Published:Updated:

இது கல்பனாவின் கதை!

இது கல்பனாவின் கதை!
பிரீமியம் ஸ்டோரி
இது கல்பனாவின் கதை!

கு.ஆனந்தராஜ், படங்கள்: ரா.வருண் பிரசாத்

இது கல்பனாவின் கதை!

கு.ஆனந்தராஜ், படங்கள்: ரா.வருண் பிரசாத்

Published:Updated:
இது கல்பனாவின் கதை!
பிரீமியம் ஸ்டோரி
இது கல்பனாவின் கதை!

“ ‘கடவுள் தந்த அழகிய வாழ்வு, உலகம் முழுதும் அவனது வீடு, கண்கள் மூடியே வாழ்த்துப்பாடு’ என்று  ‘மாயாவி’ படத்தில் நான் பாடின இந்தப் பாட்டைப்போலவே, இந்த வாழ்க்கையை முயற்சிகளால மீட்டெடுத்து வாழ்ந்துட்டு இருக்கேன்...’’ - நெகிழ்ச்சியாகப் பேசுகிறார் பாடகி கல்பனா ராகவேந்தர்.

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், பின்னணிப் பாடகி எனப் பன்முகங்களைக் கடந்து, தற்போது மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சைகை மொழி ஆசிரியை என்ற சேவைப் பணியில் மையம் கொண்டிருக்கிறார். இடைப்பட்ட வாழ்வு, வறுமையின் உச்சம் முதல் தற்கொலை முயற்சிவரை இவருடன் விளையாடியிருக்கிறது.

இது கல்பனாவின் கதை!

“தெலுங்குல குழந்தை நட்சத்திரமா அறிமுகமாகி ‘புன்னகை மன்னன்’, ‘ஆண்பாவம்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களிலும் நடிச்சுருக்கேன். ஐந்தரை வயசுல பாடகி வாய்ப்பும் கிடைக்க, நிறைய தெலுங்கு, தமிழ்ப் படங்கள்ல பாடினேன். ‘போடா போடா புண்ணாக்கு’ பாட்டு எனக்கு நல்ல அடையாளம் கொடுத்துச்சு. அடுத்ததா டப்பிங் ஆர்ட்டிஸ் டாகவும் என் சினிமா வாழ்க்கை தொடர்ந்தது. அப்பா ராகவேந்தர் ஆரம்பக் காலத்துல மேடைப் பாடகராவும், பிற்காலத்துல இசையமைப் பாளராவும், ‘வைதேகி காத்திருந்தாள்’ (ரேவதியின் அப்பா), `சிந்து பைரவி’ உள்ளிட்ட பல படங்களில் நடிச்சு நடிகராவும் புகழ்பெற்றார். அம்மாவும் மேடைப் பாடகியா இருந்து, சினிமாவில் கோரஸ் பாடகியாவும் இருந்தவங்க.

பி.சி.எஸ் படிச்சு, எம்.சி.ஏ முடிக்கிறதுக்குள்ள மணிசர்மா, தேவிஸ்ரீ பிரசாத், கீரவாணி உள்ளிட்ட முன்னணி தெலுங்கு மியூஸிக் டைரக்டர்களிடம் முந்நூறுக்கும் அதிகமான பாடல்களைப் பாடினேன். அப்போ தமிழ்ல `நரசிம்மா’ படத்துல ‘லா லா நந்தலாலா’ பாட்டு எனக்கு பிரேக் கொடுத்துச்சு. தொடர்ந்து ‘பெண்ணே நீயும் பெண்ணா’, ‘கடவுள் தந்த அழகிய வாழ்வு’, ‘காத்தாடி போல ஏண்டி என்னைச் சுத்துறே’, ‘ஒரு சின்ன வெண்ணிலா போலே’, ‘மதுரை ஜில்லா மச்சான்தாண்டா’னு பல ஹிட் பாடல்களைப் பாடினேன். ஆனாலும், அந்த சிங்கர் கல்பனா நான்தான்னு, என்னைத் தெரிஞ்ச பலருக்கும் தெரியாது. அந்த அளவுக்கு அமைதியா வாழ நினைச்ச என்னை, காதல் மணவாழ்க்கையோடு மல்லுக்கட்ட வெச்சுடுச்சு.

இசைத்துறையைச் சேர்ந்த ஒருத்தரைக் காதலிச்சு, 2005-ம் வருஷம் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். கருத்து வேறுபாடுகளால அந்த வாழ்க்கை சீக்கிரமே விவாகரத்துல முடிஞ்சிடுச்சு. அதைத் தாங்கிக்க முடியாம வீட்டுக்குள்ளேயே முடங்கி, அழுகையே கதின்னு கிடந்தேன். அந்த மன அழுத்தத்தால் உடல் பலவீனமாகி, சருமப் பிரச்னை, குரல் சேதாரம்னு உருக்குலைஞ்சுப் போயிட்டேன். என்னோட இசைப்பயணமும் முடிஞ்சுப்போச்சு. சாப்பாட்டுக்கே சிரமப்பட்ட அந்தக் கஷ்டமான சூழலைக் கிரகிச்சுக்கிறதுக்குள்ள, கணவர் மறுமணம் செய்துகிட்ட செய்தி என்னை இன்னும் நொறுக்கிடுச்சு.

இது கல்பனாவின் கதை!

தற்கொலை செய்ய முடிவெடுத்தேன். ஆனா, `எந்தத் தப்பும் செய்யாத என் பெண் பிள்ளை சாரா அங்கீதாவை ஏன் அநாதையாக்கணும்?’ என்ற ஒற்றைக் கேள்வி, என் உயிரைப் பிடிச்சு நிறுத்துச்சு. ‘உலகத்துலயே வேற யாருக்கும் நடக்காத விஷயமா எனக்கு நடந்திருக்கு? அத்தனையையும் கடந்து, நம்ம புள்ளைக்காக மீண்டு வரணும்’னு நினைச்சேன். அதுக்காக, என்னோட செகண்ட் இன்னிங்ஸா எந்த சிங்கரும் எடுக்கத் துணியாத, பலரும் விமர்சித்த, கண்டித்த, ஏளனமா பேசின ஒரு முடிவை எடுத்து, அவங்களுக்கு எல்லாம் என் முடிவு சரின்னு நிரூபிச்சேன்.

மலையாள ஏசியா நெட் சேனலோட ‘ஐடியா ஸ்டார் சிங்கர்’ நிகழ்ச்சியில், சினிமா வாய்ப்புக்காகப் போட்டிபோடும் போட்டி யாளர்களோடு, 25 வருட சினிமா அனுபவம் கொண்ட நானும் கலந்துகிட்டேன். காரணம், வெற்றியாளருக்கு அறிவிக்கப் பட்டிருந்த பரிசான ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு. அப்போ அது என் லட்சியம், கனவெல்லாம் இல்லை... புதைகுழியில மூழ்கிக்கிட்டிருந்த எனக்குக் கிடைச்ச ஒரே பிடிமானம். ஆனா, பலரும் என் முடிவைக் கேவலமா பேசினதோட, ‘இனி எந்த முன்னணி இசைமைப்பாளரும் உனக்கு வாய்ப்புக் கொடுக்க மாட்டாங்க’னு சொல்லித் திட்டினாங்க. கோர்ட்ல, ‘கணவர்கிட்ட இருந்து ஜீவனாம்சமா ஒரு பைசாகூட வேண்டாம்’னு சொன்ன அதே வைராக்கியம், துணிச்சலோட என் திறமையை நம்பிக் களமிறங்கினேன். மொழி தெரியாத பாடல்களை மனப்பாடம் பண்ணிப் பாடினேன். அந்த ஒன்றரை வருஷப் பயணத்தின் முடிவில், முதல் பரிசை வென்றேன். ‘36 வயதினிலே’ படத்தில் நான் பாடின ‘சிறகுகள் வீசியே சுதந்திர ஆசையில் போகிறேன்... நான் போகிறேன்’ பாடலைப்போல என் செகண்ட் இன்னிங்ஸ் சிறப்பாக ஆரம்பிச்சுது.

ஆனா, கிடைச்ச வெற்றியை சரியா என்னால பயன்படுத்திக்க முடியல. அதைத் தொடர்ந்து சில சினிமா வாய்ப்புகள் வந்தாலும், மனசளவுல நான் பலவீனமாவே இருந்தேன். நிறைய ஆதங்கம், அழுகை, சருமப் பிரச்னை, அளவில்லாத கோபம், அதுக்கு வடிகாலா நிறையச் சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒபிஸிட்டினு உணர்வுகளின் பிடியில் இருந்து மீளமுடியாமக் கிடந்தேன். என் ரசிகையான டாக்டர் பைரவி, எப்படியாச்சும் என்னைப் புது மனுஷியா மாற்ற ஆசைப்பட்டு, என்னோட எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு சொல்லி என்னை மீட்டாங்க. டயட் கன்ட்ரோலில் 99 கிலோவில் இருந்து 74 கிலோவுக்கு மாறி, சருமப் பிரச்னைக்கு முழுமையான சிகிச்சை எடுத்து, மனசில் சேர்ந்திருந்த கழிவிரக்கக் குப்பைகளை எல்லாம் தூக்கிவீசி, புது கல்பனாவா மீண்டு வந்தேன்.

இப்போ தெலுங்கு ‘ஸ்டார் மா’ சேனலோட ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் 14 போட்டியாளர்கள்ல நானும் ஒருத்தியா கலந்துக்கிறேன். இதற்கிடையில் ‘ஜிங்கிடி ஜிங்கிடி ஜிமிக்கிப்போட்டு’, ‘டார்லிங்கு டம்பக்கு’, ‘ராசாத்தி ராசாத்தி’, ‘ஓயா ஓயா’னு தமிழ் திரைப்பாடல்கள், தெலுங்கில் மாஸ் ஹிட் பாடல்கள்னு இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிட்டேன். நடுவுல ட்ரினிட்டி மியூஸிக் காலேஜ் ஆஃப் லண்டன் இன்ஸ்டிடியூட்ல வோகல் மியூஸிக்ல எல்.டி.சி.எல் டிப்ளோமா கோர்ஸ் முடிச்சுட்டு, இப்போ மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் எம்.ஏ., மியூஸிக் படிச்சுக்கிட்டு இருக்கேன்.

இந்த வெற்றிகளையெல்லாம்விட எனக்கு நிறைவைத் தர்றது, செவித்திறனற்ற மாணவர்களுக்கு ஆசிரியையா நான் செலவழிக்கிற நேரம்தான். மைண்ட் ரிலாக்ஸிங் பொழுதுபோக்கா, 2004-ல் சென்னையிலுள்ள ஒரு காதுகேளாதோர் கல்லூரியில் டீச்சரா வொர்க் பண்ண ஆரம்பிச்சு, அப்புறம் அதுக்காகவே தமிழ்நாடு ஓப்பன் யுனிவர்சிட்டியில காது கேளாதோருக்குச் சொல்லிக்கொடுக்க பி.எட் கோர்ஸ் படிச்சுட்டு இருக்கேன். கூடவே, காது கேளாத கல்லூரி மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க மொத்தமுள்ள மூணு லெவல் கோர்ஸ்ல முதல் லெவல்ல வெற்றிபெற்றிருக்கேன். அடுத்த லெவல் கோர்ஸும் படிச்சுட்டிருக்கேன். இது ஒரு மகிழ் முரண். ஒரு பாடகியான நான், ஒலியற்ற அந்த மாணவர்களோட உலகத்தில் மௌனத்தால் கற்பிக்கிற அந்த அனுபவம், மனசைப் பூக்கவைக்குது. 


வாழ்ந்து கெட்டவங்கன்னு யாரும் இருக்கத் தேவையில்லை. வாய்ப்புகளை நம்மைச் சுற்றி வெச்சுக்கிட்டு, வந்து எடுத்துக்கோன்னு வேடிக்கை பார்க்கும் விதி. எழுவோம்!” 

- நம்பிக்கையூட்டி முடிக்கிறார் ‘கம்பேக்’ கல்பனா!

இது கல்பனாவின் கதை!

‘’அப்பா எனக்கு இன்னொரு குழந்தை!”

கல்பனாவின் அப்பா ராகவேந்தர், தற்போது பார்வையில்லாத நிலையில் இருக்கிறார். ‘’இசைத் துறையைச் சேர்ந்தவங்களுக்கு அப்பாவோட திறமையைப் பற்றித் தெரியும். சில உடல் நலப் பாதிப்புகளால் இப்போ பார்வைத்திறனை இழந்துட்டார். அப்பா ஆசிர்வாதத்தோட சேவையா ஒரு மியூஸிக் ஸ்கூல் ஆரம்பிக்கணும்;  கச்சேரிகள், திரைப்பாடல்கள், டி.வி நிகழ்ச்சிகள்னு அதுக்காகத்தான் ஓடிட்டு இருக்கேன்” என்கிறார் கல்பனா!