
பரிசல் கிருஷ்ணா, படம்: கே.ராஜசேகரன்
நீலநிறப் புடவையில் இன்னமும் ‘மயில்’ மாதிரிதான் இருக்கிறார் ஸ்ரீதேவி. ‘ஃப்ரேம் நல்லா இருக்கு. ஆனா லைட்டிங் கரெக்டா இல்லை. அந்த லைட்டை ஆஃப் பண்ணிடுங்க. இந்த லைட் போதும். ஓகே... இது கரெக்டா இருக்கு’ என்று தன் கையில் இருக்கும் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டே சொல்கிறார். தெளிவான தமிழில் அளவாகப் பேசுகிறார் ஸ்ரீதேவி.
`` ‘மாம்’ படத்துல என்ன ஸ்பெஷல்?’’
``நான் ஒரு அம்மா. அதனால அந்த கேரக்டரோட வலி என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது. இது அம்மாக்களுக்கான படம் மட்டும் அல்ல. டீனேஜர்ஸுக்கான படம். ஈடில்லாத அந்த அம்மாவின் அன்பு பற்றி த்ரில்லிங், சஸ்பென்ஸ் கலந்து சொல்லியிருக்கோம். ரொம்ப வித்தியாசமான படம்லாம் இல்லை. சிம்பிளான படமா, தமிழ் ரசிகர்களுக்குப் பிடிச்ச படமா இருக்கும்.”
“நவாஸுதீன் சித்திக்கி, உங்ககூட நடிச்சது பற்றிப் பெருமையா சொல்லியிருந்தாரே...”
“நான் அவர்கூட நடிச்சதைப் பெருமையா நினைக்கிறேன். அப்படித்தான் சொல்லணும். அற்புதமான நடிகர். அவரைத் தவிர யாரும் அந்த ரோலுக்கு நியாயம் சேர்த்திருக்க முடியாது.”

“சினிமாவில் டாப்ல இருக்கிற நீங்க இப்பவும் ஒரு அறிமுக இயக்குநர் படத்துல நடிக்கிறீங்களே... எப்படி?’’
“என்கிட்டவந்து கதை சொல்லி, என்னை கன்வின்ஸ் பண்றவங்களை ஜஸ்ட் லைக் தட் அறிமுக இயக்குநர்கள்னு சொல்லிட முடியாது. `இங்கிலீஷ் விங்கிலீஷ்’, கெளரிக்கு முதல் படம்தான். ஆனால் பவர்ஃபுல் கதை. அதேபோல் ‘மாம்’ படம் வந்தபிறகு, இயக்குநர் ரவி நிச்சயம் பேசப்படுவார். திறமையானவர்களுடன் வேலை செய்றது எனக்கு எப்பவுமே பிடிக்கும்.”
``ஏ.ஆர்.ரஹ்மான்தான் `மாம்’ படத்துக்கு இசை. அவருடன் பணியாற்றிய அனுபவம் எப்படி இருக்கு?’’
“இந்தப் படம் பற்றிப் பேசுறப்பவே டைரக்டர் ரவி, ரஹ்மான்தான் இதுக்கு இசையமைக்கணும்னு சொன்னார். அவரோட இசை மூலமா இந்தப் படத்தை அடுத்த லெவலுக்குக் கொண்டு போயிருக்கார்.”
“சென்னையை மிஸ் பண்றீங்களா?”
“ஹலோ... என் வீடு, தோட்டம் எல்லாம் இங்கதாங்க இருக்கு. அடிக்கடி சென்னை வருவேன். என் தங்கை, சொந்தக்காரங்க எல்லாம் இங்கதான் இருக்காங்க.”
“ஜான்வி, குஷி எப்படி இருக்காங்க.. அவங்களுக்கு சினிமாத்துறைக்கு வரும் ஆர்வம் உண்டா?”
“நல்லா இருக்காங்க. ஜான்வி சினிமாவுக்கு வர்றது உங்க எல்லாருக்கும் சீக்கிரமே தெரியவரும்.”
“தமிழ்ப்படங்கள் பார்க்கிறீங்களா?”
“நேரம்தான் பிரச்னை. ஆனா காமெடி சேனல்ஸ் விடாம பார்ப்பேன். செந்தில் எனக்கு ரொம்பப் பிடிச்ச நடிகர்.”
“ஜெயலலிதா மரணம்...”
“என்னை ரொம்பவும் பாதிச்ச மரணம் அது. அதில் இருந்து என்னால் அவ்வளவு சீக்கிரத்துல மீளவே முடியல.”
“ஹேமமாலினி, நக்மா, குஷ்பு, இப்படிப் பலரும் அரசியல்ல இறங்கிட்டாங்க. நீங்க இத்தனை வருஷமா ஃபீல்டுல இருக்கீங்க. அரசியல் ஆசை இல்லையா?”
“எதுக்குங்க? வீட்ல இருந்துட்டு குழந்தைகளைப் பார்த்துட்டு நிம்மதியா இருக்கலாமே... எனக்கு அரசியல்லாம் வேண்டாம். தட்ஸ் நாட் மை கப் ஆஃப் டீ.”
“புதுசா நடிக்கவரும் நடிகைகளுக்கு உங்கள் அட்வைஸ் என்ன?’’
“அய்யய்யோ.. அவங்ககிட்டதான் நான் நிறையக் கத்துக்கணும். ரொம்பத் திறைமையோட வர்றாங்க. ஹார்ட் வொர்க், டெடிகேஷன்லாம் ரொம்பவே இருக்கு. முதல் படத்துல இருந்தே, அனுபவ நடிப்பை வெளிப்படுத்துறாங்க. நாங்க நடிக்க வந்துட்டு கத்துகிட்டோம். அவங்கள்லாம் டான்ஸ், ஃபைட், காமெடினு எல்லாம் கத்துக்கிட்டு நடிக்க வர்றாங்க. ரொம்பவே நல்லா பண்றாங்க.”