
த.ஜெயகுமார்
“மரபணு மாற்றுக் கடுகுக்கு எதிராகப் போராட பெங்களூருவில் எவ்வளவோ முயன்றும், ஆட்களைத் திரட்ட முடியவில்லை. நானும் என் மனைவியும்தான் ரோட்டில் நின்றோம். பிறகு, கர்நாடக மாநில விவசாயத்துறை அமைச்சரைச் சந்தித்து, மரபணு மாற்றுக் கடுகை அனுமதிக்கக் கூடாது என்று மனு அளித்தோம். நகரங்களில் இருப்பவர்கள் பெரும்பாலும் கிராமத்திலிருந்து வந்தவர்கள்தான். நகரங்களில் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுப் பொருள்கள் ஏதோவொரு விவசாயி விளைவிப்பதால்தான் சாப்பிட முடிகிறது. அவர்களுக்காகக் குரல் கொடுக்க நகரவாசிகள் தயாராக இல்லை” வருத்தமும், கோபமும் கலந்து பேசுகிறார் நடிகர் கிஷோர். விவசாயிகள் நலனுக்காக வெறுமனே பேசிக்கொண்டிருப்பவர் அல்ல கிஷோர். களத்தில் இறங்கி வேலை செய்யும் விவசாயியும்கூட.

“நமது கல்விமுறைதான் விவசாயத்தை அழித்தது என்று கடுமையாக விமர்சிக்கிறீர்கள்? படிப்பு எப்படி விவசாயத்தைப் பாதிக்கும்?”
“நமக்கு அனுபவரீதியாக எந்த விதத்திலும் உதவாத படிப்புதான் இங்கு இயற்கையை அழித்துக் கொண்டிருக்கிறது. இந்த மெக்காலே முறை படிப்பை வேண்டாம் என்று அப்போதே காந்தி எதிர்த்தார். வெள்ளைக்காரன் கொடுத்துட்டுப்போன கல்வியை அப்போதே தூக்கி எறிஞ்சிருக்கணும். இப்போது படித்து முடிக்கும் ஒரு மாணவன் ‘என் தகுதிக்கு இந்தக் கிராமத்துல என்ன வேலை இருக்கு’ என்று கேட்கிறான். எனக்கு டெக்னாலஜி வேணும், பணம் வேணும்னு நகரங்களுக்கு இடம் பெயர்கிறான். இந்த நகரத்துல எதுவுமே சுயமா இல்ல. யாரோ ஒருத்தர் சொல்றதைத்தான் சாப்பிட வேண்டியிருக்கு; செய்ய வேண்டியிருக்கு. இந்தக் கல்வி முறை ஒரு மெக்கானிக்கலான வாழ்க்கையைத்தான் கொடுத்துட்டு இருக்கு.”
“வாழ்க்கையில் வசதி, வாய்ப்புகள் வேண்டுமென்றால் நகரங்களுக்கு இடம் பெயரத்தானே வேண்டியிருக்கிறது?”
``இந்தியா வளர்ந்த நாடாக ஆகணும்னு திட்டங்களைச் செயல்படுத்துறாங்க. வளர்ந்த நாடாக ஆகணும்னா, தொழிற்சாலைகள் பெருக வேண்டும். தொழிற்சாலைகள் வளரணும்னா, தொழிலாளர்கள் வேண்டும். இதற்காகக் குறைந்த கூலியில் வேலை செய்ய கிராமத்திலிருந்து ஆட்களை நகரங்களுக்கு இழுக்கிறாங்க. ஒரு பொருளை விற்கணும்னா, அதைப்பற்றி ஆசையைத் தூண்டணும். அந்த ஆசையைத் தேவையாக மாத்தணும். தேவையை விற்பனை செய்யணும். இது மாதிரிதான் நகரங்களின் மீது ஆசையைத் தூண்டி, அதுக்குக் கவர்ச்சி முலாம் பூசி, மார்க்கெட் செஞ்சிட்டு இருக்கிறாங்க. நகரத்துல ஏதோ சொர்க்கம் இருக்கிறது மாதிரி கட்டமைக்கிறாங்க. இதை நம்பி கிராமத்துல இருந்து மக்கள் நகரங்களுக்கு வர்றாங்க. இப்படி எல்லோரும் வந்துட்டா, அங்கே யார் விவசாயம் செய்வாங்க. இதனால்தான் விவசாயம் இல்லாமல், கிராமங்களே சிதைஞ்சிட்டு இருக்கு. மண்ணோட பிணைப்பு இல்லாம, வாழ வேண்டிய சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டுட்டு இருக்காங்க. இன்னொண்ணு இந்த நகரமயமாக்கல், உலகமயமாக்கலெல்லாம் நகரங்களோட மக்கள்தொகையை அதிகரிச்சிட்டு இருக்கு. இதனால உற்பத்திக் குறையுது. உணவுப் பொருள்களோட தேவை அதிகரிச்சிட்டு இருக்கு.”
“சரி, இதற்கான தீர்வா என்ன இருக்கும்னு நினைக்கிறீங்க?”
“கிராமம், கிராமமா இருக்கணும். நகரம், நகரமா இருக்கணும். கிராமத்துல விவசாயம் லாபகரமனதாக மாறணும். இதுக்கு அரசாங்கங்களை நம்பிப் பிரயோஜனம் இல்லை. நாம கொஞ்சம் புத்திசாலித்தனமா விவசாயம் செய்யக் கத்துக்கணும். முதல்ல எளிமையா வாழப் பழகணும். நகரமக்களோடு ஒப்பிட்டுப் பார்க்கிற மனப்பான்மையை மாத்திக்கணும். நம் முன்னோர்களோட வாழ்க்கை முறையைத் திரும்பிப் பார்க்கணும். பாரம்பர்ய விதைகள், இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்திக் குறைந்த செலவுல விவசாயம் செய்யணும். இந்த மாதிரி நிறைய இருக்கு. அப்பதான் ஒரு விவசாயியா கிராமத்துல நிலைக்க முடியும்.”

“இயற்கையின் மீது ஏன் இவ்வளவு ஆர்வம்?”
“ ‘ஓடினேன் ஓடினேன் சாவின் எல்லை வரை ஓடினேன்’ என்று அழுதுகொண்டிருக்கிறது இயற்கை. ஒன்று திரும்பி வர வேண்டும். இல்லையேல் அழிந்துவிட வேண்டும். திரும்பி வரும்போது மிகப்பெரிய இழப்புகள் இருக்கும். இயற்கையோடு சேர்ந்து வாழணும்னு நினைக்கிறவங்களுக்கு இயற்கை விவசாயம்தான் சரியான தேர்வு. இதை உணர்ந்துதான் பெங்களூருவுக்குப் பக்கத்துல கரியப்பன்தொட்டி என்கிற கிராமத்தில் விவசாயம் செஞ்சிட்டு வர்றேன். நடிப்பு போக மீதியிருக்கும் நேரங்கள்ல விவசாய வேலைகள் செய்றேன். இதோடு நல்ல உணவுப் பொருள்கள் மக்களைச் சென்றடையணும்னு ஆர்கானிக் ஸ்டோரும் என் வீட்டிலேயே நடத்திட்டு வர்றேன். விவசாயம், ஸ்டோர் இரண்டையும் முழு நேரமாக என் மனைவி பார்த்துக்கிறாங்க. என் மனைவிக்குப் பூர்வீகம் சேலம் மாவட்டம்தான்.”
“சினிமாவில் விவசாயத்தை எப்படிப் பார்க்கிறாங்க?”
“நேரடியா விவசாயத்தைப் பற்றிச் சொல்லலைன்னாலும், கிராமங்கள் பற்றிய சினிமாக்கள் வந்துட்டுதான் இருக்கு. புதுமுக இயக்குநர்களும் விவசாயத்தைப்பற்றி நிறைய கதைகள் சொல்றாங்க. இங்கேயும் இப்போ விழிப்பு உணர்வு அதிகரிச்சிருக்கு. இனிமேல் நிறைய படங்களை எதிர்பார்க்கலாம்.”
“சினிமா வாழ்க்கை எப்படிப் போயிட்டு இருக்கு?”
“தமிழ்ல ‘வடசென்னை’, ‘கடிகார மனிதர்கள்’, ‘சாட்டை-2’னு படங்கள் பண்ணிட்டு இருக்கேன். தெலுங்குல ‘குட் பேட் அக்லி’னு ஒரு படம். ராமாயணத்தை அடிப்படையா வெச்சு எடுத்திருக்காங்க. கன்னடத்துல ‘கதசங்மா’, ‘அல்ப விரமா’ன்னு இரண்டு படங்கள்ல நடிச்சிட்டு இருக்கேன்.”
“உங்கள் நண்பர் இயக்குநர் வெற்றிமாறனின் ‘வட சென்னை’ படம் எப்படிப் போயிட்டிருக்கு?”
“சமுத்திரகனி, டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, மீனா, ஐஸ்வர்யா ராஜேஷ்னு நிறைய பேர் சேர்ந்து நடிக்கிறோம். ரொம்பா ஸ்ட்ராங்கான கதை. 40 வருஷத்துக்கு முன்னாடி இருந்து இப்போ நடக்கிறதுவரை லிங்க் ஆகிற மாதிரியான கதை. இரண்டு பாகமா வெளிவர இருக்கு. அந்த அளவுக்கு வொர்க் பண்ணியிருக்கார் வெற்றி. ஒவ்வொரு ஷாட்டும் அவ்வளவு அழகா இருக்கும். எல்லா கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் உள்ள படம். என்னோட கேரியர்ல ‘வடசென்னை’ மிக முக்கியமான படமா இருக்கும்.”