
வனமகன் - சினிமா விமர்சனம்
காட்டுவாசிக்கும் நாட்டுவாசிக்குமான காதலும் காட்டைக் கைப்பற்ற நினைக்கும் கார்ப்பரேட் சூழ்ச்சியும்தான் ‘வனமகன்.’
நவீன யுக மாற்றங்கள் எட்டிவிடாத காட்டில் இருந்து வரும் மனிதன், பரபரப்பான நகரத்திற்குள் நுழைகிறார் என்பது ஹை வோல்டேஜ் ஒன்லைன். ஆனால், அதைத் திரைக்கதை வடிவத்திற்குள் கொண்டுவர சிரமப்பட்டிருப்பதால், ஜெயம்ரவியைப்போலவே திரைக்கதையும் அங்குமிங்கும் அலைபாய்ந்து தாவிக்குதிக்கிறது.
படம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, ‘டார்சான்’, ‘ஜார்ஜ் ஆஃப் தி ஜங்கிள்’. `காட் மஸ்ட் பி கிரேஸி’ `என்சினோ மேன்’ போன்ற ஹாலிவுட் படங்கள் நம் மனசுக்குள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதனாலேயே படம் உருவாக்கவேண்டிய தாக்கம் கூடிவரவில்லையே விஜய்.

காட்டுமனிதனாக முரட்டு உருவத்துடன் மிரட்டுகிறார் ஜெயம் ரவி. ஹீரோயின் சாயிஷா...அழகு, நடிப்பு, நடனம் என ஆல் ஏரியாவிலும் அப்ளாஸ் அள்ளுகிறார். ஆனால் அவர் காட்டுக்குள் உருண்டு புரண்டாலும் மேக்கப்புடன் ஃப்ரெஷ்ஷாகவே இருப்பது எப்படி?
‘சிட்டிக்குள்ள கூகுள் மேப்னா, காட்டுக்குள்ள ஈகிள் மேப்’ என்று சில இடங்களில் மட்டுமே தம்பிராமையா `காமெடி’ வேலை செய்கிறது. நெகட்டிவ் நிழலுடன் வரும் பிரகாஷ்ராஜ், வனவாசி கேரக்டருக்கு ஏற்ற உடலமைப்புடன் பொருந்தும் வேலராமமூர்த்தி எனப் பொருத்தமான தேர்வுகள்.

டி.வி-யில் வரும் புலி காட்சிகளைப் பார்த்துவிட்டு, நிஜத்தில் புலி வந்துவிட்டதென அம்பெய்தி டி.வி-யை உடைப்பது, நீச்சல் குளத்தில் இருக்கும் தண்ணீரைக் குடித்துவிட்டு துப்புவது, ஏ.சி ரூம் பிடிக்காமல் ஜன்னலைத் திறந்துவைப்பது என்று ஆங்காங்கே சில காட்சிகள் தவிர்த்து, காட்டுக்குள் ஆப்பிள், கமலா ஆரஞ்சு, சாத்துக்குடி எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்கிற, ‘பழமுதிர்ச்சோலை’ அந்தமானில் எப்படி என்பது போன்ற லாஜிக் கேள்விகள்தான் ஏராளம்!
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் ‘யம்மா ஏ அழகம்மா’, ‘பச்சை உடுத்திய காடு’, ‘டிஜிட்டல் தமிழச்சி’ பாடல்கள் கவர்கின்றன. பின்னணி இசை படத்தின் நேட்டிவிட்டிக்கு எதிராக ஹைஃபையில் அதிர்கிறது.
பழங்குடியின மக்களின் வாழ்விடம், ஜெயம்ரவி தூங்கும் மரம் எனக் கலை இயக்குநர் ஜெயஸ்ரீ கவனிக்க வைக்கிறார். தொழிற்சாலை, காடு என ஏரியல் வியூக்களில் திருநாவுக்கரசின் கேமரா கிரிஸ்டல் க்ளியர்.
‘உலகெங்கும் வாழும் பழங்குடி ஆதிவாசி மக்களுக்கு சமர்ப்பணம்’ என டைட்டில் கார்டில் காண்பிக்கின்றனர். அந்த அளவுக்குக்கூட படத்தில் பழங்குடிகளுக்கு நியாயம் சேர்க்கவில்லை.
- விகடன் விமர்சனக் குழு