
பரிசல் கிருஷ்ணா - படங்கள்: ப.சரவணக்குமார்
முகம் முழுக்கப் புன்னகையும், உடல்மொழியில் உற்சாகமும் துள்ளப் பேசுகிறார் அனு ஹாசன். ஒன்பது வருட லண்டன் வாசம் அவர் தமிழை எந்த மாற்றத்திற்கும் உட்படுத்தவில்லை. தமிழும், குரலும் அப்படியே இருக்கிறது.

`` நீங்க நடிக்கிற ‘வல்லதேசம்’ எப்படி வந்திருக்கு?’’
``எனக்கு இந்த சான்ஸ் கிடைச்சதுல ரொம்ப சந்தோஷம். அம்மாவுக்கு நான் பெரிய ஸ்க்ரீன்ல ஸ்டன்ட் பண்ணணும்னு ஆசை. ‘டுஷூம் டுஷூம்லாம் பண்ணும்மா’-ம்பாங்க. ‘வாய்ப்பு வந்தா பண்ணுவேன்மா’னு சொல்வேன். இயக்குநர் நந்தா இந்த கேரக்டரைக் கொண்டுவந்தபோது நான் ஃபிட்டாவும் இருந்தேன். கரெக்டா இந்த ரோல் எனக்கு அமைஞ்சது. ஹானஸ்ட்டா சொல்றேன். இவ்ளோ இடைவெளிக்கப்புறமும், யங் ஆர்ட்டிஸ்டெல்லாம் தாண்டி எனக்கான கேரக்டர் கிடைக்குதுன்னா நான் லக்கிதானே. ஒரு தாய், தன்னோட மகள் கடத்தப்பட்டா எப்படி ஃபீல் பண்ணுவாங்கங்கிற கேரக்டர். அதனால் எனக்கு நடிக்கவும் வாய்ப்பு உண்டு. துணிஞ்சு ஹேண்டில் பண்ற கேரக்டர்ங்கிறதால ஆக்ஷன் சீன்ஸுக்கும் வாய்ப்பு. செம ஹேப்பி.’’
``படத்துல ஆக்ஷன் பண்றீங்களே... ஸ்பெஷல் ட்ரெய்னிங் எதுவும் எடுத்துக்கிட்டீங்களா?’’
``கமல் சாருக்கு தேங்க்ஸ். என்னடான்னு பார்ப்பீங்க. நான் முதல்ல டி.வி-க்காக ஒரு ஆக்ஷன் ரோல் பண்ண வேண்டியிருந்தது. கமல்கிட்டதான் சொன்னேன். ‘நான் பத்திரமா இருக்கணும். என்ன பண்ணணும்’னு கேட்டேன். அவர், அவரோட Elbow Pad, Knee Pad, Guardலாம் குடுத்துட்டு ஒரு விஷயம் சொன்னார். “நீ ஸ்டன்ட்மேனுக்கு அடிபடற மாதிரி ஏதும் பண்ணிடாத. அவங்க, அவங்களுக்கும் அடிபடாம உனக்கும் அடிபடாம பார்த்துப்பாங்க’ன்னு சொன்னார். இந்தப் பட ஆக்ஷன் சீன்ஸ் பண்ணும்போதுதான் எவ்ளோ கரெக்டா சொல்லிருக்கார்னு ஃபீல் பண்ணினேன். ஸ்டன்ட் ஆர்ட்டிஸ்ட்ஸ் கையப் பிடிக்கிறதுகூட, வலிக்காம பிடிப்பாங்க. ஸ்பெஷல் நன்றிகள் அவங்களுக்கு.’’
``ஒன்பது வருஷம் லண்டன். இப்போ சென்னை. எப்படி இருக்கு?’’
``அடிக்கடி வர்றதுண்டு. எனக்கு எப்பவும் மெட்ராஸ்தான். ‘அனு சென்னைனு சொல்லு’னு ஃப்ரெண்ட்ஸ் சொல்வாங்க. ஆனா, டிராஃபிக் பயங்கரமா இருக்கு. நான் டைமிங் ரொம்ப முக்கியமா ஃபாலோ பண்ணுவேன். யாரும் எனக்காகக் காத்திருக்கக் கூடாதுனு நெனைப்பேன். ஆனா, இந்த டிராஃபிக்னால முடியலை.’’

``உங்களுக்கு எது மகிழ்ச்சியைத் தருது?’’
``உடல் ஃபிட்டா இருந்தாலே மகிழ்ச்சிதான். அதுக்காகப் பல விஷயங்கள் செய்வதுண்டு. பாஸ்கெட் பால், கிரிக்கெட், கோல்ஃப்லாம் விளையாடுவேன். களறி கத்துகிட்டேன். களறியில சிலமம், சிரமம், கைப்போர்னு சில பேஸிக்ஸ் எனக்குத் தெரியும். இப்ப பாக்ஸிங்ல இறங்கிருக்கேன்.’’
``இந்த ரோல் பண்ணணும்னு ஆசைன்னா, எந்த ரோல் சொல்வீங்க?’’
``நெகட்டிவ் ரோல் பண்ண ஆசை. உடல் நலிவுற்ற கேரக்டர் ஏதாவது சவாலா பண்ணணும்னு ஆசை. பரபரன்னு இல்லாம வித்தியாசமா இருக்கணும். அப்புறம் இதுன்னு இல்ல, எனக்கு கன்வின்ஸா, அந்தச் சமயத்துல எது ஹேப்பியோ அதைப் பண்ணுவேன்.’’
``கமல்ஹாசன் சாரோட அதிரடியெல்லாம் பார்க்கிறீங்களா?’’
``ஓ... மொதல்ல என் க்ளாஸ்மேட்தான் சொன்னாங்க. ‘அனு உன் அங்கிள் ராக் ஸ்டார். கலக்கிறார். அவர்தான் இப்ப நாட்டுக்குத் தேவை’னு சொன்னாங்க. எப்பவுமே அவரோட சிந்தனை முன் நோக்கித்தான் இருந்திருக்கு. அதனால ‘அவர் எப்பவுமே அப்படித்தானே’னு சொன்னேன். ‘இல்லல்ல. அவர் அரசியலுக்கு வரணும்’னாங்க. ‘அது உன் ஆசை. அவரோட முடிவு’னு சொல்லிட்டேன். எனக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம். அதுக்குக் காரணம் என் அறியாமை. அவருக்கு நெறைய தெரிஞ்சிருக்கு. அதைப் பேசுறார். அப்படித்தான் பார்க்கிறேன்.’’
``அரசியல்ல அறியாமை, அதனால பேசல... சரி. நீங்க நாலு வருஷம் ‘காபி வித் அனு’னு ஒரு ஹோஸ்ட்டா கலக்கினீங்க. இப்ப அதே சேனல்ல அவரும் ஹோஸ்ட்டா இருக்காரே... ஒரு சீனியரா என்ன சொல்றீங்க?
``ஓ... (பலமாகச் சிரிக்கிறார்) அதுல நான் அவருக்கு சீனியரா...! ஆனா, அவர் பண்றத என்கூட கம்பேரே பண்ண முடியாது. என் குடும்பத்து ஆளை, நானே ரொம்பப் பெருமையா சொல்றேன்னு இருக்கும். எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு, அவரை ஹோஸ்ட்டா பார்க்கிறது. என்னமா பண்றார். பிரமாதம். கண்ணு அப்படி சிரிக்குது, பேசுது... மக்கள் கமல்ஹாசனைப் பலவித கேரக்டர்ஸா பார்த்திருக்காங்க. இந்த ஷோ மூலமாத்தான் நிஜ கமல்ஹாசனா பார்க்கிறாங்க. ஐம் வெரி ப்ரவுட். வாட் எ மேன்!”
“திரும்பவும் டி.வி ஷோ பண்ணுவீங்களா?”
“வெய்ட் அண்ட் வாட்ச்!”