Published:Updated:

கூட்டத்தில் ஒருத்தன் - சினிமா விமர்சனம்

கூட்டத்தில் ஒருத்தன் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
கூட்டத்தில் ஒருத்தன் - சினிமா விமர்சனம்

கூட்டத்தில் ஒருத்தன் - சினிமா விமர்சனம்

தோற்கவும் விரும்பாத ஜெயிக்கவும் முடியாத கோடானு கோடி ஆவரேஜ்களில் ஒருவன் இந்த `கூட்டத்தில் ஒருத்தன்’.

பள்ளியில், வீட்டில், ரோட்டில் என எங்குமே எதையுமே சாதிக்க முடியாமல் வேடிக்கை மட்டுமே பார்க்கிறவன் அசோக் செல்வன். எப்போதும் தாழ்வுமனப்பான்மையில் கூனிக்குறுகி வாழ்கிறான். நாயகி ப்ரியா ஆனந்த் வழி அவனுக்கு முதன்முதலாக ஒரு பாராட்டு கிடைக்கிறது. அதனாலேயே ப்ரியா மீது காதல் வர, அவர் பின்னாலே நாயகன் லோலோ வென்று சுற்ற, `போ.... ஏதாவது சாதித்துவிட்டு வா’ என்று திட்டி அனுப்புகிறார். வெற்றியே பெறமுடியாத கூட்டத்தில் ஒருத்தன் வாழ்க்கையில் சாதித்து எப்படி நாயகியைக் கைப்பற்றுகிறான் என்பது இறுதி அத்தியாயம்.

கூட்டத்தில் ஒருத்தன் - சினிமா விமர்சனம்

சோடாபுட்டிக் கண்ணாடியும் அட்டென்ஷன் உடல்மொழியுமாக நிறைவாகச் செய்திருக்கிறார் அசோக் செல்வன். அறிவுரையும் சுய கழிவிரக்கமுமாகச் செல்லும் படத்தில் பாலசரவணனின் டைமிங் ஜோக்குகள்தான் குளிர்ச்சி. எதையுமே தைரியமாக எதிர்கொள்ளும் பெண்ணாக, சாதனைப் பெண்ணாக, கோபக்காரப் பெண்ணாக, காதலை மறுத்து பிறகு ஏற்று ஈஸியாக ஏமாறும் பெண்ணாக என அந்தந்தக் காட்சிகளுக்கு ஏற்ப சிறப்பாகச் செய்திருக்கிறார் ப்ரியா ஆனந்த். சமுத்திரக்கனி நல்ல ரெளடியாக வந்தாலும் இதிலும் வாழ்க்கையில் சாதிக்க நல்ல அறிவுரைகளையே சொல்கிறார். நாசர், ஜான் விஜய்க்கு இன்னும் அழுத்தமான கதாபாத்திரம் கொடுத்திருக்கலாம்.

விக்ரமன் பாணி தன்னம்பிக்கை தரும் நீதிக் கதைதான். என்றாலும் முடிந்தவரை காலத்திற்கேற்ப புதுமையாகக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் த.செ.ஞானவேல். படம் ஆவரேஜ் பையன்களின் வாழ்க்கையைப் பற்றியது என்றுதான்  தொடங்குகிறது. ஆனால், இறுதியில் ஆவரேஜ் பையனாகவே இருந்தால் காதலும் கிடைக்காது, வெற்றியும் கிடைக்காது, ஏதாவது பெரிதாக சாதித்தால்தான் எல்லாமே கிடைக்கும் என்றுதான் படம் முடிகிறது. ஏன் இந்த குழப்பம் இயக்குநரே?

கூட்டத்தில் ஒருத்தன் - சினிமா விமர்சனம்


முதல்பாதியின் முடிவில் ஏதோ பெரிதாக நடக்கப்போகிறது என நிமிர்ந்து உட்காரவைக்கிற படம், அதற்குப் பிறகு எங்கெங்கோ சுற்றி என்னென்னவோ ஆகி... ஒருவழியாக நீதி சொல்லி முடியும்போது பார்க்கிற நமக்கு கம்ப்ளீட் பெட்ரெஸ்ட் தேவைப்படுகிறது.

நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் `ஏன்டா இப்படி’ பாடல் படத்தின் பலம். பாடலை பாடும் எஸ்.பி.பி-யின் குரலில் அவ்வளவு இளமை. படத்தின் வசனங்கள் முக்கியமானதும் அவசியமானதுமாக இருக்கின்றன. ஆனால், அவை கதையோட்டத்தோடு கலந்து வராமல் திணிக்கப் பட்டதாக பல இடங்களில் இருந்துவிட்டது குறை.

எடுத்துக்கொண்ட கருத்தும், அதற்கு நேர்மையாக இருக்க முயன்றதும் நிச்சயம் பாராட்டுக்குரியது. என்றாலும் கோவையில் நடக்கும் இறுதிக்காட்சிகளில் இருந்த அழுத்தத்தையும் உணர்வுகளையும் படம் முழுக்கக் கொடுத்திருந்தால் கூட்டத்தில் ஒருத்தன் தனித்துத் தெரிந்திருப்பான்!

- விகடன் விமர்சனக் குழு