Published:Updated:

யார் இந்த அர்ஜுன் ரெட்டி?

யார் இந்த அர்ஜுன் ரெட்டி?
பிரீமியம் ஸ்டோரி
யார் இந்த அர்ஜுன் ரெட்டி?

பா.ஜான்ஸன்

யார் இந்த அர்ஜுன் ரெட்டி?

பா.ஜான்ஸன்

Published:Updated:
யார் இந்த அர்ஜுன் ரெட்டி?
பிரீமியம் ஸ்டோரி
யார் இந்த அர்ஜுன் ரெட்டி?

“வழக்கமா காதலிக்கிற பொண்ணுகிட்ட, நீ எனக்காவே பொறந்தவன்னு பசங்க சொல்லுவாங்க. ஆனா, என்ன கேட்டா, நீ மட்டும் இல்ல... உங்க அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, அவங்களுடைய அம்மா அப்பானு எல்லாருமே உன்ன எனக்குக் கொடுக்கிறதுக்காகப் பொறந்தவங்கன்னு சொல்லுவேன்” படிக்கும் போது ஒரு காபி ஷாப்பில் உட்கார்ந்து காதலியிடம் காதலன் சொல்வதுபோலத் தோன்றுகிறதா? இல்லவே இல்லை. ஒரு பெரிய சண்டையின்போது அவன், அவளிடம் சொல்வது இது. இப்படித்தான் ஒவ்வொரு காட்சியிலும் எதிர்பார்த்திராத ஓர் அனுபவத்தை வழங்குகிறது ‘அர்ஜுன் ரெட்டி’. வெறுமனே மசாலா படங்கள்தானே என்ற பார்வையை மொத்தமாக மாற்றி எல்லோரையும் தெலுங்குப் பக்கம் திரும்ப வைத்திருக்கிறது இந்தப் படம்.

அர்ஜுன் ரெட்டி (விஜய் தேவரகொன்டா) மருத்துவம் பயிலும் மாணவன். புதிதாகக் கல்லூரியில் சேரும் ப்ரீத்தியைப் (ஷாலினி பாண்டே) பார்த்ததும் காதல். பெண் வீட்டில் சம்மதிக்கவில்லை. பிரிகிறார்கள். நாயகன் தாடி வளர்த்து தன் நாய்க்குப் ப்ரீத்தி எனப் பெயர் வைக்கும் தேவதாஸ்-பார்வதி காதல் கதைதான். ஆனால், படம் அது மட்டுமல்ல என்பதே சுவாரஸ்யம். கோபம், வெறுப்பு, காதல், காமம், தனிமை, போதை, குற்றவுணர்ச்சி எனப் பல உணர்வுகளின் கலவையாகக் கதை சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா.

யார் இந்த அர்ஜுன் ரெட்டி?

சின்ன விஷயத்துக்கே கோபப்பட்டு அடித்துத் துவைக்கும் அர்ஜுன், காதலி கன்னத்தில் அறைந்ததும் சிரித்துக்கொண்டே ‘என்ன பேபி’ என்பான். காதல் தோல்விக்குப் பிறகு, போதை தளும்ப, சிகரெட் புகை சூழ ஒரு வாழ்க்கை.இரண்டுக்கும் இடையில் அந்த இன்டர்வெல் காட்சி எனப் படத்தில் நிறைய இடங்களில் இருக்கின்றன விஜய் தேவரகொன்டா `அர்ஜுன் ரெட்டி’யாக அதகளம் செய்ததற்கான சாட்சிகள். சென்ற வருடம் தெலுங்கு சினிமாவின் ஜெம் எனக் கொண்டாடப்பட்ட ‘பெல்லி சூப்புலு’ படத்தில் அத்தனை சாந்தமாக, பணக்காரப் பொண்ணாகப் பார்த்துக் கல்யாணம் பண்ணி, வரதட்சணை வாங்கி, வீட்டோடு மாப்பிள்ளையாகி செட்டில் ஆகிட வேண்டியதுதான் என்றிருந்த விஜய்யா இது? கால்பந்து மைதானத்தில், தான் அடித்துப் புரட்டியவனிடம், “இது நான் காதலிக்கிற பொண்ணு. வாழ்க்கையில ஒரே ஒருத்தவங்களுக்கு ஏதாவது ஆனா ரொம்ப வலிக்கும்ல. எனக்கு அப்படியான ஒருத்தி இவ. இவளை இனி தொந்தரவு பண்ண மாட்டேன்னு சொல்லுடா” என உச்சபட்ச கோபத்தை அடக்கிக்கொண்டு கெஞ்சுவது, போதையில் மருத்துவம் செய்ததற்காக விசாரணைக்கு உட்படும்போது பேசுவது போன்ற இடங்களில் விஜய் நிகழ்த்துவது ஒரு மாயாஜாலம்.

குழந்தைத்தனம் நிரம்பி வழியும் முகம் ப்ரீத்தியாக நடித்திருக்கும் ஷாலினி பாண்டேவுக்கு. எந்த உணர்ச்சியையும் எளிதில் காட்டிவிடாதவர், வீட்டில் நடக்கும் பிரச்னைக்குப் பிறகு, விஜயைக் கட்டிப்பிடித்து சமாதானப்படுத்த முற்படும் காட்சி, பூங்காவில் மீண்டும் அர்ஜுனைச் சந்திக்கும்போது அழுதுகொண்டே கோபமாகத் திட்டும் காட்சி போன்றவற்றில் மிரட்டுகிறார். 

அர்ஜுனின் நண்பனாக வரும் ராகுல், சீரியஸ் படத்தின் சிரிப்பு இடைவெளிகளை நிரப்புகிறார். இவ்வளவு சீரியஸான படத்தில் காமெடியா எனத் தோன்றலாம். ஆனால், ஓர் இடத்தில் காமெடியாக ஆரம்பிக்கும் விஷயம் சட்டென சீரியஸாகும்போது அதன் அவசியம் தெரியும். காதல் தோல்வியிலும், போதையிலும் உழன்று கொண்டிருக்கும் அர்ஜுனின் தொல்லைகளைப் பொறுத்துக்கொள்ளவும் முடியாமல், அவனைக் கைவிடவும் முடியாமல் தவிக்கும் ராகுலின் நடிப்பு சிறப்பு. அர்ஜுனின் பாட்டியாக நடித்திருக்கும் முன்னாள் கதாநாயகி காஞ்சனா, ‘எனக்கு  ஃபிசிகலா உதவி பண்ண முடியுமா?’ எனக் கேட்கும் வெளிப்படையான அர்ஜுனின் அப்ரோச் பிடித்துப்போய் அவனைக் காதலிக்கத் துவங்கும் ஜியா ஷர்மா, அர்ஜுன் அதீத போதையின் காரணமாக உடல் பாதிப்புக்கு உள்ளாகும்போதெல்லாம், “இவன் லிமிட்டை கிராஸ் பண்ணிட்டே இருக்கான்டா” என டென்ஷனாகும் கல்லூரி ஆசிரியர், அர்ஜுனின் அப்பா, அண்ணன் என எல்லோருமே மிக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

யார் இந்த அர்ஜுன் ரெட்டி?

படம் முழுக்க அத்தனை முத்தங்கள், அத்தனை அணைப்புகள். நிச்சயமாக அது ஆபாசத்துக்காகச் சேர்க்கவில்லை. ஒவ்வொரு முத்தமும், அணைப்பும் அர்ஜுனின் கண்ணீராகப் பிற்பகுதியில் வழியும்போது அதன் வீரியம் புரியும். “எந்த விஷயத்துக்கும் ரொம்பப் பக்கத்தில் போனாலும் அது முடியற இடம் ஸீரோதான். உன் தம்பி அந்த ஸீரோவுக்கு ரொம்பப் பக்கத்தில் இருக்கான்”, “Suffering is personal, let him suffer” போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. இந்த இரண்டு வசனத்துக்கு இடையில்தான் அர்ஜுனின் பயணம். அந்தப் பயணத்துக்கு அழுத்தம் சேர்க்கும் ரதனின் இசை, நேர்த்தியான ராஜு தோட்டாவின் ஒளிப்பதிவும் பலம். அர்ஜுனைத் தன் தம்பிக்கு அறிமுகம் செய்து வைப்பார் ப்ரீத்தி. உடனே, அவன் அர்ஜுனின் சாதியை அறிந்துகொள்வதற்காக, “அர்ஜுனா.... அர்ஜுன் வாட்?” எனக் கேட்பான், சாதாரணமான காதல் படமாக இதை எடுத்துக் கொள்ள முடியாததற்கு இதுவும் ஒரு காரணம். 

மன மாற்றத்துக்காக அர்ஜுன் செல்லும் பயணத்தில் எடுக்கும் முடிவும், அதன் தொடர்ச்சியாக அந்த நெகிழ்ச்சியான க்ளைமாக்ஸும் யாரும் எதிர்பார்க்காதது. அதுதான் அர்ஜுன் ரெட்டியின் காதல், தனிமைக்கான மீட்பு! இனித் தெலுங்கு சினிமா என்றால் பன்ச் வசனமும், குத்துப் பாட்டும், சண்டைக்காட்சியும் மட்டும் என்கிற எண்ணத்தை மாற்றியவிதத்தில் ‘அர்ஜுன் ரெட்டி’ நிஜமான மாற்று சினிமாதான்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism