Published:Updated:

``விக்ரம் பாதி... வேதா மீதி!’’

``விக்ரம் பாதி... வேதா மீதி!’’
பிரீமியம் ஸ்டோரி
``விக்ரம் பாதி... வேதா மீதி!’’

பா.ஜான்ஸன் - படம்: தி.குமரகுருபரன்

``விக்ரம் பாதி... வேதா மீதி!’’

பா.ஜான்ஸன் - படம்: தி.குமரகுருபரன்

Published:Updated:
``விக்ரம் பாதி... வேதா மீதி!’’
பிரீமியம் ஸ்டோரி
``விக்ரம் பாதி... வேதா மீதி!’’

“படத்துக்கு செம ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு. இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு எதிர்பார்க்கலை. நல்ல படங்கள் வரும் போது அதைப் பாராட்ட மக்கள் தயங்கவே மாட்டாங்கங்கிறது நூற்றுக்கு நூறு உண்மைனு உணர்ந்துட்டு இருக்கோம்” என்று கணவர் புஷ்கர் சொல்ல, ``நிறைய பாராட்டுகள். எல்லோருக்கும் மாறி மாறி நன்றி சொல்லிட்டிருக்கோம். ஆனா, இந்தப் பாராட்டெல்லாம் எங்களுக்குத்தான் என்ற ஃபீலே இல்லை. வேற யாரையோ பாராட்டிக்கிட்டிருக்காங்கங்கிற மாதிரியான உணர்வுதான் எங்களுக்கு” எனப் பேச்சைத் தொடர்கிறார் மனைவி காயத்ரி.  “உங்கள்ல யாரு விக்ரம் யாரு வேதா?” என்று பேச்சை ஆரம்பித்தால், “ரெண்டு பேருக்குள்ளேயும் விக்ரம் பாதி வேதா மீதி” என்கிறார்கள் ஒரே குரலில்!

``விக்ரம் பாதி... வேதா மீதி!’’

“ `வ’ படத்திற்குப் பிறகு, ஏழு வருஷ இடைவெளி... ரொம்ப அதிகம் இல்லையா?”

``அந்த நேரம் எடுத்துக்க வேண்டியதாகிடுச்சு. `விக்ரம்  வேதா’ எழுதி முடிக்கவே நிறைய நேரம் தேவைப்பட்டது. அதுக்கு முன்னால ரெண்டு கதை முழுசாவே எழுதினோம். ஆனா, அதில் ஏதோ மிஸ் ஆகுதேன்னு தோணுச்சு. அது எங்களுக்கே திருப்தியா இல்லை. அதனால எழுதினதோட அந்தக் கதைகளை ஓரங்கட்டிட்டோம். இடையில் வெப் சீரிஸ் இயக்குற ஐடியாகூட இருந்தது. நேரம் மட்டும் போயிட்டே இருந்தது; ஆனால், எதுவும் பண்ணவே இல்லை. காலையில் ஆபீஸ் வந்திடுவோம், கம்ப்யூட்டர்,  படங்கள்,  சாப்பாடுனு முடிச்சிட்டுப் பார்த்தா சாயங்காலம் ஆகியிருக்கும். ஏழு வருஷத்தில், ரெண்டு வருஷம் என்ன பண்ணோம்னே தெரியலை. இப்பவும் யோசிச்சிட்டிருக்கோம். அதுக்குப்பிறகுதான் `விக்ரம்  வேதா’ கதை தொடங்கினோம்.  ஆரம்பிச்சதில் இருந்து ரெண்டு பேரும் உற்சாகமாகிட்டே வந்தோம்.  `விக்ரமாதித்தன் வேதாளம் ஸ்டைல்ல சொல்லலாம், எது தர்மம்ங்கிற கேள்வியை அடிப்படையா வெச்சுக்கலாம்’னு சுவாரசியமான யோசனையா வந்தது. அதுக்குப் பிறகுதான் ஒரு போலீஸுக்கும் கேங்ஸ்டருக்கும் இடையில் நடக்கும் கதைனு முடிவு பண்ணோம். அதுக்கு முன்னால அந்த ரெண்டு கதாபாத்திரங்களுக்கும் எந்த அடையாளமும் இல்லாம இருந்தது. எழுதி முடிச்சதுக்குப் பிறகு, ரெண்டு ஹீரோக்கள் நடிக்கிற கதைங்கிறதால அவங்க தேதிகளை ஒருங்கிணைக்கிறதுக்கு ஒரு நேரம் தேவைப்பட்டது. மாதவனும், விஜய் சேதுபதியும் கேட்டதுமே ஓகே சொல்லிட்டாங்க. ஆனால், அவங்களுக்கு அப்போ இருந்த வேலைகள், விஜய் சேதுபதிக்கு மூணு விதமான கெட்டப்னு சில காரணங்களால் உடனடியா படம் தொடங்க முடியாமப் போயிடுச்சு.”

“மாதவன், விஜய் சேதுபதிதான் நடிக்கணும்னு எப்படி ஃபிக்ஸ் பண்ணீங்க?”

`` `விக்ரம் வேதா’ கதையை எழுதி முடிச்சதும், வேதா ரோலுக்கு விஜய் சேதுபதிதான் சரியா இருப்பார்னு நாங்களாவே முடிவு பண்ணிட்டோம். `ஒருத்தன் தன்னுடைய வாழ்க்கையில் இருந்தே நிறைய கத்துக்கிட்டிருக்கான். அந்த அனுபவங்கள் மூலமா பேசுற எல்லா விஷயத்திலும் ஒரு குட்டிக்கதையைக் கலந்து சொல்லுவான்’ என்பதுதான் வேதாவைப் பற்றி நாங்கள் சொல்ல இருந்த ஒன்லைன். நேர்ல போய் பார்த்தா, உண்மையிலேயே விஜய் சேதுபதி ஒரு வேதாவேவாதான் வாழ்ந்துட்டுருக்கார்ங்கிற விஷயம் புரிஞ்சது. ரொம்ப அழுத்தமான அனுபவங்கள் மூலமா அவர் கத்துக்கிட்ட விஷயங்களைச் சொல்ல சொல்ல வேதாவை இவர் தவிர வேறு யாரும் பண்ண முடியாதுன்னு எங்களுக்குப் புரிஞ்சது. விக்ரமுக்கு யார் சரியா இருப்பார்னு பேசும்போது  தயாரிப்பாளர் சஷிகாந்த் ‘மாதவன் சரியா இருப்பார்’னு சொன்னார். அப்போ மாதவன் சஷியோட புரொடக்‌ஷன்ல ‘இறுதிச்சுற்று’ நடிச்சிட்டிருந்தார். கதை சொன்னதும் உடனே மேடி ஓகே சொல்லிட்டார். அவர் ஒரு பக்காவான ஆள். சரியான விஷயங்களை மட்டும்தான் செய்வேங்கிற ஆள். இதுவேதான் விக்ரமுடைய கேரக்டரும். விக்ரமும் வேதாவும் பக்காவா அமைஞ்சிட்டாங்க. இனி ஸ்கிரிப்ட்டை ஸ்ட்ராங் பண்ணா, நிச்சயம் வெற்றிதான்னு அப்பவே பெரிய நம்பிக்கை வந்திடுச்சு.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``விக்ரம் பாதி... வேதா மீதி!’’

“மாதவன் - விஜய் சேதுபதி ரெண்டு பேருமே பக்காவான நடிகர்கள். ரெண்டு பேரையும் சேர்த்து வெச்சு வேலை வாங்கின அனுபவம் எப்படி இருந்தது?”

``அவங்க அவங்க திறமைமேல அவங்களுக்குப் பெரிய நம்பிக்கை இருக்கு. இவரை நடிக்கவிட்டா, தனியா பேர் எடுத்துட்டுப் போயிடுவாரோனு ரெண்டு பேருமே ஸ்கோர் பண்ண நினைக்கலை. நியாயமா அந்த சீன்ல என்ன நடிக்கணுமோ அதைக் கச்சிதமாப் பண்ணினாங்க. எங்களுக்கு அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து நடிக்க வைக்கிறதில் இருந்த ஒரே சிரமம், அவங்க  நடிக்க ஆரம்பிச்சாங்கனா டீம் மொத்தமும் அவங்க பெர்ஃபாமென்ஸைப் பார்க்கக் கூட்டமா கூடிடுவாங்க. அதைக் கன்ட்ரோல் பண்றதுதான் கஷ்டமா இருந்தது. விஜய் சேதுபதியோட குணம் என்னன்னா, ஏரியால ஷூட் நடக்குதுனா, அங்கே இருக்கிற எல்லாரோடவும் போய் பழகிடுவார். ஒரு வீட்டு மாடியில் ஷூட் பண்றோம். பக்கத்து வீட்டுல  வேடிக்கை பார்க்கிற ஒருத்தவங்களை, “க்கா, ன்னாக்கா நல்லாருக்கியா? ஒருநாளைக்கு பிரியாணி செஞ்சு குடுக்கா”னு சொல்ல, அவங்களும் செஞ்சு கொடுத்துட்டாங்க.”

“ரெண்டு பேரும் சேர்ந்து மூணு படங்கள் பண்ணிட்டீங்க. கணவன் மனைவிங்கிறதைத் தாண்டிப் படம் இயக்கும்போது கருத்து வேறுபாடு எதுவும் வரலையா?”

``நாங்க முன்னாள் லயோலா காலேஜ் க்ளாஸ்மேட்ஸ். காலேஜ் டைம்ல இருந்து இவ்வளவு தூரம் ட்ராவல் பண்ணி வந்திருக்கோம். இப்போ திரும்பிப் பார்த்தா, எங்களுக்கு வயசு மட்டும்தான் கூடியிருக்கு, மத்த எதுவுமே மாறலை. அப்ப எப்படியோ, அதேதான் இப்பவும். அதே நண்பர்கள்தான். எங்க ரெண்டு பேரோட சிந்தனையுமே ஒண்ணுதான். பிடிச்சது பிடிக்காததுன்னு எல்லாமே ஒரே ரசனைதான். பிரச்னை வர்றதுக்கான சாத்தியங்கள் ரொம்ப ரொம்பக் குறைவு” என்ற காயத்ரியை, ஓவர் டேக் செய்து பேசுகிறார் புஷ்கர், `` `ஒரே குட்டைல ஊறுன மட்டை’ மாதிரி ஒரு பிணைப்பு. ஒரு விஷயம் எனக்குப் பிடிச்சு, காயத்ரிக்குப் பிடிக்கலைனாலோ, அவங்களுக்குப் பிடிச்சு எனக்குப் பிடிக்கலைனாலோ அந்த ஐடியாவையே ட்ராப் பண்ணிடணும். இதுதான் வழக்கமா நாங்க ஃபாலோ பண்ற பாலிசி. ரெண்டு பேரும் சேர்ந்து எடுக்கும் முடிவு மட்டுமே ஃபைனலாகும். ரெண்டு பேர் கையிலும் ஒரு பேப்பர் கொடுத்து உங்களுக்குப் பிடிச்ச ஐந்து விஷயங்களை எழுதுங்கனு சொன்னா, ரெண்டு பேர் எழுதறதும் ஒரே விஷயமாத்தான் இருக்கும்.”

“அடுத்து என்னன்னு யோசிச்சிட்டீங்களா?”

“இந்தப் படத்துடைய தயாரிப்பாளர் சஷியே அடுத்த படத்துக்கு ரெடியாகுங்கனு சொல்லியிருக்கார். எங்ககிட்டயும் ரெண்டு கதைகளுக்கான ஐடியா இருக்கு. அதை சீக்கிரமே டெவலப் பண்ணணும்.  ஆனா, ஸ்க்ரிப்ட் முடிச்சு அது எங்களுக்குத் திருப்தியா இருந்து, நடிகர்கள் யாருனு முடிவு பண்ணி அவங்க டேட்ஸ் வாங்கின்னு அது ஒரு பெரிய ப்ரோசஸ். இந்த முறை பெரிய கேப் விடக்கூடாதுன்னு எண்ணம் இருக்கு. ஆனா, அது நடக்குமான்னுதான் தெரியலை” என்று மீண்டும் இருவரும் ஒரே குரலிலேயே சொல்கிறார்கள்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism