சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

``படம் பேசும்!’’

``படம் பேசும்!’’
பிரீமியம் ஸ்டோரி
News
``படம் பேசும்!’’

கே.ஜி.மணிகண்டன்

“நான் குறும்படம் பண்ண ஆரம்பிச்ச நாள்கள்ல இருந்தே வசனமே இல்லாம ஒரு படம் பண்ணணும்னு ஆசை. அதை என் ‘பிளாக் அண்ட் ஒயிட்’ குறும்படத்துல ஓரளவுக்கு முயன்று பார்த்திருப்பேன். சரி…சினிமா விஷூவல் மீடியம்தானே? ஏன் முழுக்க ஒரு படத்தை வசனம் இல்லாம எடுக்கக் கூடாதுனு தோணுச்சு. அதுக்குத் தகுந்த கதை அமையட்டும்னு காத்துக்கிட்டு இருந்தேன். இப்போ ‘மெர்க்குரி’ ரெடி. இதை எனக்கு நானே சேலஞ்சிங்கா எடுத்துப் பண்ண விஷயம்னும் சொல்லலாம்” – ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’க்குப் பிறகு ‘முழுக்க முழுக்க வசனமே இல்லாத படம்’ என்ற ஃப்ரெஷ்ஷான முயற்சியோடு களம் இறங்குகிறார் கார்த்திக் சுப்பராஜ்.

``படம் பேசும்!’’

“ஒன்லைனே ரொம்ப இன்ட்ரெஸ்ட்டிங்கா இருக்கே. ஆனால், படம் பிடிப்பதில் நிறைய சிரமங்கள் இருந்திருக்குமே?’’

 “வசனமே இல்லாம கதை, திரைக்கதை எழுதுற வரைக்கும்தான் எனக்கு சிரமம். ஆனா, ஸ்பாட்ல அந்தக் கதைக்கு வொர்க் பண்ற நடிகர், நடிகைகள் டெக்னீஷியன்ஸுக்குப் பெரிய சவால். வசனங்கள் மூலமா ஒரு காட்சியை ஈஸியா ரசிகர்களுக்குப் புரிய வெச்சுடலாம். ரியாக்‌ஷன்ஸ் மூலமே தகவல் சொல்றது சிரமமான காரியம். கொஞ்சம் சவாலா இருந்தாலும், எல்லோருக்கும் புது அனுபவமா இருந்ததனால சந்தோஷமா வொர்க் பண்ணோம். ஒளிப்பதிவாளர் திரு சாரோட திறமையை அவரோட படங்கள்ல பார்த்திருக்கேன். ‘மெர்க்குரி’யில அவரோட வேலை பார்த்தது எனக்குப் பெரிய அனுபவம். ஷூட்டிங் முடிஞ்சிடுச்சு. சவுண்ட் டிசைனுக்கும், இசைக்கும் முக்கியத்துவம் உள்ள படம். எப்படி வொர்க் அவுட் ஆகியிருக்குனு ஆடியன்ஸ் படத்தைப் பார்த்து ரியாக்ட் பண்ணும்போதுதான் தெரியும். படத்துல யாரும் பேச மாட்டாங்க. ஆனால், படம் பேசும்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு.”

‘`கமல்ஹாசனும் இதேபோல் ஒரு படம் செய்திருக்கிறாரே?”

“கமல் சாரும், சிங்கீதம் சீனிவாசராவ் சாரும் சேர்ந்து ‘பேசும் படம்’ங்கிற வசனம் இல்லாத  படத்தை காமெடி ஜானர்ல எடுத்தாங்க. நாங்க பக்கா த்ரில்லரா இந்தப் படத்தை உருவாக்கியிருக்கோம். பரபரன்னு போகிற திரைக்கதை. பிரபுதேவா சார் முதன்முறையா வில்லத்தனம் காட்டியிருக்கார். தவிர, அவரோட ஆக்டிங் கரியர்ல புது டைமென்ஷனைக் கொடுக்கிற படமா இந்தப் படம் இருக்கும். பலர் சொல்றதுதான், இந்தப் படம் ‘ரசிகர்களை சீட்டோட நுனிக்கே கொண்டு வந்துடும்’னு வெச்சுக்கலாம். தவிர, த்ரில்லரையும் மீறி ஒரு எமோஷனல் ஃபீலிங் படத்துல இருக்கும். அது ஆடியன்ஸுக்கு கன்வே ஆகுதான்னு பொறுத்திருந்து பார்க்கணும்.”

“தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் மிஸ் பண்ற, சினிமாவுக்கான சந்தை வாய்ப்புகள் என்னென்ன?’’


 “தமிழ் சினிமாவுல தயாரிப்பாளருக்கு முழுமையான வருமானம் போய்ச் சேர்றதில்லை. அமெரிக்காவுல தயாராகிற சிறு பட்ஜெட் படத்துக்கு பட்ஜெட் போடும்போதே, எந்தெந்த வகைகளில் வருமானம் வரும்னு பிளான் போடுவாங்க. அந்த பிளான்ல 30 சதவிகிதம் மட்டும்தான் தியேட்டர் வருமானத்தை நம்பி இருக்கும். மிச்சப் பணமெல்லாம் ஆன்லைன், யூடியூப், டி.வி.டி. மூலமா கிடைக்கிற வருமானங்கள். அது மாதிரி முயற்சிகள் இங்கேயும் ஆரம்பிச்சா, நிறைய நல்ல படங்கள் வரும். பல திறமையாளர்கள் வெளியே வருவாங்க. ஹாலிவுட், பாலிவுட்ல எல்லாம் பெரிய நடிகர்களை வெச்சே வெப் சீரிஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. நாமதான் அப்படியே நிற்கிறோம்.”

 “முந்தையப் படங்களோட தயாரிப்பாளர்களுக்கும் உங்களுக்குமான பிரச்னைகள் முடிஞ்சதா, இன்னும் எதிர்வினையா ஏதாச்சும் நடந்துக்கிட்டு இருக்கா?”

 “சென்சார் போர்டுல ‘யு’ சான்றிதழ் வாங்குறதுலதான் ‘ஜிகர்தண்டா’ படத்தைத் தயாரிச்ச கதிரேசன் சாருக்கும் எனக்கும் பிரச்னை வந்தது. அந்தக் கதையை அவர்கிட்ட சொல்லும்போதே, ‘இது கேங்ஸ்டர் படம். கொலை சீன்ஸ் இருக்கு. வீட்டுலேயே கொலை பண்ணிட்டு ரத்தத்தைத் துடைச்சு போலீஸை ஏமாத்துவாங்க. இந்தக் காட்சிகளையெல்லாம் குழந்தைகளுக்குக் காட்ட முடியாது. தவிர, இந்தக் காட்சிகள் எல்லாமே இந்தக் கதைக்குத் தேவை. ஆகையால இதுக்கு ‘யு’சான்றிதழ் வாங்க முடியாது’ன்னு தெளிவா சொல்லிட்டேன். சென்சார் போர்டு அதிகாரியும், ‘இந்தப் படத்துக்கு எப்படிங்க ‘யு’ சான்றிதழ் கொடுக்க முடியும்’னு கேட்டார். ஆனாலும், ‘யு சர்டிபிகேட் வாங்குறதுக்கு ஏதாவது பண்ணுங்க’னு கேட்டதுக்குத்தான் எனக்கும், அவருக்கும் சின்ன மன வருத்தம் ஆகிடுச்சு. தவிர, ‘இறைவி’ படத்துல நான் வடிவமைச்சிருந்த தயாரிப்பாளர் கேரக்டரைப் பார்த்துட்டு, அவரைத்தான் நான் மறைமுகமா சொல்லியிருக்கேன்னு நினைச்சுட்டார். அப்படி எந்த எண்ணமும் எனக்கு இல்லை. அது ஒரு கற்பனைக் காட்சி. அவ்ளோதான். பிறகு தயாரிப்பாளர்கள் கூப்பிட்டுப் பேசினாங்க. ‘ரெட் கார்டு போடப் போறாங்க’னு பரவுனது வதந்திதான். ஆனா, படம் ரிலீஸ் ஆன சமயத்துல இந்தப் பிரச்னைகளைப் பேசிக்கிட்டு இருந்ததனால, அது என் படத்தைப் பாதிச்சுது. அப்போ எனக்கு வருத்தம் இருந்தது.”

``படம் பேசும்!’’

“சரி… தனுஷ் படம் இயக்குவதாக இருந்ததே என்னாச்சு?”

 “முழுப்படமும் அமெரிக்காவில ஷூட் பண்ணணும். அந்தக் கதைக்கு ஒரு ஹாலிவுட் நடிகர் தேவை. தவிர, பேஸிக்காவே அது நிறைய டைம் எடுத்துக்கிற ப்ரோஜெக்ட். அதான், கொஞ்சம் தள்ளி வெச்சோம். இதுக்கிடையில ஒரு சின்னப் படம் பண்ணிடலாம்னு ‘மெர்க்குரி’ முடிச்சுட்டோம். அடுத்த வருஷம் தனுஷ் படத்தைக் கையில் எடுத்துடுவோம். கேங்ஸ்டர் படம். நல்ல ஆக்‌ஷன் திரில்லர் ஃபீலிங் கிடைக்கும். அதே சமயம் உலக அளவில் பேசப்படுற ஒரு விஷயத்தையும் பதிவு பண்றோம்.”

 “புதுசா வர்ற பல இயக்குநர்களோட படங்கள் இன்ஸ்பிரேஷன், காப்பி, தழுவல் இப்படியான படைப்புகளாவே இருக்கே, இதுக்கு என்ன காரணம்?”

 “நிறைய சினிமாக்களைப் பார்க்கிறாங்க. படம் பார்த்துதான் நிறைய கத்துக்கிறோம். அந்தப் படங்களில் இருந்து தாக்கம் வர்றது தப்பே கிடையாது. கலையோட அடிப்படையே அதுதானே. ஒரு கலை உங்களை இம்ப்ரெஸ் பண்றதுல என்ன தப்பு? ஆனா, அதை அப்படியே திருடிப் பயன்படுத்துறது தப்புதான். ஒரு படத்தோட ஸ்டைல் ஆஃப் மேக்கிங்கை நாம எழுதுற கதைக்கு எடுத்துக்கலாம், டெக்னிக்கலா ஒரு சினிமா பண்ணின விஷயத்தை நாம ஃபாலோ பண்ணலாம். அப்பட்டமா காப்பி அடிக்கக் கூடாது.”

 “நீங்க கலந்துக்கிட்ட அனிதாவோட நினைவேந்தல் கூட்டத்துலதான், ‘சாதி ரீதியாகப் பிரிந்து கிடக்கிறோம் என்பதை இப்போதாவது ஒப்புக்கொள்ளுங்கள்’னு பா.இரஞ்சித் சொன்னார். உங்கள் பதில் என்ன?”

 “கண்டிப்பா ஒப்புக்கணும். பா.இரஞ்சித் பேசும்போது நான் இருந்தேன், ‘உங்களை நீங்களே சுயப் பரிசோதனை பண்ணிக்கோங்க’னு சொன்னார். அது மிகச் சரியான வாதம். என்னை நானே சுயப் பரிசோதனை பண்ணிப் பார்த்துச் சொன்னா, நான் சாதியைத் தூக்கிப் பிடிக்கிற ஆள் கிடையாது. அதைக் கடந்து வந்துட்டேன்னு என்னால கான்ஃபிடென்ட்டா சொல்ல முடியும். அனிதா இறந்தப்போகூட, முதல்ல சக உயிராதான் பரிதாபப்பட்டேன். அனிதா இந்தச் சாதியைச் சேர்ந்தவர்னு சமூகமும், ஊடகங்களும்தான் என் காதுல சொல்லுது. அனிதாவோட மரணம் மட்டுமா? நிறைய ஆணவக் கொலைகள் நடந்திருக்கு, நடந்துக்கிட்டு இருக்கு. எல்லாத்தையும் நாம கடந்து வந்துடுறோம். உங்களை நீங்களே சுயபரிசோதனை பண்ணிப் பார்த்துக்கோங்க. ‘சாதியைத் தூக்கி வெச்சிருக்கோம்’னு உறுத்தலா இருந்தா நீங்க தப்பான ஆள்தான். இல்லைனா, மகிழ்ச்சி! ஆனா, எல்லோரும் சாதியை மீறித்தான் வரணும்.”

10 செகண்ட் பதில்கள்!

``படம் பேசும்!’’



 “அடிக்கடி பார்க்கும் படம்?”

 `தளபதி’.

 “முதல் பாராட்டு?”

``வேளச்சேரிக்குப் போற வழியில என்னை வழிமறிச்சு ‘நீங்க நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில வர்ற டைரக்டர்தானே? ஒரு ஆட்டோகிராஃப் போடுங்க’னு நோட்டை நீட்டிய ஒரு மனிதன்.’’

 “மனைவி கொடுத்த முதல் கிஃப்ட்?’’

 ``கைக்கு அடக்கமான குட்டி கிராமபோன்.’’

 “பிடித்த புத்தகம்?”

 ``அ.முத்துலிங்கம் எழுதிய ‘கடவுள் தொடங்கிய இடம்’.’’

 ``ரொம்பப் பிடிச்சது?’’


 ``பிரியாணி, பரோட்டா. இப்போ டயட்ல இருக்கிறதனால சாப்பிடுறதில்லை!’’