பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

பண்டிகை - சினிமா விமர்சனம்

பண்டிகை - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
பண்டிகை - சினிமா விமர்சனம்

பண்டிகை - சினிமா விமர்சனம்

‘`அடுத்த நொடி என்ன நடக்கப்போகிறது எனச் சூதாடும் `பகடை’களுக்கே தெரியாது. அதுதான் பண்டிகையின் சுவாரஸ்யம்’’ என்று படத்திலேயே ஒரு வசனம் வருகிறது. இந்தப் படமும் அப்படித்தான். ஒவ்வொரு காட்சியிலும் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை யூகிக்க முடியாதபடி திரைக்கதையில் பகடை உருட்டி விளையாடுகிறது.   

பண்டிகை - சினிமா விமர்சனம்

புதிய களம், கணிக்க முடியாத திரைக்கதை எனத் தன் முதல் படத்திலேயே தமிழ் சினிமா க்ளிஷேக்களுக்குப் போகிப் பண்டிகைக் கொண்டாடியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஃபெரோஸ்.

மனதில் கனன்றுகொண்டிருக்கும் கோபத்தையும், உருக்கிக்கொண்டிருக்கும் காதலையும் கண்களாலேயே சொல்லி, வேலு கதாபாத்திரத்தில் `சொல்லி அடி’த்திருக்கிறார் கிருஷ்ணா. நாயகனுக்குக் காசு முக்கியமில்லை என்பதை ஆரம்பத்திலிருந்தே உணர்த்தியதோடு, அதற்குப் படம் நெடுக லீடெடுத்து அதை இறுதிக்காட்சியில் பொருத்திய விதம் சபாஷ் ஃபெரோஸ்! படத்தின் இரண்டாவது நாயகன் சரவணன். சூதாட்டத்தில் பணத்தை இழந்து, குடும்பத்தையும் இழந்து விரக்தியில் அலையும் கதாபாத்திரம். கலக்கியிருக்கீங்க சித்தப்பு!

‘`உன்மேல உள்ள நம்பிக்கை யினாலதானேடா நான் தனியா ஒரு போன்கூட வாங்கலை” என்று சலம்பும் `ப்ளாக்’ பாண்டி. “ஹேர்வாஷ் பண்ணலாம்னு ஊத்தினப்போ கொஞ்சம் வாய்க்குள்ள போயிடுச்சு” என்று ரெண்டு பியர் பாட்டில்களை உள்ளே தள்ளிவிட்டு அலம்பும் ஆனந்தி. சியர்ஸ் அடிப்பதையே முழுநேர வேலையாகச் செய்யும் நிதின் சத்யா என எல்லோரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கச்சிதமாய் நடித்திருக்கிறார்கள். கருணாஸ், அருள்தாஸ், மதுசூதனன், ட்வின் வில்லன்கள் என எல்லா கதாபாத்திரங்களுமே சிறப்பு.

`புத்திசாலிங்க, முட்டாளை ஏமாற்றக் கண்டுபிடிச்சதுதான் அதிர்ஷ்டம்’, `எல்லாத்துக்கும் சாதாரணமா கெடைக்கிற விஷயம் எனக்கு அடிச்சதுக்கப்பறம்தான் கெடைச்சது’ எனப் பல இடங்களில் வசனங்கள் மரண அடி.

பண்டிகை - சினிமா விமர்சனம்

புத்தாண்டு இரவுபோல அரவிந்தின் ஒளிப்பதிவு அவ்வளவு கலர்ஃபுல். அன்பறிவின் சண்டைக்காட்சிகள் அவ்வளவு யதார்த்தம். ஆர்.ஹெச்.விக்ரமின் பின்னணி இசை படத்திற்குப் பெரும்பலம். கதையின் மையத்தோடு ஒன்றாமல் தனியாகப் பயணிக்கும் காதல் காட்சிகள் ஹிப்னாடிஸ திரைக்கதையில் தெளிக்கப்பட்ட தண்ணீர்!

படம் நெடுக எக்கச்சக்கமாக மணக்கும் போதை நெடியையும், பதறவைக்கும் வன்முறையையும் கொஞ்சம் குறைத்திருந்தால், பண்டிகையை இன்னும்கூட சிறப்பாகக் கொண்டாடி யிருக்கலாம்!

- விகடன் விமர்சனக் குழு