என் விகடன் - மதுரை
என் விகடன் - திருச்சி
Published:Updated:

சினிமா விமர்சனம் : பாலை

விகடன் விமர்சனக் குழு

##~##

ந்தேறிகளிடம் பறிகொடுத்த தாய் மண்ணை மீட்க தமிழ் இனக் குழு நடத்தும் போர் இது!

 வடக்கில் இருந்து வந்த கூட்டம் ஆயக்குடியைக் கைப்பற்றி, தமிழர்களைத் தாய் நிலத்தில் இருந்து துரத்துகிறது. அருகில் இருக்கும் நிலப்பரப்புக்கு முல்லைக்குடி என்று பெயர் சூட்டி, அங்கு வாழத் தொடங்கும் தமிழர்கள் பாலையின் பஞ்சத்தையும் எதிரிகளையும் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதுதான் கதை!

வணிக சமரசங்கள் எதுவும் இல்லாமல், வரலாற்று உணர்வோடு சங்க காலத் தமிழ்ப் பழங்குடி வாழ்க்கையைப் பதிவுசெய்தமைக்காக, இயக்குநர் ம.செந்தமிழனுக்குத் தமிழ் வணக்கம். மழைக்குறி பார்ப்பது, காதலனும் காதலியும் உடன்போக்கு மேற்கொள்வது, ஆநிரை கவர்தல், பெண்களும் ஆண்களும் பேதமின்றிக் கள் அருந்தி மகிழ்வது என ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வாழ்க்கைக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன காட்சிகள்.      

சினிமா விமர்சனம் : பாலை

'சங்க காலத் தமிழர் வாழ்க்கை’ என்றாலும் படத்தின் பெரும் பகுதி, ஈழத்து அவலங்களையும் துயரங்களையும் நினைவூட்டுகின்றன. ''சிங்கம் வலிமையானதுதான். ஆனால், பசியையும் வலியையும் புலிதான் தாங்கும்; பதுங்கியும் தாக்கும்'' என்று முல்லைக்குடி தலைவர் தன் வீரர்களிடம் சொல்வது, வந்தேறிகளின் தலைவருக்கு 'அரிமா’ (சிங்கம்) என்று பெயர் சூட்டிஇருப்பது எனப் படம் முழுக்கப் 'புலி’களின் தடங்கள்.    

படத்தின் பெரிய பலம் நெருப்பு வசனங்கள். ''பிழைப்போமா, அழிவோமா என்று தெரியாது. ஆனால், வாழ்ந்தோம் என்று பதிவுசெய்ய விரும்புகிறோம்'' என்பது ஓர் கங்கு.

காயாம்புவாக ஷம்மு, வெருத்திரனாக இளையராஜா, முதுவனாகப் பேராசிரியர் வை.நடராஜன், வளனாக சுனில் எனப் பழங்குடி தமிழ்ப் பாத்திரங்களை அப்படியே வார்த்திருக்கிறார்கள். வேத்ஷங்கர் சுகவனத்தின் பின்னணி இசை வரலாற்றுப் பயணத்துக்கு வலு சேர்க்கிறது. அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு எளிய கதைக் களத்தை வலிமையாகத் தூக்கிச் சுமக்கிறது.  

நவீன நாடகத்தில் பயன்படுத்தப்படும் வசன உச்சரிப்புகளும் உடல்மொழியும், ஒரு திரைப்படம் பார்ப்பதற்கான உணர்வைத் தராமல், நவீன நாடகம் பார்க்கிற மயக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழர்களும் வந்தேறிகளும் ஒரே மாதிரியான நிறமும் உடைகளுமாக இருப்பதால் போர்க்களக் காட்சிகளில் ஏற்படும் குழப்பம், வெறும் நான்கைந்து பேரையே ஊர் மக்கள் என்றும் படை வீரர்கள் என்றும் காட்டுவது, சங்க காலத்தில் கருவேல மரங்கள் வருவது போன்ற குறை பாடுகள் இருந்தாலும், எளிமையான பொருட் செலவில் இப்படி வலிமையான ஒரு வரலாற்று முயற்சியை எடுத்ததற்காக மதிப்பெண்களைத் தாண்டி இந்தப் 'பாலை’யை மனதாரப் பாராட்டுகிறோம்!