Published:Updated:

“மேடி, மிகப்பெரிய சோம்பேறி!”

“மேடி, மிகப்பெரிய சோம்பேறி!”
பிரீமியம் ஸ்டோரி
“மேடி, மிகப்பெரிய சோம்பேறி!”

முத்து பகவத், படங்கள்: பா.காளிமுத்து

“மேடி, மிகப்பெரிய சோம்பேறி!”

முத்து பகவத், படங்கள்: பா.காளிமுத்து

Published:Updated:
“மேடி, மிகப்பெரிய சோம்பேறி!”
பிரீமியம் ஸ்டோரி
“மேடி, மிகப்பெரிய சோம்பேறி!”

“ `கேமரா’ங்கிறது பயங்கரமான பேய். நாம நினைக்கிற விஷயத்தை மட்டுமல்லாமல், நினைக்காத விஷயத்தையும் காட்டிக்கொடுத்துடும். பேசுற வார்த்தையோடு, நம்ம மனசுக்குள்ள என்ன இருக்குங்கிற விஷயத்தைக்கூட உடல்மொழியில் காட்டிக்கொடுக்கும். பொய்யா நடிச்சாலோ, சிரிச்சாலோ கேமரா அதைப் பிரதிபலிச்சுடும். நடிப்புல எப்பவும் உண்மையா இருக்கணும்” செம சீரியஸாக சினிமா சீக்ரெட்ஸ் சொல்கிறார் மாதவன். `இறுதிச்சுற்றி’ல் பயிற்சியாளராகப் பலம் காட்டியவர், அடுத்ததாக `விக்ரம் வேதா’வில் போலீஸாகத் தெறிக்கிறார்.

`` `விக்ரம் வேதா’ இயக்குநர்கள் புஷ்கரும் காயத்ரியும் ஷூட்டிங் ஸ்பாட்டில் சண்டைபோடுவாங்க, பார்த்து என்ஜாய் பண்ணலாம்னு எதிர்பார்த்திருந்தேன். ஆனா, ரெண்டு பேரும் எப்பவுமே ஒற்றுமையாத்தான் இருக்காங்க. ஒரு புருஷன்பொண்டாட்டியை இப்படிப் பார்க்கவே முடியாது. எனக்கு நிறைய சுதந்திரம் கொடுத்தாங்க. உதாரணமா, ஒரு சீன் மட்டும் சொல்றேன். வேதா சரண்டர் ஆகியிருப்பார். அவரை விசாரிக்க நான் போவேன். வேதாவைப் பயப்பட வைக்க, அங்கே இருக்கிற சேர், கேமரா வொயர் எல்லாத்தையும் வெறித்தனமா பிடுங்குற மாதிரி சீன். ஆனா, நடிக்கும்போது `விக்ரம் இப்படிப் பண்ண மாட்டானே’ன்னு யோசிச்சேன். கேமரா வொயர் எல்லாத்தையும் பொறுமையாப் பிடுங்கினேன். அமைதியா போய் உட்கார்ற மாதிரி நடிச்சேன். அந்த நடிப்பை அப்படியே இயக்குநர்கள் ஏத்துக்கிட்டாங்க.’’

“மேடி, மிகப்பெரிய சோம்பேறி!”

``விஜய் சேதுபதியுடனான உங்கள் நட்பைப் பற்றிச் சொல்லுங்கள்?’’

``படத்துல நாங்க ரெண்டு பேருமே எதிரெதிர் கேரக்டர். என்னோட எதிரி விஜய் சேதுபதி. அதனால, ஷூட்டிங் வரைக்கும் விஜய் சேதுபதியோடு பேசவோ, சந்திக்கவோ வேணாம்னு முடிவெடுத்தேன். அப்பதான் படத்துல ரியலா இருக்கும்னு தோணுச்சு. தன்னோட ரோல் மட்டும் நல்லா வந்தா போதும்னு விஜய் சேதுபதி நினைச்சிருந்தா, படம் வேறு மாதிரி வந்திருக்கும். ஆனா, கமல் எப்படி என்னிடம் நடந்துகிட்டாரோ, அதே மாதிரிதான் விஜய் சேதுபதி. நல்ல நண்பன் விஜய் சேதுபதி.’’

``லவ்வர் பாய் நீங்க... இந்தப் படத்தில் ரொமான்டிக் காட்சிகள் எல்லாம் எப்படி வந்திருக்கு?’’

`` ‘அலைபாயுதே’ ஸ்டைல் ரொமான்ஸ் இந்தப் படத்தில் இருக்காது. ரொம்ப முதிர்ச்சியான காதல் கதை. ஸ்ரதா ஸ்ரீநாத்தான் ஹீரோயின். ரொம்பத் திறமைசாலி. அவங்களுக்கும் எனக்குமான முதல் சீனே ரொமான்டிக் சீன்தான். பயங்கரமா வெட்கப்பட்டாங்க. அடுத்த படத்திலும் ஸ்ரதாவோடு சேர்ந்து நடிக்க ஆசையா இருக்கு.’’

``கமல், மணிரத்னம் இருவரிடமும் இன்னும் டச்சில் இருக்கீங்களா?’’

``கமல் சாரின் பக்தன் நான். காலையில் எழுந்ததிலிருந்து இரவு தூங்குறவரைக்கும் சினிமா பற்றியே யோசிக்கக்கூடியவர் அவர். வேற எந்த யோசனையோ, கமிட்மென்டோ அவருக்குக் கிடையாது. மணிரத்னம், கமல் இருவரைப் பற்றி வெளியே பேசும்போதுகூட `சார்’னுதான் சொல்லத் தோணும். அவ்வளவு மதிக்கிறேன். மணிரத்னம் சாரிடம் எல்லாமே கத்துக்கிட்டேன்னு சொல்ல மாட்டேன். அவரிடம் கத்துக்க நிறைய இருக்கு.  மணிரத்னம் சார் மாதிரியான ஒருத்தரின் படத்தில் அறிமுகமாகிற வாய்ப்பு பெரிய பிரபலத்தின் மகனுக்குக்கூடக் கிடைக்காது. ஆனா, எனக்கு அந்த கிஃப்ட் கிடைச்சது. மணிரத்னம் சார் சொல்லிக்கொடுத்த படிப்பினைதான் இப்போவரைக்கும் எனக்கு உதவுது. இவங்க ரெண்டுபேர்கூட எப்பவுமே டச்ல இருக்கிறது எனக்கு அவசியம்.’’

``தமிழில் தொடர்ச்சியா உங்களைப் பார்க்க முடியவில்லையே?’’

``நல்ல கதையைத் தேர்ந்தெடுக்கவே நேரம் ஆகிடுது. ஒரு  படம்  ஓடலைன்னா,  `பரவாயில்லை. வேற ஏதோ ஒரு படம்’னு அலட்சியமா இருக்கக்கூடிய தைரியம் எனக்கு இல்லை. பல தவறுகளைச் செய்துவிட்டதால், படங்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனமா இருக்கேன். இப்போ இருக்கிற ரசிகர்கள் ரொம்பவே ஸ்மார்ட்டா இருக்காங்க.  ஒரு ஷாட்ல தப்பு இருந்தாகூட, மீம் போட்டு காலி பண்ணிடுவாங்க. அவங்க கலாய்க்கிற கலாய்ல `ஏன்டாப்பா சினிமாவுக்கு வந்தோம்’கிற எண்ணமே வந்துடும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சண்டைபோட்டு டிக்கெட் வாங்கி ரசிகர்கள் படம் பார்க்கிறாங்க. அவங்களைத்  திருப்திப்படுத்துற மாதிரியான ஒரு படத்தில் நடிச்சாகணும். அந்த மாதிரியான சப்ஜெட் தேடி, தவறு செய்யாம ஒரு படத்தைப் பண்ணிப் பிரமிக்க வெச்சு, படம் ஜெயிச்சாதான் அடுத்த கட்டத்தைத் தேடிப் போக முடியும்.’’

`` `இறுதிச்சுற்று’, `தனு வெட்ஸ் மனு’ என ஹீரோயின் சார்ந்த படங்கள் அதிகமா நடிக்கிறீங்களே?’’

``என்னுடைய அனுபவமும் அறிவும்தான் காரணம்னு நினைக்கிறேன். ‘அலைபாயுதே’, ‘மின்னலே’வில் தொடங்கி இப்போ வரைக்கும் என்னுடைய படங்களில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். ரியல் லைஃப்லகூட பெண்கள்தானே நமக்கு ஆதாரம். வண்டியில் ஒரு சக்கரம் மட்டும் வேகமா ஓடினா போதுமா? எல்லா சக்கரங்களும் ஒரே சீரா செயல்படணும். நான் மட்டுமல்ல; இயக்குநர், நடிகைனு எல்லோருமே படத்தில் முக்கியம்.’’ ​​​​​​

“மேடி, மிகப்பெரிய சோம்பேறி!”

`` `இன்னும் கொஞ்சம் நல்லா நடிச்சிருக்கலாம்’னு எந்தப் படத்தைப் பார்க்கும்போது தோணும்?’’

 `` ‘அலைபாயுதே’ படத்தை இப்போ பார்த்தாகூட, `என்னடா நடிக்கிற, உன்னையெல்லாம் எப்படிடா நடிக்க வெச்சாங்க?’னு ஃபீல் வரும். `முட்டாள், தடியன், அறிவுகெட்டவனே, தொப்பையைப் பாரு கேவலமா இருக்கு’னு `இறுதிச்சுற்று’ வரைக்கும் என்னை நானே திட்டிட்டுதான் இருந்தேன். என்னோட நடிப்பில் இன்றுவரைக்கும் நான் திருப்தி அடையலை.’’

``நடனம், சண்டை, ரொமான்ஸ்  இதுல எது ரொம்பக் கஷ்டம்னு நினைக்கிறீங்க?’’

``இன்னிக்கு `டான்ஸ் சீக்வென்ஸ் ஷூட் பண்றோம்’னு சொன்னாலே கடுப்பாகிடுவேன்.  டான்ஸ்னா ரொம்ப அலர்ஜி. சும்மா சும்மா குதிக்கிறதெல்லாம் டான்ஸ் இல்லை. விஜய், ஹ்ரித்திக் ரோஷன்னு நிறைய மாஸ்டர்ஸ் இருக்காங்க. அவங்களோடு ஒப்பிடும்போது நானெல்லாம் ஒண்ணுமே இல்லை.’’

``ரொம்ப கவலையா இருந்தா, என்ன செய்வீங்க?’’

``வீட்டுல இருந்தா கவலையே வராது. அப்படியே வந்தா, என் ரெண்டு நாய்களையும் கட்டிப்பிடிச்சுப்பேன். உண்மையைச்  சொல்லணும்னா, மேடி, மிகப்பெரிய சோம்பேறி.’’

``அதிகமா டிராவல் பண்றீங்களே ஏன்?’’

``வெட்கமே இல்லாம, கொஞ்சம்கூட யோசிக்காம பயணம் செய்யக்கூடியவன் நான். `பயணம் பண்ணும்போதுதான் உலகத்தைத் தெரிஞ்சிக்க முடியும்’னு சொல்வாங்க. அந்த மாதிரி உலகத்தை நீங்க பார்க்கும்போதுதான் உங்களைப் பற்றி நீங்களே தெரிஞ்சுக்குவீங்க. நாம எப்படி இருக்கோம்னு நமக்கே புரியவைக்கணும்னா, நிறைய பயணம் பண்ணணும். அதுவும் தனியா டிராவல் பண்ணும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கும்.’’

`` `பிக்பாஸ்’ பார்த்தீங்களா? அந்த செட்டுக்கு உங்களோடு சேர்ந்து ஐந்து நபரைக் கூட்டிட்டுப் போகணும்னா, யாரை டிக் செய்வீங்க?’’

``பட வேலைகள்ல இருந்ததால, `பிக்பாஸ்’ பார்க்கலை. ஆனா, உலக அளவில் `பிக்பாஸ்’ மிகப்பெரிய வெற்றியாகிருக்கு. கமல் சார் தமிழில் இருக்கிறதனால நிச்சயம் நல்லா இருக்கும்னு தோணுது. `பிக்பாஸ்’ செட்டுக்கு ஒருநாள் ட்ரிப் அடிக்கலாம்னு யோசிச்சா, கமல் சார், மணி சார், சூர்யா, ஆனந்த் எல் ராய், சீமான். இந்த அஞ்சு பேரையும் கூட்டிட்டுப்போவேன். இவங்க இல்லைன்னா இப்போ நான் இல்லை. அதனால, எனக்கு ஆல் டைம் ஃபேவரைட் இவங்கதான். இவங்களோடு இருந்தா, எப்பவுமே சந்தோஷம்தான்!’’