பிரமாண்டம், சரித்திரப் படம் இரண்டுக்கும் பெஞ்ச் மார்க்காக அமைந்துவிட்டது `பாகுபலி’. அதன் தாக்கம் எல்லா மொழிகளுக்கும் பரவியிருக்கிறது. விளைவு, தெலுங்கு உள்பட பல மொழிகளிலும் சரித்திரக் கதைகளை சினிமாவாக உருவாக்கிவருகிறார்கள். அந்தப் பட்டியல் இதோ...

தமிழ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சங்கமித்ரா
விஜய்யின் `மெர்சல்’ படத்தோடு சேர்த்து `சங்கமித்ரா’ படத்தையும் தயாரித்துவருகிறது தேனாண்டாள்

நிறுவனம். ஜெயம் ரவி, ஆர்யா நடிக்கும் இந்தப் படத்தை சுந்தர்.சி இயக்குகிறார். எட்டாம் நூற்றாண்டில், தன் ராஜ்ஜியத்தை எதிரிகளிடமிருந்து காப்பாற்ற நினைக்கும் சங்கமித்ரா மேற்கொள்ளும் பயணம்தான் படத்தின் கதை. போர் வீரர்களாக ஜெயம் ரவியும் ஆர்யாவும் நடிக்க, சங்கமித்ராவாக நடிக்கவிருப்பது யார் என இன்னும் முடிவாகவில்லை. `பாகுபலி’ போன்றே `சங்கமித்ரா’வும் இரு பாகங்களாக உருவாக இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை, ரசூல் பூக்குட்டி வடிவமைப்பு, சாபுசிரில் கலை இயக்கம் என மெகா மெகா கூட்டணி `சங்கமித்ரா’வுக்காக இணைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் இந்தப் படம், 2018-ம் ஆண்டு இறுதியில் வெளியாக இருக்கிறது.

மலையாளம்
கர்ணன் - Karnan
`என்னு நின்டே மொய்தீன்’ படக் கூட்டணியான பிருத்விராஜ் - ஆர்.எஸ்.விமல் இணையும் இரண்டாவது படம் `கர்ணன்’. மகாபாரதக் கதாபாத்திரமான கர்ணனை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில் பிருத்விராஜ் கர்ணனாக நடிக்கிறார். படத்தின் பட்ஜெட் 300 கோடி ரூபாய். படம் மிக பிரமாண்டமாக உருவாகவிருப்பதால், அதற்கான தயாரிப்பில் இருக்கிறார் இயக்குநர் விமல். `விமானம்’, `மை ஸ்டோரி’, `ரணம்’ என இப்போது இருக்கும் சில படங்களை முடித்துவிட்டு அடுத்த வருடம் முழு மூச்சாகக் கவச குண்டலம் அணிந்து நடிக்கவிருக்கிறார் பிருத்விராஜ்.

மகாபாரதா - Mahabharata
1984-ம் ஆண்டில் மலையாளத்தில் எம்.டி.வாசுதேவ நாயர் எழுதி வெளியான நாவல் `ரண்டாம்ஊழம்’ (Randamoozham). மகாபாரதக் கதையை, பீமனின் பார்வையில் சொல்லும்படி நாவல் ஒன்று எழுதியிருப்பார் வாசுதேவ நாயர். இந்த நாவலை மையமாக வைத்து உருவாகும் படம்தான் `மகாபாரதா’. மோகன்லால் இதில் பீமனாக நடிக்கிறார். மலையாளம், தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்பட பல மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தின் பட்ஜெட் 600-லிருந்து 750 கோடி ரூபாய் வரை ஆகும் எனக் கணக்குப் போட்டுள்ளது படக்குழு. ``1,000 கோடி ரூபாய் செலவானால்கூட கவலையில்லை. எனக்கு இந்தப் படம் சிறந்த இந்தியப் படமாக வரணும்” எனக் கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் பி.ஆர் ஷெட்டி. விளம்பரப்பட இயக்குநரான வி.ஏ.ஸ்ரீகுமார் மேனன் இயக்கும் இது, இரண்டு பாகங்களாகத் தயாராகிறது.

இந்தி
பத்மாவதி
`ராம் லீலா’, `பாஜிராவ் மஸ்தானி’ என இரண்டு படங்களும் ஹிட்டான குஷியில் அடுத்த படத்திலும்

சரித்திரக் கதையே சொல்ல இருக்கிறார் சஞ்சய் லீலா பன்சாலி. `ரோமியோ-ஜூலியட்’, `பாஜிராவ் மஸ்தானி’ ஆகியோரின் கதையை முந்தைய படங்களில் சொன்னவர், இந்த முறை சித்தூர் ராணி பத்மினியின் கதையை `பத்மாவதி’ படம் மூலம் சொல்லவிருக்கிறார். தீபிகா படுகோன், ராணி பத்மினியாக நடிக்கும் இந்தப் படத்தில் ஷாகித் கபூர், ரன்வீர் சிங், சஞ்சய் தத், அதிதி ராவ் ஹைதரி ஆகியோரும் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். `பாஜிராவ் மஸ்தானி’யில் விஷுவலாக மிரட்டியதைப்போல இந்தப் படத்திலும் அசத்துவதற்கு மெனக்கெட்டுக்கொண்டிருக்கிறார் பன்சாலி. படப்பிடிப்புக்கு நடுவில் பன்சாலி தாக்கப்பட்டது, திரைத்துறை ஊழியர்களின் வேலைநிறுத்தம் போன்றவற்றால் நவம்பர் மாதம் படத்தை வெளியிடுவது சிக்கலாகியிருக்கிறது.

கன்னடம்
குருக்ஷேத்ரா - Kurukshetra
`மகாபாரதா’வில் கதை பீமனின் பார்வையிலிருந்து சொல்லப்படுவதுபோல, `குருக்ஷேத்ரா’வில் கதை கௌரவாவின் பார்வையிலிருந்து சொல்லப்படவிருக்கிறது. `சேலஞ்சிங் ஸ்டார்’ தர்ஷன், துரியோதனனாகவும், `கிரேஸி ஸ்டார்’ ரவிச்சந்திரன், கிருஷ்ணனாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் அம்ரீஷ், சினேகா, லக்ஷ்மி, நிகில் கௌடா ஆகியோரும் நடிக்கிறார்கள். `மறுமலர்ச்சி’, `பாட்ஷா’, `அண்ணாமலை’, `ரமணா’ போன்ற படங்களை கன்னடத்தில் ரீமேக் செய்த நாகண்ணா, இந்தப் படத்தை இயக்குகிறார். இவர் இயக்கிய `சங்கொலி ராயண்ணா’ படம் வெளியாகிப் படத்தின் மொத்த பட்ஜெட்டையும் இருபது நாளில் கலெக்ட் செய்தது. அந்த நம்பிக்கையில் மிக பிரமாண்டமாக ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் செட் போட்டு படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருக்கிறார்கள். பொங்கல் வெளியீடாக வரவிருக்கிறது படம்.

தெலுங்கு
சே ரா நரசிம்ஹா ரெட்டி - Sye Raa Narasimha Reddy
சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், ஜெகபதிபாபு, கிச்சா சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா எனப் பல மொழிகளைச் சேர்ந்த ஸ்டார்களை இணைத்து அடுத்த பட அறிவிப்பை, தன் பிறந்த நாளன்று வெளியிட்டார் சிரஞ்சீவி. 1847-ம் ஆண்டில் பிரிட்டிஷ் படையினரைக் கலங்கடித்தவர் உய்யலவடாவைச் சேர்ந்த நரசிம்ஹ ரெட்டி. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான இவரின் அதிரடிகளை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில் சே ரா நரசிம்ஹ ரெட்டியாக நடிக்கிறார் சிரஞ்சீவி. `கிக்’ படத்தை இயக்கிய சுரேந்தர் ரெட்டி இயக்கும் இந்தப் படத்துக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.ஒளிப்பதிவு ரவிவர்மன். கதை, வசனம் எழுதுவது பருசுரி பிரதர்ஸான வெங்கடேஷ்வர ராவ், கோபால கிருஷ்ணா. படத்தைத் தயாரிப்பது சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண்.

இந்தி
தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் - Thugs of hindostan

எழுத்தாளர் பிலிப் மெடோவ்ஸ் டெய்லர் எழுதிய `கன்ஃபெஷன்ஸ் ஆஃப் எ தக்’ நாவலை மையமாக வைத்து உருவாகும் படம் `தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’. 18-ம் நூற்றாண்டில் பணம் மற்றும் விலைமதிப்பு மிக்க உயர்ந்த பொருள்களுக்காகக் கொலைசெய்யும் நபர்கள் சிலரைப் பற்றி விவரிக்கும் நாவல் அது. இதன் திரைவடிவில் அமிதாப் பச்சன், அமீர் கான், ஜாக்கி ஷெராஃப், கத்ரீனா கைஃப், ஃபாத்திமா சனா ஆகியோர் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். மால்டாவில் விறுவிறுப்பாகப் படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருக்கிறார் இயக்குநர் விஜய் க்ருஷ்ண ஆச்சார்யா. ஷங்கர்-எஷான்-லாய்- அஜய்-அதுல் என, படத்துக்கு ஐந்து இசையமைப்பாளர்கள். அடுத்த வருட தீபாவளி வெளியீடாக வர இருக்கிறது படம்.

மணிகர்னிகா: த குயின் ஆஃப் ஜான்சி - Manikarnika - The Queen of Jhansi
1857-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய ஜான்சி ராணியின் கதைதான் `மணிகர்னிகா: த குயின் ஆஃப் ஜான்சி’. தமிழில் `வானம்’, தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் 100-வது படமான `கௌதம புத்திர சதகர்னி’ படங்களை இயக்கிய க்ரிஷ், இந்தப் படத்தை இயக்குகிறார். `பாகுபலி’ கதாசிரியரான விஜயேந்திர பிரசாத், இந்தப் படத்தின் கதையை எழுத, கங்கனா ரனவத் ஜான்சி ராணியாக நடிக்கும் இந்தப் படம், அடுத்த வருடம் ஏப்ரல் 27-ம் தேதி வெளியாக இருக்கிறது.