ஒரு கையில் கருந்தேநீர்; இன்னொரு கையில் அருந்ததி ராயின் ‘The Ministry of Utmost Happiness’ புத்தகத்துடன் ‘தரமணி’ வெளியீடு குறித்த பரபரப்பைக் கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு மழையை ரசித்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் ராம். அந்த மழை இரவில் அவருடன் உரையாடியதிலிருந்து...

‘`குழந்தைகளை மையமாக வைத்துப் படம் எடுத்த இயக்குநரிடமிருந்து ‘ஏ’ சான்றிதழ் படம். என்ன ஆனது இயக்குநர் ராமுக்கு?’’
‘`ஒன்றும் ஆகவில்லை. சொல்லப்போனால், இந்த 10 ஆண்டுகளில் ராம் எனும் கலைஞன் அதிகமாக நெகிழ்ந்திருக்கிறான். பொதுப்புத்தியில் ‘ஏ’ படம் குறித்து என்ன புரிதல் இருக்கிறது என்று தெரியவில்லை. இந்தப் படம் ஆண்-பெண் உறவுச்சிக்கலைப் பேசும் படம். உலகமயமாக்கல் தனி மனித உறவில், எந்த அளவுக்குத் தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது என்பதை எனக்குத் தெரிந்த காட்சிமொழியில் பேசியிருக்கிறேன். தணிக்கைத்துறை இதற்கு 16-க்கும் மேற்பட்ட வெட்டுகள் கொடுத்து ‘ஏ’ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்.’’
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘`சென்ஸார் போர்டுமீது உள்ள அந்த வருத்தத்தில்தான் போஸ்டர்களில் அவர்களைக் கலாய்க்கிறீர்களா?’’
‘`உண்மையில் தணிக்கை வாரியம் மீது எந்த வருத்தங்களும் இல்லை. தணிக்கையின்போது அவர்கள் என்னிடம் என்ன சொன்னார்களோ அதைப் படத்தின் போஸ்டர்களில் பயன்படுத்தியிருக்கிறேன். ஆண் ‘ரா’-வாக அருந்தினால் U/A; பெண் ‘ரா’-வாக அருந்தினால் ‘A’ என்றார்கள். தணிக்கைக்காக ஆண்ட்ரியாவிடமிருந்து மதுபுட்டியைப் பிடுங்கினால், படத்தின் ஜீவன் சிதைந்துவிடும். அதனால், நானே ‘A’ சான்றிதழுக்கு ஒப்புக் கொண்டேன். தணிக்கை வாரியம் ஏதோ வானத்திலிருந்து குதித்த அமைப்பெல்லாம் இல்லை. அவர்கள் நம் பொதுப்புத்தியைப் பிரதிபலிக்கிறார்கள். ஒரு பெண்ணை, ஆண் ஒருவன் கிண்டல் செய்தால் நாம் ரசிக்கிறோம். அதற்குப் பெண் அவளுக்குத் தெரிந்த மொழியில், எதிர் வினையாற்றினால் முகம் சுழிக்கிறோம். பதறுகிறோம். அதைத்தான் சென்ஸார் போர்டும் செய்கிறது. இதற்காக அவர்கள்மீது நாம், எப்படிக் கோபம்கொள்ள முடியும்...? தணிக்கை வாரியம் இயன்ற அளவு ஜனநாயகமாகச் செயல்படுவதாகவே நினைக்கிறேன். என்னவொன்று இப்போது வலதுசாரிகளின் தாக்கம் அங்கு நிலவுவதுபோல் தோன்றுகிறது.

இதையெல்லாம் கடந்து, ‘தரமணி’ படம் குழந்தைகளுக்கான படம் அல்ல. நான் என் குழந்தைகளை இந்தப் படத்தைப் பார்க்க அனுமதிக்க மாட்டேன். இது வயது வந்தோருக்கான படம்தான். சொல்லப்போனால், இதுநாள் வரை U/A சான்றிதழ் அளிக்கப்பட்டு வந்த படம் எதுவும் குழந்தைகளுக்கான படம் அல்ல. அந்தப் படங்களையெல்லாம் குழந்தைகளை அழைத்துக்கொண்டுபோய் திரையரங்கில் பார்த்தீர்கள். இந்தப் படத்தை அவர்கள் இல்லாமல் பார்க்கப் போகிறீர்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.’’

‘`சரி. படத்தின் போஸ்டர்களில் ‘குண்டாஸ்’ சட்டம் குறித்து வருகிறது. டீஸரில் ஐ.டி ஊழியர்கள் வருகிறார்கள். ‘தரமணி’ எது குறித்துப் பேசும் படம்?’’
‘`படத்தின் நாயகன் வங்கியின் மேலாளராகயிருந்தால், அந்தப் படம் வங்கிகள் குறித்த படமாக ஆகிவிடுமா என்ன...? இந்தக் கதையின் மாந்தர்கள் ஐ.டி ஊழியர்கள். ஆனால், இது ஐ.டி படம் இல்லை. உலகமயமாக்கலுக்குப் பின் ஆண்-பெண் உறவுநிலை எப்படி இருக்கிறது என்று பேசும் படம். ஆணுக்கு உண்மையாக ஒரு பெண்ணைக் காதலிக்கத் தெரிகிறதா என்று கேள்வி எழுப்பும் படம். ஆண்-பெண் உறவு மூலமாக நுட்பமான ஓர் அரசியலைப் பேசியிருக்கிறேன்.’’

‘` ‘கற்றது தமிழ்’ திரைப்படம் வெளிவந்தபோது, ‘ஐ.டி ஊழியர்கள் மீது, ராமுக்கு ஏன் இந்த அளவுக்குப் பொறாமையும் கோபமும்...’ என்று கேட்கப்பட்டது. உண்மையில், இப்போது ஐ.டி ஊழியர்களின் நிலையே பரிதாபகரமாகத்தானே இருக்கிறது. அது குறித்து ‘தரமணி’ பேசியிருக்கிறதா?’’
‘` ‘கற்றது தமிழ்’ படத்தைக் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால், அதிலேயே அவர்கள் மீதான கரிசனம் வெளிப்பட்டிருக்கும். அவர்களைச் சுற்றியிருக்கும் அரசியல் தெரியாமல் இருக்கிறார்களே... நாளை உலக அரசியல் மாறினால், இவர்கள் நிலை என்ன ஆகும் என்ற அக்கறை இருக்கும். அப்போது நான் என்ன பதைபதைத்தேனோ... இப்போது அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. தரமணி, நேரடியாக அவர்களின் சிக்கல் குறித்துப் பேசவில்லை. ஆனால், பேசியிருக்கிறது.’’

‘`படத்தின் போஸ்டர்களில், வலிந்து இந்தி திணிக்கப்பட்டிருப்பதுபோலத் தெரிகிறதே?’’
(சிரிக்கிறார்) ‘`இந்தப் படம்தான் அகதிகள் குறித்துப் பேசும் படம் என்று சொன்னேனே... இப்போது தரமணியில் யார் இருக்கிறார்கள்...? பெரிய பெரிய கட்டடங்கள் மட்டுமா இருக்கின்றன? அவற்றைக் கட்டுவதற்கு வந்த பீகார் கட்டடத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அதன் உள்ளே பணி செய்யும் மும்பைக்காரர்கள் இருக்கிறார்கள். சாலைகள் போடவந்த ஒடிஷாகாரர்கள் இருக்கிறார்கள். ஹோட்டல்களில் பணி செய்யும் ஜார்கண்ட்காரர்கள் இருக்கிறார்கள். அழகு நிலையங்களில் பணி செய்யும் வடகிழக்கு மாநிலத்தவர்கள் இருக்கிறார்கள். இப்போது தரமணி, தமிழ்நாட்டின் ஒரு பகுதி இல்லை. அது ஒரு க்ளோபல் வில்லேஜ். பல கலாசாரம், பல மொழிகள் சந்தித்துக்கொள்ளும் இடம். இவர்களின் உலகம்தான் படம் எனும்போது, அதில் தானாக இந்தியும் வந்துவிடுகிறது. தரமணி ரயில் நிலையப் பலகையில் என்ன இருக்கிறதோ... அதை அப்படியே பயன்படுத்தியிருக்கிறோம்.’’