Published:Updated:

தமிழில் ஓர் உலக சினிமா!

தமிழில் ஓர் உலக சினிமா!
பிரீமியம் ஸ்டோரி
தமிழில் ஓர் உலக சினிமா!

ஜெயச்சந்திர ஹாஷ்மி

தமிழில் ஓர் உலக சினிமா!

ஜெயச்சந்திர ஹாஷ்மி

Published:Updated:
தமிழில் ஓர் உலக சினிமா!
பிரீமியம் ஸ்டோரி
தமிழில் ஓர் உலக சினிமா!

‘நம் வாழ்விலிருந்து ரத்தமும் சதையுமாய் பிய்த்து எடுக்கப்பட்ட ஒரு கதை, ஊடக ஆளுமை உள்ள ஒருவரால் நேர்மையாக ஆத்மசுத்தியோடு எந்தச் சமரசமும் இல்லாமல் கையாளப்படும்பொழுது அங்கு ஒரு நல்ல சினிமா உருவாக வாய்ப்பிருக்கிறது’ – இயக்குநர் பாலுமகேந்திரா சொன்னது இது.

அப்படியொரு சினிமா சமீபத்தில் உருவாகியிருக்கிறது. படத்தின் பெயர் `Revelations’. தலைப்பு ஆங்கிலத்தில் இருந்தாலும் படம் தமிழ்ப் படம்தான்.  பூசான் திரைப்பட விழாவில் சென்ற வருடம் கலந்துகொண்ட ஒரே தமிழ்ப் படம். இந்தத் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகவில்லை. இது ஒரு சுயாதீன திரைப்படம். Netflix தளம் வெளியிட்டிருக்கிறது. அதிலேயே பார்க்கக் கிடைக்கிறது.

கொல்கத்தாவில் நடக்கிறது கதை. நான்கே நான்கு கதாபாத்திரங்கள்தான். அவர்களுக்குள் நிகழும் உறவுச் சிக்கல்களை, மன அழுத்தங்களை, ஏக்கங்களை, எல்லைமீறத்  துடிக்கும் உணர்வுகளை, குற்றவுணர்வுகளை அந்த மனிதர்களுக்கிடையே பயணித்துப் பேசுகிறது `Revelations’.

தமிழில் ஓர் உலக சினிமா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கைகால் செயலிழந்த, பேச இயலாத அம்மாவுடன் கொல்கத்தாவிற்குக் குடிவருகிறார் மனோகர். கீழ் வீட்டில் இருக்கும் சுபா, அம்மாவை அக்கறையாகப் பார்த்துக்கொள்ள ‘கொஞ்சம் கொஞ்சமாக’ மனோகருக்கும் சுபாவுக்கும் இடையே நெருக்கம் அதிகரிக்கிறது. அதே நேரம் பத்திரிகை ஒன்றில் வேலை பார்க்கும் சுபாவின் கணவன் சேகருக்கும் அங்கு பயிற்சிக்காக வந்திருக்கும் திவ்யாவிற்கும் ‘கொஞ்சம் கொஞ்சமாக’ நெருக்கம் ஏற்படுகிறது. இரண்டு உறவுகளும் காமத்தை நோக்கிச் செல்கின்றன. இந்த நான்கு பேருக்குள் நடக்கும் உணர்வுப் போராட்டங்கள்தான் படம்.

இதில் ‘கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கம்’ என்கிற வார்த்தைகள் திரையில் எப்படிச் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதில்தான் இந்தப் படம் தனித்துத் தெரிகிறது. பாடலோ, மான்டேஜ் காட்சிகளோ இல்லை. பெரிதாய் எழும்பும் இசைக்கோர்வைகள் இல்லை. தமிழ் சினிமாவில் இதுவரை ஆண் பெண் உறவைக் காட்ட கையாளப்பட்ட எந்தவொரு க்ளிஷேவும் இல்லை. மிக இயல்பாக ஒரு பெண்ணுக்கும் ஒரு ஆணுக்கும் இடையே எப்படி நெருக்கம் உண்டாகுமோ, அதை அப்படியே பதிவு செய்திருக்கிறார் படத்தின் இயக்குநர் விஜய் ஜெயபால்.  

எல்லா மனிதனுக்குள்ளும் காமம் குறித்த  ஓர் அடக்கி வைக்கப்பட்ட பேராவல் இருக்கும். அதன் இருண்ட பக்கங்களைக் குறித்துதான் பேசுகிறது `Revelations’. படத்தில் செக்ஸுக்கு மிக அருகில் செல்லும் இரண்டு காட்சிகள் வரும். இரண்டின் முடிவிலும் ஆண்கள் அதிலிருந்து விலகி விடுவார்கள். ஆழமாகப் பார்த்தால் ‘ச்சே..இது நிகழ்ந்திருக்கலாமே’ என்று நிச்சயம் மனதிற்குள் தோன்றும். ஆனால், அதன்பின் நிகழும் காட்சிகளின் அடர்த்தியில் அந்த எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து அந்தக் கதாபாத்திரங்களின் உணர்வுகளோடு நாமும் கலந்து அப்படி நடக்காததன் காரணம் விளங்கி அதிர்ந்து நிற்போம். இயக்குநர் கம்பீரமாய் ஜெயிக்கும் தருணம் இதுதான்.

படத்திற்கு ஏன் இப்படியொரு ஆங்கிலத் தலைப்பு? `Revelations’ என்றால் புதைந்திருக்கும் ஒரு ரகசியம் வெளிப்படுத்தப்படுவது. இந்த ரகசியங்கள் வெளிப்படும் காட்சிகளில் கேமராவோ, படத்தொகுப்போ, இசையோ ‘இதைப் பார்... இதைக் கேள்... இதற்கு அதிர்’ என்று உங்கள் கழுத்தைப் பிடித்துத் திரைக்குள் திணிக்கவில்லை. உங்கள் வாழ்வில் ஒரு ரகசியம் எப்படி எதிர்பாரா ஒரு நொடியில் உடைக்கப்பட்டு அந்த அதிர்ச்சியை மட்டும் உங்களுக்குள் விட்டுவிட்டுக் கடந்து சென்றுவிடுமோ, அதேபோல்தான் இங்கு அனைத்து உண்மைகளும் Reveal செய்யப்படுகின்றன.

தமிழில் ஓர் உலக சினிமா!

படத்தை எழுதி இயக்கித் தயாரித்தும் இருக்கிறார் விஜய் ஜெயபால். குறும்படங்கள் எடுத்தவர் இப்போது திரைப்படம் இயக்கி இருக்கிறார். சினிமா என்பது முதலில் ஒரு மொழி. அந்த மொழியில் சொல்லப்படுவதுதான்  திரைப்படம். தமிழில் கவிதை எழுத ஆசைப்பட்டால், முதலில் நமக்குக் கவிதை தெரிந்தால் போதாது. தமிழ் தெரிய வேண்டும். அதேபோல்தான் சினிமாவும். சினிமா செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டால் கதை, திரைக்கதை எல்லாவற்றையும் தாண்டி சினிமா என்ற மொழி முதலில் தெரிய வேண்டும். அந்த மொழியை மிக லாகவமாகக் கையாண்டிருக்கிறார் விஜய் ஜெயபால்.

அம்மா இறந்துவிடுகிறார். செய்தி கேட்டு வீட்டுக்கு வருகிறார் மனோகர். கேமரா, அறைக்கு வெளியே இருக்கிறது. வாசலில் நிற்கும் வேலைக்காரப் பெண்ணைத் தாண்டி தயக்கத்துடன் அறைக்குள் செல்கிறார். அடுத்த ஷாட்டில் கொல்கத்தா நதிக்கரையில் பூக்கள் மிதக்கின்றன. அடுத்த ஷாட், காலியாக இருக்கும் மெத்தையைத் தடவிப் பார்க்கிறார் மனோகர். மூன்றே ஷாட்டுகளில் அம்மாவின் இறப்பு,  பிரேதத்தைக் காட்டாமல் மிக ஆழமாகப் பதிவு செய்யப்படுகிறது. இந்தத் திரைமொழிதான் படத்தின் பலம்.

கணவன் மனைவிக்குள் வரும் இடைவெளி, இருவரின் உறவைப்பற்றி அம்மாவிற்குத் தெரிவது, மனோகருக்கும் சுபாவுக்கும் இடையே ஏற்படும் சங்கடம் எனப் படத்தின் பெரும்பாலான உணர்வுகள் ஒற்றை ஷாட்டில் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கின்றன.எங்கேயும் ஆரவாரமில்லாமல் அழகாய், அமைதியாய் நகர்கிறது படம். அந்த மௌனம் படத்தின் பெரும் ரகசியங்களையும் நமக்குள் வலிமையாகக் கடத்திவிடுகிறது. மௌனத்தைவிட மிகப்பெரிய கூச்சல் ஏதுமில்லையே? 

தமிழில் ஓர் உலக சினிமா!

தமிழ் சினிமாவிலும் சீரியல்களிலும் நீங்கள் அடிக்கடி பார்க்கும் முகங்கள்தான் படத்தின் பிரதான பாத்திரங்கள். `சித்தி’ சீரியலில் நடித்த சேத்தன், பல படங்களில் நாயகியின் தோழியாகவும் சில படங்களில் நாயகியாகவும் நடித்த லஷ்மி ப்ரியா, இன்னும் இரண்டு புதுமுக நடிகர்கள், தேர்ந்த நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.

படத்தின் பிற்பகுதியில் ஒரு காட்சி வரும். சுபாவும் சேகரும் விவாகரத்து செய்ய முடிவெடுப்பார்கள். சுபாவிற்கும் மனோகருக்கு மான நெருக்கத்தைப் பற்றி உணர்ந்திருக்கும் சேகர், மனோகரிடம் சென்று ‘எனக்குப் பிறகு சுபாவை நீங்க கல்யாணம் செஞ்சுக்கிட்டா, அவ வாழ்க்கை நல்லா இருக்குமே’ என்பான். அதற்கு மனோகர் ‘அவங்க வாழ்க்கையைப் பற்றி முடிவு பண்ண நாம யாருங்க? அவங்களுக்கு எது தேவையோ அதை அவங்களே தேர்ந்தெடுத்துப் பாங்க’ என்பார். பெண்ணியம் குறித்து ஆண் மனோபாவத்தில் இருந்து யோசிப்பதற்கும் பெண் மனோ பாவத்தில் இருந்து யோசிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. அதற்கு சிறு உதாரணம் இந்தக் காட்சி.

தமிழில் எத்தனையோ நல்ல சினிமாக்கள் எழுதப்பட்டிருக்கின்றன. சில எடுக்கவும் பட்டிருக்கின்றன. அப்படி எடுக்கப்பட்டிருக்கும் படங்களில் மிக முக்கியமான படம் `Revelations’.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism