Published:Updated:

மரகத நாணயம் - சினிமா விமர்சனம்

மரகத நாணயம் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
மரகத நாணயம் - சினிமா விமர்சனம்

மரகத நாணயம் - சினிமா விமர்சனம்

தொட்டாலே காவு வாங்கும் மரண நாணயமே,  ‘மரகத நாணயம்.’

குட்டிக் கடத்தல்காரர் ராமதாஸிடம் சின்னச் சின்ன அசைன்மென்ட்கள் செய்கிறார்கள் ஆதியும் டேனியலும். ‘பெரிய அசைன்மென்ட், பெரிய அமெளன்ட்’ என்ற லட்சியத்தோடு, மரகத நாணயத்தை எடுக்க மைம் கோபியோடு டீல் போடுகிறார்கள். இரும்பொறை மன்னரின் ஆவி, மரகத நாணயம் எடுக்கவருபவர்களை எல்லாம் தீர்த்துக்கட்டுகிறது. ஆதி ஆவியானாரா, வெற்றிகரமாய் மரகத நாணயத்தை எடுத்தாரா என்பதை காமெடி கலந்து சொல்லி இருக்கிறார்கள்.

மரகத நாணயம் - சினிமா விமர்சனம்

கொஞ்சம் காமெடி, கொஞ்சம் சென்டிமென்ட், கொஞ்சம் த்ரில் என்று கொஞ்ச கொஞ்சமாய் இருக்கும் வேலைகளைச் செவ்வனே செய்திருக்கிறார் ஆதி. நாயகி நிக்கி கல்ராணிக்கு ஒரு ‘வித்தியாசமான’ வேடம்.  அவர் பண்ணுகிற தரலோக்கல் ரகளைகள் அடடடா!

டேனியல், எம்.எஸ்.பாஸ்கர், ராமதாஸ், அருண் காமராஜ் என்று சிரிக்க வைப்பதற்கென்றே ஏராளமான பேர். கிச்சுகிச்சு அசைன்மென்டை ஆளுக்குக் கொஞ்சம் பிரித்து மேய்ந்திருக்கிறார்கள். ஆனந்தராஜும் அவருக்கு அடியாளாக வரும் முருகானந்தமும் மரண ரோஃபல் கப்புள்!

 ‘அவன் மேட் இன் சைனா. எப்பயாச்சும் வெடிப்பான்; நான் மேட் இன் இண்டியா. எப்ப வேணா வெடிப்பேன்’ மாதிரியான வசனங்கள் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கின்றன. திபி நினன் தாமஸின் இசையில் ஆனந்தராஜுக்கு வரும் பின்னணி இசை கவர்கிறது. பி.வி.ஷங்கரின் ஒளிப்பதிவில் சேஸிங் காட்சிகளில் தீ பறக்கிறது!

படத்தின் முதல் நாற்பது நிமிடங்களில் அடுத்தடுத்து சம்பவங்களை அடுக்கும்போது, இதுதான் கதை என்று நாம் உள்வாங்குவதற்குள் கதை சொல்லிக் கொண்டேஏஏஏ... போகிறார்கள்.

மரகத நாணயம் - சினிமா விமர்சனம்



ஆதி - நிக்கி காதல் என்ன ரகம் என்று நாம் உணர்வதற்குள் ஒரு காமெடி, ராமதாஸின் மரணத்தில் ஒரு சென்டிமென்ட், ஆனந்தராஜ் வில்ல அறிமுகம் என்று திரைக்கதை மூச்சுமுட்ட வைக்கிறது. இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை யாராவது செத்துக்கொண்டேயிருக்கிறார்கள்.  மரணத்தை வைத்து காமெடி பண்ணுவதா சீரியஸாக அழுவதா என்பதிலும் இயக்குநருக்குக் குழப்பம். இருந்தும், எல்லா ஓட்டைகளையும் சிரிப்பு சிமென்ட்டால் பூசி மெழுகியிருக்கிறார்!

இரும்பொறை மன்னரின் ஆவி குறித்தும் அவருடைய ஆவி வந்த லாரி குறித்தும் ஆரம்பத்திலிருந்தே ஏராளமான பில்டப். ஆனால், அது ரிவர்ஸ் எடுக்கவே முடியாமல் திணறுகிறது. சின்னப் பாலத்தில் மாட்டிக் கொண்டு வெளியே வரமுடியாமல் தடுமாறுகிறது.

படமும் அந்த ஆவி வண்டி போலத்தான் இருக்கிறது. ஆனாலும்,  குறைகளை மறக்கடித்து சிரிக்கவைத்துவிடுவதால், சீறுகிறது. 

- விகடன் விமர்சனக் குழு