டு பார்ட் 2 எடுக்கப்போறோம்!”
“அரும்பாடுபட்டு பார்ட் 2 எடுக்கப்போறோம்!”

பா.ஜான்சன், படம்: தி.குமரகுருபரன்

பிரீமியம் ஸ்டோரி

``பையன் பிறந்திருக்கானாமே” எனப் படத்தில் கொண்டி கதாபாத்திரத்தில் நடித்த ஆறுபாலாவுக்கு வாழ்த்துச் சொல்லியபடி வந்தது ‘ஒரு கிடாயின் கருணை மனு’ டீம்.  நிஜ கிராமத்துக்கு ட்ரிப் அழைத்துச் சென்றவர்களைச் சந்தித்துப் பேசவைக்க, படத்தில் பார்த்த அதே நக்கல், நையாண்டி நேரிலும்!

 ``நான் இயக்குநர் மணிகண்டன்கூட சேர்ந்து ஸ்க்ரிப்ட் வேலைகள் செய்திட்டிருந்தேன். `மீண்டும் ஒரு புன்னைகை’னு ஒரு குறும்படம், பிறகு `காக்கா முட்டை’ படம் ரெண்டிலும் அவர்கிட்ட வேலைசெய்தேன். அப்புறம் இந்தப் படத்துக்கான ஸ்க்ரிப்ட் வேலைகளை ஆரம்பிச்சுட்டேன். கதை ரெடியானதும் விதார்த்கிட்ட சொன்னேன். இதோ இப்போ எல்லாம் நல்லபடியா நடந்திட்டிருக்கு” என அறிமுகம் கொடுத்த இயக்குநர் சுரேஷ் சங்கையாவை வம்புக்கு இழுக்கிறார் விதார்த்.

``எல்லோரும் `இது நிஜமா நடந்த சம்பவமா?’னு கேட்டாங்களே... நீங்க அதுக்கு இப்போ பதில் சொல்லியே ஆகணும்’’ என சுரேஷை மடக்கினார் விதார்த். ``லாரி பிடிச்சு சாமி கும்பிடப் போறது வரைக்கும் நிஜமா நடந்ததுதான். ஆனா, ஆக்சிடென்ட் எதுவும் நடக்கலை. அப்படி நடந்தா, எப்படி இருக்கும்னு யோசிச்சு, திரைக்கதை எழுதினேன். இரானியன் படம்னு நினைக்கிறேன். படத்தோட பேரு ஞாபகம் இல்லை. அதில் நாலு பேரு சேர்ந்து ஒரு கொலை பண்ணிட்டுத் தப்பிச்சிருவாங்க. `நாலு பேரை வெச்சுக்கிட்டே சுவாரஸ்யமா கதை சொல்லும்போது, ஒரு ஊரே இருந்தா எப்படி இருக்கும்?’னு ஒரு ஸ்பார்க் அடிச்சது. ஆனா, அதைத் திரைக்கதையா எழுதினதுதான் ரொம்பக் கஷ்டமான விஷயமா இருந்தது. ஒரு கேரக்டர் என்ட்ரியாகும்... இன்னொரு கேரக்டர் வெளியே போகும்னு ஏதாவது ஒண்ணு நடந்துகிட்டே இருக்கும்” என நிறுத்தியவர்,
“நீங்கதான் சோலோ ஹீரோவா நடிச்சுக்கிட்டுருக்கீங்களே, இந்தக் கதையில் 40 கதாபாத்திரங்களில் ஒருத்தரா நடிக்க எப்படிச் சம்மதிச்சீங்க?” என விதார்த்திடம் கேட்க...

“அரும்பாடுபட்டு பார்ட் 2 எடுக்கப்போறோம்!”

“நிறைய பேர் இதைக் கேட்டாங்க. இருந்தாலும் இப்படி ஒரு கேள்வி வரட்டும்னு நடிச்சதுதான் இந்தப் படம். நல்ல புத்தகம் வாசிச்சதும் எவ்வளவு சந்தோஷம் கிடைக்குமோ, அதே அளவு சந்தோஷம் இந்தப் படத்துல நடிச்சப்போ கிடைச்சது. `எதிர்காலத்துல என் பிள்ளைங்க நான் நடிச்ச படங்களைப் பார்க்கும்போது ‘ஒரு கிடாயின் கருணை மனு’வை மிஸ் பண்ணக் கூடாது’ன்னு தோணுச்சு” எனக் கண்ணடிக்கிறார் விதார்த்.


 “படத்தில்  `நைட் எஃபெக்ட் ஷூட் பண்ணினது எப்படி?’னுதான் பல பேர் கேட்கிறாங்க. சுரேஷ்  சார் கதை  சொல்லும்போது `இந்த சீன்ல நாப்பது பேர் இருப்பாங்க’னு ஆரம்பிச்சார்.  அப்புறம் `நைட் எஃபெக்ட் இருக்கு. அதிலும் நாப்பது பேர் இருப்பாங்க’னு சொல்லிக் கடைசியா பார்த்தா, படம் முழுக்க அந்த நாப்பது பேரும் எப்பவுமே இருந்தாங்க. அத்தனை பேருக்கும் எங்கே நிற்கணும், என்ன பண்ணணும்னு ப்ளான் பண்றது, ஒரே லொக்கேஷன்ல ரிப்பீட் ஆகாத மாதிரி எப்படி எடுக்கிறதுனு ரெண்டுமே பெரிய சவாலா இருந்தது. நைட் எஃபெக்ட்ல லைட்டே இல்லாம பண்ணலாம்னுதான் நினைச்சேன். ஆனா, நிலா வெளிச்சம் எப்பவும் ஒரே மாதிரி இருக்காதுனு ரெண்டு லைட் சோர்ஸ் வெச்சுக்கிட்டுப் பண்ணோம். தரமான அவுட்புட் கிடைச்சது” என்கிறார் ஒளிப்பதிவாளர் சரண்.

“ஒரு நிமிஷம்... நீங்க ‘நேரம்’ படத்துல ‘காதல் என் உள்ளே வந்த நேரம்...’னு ஒரு பாட்டு வரும்... கேட்டிருக்கீங்களா?” என சுரேஷ் கேட்க, “ஆமா, அது நல்ல பாட்டாச்சே” என்றார் பாலா. “அதை எழுதினது நான்தான்” என்றபடி நுழைகிறார் பாடலாசிரியர் வேல்முருகன். “படத்தில் நான்கு பாடல்கள். நான்தான் எழுதியிருக்கேன். இதுல `கொலசிந்து...’னு ஒரு பாடல் பண்ணியிருக்கோம். இதுக்கு முன்னாடி இளையராஜா சார் அந்த மாதிரி செய்திருக்கார். அதுக்குப் பிறகு இதுதான்’’ என்ற வேல்முருகன், சுரேஷ் சங்கையாவிடம்...

``ஆட்டை அப்படியே அவுத்து விட்டுட்டீங்களே... பார்ட் 2 ஏதாவது ப்ளான் பண்ணியிருக்கீங்களா?’’ எனக் கேட்க, ``பார்ட் 2 எதுவும் ப்ளான் பண்ணலை. ஆனா, ப்ரீக்குவல் மாதிரி பண்ணலாம்னு ஐடியா இருக்கு. அதாவது விதார்த் கல்யாணத்துக்கு முன்னாடி நடந்த கதையை வெச்சு பண்ற மாதிரி...”  என்றார். “அந்தப் படமாவது வெயில் இல்லாத ஊர்ல எடுங்க’’ என விதார்த் சொல்ல, ``ச்சேசே...கம்மியா வெயில் இல்லாத மாதிரி ராம்நாடு பக்கம் ப்ளான் பண்ணியிருக்கேன். அதையும் அரும்பாடுபட்டு எடுத்துடுவோம்’’ எனச் சொல்லி சுரேஷ் சிரிக்க, மொத்த டீமும் வெடிச்சிரிப்பு சிரிக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு