பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

விக்ரம் வேதா - சினிமா விமர்சனம்

விக்ரம் வேதா - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
விக்ரம் வேதா - சினிமா விமர்சனம்

விக்ரம் வேதா - சினிமா விமர்சனம்

மிழ் சினிமாவில் அறிவாளிகள் அதிகம். ஆனால், திரைப்படங்களில் புத்திசாலித்தனம் எப்போதாவதுதான் வெளிப்படும். அப்படியான இன்டலிஜென்ட் சினிமா `விக்ரம் வேதா’.

நேர்மை அதிகாரி விக்ரம் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட். தன் சிறப்புப்படையோடு 18 பேரைப் போட்டுத்தள்ளிவிட்டு, வடசென்னையின் மிகப்பெரிய ரெளடி வேதாவுக்கு ஸ்கெட்ச் போடுகிறார். ஒருநாள் தானாக முன்வந்து சரண்டர் ஆகிறார் வேதா. வந்தவர் விக்ரமுக்குக் கதை சொல்கிறார்... தப்புகிறார். மீண்டும் விக்ரமிடம் பிடிபடுகிறார். இந்த முறையும் கதை சொல்கிறார், தப்புகிறார். மீண்டும் விக்ரம், வேதாவைப் பிடிக்க, கதை... எஸ்கேப்... இப்படி வேதா சொல்லும் ஒவ்வொரு கதையும் விக்ரமைச் சுற்றிச் சமூகம் பின்னி வைத்திருக்கிற அதிகார முடிச்சுகளை அவிழ்க்கிறது. எது தீமை, எது நன்மை? என்பதை விக்ரமுக்கு விளங்கவைக்கிறது. இறுதியில் வேதாவை என்ன செய்கிறான் விக்ரம் என்பது அதிரடி கிளைமாக்ஸ்.

நமக்கு நன்கு பரிச்சயமான கதைகளின் தொகுப்புதான் என்றாலும், அதைப் புதுமையான திரைக்கதை வழி கச்சிதமாகப் பிசிறு தட்டாமல் சொல்லியிருக்கிறார்கள் இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி. வலைப்பின்னல்போல் படம் முழுக்க ஏராளமான கண்ணிவெடிகள். இறுதிக்காட்சியில் ஒவ்வொன்றாகப் பட்பட் என்று வெடித்துச் சிதற ஒட்டுமொத்தப் படமும் இன்னொரு பரிணாமத்துக்கு மாறுகிற மேஜிக் மயக்குகிறது.

‘`இந்தக் கதையில இரண்டு பேருமே வில்லன்’’ என்று விஜய் சேதுபதியே சொல்லிவிடுகிறார். அதற்கு ஏற்ப விடாக்கண்டனும் கொடாக்கண்டனுமாக மாதவனும் விஜய்சேதுபதியும் சளைக்காமல் நடித்திருக்கிறார்கள். படத்தின் பலமே இந்த இருவருடைய அசரடிக்கிற பெர்பார்ஃமென்ஸ்தான். மாதவன் க்ளாஸ்... விஜய் சேதுபதி மாஸ்!

விக்ரம் வேதா - சினிமா விமர்சனம்

எந்நேரமும் கொலைவெறியோடு இருந்தாலும் முகத்தில் எப்போதும் கேப்டன் கூலாகத் திரிவது, நாயகி ஷ்ரத்தாவோடு ஊடலும் கூடலுமாக ரொமான்ஸுவது, ஒவ்வொரு முறையும் கதை கேட்டு முடிக்கும்போது கணக்குகள் போட்டுக் கலங்குவது என மாதவன் ஒரு பக்கம் பி.எஸ்.எல்.வி-யாகச் சீறுகிறார்.

கையில் வடையோடு கொடுக்கிற பேஜார் என்ட்ரியிலேயே தொடங்கிவிடுகிறது விஜய் சேதுபதியின் சேட்டை. விசாரணை அறையில் கதை சொல்வது, நல்லிக்கறி சாப்பிட க்ளாஸ் எடுப்பது, தம்பியின் பாசத்தில் நீர்க்குமிழியாக வெடிப்பது, கிளைமாக்ஸில் துப்பாக்கிக் கிடைத்ததும் போடுகிற அந்தச் சிரிப்பு என வெரைட்டி வேட்டை ஆடியிருக்கிறார் விஜய் சேதுபதி. ஜி... சூப்பர் ஜி, சூப்பர் ஜி!

பெரிய அலட்டல் உருட்டல் எல்லாம் இல்லாமல் சிம்பிள் சேட்டாவாக வரும் ஹரிஷ் பேரேடி, பாசக்கார தம்பியாகக் கதிர் எனச் சின்னச் சின்ன கேரக்டர்கள் கவனம் ஈர்க்கிறார்கள். இரண்டே இரண்டு காட்சிகளில்தான் என்றாலும் வரலட்சுமியின் `ஏய் இன்னா’வுக்கு தியேட்டரில் `கபாலி’ ரெஸ்பான்ஸ்.

சி.எஸ்.சாமின் இசையில் விஜய் சேதுபதிக்கு ஒலிக்கும் ஆக்ரோஷமான பின்னணியும், `யாஞ்சி’யும் `டசக்கு டசக்கு’வும் அவ்வளவு ஃப்ரெஷ். எங்கும் இருள் நிறைந்த ஒரு புனைவு நகரத்தை அச்சு அசலாகக் கண்முன் நிறுத்தி இருக்கிறது பி.எஸ்.வினோத்தின் கேமரா. முன்னும்பின்னுமாகப் பெருச்சாளிபோல ஓடி ஓடிக் களைக்கிற திரைக்கதைக்கு ரிச்சர்ட் கெவனின் கத்தரி பெஸ்ட் ஃப்ரெண்டாகச் சிறப்பு செய்கிறது.

விக்ரம் வேதா - சினிமா விமர்சனம்

பூனையைக் கட்டிக்கொண்டு சகுனம் பார்க்கிற மாதிரி, ஊழல் பேர்வழிகள் எல்லோருமாகச் சேர்ந்து இயங்குகிற ஒரு சிஸ்டத்தில் ஏன் மாதவனையும் வைத்திருக்கிறார்கள்? எந்த நேரமும் துரோகம் செய்யக்கூடிய ஒருவனை ஏன் தன்னோடு சேர்த்துக்கொண்டு தொழில் பண்ணுகிறார் விஜய் சேதுபதி? என்னதான் பெரிய ரெளடியாக இருந்தாலும், இடுப்பில் துப்பாக்கியோடு அவ்வளவு ஈஸியாக ஒரு கமிஷனர் ஆபீஸுக்குள் நுழைந்துவிட முடியுமா? சமீபமாகத்தான் தமிழ் சினிமா வடசென்னை ஹவுசிங் வீடுகளுக்குள்ளும் சாஃப்ட்வேர் இன்ஜினீயர்களும், கால்பந்தாட்ட வீரர்களும், சமூக ஆர்வலர்களும் இருப்பதைப் பதிவு செய்ய ஆரம்பித்திருந்தது. ஆனால், மீண்டும் அந்தக் குடியிருப்புப் பகுதிகளை ஏதோ குற்றக்கிடங்காகப் பதிவு செய்தது பெரிய உறுத்தல். அதிலும் குழந்தைகளை எல்லாம் அப்படிக் காட்டியிருக்க வேண்டுமா? இதென்ன வடசென்னையா இல்லை லத்தீன் அமெரிக்காவா என்று குழப்பமே வருகிறது.

குற்றவாளிகளைக் காசு வாங்காமல் என்கவுன்ட்டர் செய்துகொள்ளலாமா, அல்லது குற்றவாளி நமக்கு உதவினால் அவனைக் காப்பாற்றிக்கொள்ளலாமா? எனப் படம் என்கவுன்ட்டர்களுக்கு எதிரான படமா? ஆதரவான படமா? என்கிற ஏராளமான குழப்பங்கள் படம் முழுக்க...

இருந்தாலும் கதை சொன்ன விதமும், மாதவன் - விஜய் சேதுபதியின் அதிரடி- அசால்ட் நடிப்பும் விக்ரம் வேதாவை `மெனி மோர்’ பார்க்கத் தூண்டுகிறது!

- விகடன் விமர்சனக் குழு