Published:Updated:

பேரன்பின் வெற்றி!

பேரன்பின் வெற்றி!
பிரீமியம் ஸ்டோரி
பேரன்பின் வெற்றி!

ஜெயச்சந்திர ஹாஷ்மி

பேரன்பின் வெற்றி!

ஜெயச்சந்திர ஹாஷ்மி

Published:Updated:
பேரன்பின் வெற்றி!
பிரீமியம் ஸ்டோரி
பேரன்பின் வெற்றி!

போர் நடக்கிறது... நமது படை கொஞ்சம் கொஞ்சமாகத் தோல்வியின் விளிம்புக்குத் தள்ளப்படுகிறது. இப்போது நமக்கு முன்னால் இருப்பது இரண்டே இரண்டு வழிகள்தான். ஒன்று எதிரியிடம் சரணடைவது. இரண்டு எதிரியின் கையாலேயே மடிவது.

அத்தனை நம்பிக்கைகளும் அற்றுப்போகும் இந்த நிலையில் மூன்றாவதாய் ஒரு புதுவழி பிறக்கிறது. அது நீங்கள் நம்ப முடியாத ஓர் அதிசயமாக இருக்கிறது. அதுதான் `டன்கிர்க்!’

பேரன்பின் வெற்றி!

இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் பத்தாவது திரைப்படம் ‘டன்கிர்க்.’ சூப்பர் ஹீரோ கதைகள், சயின்ஸ் ஃபிக்‌ஷன் எனக் கற்பனைக் கதைகளையே இயக்கிய நோலன் எடுத்திருக்கும் முதல் உண்மைக்கதை.

‘சினிமாவில் இதுவரைச் சொல்லப்படாத மனிதகுல வரலாற்றின் மிக முக்கியமான கதை இது’ என்கிறார் நோலன்.

டன்கிர்க் வெளியேற்றம்

இரண்டாம் உலகப்போரின் போக்கை மாற்றிய மிக முக்கிய நிகழ்வு ‘டன்கிர்க் வெளியேற்றம்.’ போலந்தை ஜெர்மனி கைப்பற்றியதும் பிரான்ஸும் பிரிட்டனும் ஜெர்மனியின் மேல் போர் தொடுக்கின்றன. ஜெர்மனியின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் வடக்கு பிரான்ஸில் இருக்கும் டன்கிர்க் நகரக் கடற்கரையில் நான்கு லட்சம் பிரிட்டிஷ் படை வீரர்கள் ஜெர்மன் படைகளால் சுற்றிவளைக்கப்படுகின்றனர். கடல் வழியே வீரர்களை வெளியேற்றுவதுதான் சிறந்தது என முடிவு செய்யப்படுகிறது. பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலோ, அடுத்தடுத்த போர்களுக்காக மேலும் படைகளை அனுப்ப மறுக்கிறார். மீட்பதற்கென அனுப்பப்படும் சொற்ப கப்பல்களில் தப்பிக்கும் வீரர்களையும் போர்விமானங்கள் மூலம் குண்டுபோட்டுச் சிதைக்கிறது ஜெர்மனி. அடுத்த இரண்டு நாள்களில் ஜெர்மன் ராணுவம் டன்கிர்க் கடற்கரையையும் சுற்றிவளைத்துவிடும் என்ற நிலை. நான்கு லட்சம் வீரர்களும் மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்க, அப்போதுதான் நடக்கிறது ‘மிராக்கிள் ஆஃப் டன்கிர்க்’ என்னும் அதிசயம்.

டன்கிர்க்கில் மாட்டிக்கொண்ட வீரர்களை மீட்க பிரிட்டனின் சாமானிய மக்கள் திரண்டு வருகிறார்கள். தங்களது மீன்படகுகள், உல்லாசப் படகுகள், வணிகப்படகுகள் என வீட்டில் இருக்கும் சின்னச் சின்னப் படகுகளை எடுத்துக்கொண்டு, பொழியும் குண்டுகளின் நடுவே படைவீரர்களை காப்பாற்றுகிறார்கள்.

1940-ம் ஆண்டு மே மாதம் 26-ம் தேதி முதல் ஜுன் நான்காம் தேதி வரை நடந்த இந்த வெளியேற்றத்தில், 800 படகுகளின் உதவியோடு மூன்று லட்சத்து நாற்பதாயிரம் வீரர்கள் மீட்கப்படுகிறார்கள். ‘பிரிட்டனின் குழந்தைகள் இந்தக் கதையைச் சொல்லியே வளர்க்கப் படுகிறார்கள். எங்கள் மரபணுக்களில் இந்தக் கதை இருக்கிறது’ என்கிறார் நோலன்.

மூன்று களங்கள்... ஒரே கதை

இதுவரைப் போர்த் திரைப்படங்கள் நான்-லீனியர் திரைக்கதையில் சொல்லப் பட்டதில்லை. ஆனால், நோலனின் இந்தப் படம் அப்படித்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கதை மூன்று இடங்களில் சொல்லப்படுகிறது.

தரை : ஆள்களற்ற டன்கிர்க் தெருவில் ஒரு ராணுவ வீரன் சுற்றிக்கொண்டிருக்கிறான். திடீரென ஜெர்மன் வீரர்கள் சுட ஆரம்பிக்கிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக் கடற்கரைக்கு வருகிறான். அங்கே வரிசை வரிசையாக லட்சக்கணக்கான ராணுவ வீரர்கள் நிற்கிறார்கள். அவர்களை ஏற்றிச்செல்ல ஒரே ஒரு கப்பல்தான் காத்திருக்கிறது.

பேரன்பின் வெற்றி!

கடல் :  இங்கிலாந்து துறைமுகத்தில் ஒரு சிறிய உல்லாசப் படகு நிறுத்தப்பட்டிருக்கிறது. அதன் உரிமையாளர் டாசனும் அவர் மகனும் அதைத் தயார் செய்து கொண்டிருக்கின்றனர். கடற்படை அந்தப் படகை எடுத்துச் செல்வதற்குள், போர் வீரர்களை மீட்டெடுக்க டாசனே அதை ஓட்டிக்கொண்டு கடலுக்குள் செல்கிறார்.

வானம் : பிரிட்டிஷ் கப்பல்களைச் சிதைக்கும் ஜெர்மன் போர் விமானங்களைச் சமாளிக்க ஸ்பிட்ஃபயர் எனப்படும் மூன்று பிரிட்டிஷ் போர் விமானங்கள் வருகின்றன.

இதுதான் அந்த மூன்று களங்கள். இதிலென்ன புதுமை? ஐந்து, ஆறு களங்களோடெல்லாம் படங்கள் வந்திருக்கின்றனவே என்று தோன்றலாம். காலத்தில் இருக்கிறது சூட்சுமம்.

கடற்கரைச் சம்பவங்கள் ஒரு வாரத்தில் நடப்பவை. கடலில் நடக்கும் சம்பவங்கள் ஒரு நாளில் நடப்பவை. வானத்தில் நடக்கும் சம்பவங்கள் ஒருமணி நேரத்தில் நடப்பவை. மூன்று விதமான காலங்களில் நடக்கும் இந்தச் சம்பவங்களைக் கோத்ததிலும், அதன் வழி வரலாற்றின் அரிய தருணங்களைப் பதிவு செய்ததிலும்தான் இருக்கிறது இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் திரைக்கதை ஆளுமை.
 
தோல்வியின் கதை

தொடர்ச்சியாகப் பொழியும் குண்டுகளுக்குப் பழக்கமான வீரர்கள் குண்டுகள் வரும்போது குனிவதும், குண்டு வெடித்தபிறகு, உயிர் தப்பியவர்கள் மட்டும் இயல்பாய் எழுந்து நடக்க ஆரம்பிப்பதும் ஒரு போரின் யதார்த்த அவலத்தைச் சொல்லும் தருணங்கள். உயிர் பயத்தில் எழும் சுயநலமும், உயிர் பயத்தை மீறிக் காட்டப்படும் அன்பும்தான் டன்கிர்க்கின் இணைப்புக்கோடுகள்.

`டன்கிர்க் வெளியேற்றம்’ தோல்வியின் கதைதான். எதிரிப்படையிடமிருந்து புறமுதுகிட்டுத் தப்பித்து ஓடிவந்த வீரர்களின் கதைதான். ஆனால், அதற்குள் மிகப்பெரிய மனிதம் புதைந்திருக்கிறது. சக மனிதனுக்காக எளிய மனிதர்கள் ஓடிவந்து உதவிக்கரம் நீட்டிய பேரன்பு இருக்கிறது. அதுவே டன்கிர்க் நிகழ்வை மாபெரும் வெற்றி என்று சரித்திரத்தில் எழுதியது.

டன்கிர்க்கில் இருந்து தப்பித்து இங்கிலாந்துக்குள் நுழையும் ராணுவவீரன், மக்கள் தன் முகத்தில் காரித் துப்பப் போகிறார்கள் என்று பயந்தபடியே வருகிறான். ஆனால், மக்கள் ஆர்ப்பரித்து வரவேற்கிறார்கள். ‘Well done’ என்கிறார் ஒரு முதியவர். ‘நாங்கள் செய்ததெல்லாம் உயிர் பிழைத்தது மட்டும் தானே’ என்கிறான் வீரன். ‘அது போதுமே’ என்கிறார் முதியவர்.

வெற்றி, தோல்வி, எல்லாவற்றையும் தாண்டி வாழ்வின் அதி உன்னதம் வாழ்ந்திருத்தல்தானே. டன்கிர்க் நமக்குள் செலுத்துவது அந்த உணர்வைத்தான்.

நோலனின் முந்தைய படங்களான `மெமென்ட்டோ’, `டார்க் நைட்’, `இன்செப்ஷன்’ போன்ற திரைப்படங்களின் அதிரடி இதில் இல்லைதான். ஆனால், வரலாற்றின் மறக்க முடியாத ஒரு  கதையை அது பார்வையாளனுக்குக் கடத்தவேண்டிய உணர்வு கொஞ்சமும் மாறாமல் மிகச்சிறந்த காட்சி அனுபவமாகக் கொடுத்த வகையில் இது அவருடைய `Master’s Edition’ என உலக விமர்சகர்கள் வர்ணிக்கிறார்கள். அது பொய்யில்லை.