
நிபுணன் - சினிமா விமர்சனம்

தொடர் கொலைகள் செய்யும் சீரியல் கில்லரை சிம்பிளாக சிக்கவைப்பவனே ‘நிபுணன்’.
யூனிஃபார்ம் போடாத காவல்துறை அதிகாரி அர்ஜூன். அவரின் தலைமையின் கீழ் செயல்படும் போலீஸ்காரர்கள் பிரசன்னா மற்றும் வரலட்சுமி. நகரத்தில் அடுத்தடுத்துக் கொலைகள் நடக்கின்றன. கொல்லப்படுபவர் சித்ரவதை செய்யப்பட்டு, துப்பாக்கியால் சுடப்பட்டு, தூக்கு மாட்டப்பட்டு, விதவிதமான விலங்குகள் முகமூடி அணிவிக்கப்பட்டு, முதுகில் நான்கு எண்கள் எழுதப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள். இந்தக் கொலைகளின் ஏன், எதற்கு, எப்படி?களைக் கண்டறிந்து கொலையாளியைச் சுற்றி வளைக்கிற `பல்ப் ஃபிக்ஷன்’ பரபரப்புதான் படம்.
அண்டர்பிளே நடிப்பில் அர்ஜூன். முந்தைய பட முரட்டுப் போலீஸாக இல்லாமல், யதார்த்த போலீஸ். பிரசன்னாவுக்குப் பெரிய வேலைகள் இல்லை. கிடைத்த காட்சிகளில் இயல்பாக நடித்திருக்கிறார். சற்றே ஆண்தன்மை கலந்த வரலட்சுமியின் குரலும் உடல்மொழியும் போலீஸ் வேடத்துக்கு செம ஃபிட். வில்லன் யார் என்பது சஸ்பென்ஸ். டைட்டிலேயே பெயர் போடாமல் படம் முடிந்தவுடன் போடுகிறார்கள். சொல்லக் கூடாது என்று மறைத்த ‘வில்லனின்’ நடிப்பும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.

‘க்ரைம் த்ரில்லர் படம்’ என்று முடிவுசெய்துவிட்டதால் கதைக்குத் தேவையில்லாத விஷயங்களைத் தவிர்த்துவிட்டு சீரான திரைக்கதையில் கவனம் செலுத்தியிருக்கிறார் இயக்குநர் அருண்வைத்தியநாதன்.
இசையமைப்பாளர் நவீன் அதிகப்படியாக இசையமைத்திருக்கிறார். அவர் மௌனமும் பழக வேண்டும். அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு, த்ரில்லர் கதைக்குத் தேவையான அச்சம் கூட்டுகிறது.
ஆருஷி தல்வாரின் கதையைப் படத்தின் ஆதாரமான விஷயமாக எடுத்திருக்கிறார்கள். ஆனால், அது உயிரோட்டம் இல்லாத காட்சிகளால் தாக்கமின்றிக் கடக்கிறது. அதனாலேயே ஒட்டுமொத்தப் படமும் பலவீனமாகிவிடுகிறது. நான்காவதாகக் கொல்லப்படப் போகிறவர் முக்கியமான காவல்துறை அதிகாரி என்பது இடைவேளையிலேயே தெரிந்துவிடுகிறது. ஆனாலும் கொலையாளி கறுப்பு ஸ்கார்பியோவில் கிளம்பிய பிறகுதான் பரபரவென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதெல்லாம் எந்த ஏரியா நியாயம்? சுமன் குடும்ப உறவுகளில் ஒருவர் மிச்சமிருக்கிறார் என்ற தகவலைக் காவல்துறை கோட்டைவிட்டது எப்படி?
துப்பறியும் காட்சிகளில் காட்டிய புதுமையைக் கதையின் மற்ற ஏரியாக்களிலும் காட்டியிருந்தால் நிபுணன் நிமிர்ந்திருப்பான்!
- விகடன் விமர்சனக் குழு